பிரபாகரனை தொடமுடியாது;அதனால்தான் அவரைச்சுற்றியிருப்பவர்களை கொல்கிறது ராணுவம்:பாரதிராஜா


சிவகாசி பாவடி தோப்பு திடலில் திரையுலக தமிழீழ ஆதரவு குழு சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ் திரையுலக இயக்குனர்கள் பாரதிராஜா, ஆர்.கே.செல்வமணி, ஆர்.சுந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

இக்கூட்டத்தில் பாரதிராஜா, ‘’அரசியல் பேச நான் இங்கு வரவில்லை. எனது இனத்துக்கு ஒரு துரோகம் நடக்கிறது என்பதால் நான் இங்கு வந்தேன்.

இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள். இதை தடுக்க பல போராட்டங்களை நாங்கள் நடத்தினோம். இது மத்திய அரசின் காதுகளுக்கு கேட்கவில்லை.

இலங்கை பிரச்சினையில் இந்திய இறையாண்மைக்கு கட்டுப்பட்டுதான் நாங்கள் எங்களை கட்டுப்படுத்தி இருக்கிறோம். சோனியா என்ன பேசுகிறாரோ அதற்கு மன்மோகன்சிங் வாய் அசைப்பார். இலங்கை ராணுவத்தால் பிரபாகரனை தொடமுடியாது.

அதனால் தான் அவரை சார்ந்தவர்களை லட்சக்கணக்கில் இலங்கை ராணுவம் கொன்று குவித்து வருகிறது. அங்குள்ள தமிழர்கள் மாற்று உடைகள் கூட இல்லாமல் இருக்கிறார்கள். உலகமே போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று சொல்கிறது. ஆனால் சோனியா மட்டும் வாய் திறக்கவில்லை.

போரை நிறுத்தி விட்டு நீங்கள் தமிழகத்துக்கு வாருங்கள் உங்களை ரத்தின கம்பளம் போட்டு வரவேற்கிறோம். அதை செய்யாமல் நீங்கள் எப்போது வந்தாலும் எங்களின் எதிர்ப்பை காட்டியே தீருவோம்.

1962-ல் தமிழகத்தில் ஒரு எழுச்சி இருந்தது. அந்த எழுச்சி தற்போது இங்கு வரவேண்டும். தனி ஈழம் அமைய வேண்டும் என்று யார் சொன்னாலும் அவர்களுக்கு எங்கள் இதயத்தை கொடுப்போம்’’என்று பேசினார்.

0 comments:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.