மாவீரர் நாள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் துயிலும் இல்லம்தமிழீழத்தில் மாவீரர் நாள் என்பது தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றி தாய்நாட்டுக்காக தமது உயிரை ஈந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களையும், அவர்களோடு சேர்ந்து போரிட்டு உயிர் ஈந்த எல்லைப்படை துணைப்படை வீரர்களையும், புலிகளோடு இணைந்து உயிர் ஈந்த ஈழ புரட்சிகர மாணவர் இயக்க உறுப்பினர்களையும், மற்றும் குட்டிமணி, தங்கத்துரை போன்ற வேறு சில ஈழப்போராட்ட போராளிகளையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செய்து, பெருமைப்படுத்தும் நாள் ஆகும். இதற்குரிய நாளாக நவம்பர் 27 ஆம் நாள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினரால் 1989 ஆண்டில் அறிவிக்கப்பட்டது. நினைவுறுத்தும் நாள் போன்று மற்ற நாடுகளில் போர்வீரர்களை நினைவு கூரும் நாட்களோடு மாவீரர் நாள் ஒப்பிடத்தக்கது. ஈழத்தமிழர் அனேகர் வெவ்வேறு அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தாலும், ஈழப் போராட்டத்தில் மடிந்த வீரர்களுக்கு மரியாதை செய்வர். மற்ற இயக்கங்களுடைய போராளிகளுக்கும் இவ்வாறு வணக்கம் செலுத்தும் நாட்கள் உண்டு.


வரலாறு
விடுதலைப் புலிகள் ஈழப் போரில் இறந்த போராளிகளை நினைவுகூருவது, மதிப்பது தமது அடிப்படைக் கடமைகளில், கொள்கைகளில் ஒன்றாகக் கருதுகிறார்கள். மாவீரர் நாளாக நவம்பர் 27 விடுதலைப் புலிகளால் 1989 அறிவிக்கப்பட்டது. தமிழீழ மாவீரர் நாளாக இந்நாளைத் தேர்ந்தெடுத்ததற்கு தமிழீழ போராட்ட வரலாற்றுடன் இணைந்த ஒரு முக்கிய காரணம் உள்ளது. இந்த நாளில்தான் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதலாவது போராளியான சங்கர் (செ. சத்தியநாதன்) வீரமரணம் அடைந்தார்.

தொடக்க காலங்களில் மாவீரர் நாளில் ஈகைச்சுடரேற்றுவது நள்ளிரவு 12.00 மணிக்கு என்றிருந்தது. பின்னர் அது மாலை 06.05 மணிக்கு என்று மாற்றப்பட்டு விட்டது. அதற்கும் காரணம் உள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதற் களப்பலியான சங்கர் வீரமரணமடைந்தது நவம்பர் 27, 1982 அன்று மாலை 6.05 மணிக்கு. லெப். சங்கர் தனது தாய் நாட்டுக்காக தன் இன்னுயிரை அணைத்துக் கொண்ட அதே நாள், அதே நேரமான 6.05 மணியே தமீழீழ மாவீரர்நாளில் ஈகைச்சுடரேற்றும் நேரமானது.

தமிழீழம்
மாவீரர் நாளில் பல மாவீரர் குடும்பங்கள் மாவீரர்களின் கல்லறைக்களுக்கு சென்று அஞ்சலி செலுத்துவர். கொடியேற்றுதல், ஈகைச்சுடரேற்றுதல், மலர்தூவி அஞ்சலி செய்தல் என்பன மாவீரர்நாளின் முக்கிய நிகழ்வுகளாக இடம்பெறுகின்றன. அதனைத் தொடர்ந்து தமிழீழத் தேசியத்தலைவரின் மாவீரர்நாள் உரையும், விடுதலை வேட்கையையும், வீர உணர்வுகளையும் தரக்கூடியதான கலைநிகழ்வுகளும், பல்வேறு நினைவுகூர் நிகழ்வுகள், உரைகளும் இடம்பெறுகின்றன. மாவீரர் வாரத்தில் மாவீரர் குடும்பங்களின் உறுப்பினர்களும் கௌரவிக்கப் படுகிறார்கள்.



கொடியேற்றுதல்

மாவீரர் நாள் நிகழ்வுகளில் தமிழீழத் தேசியக்கொடியை ஏற்றிப் போற்றுதல் மிக முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது. தமிழீழத்தேசியக் கொடி தமிழீழத் தேசியத்தலைவர் வே. பிரபாகரன் அவர்களாலும், மாவீரர் குடும்ப உறுப்பினர்களாலும் தமிழீழத்தில் உள்ள அந்தந்தத் துயிலும் இல்லங்களில் ஏற்றப்படும். புலம்பெயர் நாடுகளில் மாவீரர் குடும்ப உறுப்பினார்களால் நிகழ்வு நடைபெறும் மண்டபத்தில் ஏற்றப்படும்.

கொடியேற்றப்படும் போது புதுவை இரத்தினதுரை அவர்களால் எழுதப்பெற்ற ஏறுது பார் கொடி ஏறுது பார்... என்ற உணர்வு மிக்க பாடல் ஒவ்வொரு முறையும் ஒலிக்க விடப்படும்.

மாவீரர் நாள் உரை



மாவீரர்நாள் உரை தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் ஒவ்வோர் ஆண்டும் மாவீரர் நாளில் உரைக்கப்படுகிறது. இவ்வுரை தமிழீழத்தில் இருந்து ஆற்றப்பட்டாலும் உலகின் பல நாடுகளுக்கும் நேரடி ஒலி பரப்பாகவும், ஒளிபரப்பாகவும் எடுத்துச் செல்லப்படுகிறது. இவ்வுரை தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் பற்றுக் கொண்டோர்ர்களால் மட்டுமன்றி விடுதலையில் அக்கறை கொண்ட மற்றைய அமைப்பினர்களாலும், மாற்றுக் கருத்துக்கொண்ட அமைப்பினர்களாலும், விடுதலைப்போரையே வெறுப்பவர்களாலும், சாதாரண தமிழ் மக்களாலும், சிங்கள அரசினாலும் கூட மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு செவிமடுக்கப்படுகிறது.


மாவீரர் நாள் பாடல்

மாவீரர் நாள் அன்றும் போராளிகளின் இறுதிச் சடங்களின் அன்றும் ஒலிக்கப்படும் பாடல் மாவீரர் நாள் பாடல் ஆகும். இந்த பாடல் புதுவை இரத்தினதுரை அவர்களால் இயற்றப்பட்டது. வர்ணராமேஸ்வரன் அவர்கள் பாடியது. ஈகச்சடரேற்றும் பொழுது இது பாடப்படுகிறது, அல்லது ஒலிபரப்படுகிறது.[1] இந்தப் பாடல் பின்வருமாறு தொடங்கிறது:



மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி!
வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி!
விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி!
இழிவாக வாழோம்! தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி!

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!
இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!
அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!
அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!


மாவீரர் குடும்ப கௌரவிப்பு
மாவீரர் வாரத்தில் மாவீரர் குடும்பங்களின் உறுப்பினர்களும் விடுதலைப்புலிகள் அமைப்பினரால் கௌரவிக்கப் படுகிறார்கள். முன்னர் இந்தச் செயற்பாடு தமிழீழத்தில் மட்டுமே கடைப்பிடிக்கப் பெற்றது. தற்போது சில ஆண்டுகளாக வெளிநாடுகளிலும் இந்தக் கௌரவிப்பு நிகழ்வு நடைபெறுகிறது.

தமிழீழத்தில்
ஒரு மாவீரனின் நினைவுச்சின்னம் எந்த மாவீரர் துயிலும் இல்லத்தில் உள்ளதோ அந்த இடத்துக்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் (பெற்றோர்கள், உடன்பிறப்புகள்) அழைத்து வரப்பட்டு மாவீரர் வாரத்தின் மூன்று நாட்கள் அதற்குரிய மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு கௌரவ விருந்தினர்களாகக் கவனிக்கப் படுவார்கள்.










புலம்பெயர் நாடுகள்
அதற்கென மாவீரர் வாரத்தின் ஒரு நாளையோ அன்றி மாவீரர் நாளையோ தேர்ந்தெடுத்து அந்த நாளில் மாவீரர் குடும்பத்தினர் கௌரவிக்கப் படுவார்கள்.







கார்த்திகைப் பூ
கார்த்திகைப் பூதேசியத்தின் தேசத்தின் அடையாளச் சின்னமாக பூக்கள் இலங்குவது யாவரும் அறிந்ததே. அந்தந்த தேசியத்தினதும், தேசத்தினதும் வரலாற்று சமூக பண்பாட்டு கலாச்சாரத்தின் பால் பின்னிப்பிணைந்துள்ள தொடர்புபட்டுள்ள மலர்கள் தேசியப் பூக்களாக பிரகடனப்படுத்தப்பட்டு அந்தந்த தேசியங்களால் கௌரவிக்கப்படுவதும், தேசியக்கொடிக்கு சமமாக பேணப்படுவதும், தொன்றுதொட்டு நிலவிவரும் மரபு.



இந்த வகையிலேயே தமிழர்களின் தேசியப்பூவாக, கார் காலத்தில் மலர்ந்திடுவதும், தமிழீழ தேசியக்கொடியின் வர்ணங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளதும், தமிழீழத் தேசியத் திருநாளாம் மாவீரர் நாள் வருகின்ற திங்களில் கொடிபரப்பி பூத்துக் குலுங்குவதும், தமிழீழ தேசமெங்கும் பரவி முகிழ் விடுவதுமான கார்த்திகைப் பூ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கார்த்திகைப் பூவினை பண்டைத் தமிழ் இலக்கியங்களிலே காந்தள் என்றே அழைப்பர்.

ஆண்டுவாரியான எண்ணிக்கை

விடுதலைப் புலிகளின் மாவீரர்களின் ஆண்டு வாரியான பட்டியல் பின்வருமாறு:

ஆண்டு மாவீரர் எண்ணிக்கை
1982 01
1983 15
1984 50
1985 188
1986 320
1987 518
1988 382
1989 419
1990 965
1991 1622
1992 792
1993 928
1994 378
1995 1508
1996 1380
1997 2112
1998 1805
1999 1549
2000 1973
2001 761
2002 46
2003 72
2004 80
2005 56
2006 1002
2007 860 அக்டோபர் வரை
2008
2009

படை நடவடிக்கைகளின்படி மாவீரர்களின் எண்ணிக்கை
படைநடவடிக்கைகளின்படி வீரச்சாவடைந்த மாவீரர்கள் பட்டியல் பின்வருமாறு:

நடவடிக்கை மாவீரர் எண்ணிக்கை
ஆகாயக் கடல் வெளிச் சமர் 604
மணலாறு 233
தவளை நடவடிக்கை 460
கொக்குத்தொடுவாய் 175
இடிமுழக்கம் 181
சூரியகதிர் (ரிவிரச) 438
ஓயாத அலைகள் ஒன்று 315
சத்ஜெய 2 நடவடிக்கையும் அதன் மீதான எதிர்த்தாக்குதல்களும் 100
சத்ஜெய 2 நடவடிக்கையும் அதன் மீதான எதிர்த்தாக்குதல்களும் 133
பரந்தன் ஆனையிறவு 193
வவுணைதீவு 103
கிளிநொச்சி, பரந்தன் மீதான ஊடுருவித் தாக்குதல் 300
ஓயாத அலைகள் இரண்டு 403
ஜெயசிக்குறு படைநடவடிக்கையும் அதன்மீதான எதிர்த்தாக்குதலும் 2146
ஓயாத அலைகள் மூன்று 1336
ஓயாத அலைகள் நான்கு 181
தீச்சுவாலை முறியடிப்புச் சமர் 141

நன்றி : கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியா

0 comments:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.