விடுதலைப்புலிகளின் வீழ்ச்சியும் சிறுபான்மையின மக்களின் உரிமைகளும்


இலங்கையில் கடந்த சுமார் 30 வருடங்களாக தமிழர்களுக்கு முழுமையான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென்று ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இலங்கை இராணுவத்தால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. அவ்வியக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உட்பட முக்கிய தலைவர்கள் பலரும் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பின்னணியில் இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டதாகவும் போர் மேகங்கள் ஓய்ந்து விட்டதாகவும் இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆனால் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதனால் இலங்கையில் பிரச்சினைகள் தீர்ந்து விட்டன என்று கூற முடியாது.

இலங்கையின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமாயின் எல்லா இனங்களும் ஏற்கும்படியான அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டும். இலங்கைத் தமிழர்கள் தமக்கு சிங்களவர்களுக்கு ஈடான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென்று ஜனநாயக வழிகளில் போராட்டங்களில் ஈடுபட்டதனால் கிடைக்கப் பெற்ற பயன் ஏற்கும்படியாக இல்லாததன் காரணமாகவே உரிமைகளுக்கான ஜனநாயகப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக மாறியது.

இந்த ஆயுதப் போராட்டத்தினால் தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் என மூவின மக்களிலும் ஆயிரக்கணக்கானவர்கள் உயிர் இழந்துள்ளனர். இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்த அரசாங்கங்கள் சிறுபான்மையினரின் கோரிக்கைகளிலுள்ள நியாயங்களை உணர்ந்து கொண்டிருந்தபோதிலும் அவற்றை வழங்குவதற்கு முழுமனதுடனான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. சிறுபான்மையினரை மென்மேலும் ஒடுக்கும் நடவடிக்கைகளையே மேற்கொண்டார்கள். இதனால் போராட்டங்களும் உயிர் இழப்புக்களும் அதிகரித்துக் கொண்டே சென்றன.

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட யுத்தத்திற்காக நாட்டின் மொத்த வருமானத்தில் பெரும் பகுதி செலவு செய்யப்பட்டதுடன் பொருளாதாரம் பாரிய பின்னடைவுகளை கண்டது. இதனால் பொது மக்கள் மீதான பொருளாதார சுமைகள் அதிகரித்துக் கொண்டே வந்தன. விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதனால் தமிழர்களுக்கோ அல்லது சிறுபான்மையினருக்கோ அதிகாரப் பகிர்வு வழங்கப்படத் தேவையில்லை என்று வாதிடப்படுமாயின் அவ்வாதம் இலங்கையின் வளர்ச்சிக்கு தடையானதொரு வாதமாகவே இருக்கும்.

இலங்கையில் இருப்பது இனப்பிரச்சினையல்ல, பயங்கரவாதப் பிரச்சினையே. பயங்கரவாதம் தோற்கடிக்கப்படுமாயின் எல்லாம் சரியாகி விடுமென்று பேரினவாத மேலாதிக்கவாதிகள் தொடர்ச்சியாகக் கூறிக் கொண்டிருந்தனர்.

தற்போது விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதனால் மீண்டும் இக்கருத்தை வலியுறுத்தவும், சிறுபான்மையினர் அனுபவிக்கும் உரிமைகளையும் சலுகைகளையும் இல்லாமல் செய்வதற்கும் முயற்சிகளை எடுக்கலாம். விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டாலும் அவர்களினால் போராட்டத்திற்கு அடிப்படையாக அமைந்த கருத்துக்கள் தோற்கடிக்கப்படவில்லை.

தமிழர்கள் சம உரிமைகளுடன் வாழ வேண்டும். தனி ஈழம் அமைய வேண்டும் என்ற கருத்து தமிழர்களின் மனங்களிலிருந்து நீக்கப்பட வேண்டுமாயின் அவர்களின் நியாயமான அபிலாசைகள் நிறைவேற்றப்பட வேண்டும். விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் பெரும்பான்மையின மேலாதிக்கத்தின் பிடி இன்னும் இறுக்கமாகி விடுமோ என்ற அச்சம் சிறுபான்மை மக்கள் மத்தியில் இருக்கலாம். இதனை நீக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தின் கைகளில் உள்ளது.

இதேவேளை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் ""எல்லோரும் ஏற்கும்படியான அதிகாரப் பகிர்வு முன்வைக்கப்படும். விடுதலைப் புலிகளின் தோல்வி தமிழர்களின் தோல்வியல்ல. அவர்கள் நிம்மதி, சந்தோஷத்துடன் சமத்துவமாக வாழ்வதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியாகக் கூறியுள்ளார்.

இலங்கையின் உள்நாட்டுப் போரினை அவதானித்துக் கொண்டிருந்த சர்வதேச சமூகங்கள் இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ""ஈழத் தமிழர்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்படுவது அவசர அவசியமானதாகும். அங்கு வாழும் எல்லா இனங்களும் ஏற்கும்படியான அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும்'' என்று கேட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, ""இனியும் நாட்டு மக்களிடையே அரசாங்கம் வேற்றுமை காட்டக்கூடாது. அவ்வாறு காட்டினால் மீண்டும் புரட்சி வெடிக்கும்'' என எச்சரித்துள்ளார்.

""இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்படா விட்டால் வேறு வழிகளில் போராட்டம் நிகழக்கூடும்'' என்று நோர்வே கூறியுள்ளது. ""இலங்கை மக்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும்'' என்று அமெரிக்கா கூறியுள்ளது. இந்திய அரசாங்கம் தமது பிரதிநிதிகளை இலங்கைக்கு அனுப்பி அதிகாரப் பரவலாக்கம் பற்றி கலந்துரையாடியுள்ளது.

இவ்வாறு உலக நாடுகள் பலவும் இலங்கையில் அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டுமென்று வலியுறுத்திக் கொண்டிருக்கின்றன. இக்குரல்களை தட்டிக் கழித்துச் செயற்பட இலங்கை அரசாங்கம் நினைக்குமாயின் சர்வதேச ரீதியாக பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

ஆதலால் பெரும்பான்மையினர் அனுபவிக்கும் எல்லா வகையான உரிமைகளையும் சலுகைகளையும் சிறுபான்மையினரும் பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். இதனை நிறைவேற்றுவதில் காலதாமங்கள் இடம்பெறக்கூடாது

0 comments:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.