* வவுனியா அகதி முகாமிலிருந்தவேளை மில்லிபான்ட் கருத்து
இலங்கை யுத்தமானது குறிப்பிட்டதொரு பகுதியை பூகோள சமூக ரீதியாக பாதித்துக்கொண்டிருப்பதுடன் ,பரந்துபட்ட விளைவுகளையும் ஏற்படுத்துவதால் இந்த விவகாரம் ஐ.நா. பாதுகாப்புச்சபை நிகழ்ச்சிநிரலில் உள்ளடக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ள பிரிட்டிஷ் அரசாங்கம், இதற்கான முயற்சிகளில் பிரிட்டனும் பிரான்ஸும் அமெரிக்காவும் ஈடுபட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு நேற்றுமுன்தினம் புதன்கிழமை பிரெஞ்சு வெளி விவகார அமைச்சர் பேர்னாட் குச்னருடன் இணைந்து விஜயம் மேற்கொண்டிருந்த பிரிட்டிஷ் வெளி விவகார அமைச்சர் டேவிட் மில்லிபான்ட் வவுனியாவிலுள்ள அகதிகள் முகாமுக்கு சென்று பார்வையிட்ட வேளையில் அங்கிருந்துகொண்டு பி.பி.சி.க்கு வழங்கிய பேட்டியிலேயே மேற்கண்ட கருத்தை தெரிவித்திருக்கிறார்.
பி.பி.சி.யின் நிருபர் மார்தாகர்ணிக்கு அமைச்சர் மில்லிபான்ட் தெரிவித்திருப்பதாவது;
பாதுகாப்பு வலயமென அழைக்கப்படும் பகுதியானது பாதுகாப்பானதாக இல்லை. அங்கு மோதல் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. இனிமேல் அங்கு கடுமையான ஷெல் தாக்குதல் இருக்காது என்று இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் உறுதிப்படுத்தியுள்ளார். அதனை நடைமுறைப்படுத்துவது அவசியம். ஆனால், இது நிச்சயமாக யுத்தத்தை நிறுத்துவதாகும்.
ஐரோப்பிய ஒன்றியமும் ஜி8 நாடுகள் அமைப்பும் இதற்கான அழைப்பை விடுத்திருந்தன. தற்போதைய தருணத்தில் பொதுமக்கள் புலிகளால் அகப்பட்டுள்ளனர். இந்த மோதல் சூன்யப்பகுதிக்குள் இருந்து அவர்கள் வெளியேறவிடாமல் நிறுத்தப்பட்டுள்ளனர். ஆனால், அரசாங்கம் பொறுப்பை பெற்றுள்ள தொன்றாகும். அது ஐ.நா.வின் ஜனநாயக ரீதியான உறுப்பினரென்ற முறையில் செயற்படுவதற்கும் சர்வதேச மனிதாபிமான சட்ட விதிகளை பிரயோகிப்பதற்குமான தேவைகள் உள்ளது என்று மில்லிபான்ட் கூறியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவாக நீங்களும் பிரெஞ்சு அமைச்சர் குச்னரும் சென்றுள்ளீர்கள், இலங்கை அரசாங்கத்திடம் உடனடி யுத்தநிறுத்தம் தொடர்பாக முயற்சிசெய்யவும் வலியுறுத்தவும் சென்றுள்ளீர்கள். அதுதொடர்பாக நீங்கள் எவ்வளவு தூரம் இலக்கை எட்டியுள்ளீர்கள் என்று மார்தாகேர்ணி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மில்லிபான்ட் இந்த விஜயத்தின் மூலம் இன்று யுத்தநிறுத்தம் ஏற்படப்போவதில்லை. இந்த நாட்டில் போராட்டம் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த 25 வருடங்களில் 80 ஆயிரம் பேரை இந்த யுத்தம் பலியெடுத்து விட்டது.
நாங்கள் இங்கு மோதல் பகுதியிலுள்ள பொதுமக்கள் தொடர்பாகவே கவனத்தை செலுத்தியுள்ளோம். உணவுக்கும் நீருக்கும் அலட்சியப்படுத்தப்பட்டிருக்கும் பாதுகாப்பு தொடர்பாகவும் விரக்தியான நிலையிலுள்ள மக்கள் தொடர்பாகவே நாம் எமது கவனத்தை செலுத்தியுள்ளோம் என்று கூறியுள்ளார்.
சர்வதேச அபிப்பிராயம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தவில்லையா? உங்களைப் போன்ற தூதுக்குழுக்கள் தொடர்பாக சிரத்தை கொள்ளவில்லை என்பது உண்மையான விடயம் இல்லையா?
ஐ.நா.பாதுகாப்பு சபை தீர்மானம் நிறைவேற்றுவதற்கு இது நேரம் இல்லையா? என்று மார்தா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மில்லிபான்ட் இப்போது முதலாவது தூதுக்குழு அனுமதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் வட கிழக்குப்பகுதிக்கு ஊடகங்கள் அனுமதிக்கப்படவில்லை இது கவலையை அதிகரிக்கச் செய்துள்ளது.
பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாம் சரியாக செயற்பட்டுக்கொண்டிருக்கிறோமென நான் நினைக்கிறேன். இந்த விடயத்தை கடந்த வெள்ளிக்கிழமை ஐ.நா.பாதுகாப்பு சபையில் எழுப்பவிருந்தோம்.
இது ஐ.நா.பாதுகாப்பு சபை நிகழ்ச்சி நிரலை சார்ந்த விடயமாகும் இந்த உள்நாட்டு யுத்தமானது பூகோள சமூகம் சார்ந்ததும் பரந்துபட்ட விளைவுகளை ஏற்படுத்துவதாகும். அத்துடன் பாரியளவில் பொதுமக்கள் அவசரமான நிலைமை குறித்ததுமாகும் என்று கூறியுள்ளார்.
போர்க்குற்றங்கள் இங்கு இழைக்கப்பட்டிருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா? இப்போது நிறுத்திவிட்டாலும் இலங்கை அரசு கனரக ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளது.
அத்துடன் பொதுமக்களை தமிழ்ப் புலிகள் மனிதக்கேடயங்களாக வைத்துள்ளனர் என்று மார்தா கேள்வி எழுப்பிய போது பதிலளித்த மில்லிபான்ட் உண்மை குறித்து எமக்கு தெரியாது மோதல்பகுதியிலிருந்து பொது மக்களை வெளியேற விடாமல் புலிகள் தடுத்து வைத்து பொதுமக்களின் உரிமைகள் மீறுவது தொடர்பான கேள்விக்கு இடமில்லை. அதேசமயம் மோதல் பகுதிக்குள் கடுமையான நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருப்பது குறித்தும் நாம் மிகவும் கவலையடைந்துள்ளோம்.
அங்கு செல்வதற்கு இடமளிக்கப்படவேண்டும் என்பதற்கான ஒருகாரணமானது இதன் மூலம் பொதுமக்கள் நலன்களை மேம்படுத்த முடியும் என்பது மட்டுமல்லாமல் என்ன நடக்கிறது என்பது தொடர்பாக சகல தரப்பினரதும் பதிலளிக்கும் கடப்பாட்டையும் உரிய முறையில் மேம்படுத்த முடியும் என்று கூறியுள்ளார்.
பிரிட்டிஷ் அமைச்சர் மில்லிபான்ட் மேலும் கூறியதாவது;
இலங்கை நிலைவரம் தொடர்பாக உலகம் பூராமுவுள்ள மக்கள் கவலையடைந்துள்ளனர். 1 இலட்சத்து 20 ஆயிரம் பேர் வரை இடம் பெயர்ந்துள்ளனர்.
சர்வதேச சமூகத்தின் கவலையானது பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளால் ஐ.நா. பாதுகாப்பு சபையில் வெளிப்படுத்தப்பட்டிருப்பது மாத்திரமன்றி வீதிகளிலும் அமைதியான ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றன.
பொது மக்களை பணயக் கைதிகளாக வைத்திருக்க வேண்டாமெனவும் அவர்கள் வெளியேறிச் செல்ல அனுமதி வழங்க வேண்டுமெனவும் புலிகளை நாம் வலியுறுத்துகின்றோம். இது உள்நாட்டு யுத்தம் என்பதையும் பயங்கரவாத அமைப்பானது இலங்கை பூராவும் பஸ்கள், வர்த்தக நிலையங்களில் குண்டுகளை மக்கள் மீது வெடிக்க வைத்திருப்பது குறித்தும் நாம் மறக்கவில்லை. ஆனால், தமிழ் மக்களின் உண்மையான கோரிக்கையானது கண்ணியமான உரிமைகள், உரிய அங்கீகாரம் என்பன இலங்கையில் சமாதானமான வழியில் கிடைக்க வேண்டும் என்பதாகும்.
மிகத் தீவிரமான அரசியல் நெருக்கடியானது பிரதிநிதித்துவம் மற்றும் அங்கீகாரம் பற்றியதாகும். நிச்சயமாக அதற்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றும் மில்லிபான்ட் கூறியுள்ளார்.
விடுதலைப்புலிகள் சரணடைய வேண்டுமா என்று மார்தா கோர்னி கேட்டபோது, வன் செயல்களை கைவிடுமாறு நாம் அவர்களை கோரியுள்ளோம். ஜனநாயக நாடொன்றில் அரசியல் ரீதியில் முன்னேற்றம் ஏற்படுவதற்கு வன்முறையானது ஒரு போதும் வழிமுறையல்ல. இந்த நாட்டிற்கு சர்வதேச சமூகம் தேவையாகவுள்ளது. சர்வதேச சமூகம் அதற்குரிய செயற்பாட்டில் ஈடுபடும் ஆனால், தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்குரிய அங்கீகாரமும் அவர்களின் தேவைகளுக்கான அங்கீகாரமும் ஏற்படுவதை பார்க்க சர்வதேச சமூகம் விரும்புகிறது.
ஐக்கிய இலங்கைக்குள் இவை அமையமுடியும். ஆனால், தெளிவான அரசியல் உரிமைகளை அடிப்படையாகக் கொண்டதாக அது இருக்க வேண்டும். மோதலின் பெறுபேறாக இருப்பது இலங்கை அரசு யுத்தத்தில் வெற்றி பெற்றதாக இருக்கக் கூடும். அதே சமயம் சமாதானத்தை இழப்பது அபாயமானதாகும். ஏனெனில், நாம் 25 வருடங்களுக்கும் அதிகமான காலப் பயங்கரவாதத்தை கொண்டுள்ளோம். ஏனெனில், இலங்கை பூராவும் உள்ள தமிழ்ச் சமூகங்கள் அவர்கள் பார்த்ததையிட்டு அதிர்ச்சியும் திகிலும் அடைந்துள்ளனர் என்று மில்லிபான்ட் கூறியுள்ளார்.
0 comments:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.