ஈழத் தமிழர் விவகாரத்தில் தமிழக முதல்வர் கலை ஞர் கருணாநிதியின் "அங்கிடுதத்தி"த் தனத்தால் அவ ருக்குத் தீராப்பழி ஏற்பட்டுவிட்டது. "உலகத் தமிழினத் தின் தலைவர்" என்று தன்னைத் தமிழினம் மதிக்கும் என்றுதான் இதுகாறும் கருதி வந்தார் கலைஞர் கருணா நிதி. ஆனால் ஈழத் தமிழர்கள் வரலாற்றில் பேரவலத்தை மிக மோசமான போரியல் அழிவுகளை சந்தித்துக் கொண்டிருந்தபோது, தன்னுடையதும் தனது குடும்பத் தினதும் சுயநல அரசியலுக்காகத் தமிழர்களை நட்டாற்றில் விட்டு, பெரும் பழியைச் சுமந்து கொண்ட அவரை "தமிழினத்தின் தலைவிதி" என்று நொந்து சபிக்கும் நிலையிலேயே உலகத் தமிழர்கள் உள்ளனர்.
தமிழ்நாட்டில் அரசியல் அணிகள் தொடர்பான கணக்கு வழக்குகள், கூட்டல் கழித்தல்கள், இன்றைய நிலையில் கலைஞர் கருணாநிதியின் காட்டில் நல்ல மழை என்ற நிலைமையை ஏற்படுத்தினாலும் ஈழத் தமிழர்களை அந்தரிக்க விட்டு அதற்காகத் தமது அரசியலில் "அந்தர் பல்டி" அடித்த கலைஞரை உலகத் தமிழினம் எந்தக் கட்டத்திலும் மன்னிக்காது என்பது அவருக்கு நன்கு தெரியும்; புரியும்.
எப்படியும் தமது இறுதிக் காலத்துக்கு முன்னர் அந்தப் பழியைத் துடைத்து அழித்துவிடலாம் என்ற நப்பாசை யில் அவ்வப்போது சில ஆரவாரங்களைப் பண்ணுவது இவரது அரசியல் தகிடுதத்தமாக இருந்து வருகிறது.
உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, சர்வதேச செந்தமிழ் மாநாடு என்றெல்லாம் "கப்ஸா"பண்ணிப் பார்த்தார். ஈழத் தமிழர் விடயத்தில் தம்மீது விழுந்துள்ள பழியைத் துடைப்பதற்கு அவர் நடத்தும் கபட நாடகமே இந்த மாநாடு என்பது பகிரங்கமாக விமர்சிக்கப்பட்டமையை அடுத்து சற்று அடங்கிப்போனார்.
இப்போது "நம் மௌன வலி யாருக்குத் தெரியப் போகின்றது?" என்ற தலைப்பில் ஈழத் தமிழர்களுக்காக நீலிக்கண்ணீர் வடித்து ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்ட பேரவலத்துக்கு விடுதலைப் புலிகள் இயக்கத்தையும், அதன் தலைவரையும் குற்றம் சுமத்தி அவர் வெளியிட்ட அறிக்கையும் இதேமாதிரியில் விவகாரத்தைத் திசை திருப்பும் எத்தனமின்றி வேறில்லை.
இலங்கையில் தமிழர்கள் கொத்துக் கொத்தாகச் செத்து மடிந்து கொண்டிருந்தபோது கொன்றொழிக்கப் பட்டுக் கொண்டிருந்தபோது அத்தகைய கொழும்பு அரசின் அத்துமீறிய போக்கை ஆதரித்து, அங்கீகரித்து, அதற்கு உதவி, ஒத்தாசை வழங்கி, உறுதுணையாகச் செயற்பட்டது இந்திய மத்திய அரசு புதுடில்லி நிர்வாகம்.
இலங்கை விவகாரத்தில், அப்படி இந்திய மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளே தனது மாநில அரசின் முடிவும் கூட என்றும் பகிரங்கமாக அறிவித்ததன் மூலம், இலங்கையின் தமிழின அழிப்புக்குத் துணைபோன, இந்திய மத்திய அரசுக்கு முழு அளவில் முண்டு கொடுத்து, அந்த மத்திய அரசின் பழி பாவத்தில் தன்னையும், தனது இயக்கத்தையும், கட்சிக்காரர்களையும் பங்குதாரர் ஆக்கிக் கொண்டார் கலைஞர்.
இப்போது அதிலிருந்து வெளியே வர பழியைத் துடைக்க பகீரதப் பிரயத்தனம் பண்ணுகின்றார். ஆனால் அவை எல்லாம் எடுபடாமல், அவரின் கோமா ளித்தனங்களாக அர்த்தம் பண்ணப்படுகின்றமைதான் அவருக்கு இன்று நேர்ந்துள்ள அவலமாகும்.
இலங்கைத் தமிழர்கள் ஆயிரக் கணக்கில் கொன்றொழிக்கப்பட்ட போது, அதற்குத் துணைபோன புதுடில்லி ஆட்சிப் பீடத்துக்கு முண்டு கொடுத்து, தனது அரசியல் பிழைப்பை லாபகரமாக நடத்திய கலைஞர், அச்சமயம் மறுபக்கத்தில், மனித சங்கிலிப் போராட்டம், தமிழக எம்.பிக்கள் கூண்டோடு இராஜிநாமா என்ற கபட நாடகம், மூன்று மணி நேரம் நடத்திய சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்ட நடிப்பு, இலங்கையில் யுத்த நிறுத்தம் வந்துவிட்டது என்ற பித்தலாட்ட அறிவிப்பு, பல கட்சிப் பிரதிநிதிகளையும் புதுடில்லிக்குக் கூட்டிச் சென்று இந்திய மத்திய அரசை மிரட்டுவது என்ற கோணங்கித்தனம் என அவ்வப்போது அடித்த அரசியல் "பல்டி"கள் அல்லது "ஸ்டண்ட்"கள் பலப்பல.
அவை எவையுமே அப்போதும் சரி, பின்னரும் சரி எடுபடவேயில்லை என்பதுதான் யதார்த்தம்.
இப்படித் தீராப்பழி தம்மீதும், தமது குடும்பம் மீதும் விழுந்திருப்பதால், அதையெண்ணி இப்போதாவது நொந்து அழுவதற்கான மனச்சாட்சியை அவருக்கு இறைவன் கொடுத்திருக்கின்றான் போலும். அதனால்தான், தமது பிந்திய இந்த அறிக்கைக்குள் வேறு ஏதோ உளறிக்கொட்டியிருந்தாலும் கூட, அதன் தலைப்பை "நம் மௌன வலி யாருக்குத் தெரியப் போகின்றது?" என்று வரைந்திருக்கின்றார் அவர்.
வன்னியிலே தமிழினம் கதறக் கதறக் கொன் றொழித்து அழிக்கப்பட்டபோது, அதன் கதறலை செவி மடுக்கத் தவறி அதன் அவலத்தை உணரத் தவறி சுயலாப அரசியல் நடத்திய இத்தகைய தலைவர்களுக்கு உண்மையில் மனச்சாட்சி இருந்து, அதில் ஏற்படக்கூடிய மௌனவலியை உணரும் பக்குவம் அவர்களின் பிரக்ஞைக்கு உண்டா என்பது சந்தேகமே. அப்படி அவர் களுக்கு மௌன வலி நேர்ந்தாலும் அதைத் தமிழினம் உணர்ந்து, புரிந்து கொள்வதற்கு அதில் எதுவும் இல்லை என்பதுதான் உண்மை.
0 comments:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.