தமிழின அழிப்பை அனைத்துலகம் கண்டிக்காது கவலையளிக்கிறது - சந்திரகாந்தன்
தமிழனாய் பிறந்ததை தவிர எந்த குற்றத்தினையுமே செய்யாத அப்பாவி மக்கள் மீது சிறிலங்கா அரசாங்கத்தால் திட்டமிட்டு நடத்தப்படும் இனக்கொலையினை கண்டிக்காது அனைத்துலகம் மௌனியாக இருப்பதும், முதலைக்கண்ணீர் வடிப்பதும் வேதனையளிக்கிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ச.சந்திரநேரு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சந்திரநேரு சந்திரகாந்தன் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறிலங்கா அரசாங்கம் அறிவித்த "மக்கள் பாதுகாப்பு வலயத்தினை" நோக்கி நேற்று திங்கட்கிழமை சிறிலங்கா படையினர் கண்மூடித்தனமாக நடத்திய அகோர பீரங்கித் தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் படுகாயம் அடைந்துள்ளதாக சுயாதீன அறிக்கைகள் வாயிலாக அறியக் கூடியதாயுள்ளது.
முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தின் அறிக்கையின் பிரகாரம் 24 மணி நேரத்துக்குள் 300-க்கும் அதிகமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டும், ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்தும் உள்ளனர். மருத்துவ வசதியின் பற்றாக்குறை காரணமாக மேலும் உயிரிழப்புக்கள் அதிகரிக்கலாம்
கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகளும், சிறுவர்களும் ஆவர். குழந்தைகள், சிறுவர்கள், வயோதிபர்கள், கர்ப்பிணிப்பெண்கள் போன்ற பலதரப்பட்டோர் வயது வேறுபாடின்றி கொல்லப்பட்டு வருகின்றனர்.
அத்துடன் செஞ்சிலுவைச் சங்கத்தின் பணியாளர் ஒருவரும் கியூடெக் நிறுவனத்தின் பணியாளர் ஒருவரும் கூட படுகாயம் அடைந்துள்ளனர்.
எந்தவித மருத்துவ வசதியுமின்றி மக்கள் உயிருக்காக போராடிக் கொண்டிருக்கின்றனர். மருந்துப் பொருட்கள் கிடைப்பது தாமதிக்கப்படின் உயிர்ச்சேதங்கள் மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வன்னியின் நான்கு பெரும் மாவட்டங்களிலிருந்து துரத்தப்பட்டு நான்கு சிறிய கிராமங்களுக்குள் முடக்கப்பட்டுள்ள நான்கு இலட்சம் தமிழர்களை கொன்றொழிக்கும் நோக்கத்துடன் இந்த மிகச் செறிவான பீரங்கித் தாக்குதல்கள் மக்கள் மீது நடாத்தப்பட்டு வருகின்றன.
அரசு கடந்த வாரம் அவசரம் அவசரமாக தன்னிச்சையாக புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள சிறிய பிரதேசமொன்றை பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தியதுடன், அப்பகுதிக்கு பொதுமக்களைச் செல்லுமாறு அழைப்பு விடுத்தது.
தற்போதைய அறிக்கைகளின் படி அப்பிரதேசத்தினுள்ளேயே பல்குழல் பீரங்கித்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.
இந்நிலையில் உதவிகள் எதுவுமே அற்ற அநாதரவான நிலையில் கைவிடப்பட்டுள்ள எமது மக்கள் மீது திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுக்கொண்டு இருக்கும் இனப்படுகொலையை, அரசின் இக்கோர கொலைவெறித் தாண்டவத்தினை அனைத்துலகம் மெனியாக பார்த்துக்கொண்டு இருப்பது வேதனையளிக்கின்றது.
இன்றைய நிலையில் அப்பாவி வன்னி மக்கள் எங்கு போவது என்று அறியாமல் இருப்பதைத் தவிர எந்த குற்றத்தினையுமே செய்யவில்லை.
இந்த அனைத்துலக சமூகம் மேலும் ஒரு படி சென்று எம்மக்களை கொன்று குவிப்பவர்களிடமே சரணடையுமாறு கேட்பது மேலும் வேதனையை தோற்றுவிக்கிறது.
எந்த விதத்தில் பார்த்தாலும் இந்திய அரசும் சரி, அனைத்துலகமும் சரி இவர்கள் எல்லோரும் விரும்புவது, எதிர்பார்ப்பது எமது மக்கள் அழிய வேண்டும் என்பதைத் தான்.
தமிழின படுகொலைகள் தொடர்பில் முதலைக்கண்ணீர் விட்டுவரும் அனைத்துலக சமூகம் உண்மையாகவே நினைத்தால் அழிக்கப்பட்டு வரும் எமது மக்களுக்கு ஓர் ஆறுதலை ஓர் நொடிப் பொழுதிற்குள் கொடுக்கமுடியும்.
அண்மைக் காலமாக வட பகுதியில் உள்ள பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து மனித உரிமைக்குழுக்களும், அரச சார்பற்ற அமைப்புக்களும் கூடிய கவலையை வெளிப்படுத்தியும், அவை அனைத்துலக நாடுகளின் மத்தியில் செவிடன் காதில் ஊதிய சங்காயிற்று.
அரசின் இன அழிப்புப் போரை எதிர் கொண்டு நிற்கும் தமிழ் சமூகத்திற்கு நடக்கும் அக்கிரமங்களை பார்க்கவோ அல்லது தேடிச்சென்று உதவி செய்யவோ அனைத்துலகம் தவறிவிட்டது.
இனியும் தாமதிக்காது அனைத்துலக சமூகம் சுயாதீனமான குழுவொன்றை உடனடியாக அமைத்து வட கிழக்கிற்கு அனுப்பி நேரடியாக பார்வையிடுவதன் மூலம் தமிழர் பகுதியில் நடந்தேறியுள்ள அகோரத்தின் முழு அளவையும் உணர்ந்து கொள்ள முடியும் எனவும் அழிக்கப்பட்டு வரும் மக்கள் கூட்டத்தை அழிவிலிருந்து காப்பாற்றுவதோடு, அவர்களுக்கு அவசரமாகத் தேவைப்படும் உதவிகளையும் உடனடியாக ஆரம்பிக்கவும் முடியும்.
எனவே தற்காலிகமாகவேனும் அழிவின் விளிம்பிலுள்ள எமது மக்களை காப்பாற்ற போர் நிறுத்தமொன்றை கொண்டுவருவதற்கான பாரிய அழுத்தத்தை கொடுக்க அனைத்துலகம் இனியும் தாமதிக்கக்கூடாது.
மனசாட்சியுள்ள எந்தவொரு அனைத்துலக நாடும் இனியும் மௌனியாக இருப்பின் தமிழினம் ஒன்று வரலாற்றிலிருந்து துடைத்தெறியப்படுவதற்கு காரணமாகி விடுவர்.
அத்துடன் ஆட்சியில் உள்ள உலகத்தமிழினத்தின் தலைவராக கருதப்படும் தமிழக முதலைமைச்சர் மாண்புமிகு மு.கருணாநிதி அவர்கள் ஈழத்தமிழர்களின் தலைவிதியை தீர்மானிப்பதற்கு காலக்கெடுக்களையும், திகதிகளையும் அறிவிப்பதை விடுத்து விட்டு தமிழக மக்களின் மனவெழுச்சிக்கு மதிப்புக்கொடுத்து காத்திரமான நடவடிக்கைகளை விரைந்தெடுத்து அழிவின் விளிம்பிலுள்ள எம்மக்களை காப்பாற்ற வேண்டுமென ஈழத்தமிழர்களின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.
தலைப்புகள்
தமிழ் ஈழ தலைவர்களின் கருத்துகள்
0 comments:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.