தமிழகமும் தமிழ் ஈழமும்


வட்டுக்கோட்டையில் 1976 மேயில் நடைபெற்ற மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தனித்தமிழ் ஈழத் தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்ட தேர்தல் விஞ்ஞாபனத்தை வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் முன்னிலையில் சமர்ப்பித்தே தமிழர் விடுதலை கூட்டணி 1977 ஜூலை பொதுத் தேர்தலில் போட்டியிட்டது. அந்தத் தேர்தலுக்குப் பிறகு இலங்கையில் நடைபெற்ற எந்தவொரு பொதுத் தேர்தலிலுமே தனித்தமிழ் ஈழம் என்ற கோஷத்தை தமிழ் அரசியல் கட்சிகள் முன்வைத்ததில்லை. 1987 ஜூலையில் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும் முன்னாள் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும் கைச்சாத்திட்ட சமாதான உடன்படிக்கைக்குப் பின்னர் தமிழ் மிதவாதக்கட்சிகளும் ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு ஜனநாயக நீரோட்டத்தில் கலந்துவிட்டதாகக் கூறிக்கொண்ட முன்னாள் தமிழ்ப் போராளிக் குழுக்களும் அதிகாரப்பரவலாக்கல் மூலமாக தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. விடுதலைப் புலிகள் மாத்திரம் தனித் தமிழ் ஈழக் கோரிக்கையைக் கைவிடாமல் ஆயுதப் போராட்டத்தைத் தொடருவது அண்மைக்கால வரலாறு.

இலங்கையில் இடம்பெறக்கூடிய எந்தவொரு தேர்தலிலுமே சர்ச்சைக்குரிய விடயமாக தற்போது நோக்கப்படாத தமிழ் ஈழக் கோரிக்கை இந்தியப் பொதுத் தேர்தலில் தமிழக களத்தில் இன்று முக்கியமான ஒரு பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. இலங்கையில் தீவிரமடைந்த போரின் விளைவாக தமிழ்ப் பகுதிகளில் தோன்றிய மனிதாபிமான நெருக்கடி தமிழகத்தில் பெரும் உணர்வலைகளைத் தோற்றுவித்திருக்கிறது. போர் நிறுத்தமொன்றைக் கொண்டு வருவதற்கு கொழும்பு அரசாங்கத்துடனான செல்வாக்கை இந்திய மத்திய அரசாங்கம் பயன்படுத்த வேண்டுமென்று கோரிக்கை விடுக்காத தமிழகக்கட்சி எதுவுமேயில்லை. போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கு மத்திய அரசாங்கம் மானசீகமாக முயற்சிக்கவில்லையென்பதால் காங்கிரஸ் கட்சி மீதும் அதன் நேச அணியான முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி மீதும் பெரும்பாலான தமிழகக் கட்சிகள் குற்றச்சாட்டைச் சுமத்துகின்றன. கடந்த 6 மாதங்களுக்கும் கூடுதலான காலமாக தமிழக கட்சிகளிடையேயான வாதப் பிரதிவாதங்கள் அடிப்படையில் இலங்கைத் தமிழர் பிரச்சினையை மையமாகக் கொண்டவையாகவே அமைந்திருப்பதைக் கண்டோம். இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக ஏட்டிக்குப் போட்டியாக போராட்டங்களை அந்தக் கட்சிகள் நடத்திக் கொண்டிருந்தன.

இலங்கைத் தமிழர் பிரச்சினையை பொதுத் தேர்தலில் ஒருமுக்கியமான சர்ச்சையாக்குவதற்கு கட்சிகள் தீர்மானித்தபிறகு அதற்கு ஒரு எல்லையே இல்லாமல் போய்விட்டது. இலங்கையில் தோன்றியிருக்கும் மனிதாபிமான நெருக்கடியை தேர்தல் பிரசாரங்களில் பயன்படுத்துவதன் விளைவாக ஏற்படக்கூடிய விபரீதங்கள் குறித்து பிரத்தியேகமாக இலங்கைத் தமிழர்கள் படுகின்ற அவலங்கள் தொடர்பில் தமிழக மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் ஒருமைப்பாட்டு உணர்வு அலைகளும் கட்சி அரசியலின் அடிப்படையில் கூறுபோடப்படக்கூடிய ஆபத்துக் குறித்து நாம் அடிக்கடி எமது ஆசிரிய தலையங்கத்தில் சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். தேர்தல் நாள் நெருங்க நெருங்க இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் தமிழக பிரதான கட்சிகள் மத்தியில் தீவிரமான நிலைப்பாடுகள் வெளிக்கிளம்புவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இலங்கைத் தமிழர்களுக்கு ஏனைய இனத்தவர்களுடன் சமத்துவமான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று கூறிவந்த முன்னாள் முதலமைச்சரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளருமான செல்வி ஜெயலலிதா சில தினங்களுக்கு முன்னர் திடீரென்று இலங்கையில் தமிழர்களின் பிரச்சினைகள் தீருவதற்கு ஒரேவழி தனித் தமிழ் ஈழம் உருவாவதே என்று பிரசாரக் கூட்டங்களில் பேச ஆரம்பித்தார். தமிழக மக்கள் மத்தியில் ஜெயலலிதாவின் இந்த ஈழப் பேச்சுக்கு எந்தளவுக்கு ஆதரவு இருக்கிறதோ எமக்குத் தெரியவில்லை. ஆனால், கலைஞர் கருணா நிதியையும் காங்கிரஸ் காரர்களையும் ஜெயலலிதாவின் பேச்சுகள் தடுமாறவைத்திருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை.

சில தினங்களுக்கு முன்னர் இந்தியப் பொதுத் தேர்தலில் இலங்கைத் தமிழர் பிரச்சினை தாக்கத்தை ஏற்படுத்தப் போவதில்லை என்று கூறிய கருணாநிதி, நேற்றைய தினம் சென்னையில் தனியார் மருத்துவமனையொன்றில் இருந்துகொண்டு விடுத்த அறிக்கையில், இலங்கையில் தமிழர்கள் தனித்தமிழ்ஈழத்தைப் பெறுவதற்கு சகல முயற்சிகளையும் செய்யப் போவதாகப் பிரகடனம் செய்ததைக் காணக்கூடியதாக இருக்கிறது. கலைஞரின் இந்த அறிக்கை தொடர்பில் அதன் நேச சக்தியான காங்கிரஸ்கட்சி இதுவரை எந்த அபிப்பிராயத்தையும் வெளியிடவில்லை. வழமையாகச் சொல்வதுபோல் அது கலைஞரின் தனிப்பட்ட அபிப்பிராயம் என்று கூறிவிட்டு காங்கிரஸ் காரர்கள் விட்டுவிடவும் கூடும். இலங்கைத் தமிழர் பிரச்சினையைப் பொறுத்தவரை தீவிரமான நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளின் தலைவர்களான டாக்டர் ராமதாஸ், வைகோ போன்றவர்களின் வீராவேசப் பேச்சுகளை தமிழக மக்கள் அடிக்கடி கேட்டிருக்கிறார்கள். ஆனால், பிரதான திராவிடக் கட்சிகள் இரண்டும் தனித் தமிழ் ஈழம் கோரிக்கையை முன்வைப்பது புதியதொரு நிலைவரமாகும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் ஜெயலலிதா பேசுகின்ற பாணி முன்னென்றுமே அவரிடம் காணப்படாததாகும். இலங்கைக்கு இராணுவத்தை அனுப்புவது பற்றிக் கூட அவர் பேசுகிறார்.

காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி தேர்தல் பிரசாரங்களுக்காக தமிழகத்துக்கு வர முடியாத அளவுக்கு எதிர்ப்பிரசாரங்கள் தீவிரமடைந்திருக்கின்றன. இத்தடவை சோனியா காந்தி ஒரு பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்குத் தானும் தமிழகம் வர முடியாமல் போகுமேயானால் சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் தலைவர் ஒருவர் பொதுத் தேர்தலுக்காக தமிழகத்துக்கு வந்து பிரசாரம் செய்ய முடியாமல் போன முதல் சந்தர்ப்பமாக இது அமைந்து விடும் என்றும் கூறப்படுகிறது. இவ்வாறாக முன்னென்றுமில்லாத அரசியல் நிகழ்வுப் போக்குகளைக் கொண்டதாக தமிழகத்தில் பொதுத் தேர்தல் களம் இன்று காணப்படுகிறது. இலங்கையிலே தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய பிரதான தமிழ்க் கட்சிகளின் கூட்டமைப்பான தமிழர் விடுதலைக் கூட்டணி தனித் தமிழ் ஈழக் கோரிக்கையை முன்னெடுத்து ஒரு பொதுத் தேர்தலைச் சந்தித்து 32 வருடங்கள் கழித்து பாக்கு நீரிணைக்கு அப்பால் தமிழகத்தில் பொதுத் தேர்தலிலே அந்த மாநிலத்தின் பிரதான திராவிடக் கட்சிகள் தமிழ் ஈழக் கோரிக்கையை பயன்படுத்தி பிரசாரங்களில் இறங்கியிருக்கும் விசித்திரத்தைக் காண்கிறோம். தேர்தலுக்குப் பிறகு தமிழ் ஈழம் பற்றி இந்தத் திராவிடக் கட்சிகள் என்ன கூறப் போகின்றன என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போமே!

0 comments:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.