இலங்கைப் படையினர் புலிப் போராளியை கத்தியால் குத்தி கொலை பண்ணும் கோரக்காட்சிகள்

கடந்த வருடம் இறுதி யுத்தத்தில் சிங்கள படைகளால் கைது செய்யப்பட்ட போராளிகளை கோரமாக வதை செய்து சிங்கள இராணுவத்தினர் கொன்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் மீண்டும் ஒரு போர்க்குற்றக் காட்சி ஆதாரங்களுடன் வெளிவந்துள்ளது.

மேலும் சிங்களப் படைகளால் அரங்கேற்றப்பட்டு மகிழ்ச்சி கொண்டாடிய காட்டுமிராண்டித்தனமான போர்க்குற்ற ஆதாரங்களில் சிலவற்றை மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) வெளியிட்டுள்ளது.










இதில் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட ஒரு போராளியை சிங்கள படையினர் தென்னை மரத்தில் கட்டி வைத்து கத்தியால் வெட்டி சித்திரவதை செய்து கொலை செய்து தமிழரின் தேசியக்கொடியினை போர்த்தி அழகுபார்த்த கோரக் காட்சியின் படங்கள் சில வெளியிடப்பட்டுள்ளன.

இலங்கை இராணுவப் படைவீரர் ஒருவர் தமது அமைப்பிற்கு தகவல் வழங்கியதாகவும், ஆதாரமாக 200 புகைப்படங்களை சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இறுதிக் கட்ட போரின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

சிவிலியன்கள் செறிந்திருந்த பகுதியில் எறிகணை வீச்சு நடத்தப்பட்டதாகவும் இலங்கைப்படையினர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், அரசாங்கப் படையினருக்கும் கடந்த வருடம் இடம்பெற்ற போர் தொடர்பில் பூரண விசாரணை நடத்தப்பட வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் , ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த படத்தை பார்த்ததும் தமிழா உன் மனம் கொதிக்கிறதல்லவா? அமெரிக்காவின் குவண்டேனமா சிறையை போல இங்கே பொதுமக்களும் போராளிகளும் பலத்த சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவது ஆதாரபூர்வமாக தொடர்ந்து வெளிவருவது குறிப்பிடத்தக்கது.

மனிதநேயத்தையும் பொருட்படுத்தாது, கண்மூடித்தனமாக நடந்த இக்கொடுமைகளின் ஆதாரங்கள் கிடைத்தபோதிலும், மனித உரிமைகள் கண்காணிப்பகம் பாராமுகமாக செயற்பட்டு வருகின்றமை வெட்டவெளிச்சமாகிறது.

இச்செய்தியானது உலக தமிழ் மக்களை உலுக்கியுள்ள இவ்வேளையில் புலம்பெயர் தமிழ் மக்கள் மற்றும் தமிழக உறவுகள் அனைத்து ஒரே வழியில் நின்று போராடவேண்டிய தேவையையும், கொடுங்கொல் நாடாகிய இலங்கையை போர்க்குற்றத்திற்கான விசாரணைக்கு கொண்டுவர சர்வதேச சமூகத்துக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் வேண்டியுள்ளனர்.

இவர் வன்னியை சேர்ந்தவர், புலிகளின் அரசியல் அமைப்பில் உறுப்பினராக பணியாற்றியவர். இவர் போராளி அல்ல, அரசியல் பணி ஆற்றி வந்தவர். இது நம்பதகுந்த வட்டாரங்களில் இருந்து வந்த தகவல். சொன்னவர்களுக்கு இவர் இறந்தது தற்பொழுது தான் தெரியுமாம்.

சனல்4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள மற்றும் ஒரு போர்க்குற்றக் காட்சிகள்!


வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின்போது இலங்கைப் படையினரால் பிடிக்கப்பட்ட அப்பாவிப்பொதுமக்கள் கொலை செய்யப்பட்ட காணொளியை வெளியிட்ட சனல் - 4 தொலைக்காட்சி, அவ்வாறு இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டவர்களின் புகைப்படங்கள் இலங்கை படைச்சிப்பாய் ஒருவரினால் எடுக்கப்பட்டவை என்றும் தெரிவித்துள்ளது.



அத்துடன், கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட காணொளி தொடர்பாக மேலும் ஆதாரங்களை பெற்றுக்கொள்ளும் வகையில் அந்த படுகொலைகளை மேற்கொண்ட இலங்கை இராணுவ சிப்பாய் ஒருவரினதும் போர் முனையில் கடமையிலிருந்த இராணுவ தளபதிகளில் ஒருவரினதும் கருத்தினையும் சனல் - 4 தொலைக்காட்சி மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டிருக்கிறது.


"எமது தளபதி எல்லோரையும் படுகொலை செய்யுமாறு உத்தரவிட்டார். ஆகவே, நாங்கள் எல்லோரையும் கொலை செய்தோம்" - என்று படுகொலைகளை மேற்கொண்ட இராணுவ சிப்பாய் ஒருவர் சனல் - 4 தொலைக்காட்சிக்கு தெரிவித்தார் என்றும் - "விடுதலைப்புலிகளின் முக்கியமானவர்கள் எவரையும் வைத்துப் பாதுகாக்கும் திட்டம் எதுவும் இல்லாததால், அவர்கள் அனைவரும் படுகொலை செய்யப்பட்டார்கள். இதற்கான உத்தரவு நிச்சயமாக உயர்மட்டத்திலிருந்தே கிடைத்திருக்கவேண்டும்" - என்று இலங்கை இராணுவத்தின் மூத்த தளபதிகளில் ஒருவர் சனல் - 4 தொலைக்காட்சிக்கு தெரிவித்தார் என்றும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.


வெள்ளைக்கொடியுடன் சரணடைவதற்கு வந்த விடுதலைப்புலிகள் அமைப்பு உறுப்பினர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் என்ன நடந்தது என்று கேட்டபோது, குறிப்பிட்ட இலங்கை இராணுவ சிப்பாய் பதிலளிக்கையில் -


முதலில் நாங்கள் அவர்களை கைது செய்தோம். பின்னர் சித்திரவதை செய்தோம். பின்னர் கொலை செய்தோம். போரின் இறுதி நாட்களில் நாங்கள் எல்லோரையும் கொலை செய்தோம். பெருந்தொகையான சடலங்கள் அங்கு காணப்பட்டன. அவ்வாறு கொலை செய்யுமாறு எமது தளபதி எங்களுக்கு உத்தரவிட்டார்" - என்று கூறினார்.

சனல் - 4 தொலைக்காட்சியினால் தொடர்பு கொள்ளப்பட்ட குறிப்பிட்ட இலங்கை இராணுவத்தின் மூத்த தளபதி மேலதிக தகவல் ஒன்றினை தெரிவிக்கையில் - விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் 13 வயது மகன் இலங்கை இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு அவரது தந்தையார் - தலைவர் பிரபாகரன் - எங்கு உள்ளார் என்று விசாரணை செய்யப்பட்டு பின்னர் சுடப்பட்டார் என்று கூறியுள்ளார்.


இந்த செய்திகள் மற்றும் படங்கள் குறித்து பிரிட்டனில் உள்ள இலங்கை தூதரகத்திடம் சனல் - 4 செய்தி நிறுவனம் கேட்டபோது -

இலங்கை படையினர் மனிதாபிமான நடவடிக்கையினையே கடந்த வருடம் மேற்கொண்டிருந்தனர் அதில் பொதுமக்கள் எவருக்கும் எந்த இழப்பும் எற்படவில்லை. அவ்வாறு படையினர் குற்றச்செயல்களில் ஈடுபட்டார்கள் என்று வெளிவரும் செய்திகள் எதிலும் எந்த உண்மையும் இல்லை.

சனல் - 4 தொலைக்காட்சியினால் தற்போது வெளியிடப்பட்ட தகவல்கள் குறித்து தற்போது நான் எந்த பதிலும் கூறமுடியாது. இது தொடர்பான காணொளியை அனுப்புங்கள். அதன் பின்னர்தான் அது குறித்து கருத்து கூறமுடியும்.
இலங்கைப் படையினர் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கு இலங்கை அரச அதிபர் குழு ஒன்றினை நியமித்துள்ளார் - என்று பிரிட்டனுக்கான இலங்கை தூதுவர் பதிலளித்துள்ளார்.

அயர்லாந்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலையின் முதலாமாண்டு நினைவு நாள்

வன்னியில் நடை பெற்ற இறுதிக் கட்டப் போரின் பொழுது இலங்கை பேரினவாத அரசினால் திட்டமிட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொது மக்களையும் போராளிகளையும் நினைவுகூறும் முள்ளிவாய்க்கால் படுகொலையின் முதலாம் ஆண்டு நினைவு நாள் அயர்லாந்து தலைநகர் டப்ளின் ( Dublin) இல் இன்று பிற்பகல் 3.00 மணியளவில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது .



படுகொலை செய்யப்பட்ட பொது மக்களையும் போராளிகளையும் நினைவுகூர்ந்து முதலில் பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுச்சுடரினை ரஜனி அவர்கள் ஏற்றிவைத்தார், அவரைத் தொடர்ந்து நினைவு நாளில் கலந்து கொண்ட அனைவரும் கைகளில் ஈகைச்சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தியதுடன் மலர் வணக்கத்தையும் செலுத்தினர்.
தொடர்ந்து இலங்கை சமாதானத்திற்கான அயர்லாந்தின் அமைப்பின் முக்கிய உறுப்பினர் உரை நிகழ்த்தினார். இவர் தனது உரையில் வன்னியில் இடம்பெற்ற இனப்படுகொலையை விபரித்துக் கூறியதுடன் தாயக மண்மீட்புப் போரிற்காய் தங்களை அர்ப்பணித்த போராளிகளையும் அவர்கள் தடுப்பு முகாமில் இன்று அனுபவிக்கும் இன்னல்கள் பற்றியும் எடுத்துக் கூறியதுடன் இன்னும் ஒரு முள்ளிவாய்க்கால் படுகொலை இடம்பெறாமல் இருக்க உலகத்தமிழ் மக்கள் ஆகிய நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய முள்ளிவாய்க்கால் நினைவு நாள் ஒருங்கமைப்பாளர் இலங்கை அரசினால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொது மக்களையும் போராளிகளையும் நினைவு கூர்ந்ததுடன், புலம்பெயர்ந்து இங்கு வாழும் நாங்கள் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்காகவும், எமது தேச விடுதலைக்காகவும் ஒற்றுமையாக குரல் எழுப்புவதுடன் அவர்களுக்கு உதவுவது எமது தலையாய கடமையாகும் எனவும் கூறினார்.


இந் நினைவு நாள் நடைபெற்ற அரங்கத்தில் ஓவியக் கண்காட்சியும் நடைபெற்றது, இந்த ஓவியங்களானது வன்னியில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் பொழுது அங்கு இருந்து பின்னர் வவுனியா இடைத்தங்கல் முகாமில் தங்கி இருக்கும் ஓவியரால் வரையப்பட்ட ஓவியங்களாகும். இந்த முள்ளிவாய்க்கால் நினைவு நாள் ஒன்று கூடலில் பலதரப்பட்ட வயதினரும் மற்றும் பல்லின சமூகத்தினரும் கலந்து கொண்டனர்.

கனடாவில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற “விதையாகிப் போனவர்க்காய் விளக்கேற்ற வாரீர்” அஞ்சலி நிகழ்வு

கடந்த 16ம் திகதி முதல் 18ம் வரை ஒரு மாபெரும் தமிழினப்படுகொலையின் வரலாற்றை உருவாக்கிய விதத்தில், டொரொன்டோவின் அனைத்துப் பகுதிகளும் வாழும் தாயக உறவுகள் அனைவரும் ஒன்றிணைந்து பல்வேறு இடங்களில், தாயகத்தில் உயிர் துறந்த மாவீரர்களையும், தமிழனப்படுகொலையில் உயிர் துறந்தவர்களையும் வணங்கி அவர்களது ஆத்மா சாந்தியடைய ஆத்மார்த்தமான அஞ்சலியை செலுத்தி தமிழர்களின் ஒற்றுமையுணர்விற்கு கூடுதல் பெருமை அளித்துள்ளனர்.



அந்த வகையில் கனடாவில் உள்ள அனைத்து முன்னணிக் கலைஞர்கள், நடன ஆசிரிய ஆசிரியைகள் போன்ற கலைத்துறை சார்ந்தவர்கள் அனைவரும் இணைந்து, 16.5.10 அன்று பிரிச்மௌண்ட் வீதியில் உள்ள கனடா கந்தசாமி ஆலய கலையரங்கில் ‘விதையாகிப்போனவர்க்காய் விளக்கேற்றுவோம் வாரீர்’ எனும் நிகழ்வினை அனைவரின் உள்ளத்தைத் தொடும் வகையில் நடத்தி, தமிழர்களின் மனிதநேயப் பண்பாட்டினை பறைசாற்றியுள்ளர்கள். அன்றைய தினம் நம்மைச் சுற்றி பல இடங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் ‘ வலி சுமந்த மாதம்’ என்ற உணர்வோடு அனுட்டிக்கபட்டிருந்தாலும், இந்நிகழ்வில் பங்குகொண்ட நமது உறுவுகளில் குறிப்பிடத்தக்க வகையில் பல்வேறு பிரமுகர்களான ஊடகவியலாளர்கள் கலைஞர்கள், நடன ஆசிரியைகள், முக்கியமாக மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு பரராஜசிங்கம் அவர்களின் துணைவியார் திருமதி ஜோசப்பரராஜசிங்கம், பாரளுமன்ற உறுப்பினர் திரு ஈழவேந்தன், மாநகர சபை உறுப்பினர்களான திருவாளர்கள் லோகன் கணபதி மற்றும் நீதன்ஷான், சிறப்பு விருந்தினர்களாக அஜின்கோட் பாராளுமன்ற உறுப்பினர் திரு ஜிம் கர்ஜியானிஸ் மற்றும் மாநகரசபை கல்விச்சபை வேட்பாளர் திரு சாம், திருவாளர்கள் பரராஜசிங்கம், நிருத்திய கலாஞ்சலி நாட்டியப்பள்ளி அதிபர் திருமதி நிரோதினி பரராஜசிங்கம் மற்றும் உதயன் பிரதம ஆசிரியர் திரு ஆர்.என்.லோகேந்திரலிங்கம் ஆகியோரும், விழா மண்டபத்திற்கான உதவியை இங்குள்ள பிரபல Able Legal Services Inc. அதிபர் கௌசிகன் ஏகாம்பரம் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். அரங்க மேடையில் ஒரு பெரிய குத்துவிளக்கு மலர்களால் அலங்கரிக்கபட்டு அனைவரும் அஞ்சலி செலுத்தும் வகையில் அதன் கீழே தீபக் கிண்ணங்கள் வரிசையாக வட்டவடிவில் அமைக்கப்பட்டிருந்தது.


கனேடிய தமிழ் கலைஞர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் அனைவரையும் வரவேற்றும், வந்திருந்த பிரமுகர்களை மேடைக்கு அழைத்து அஞ்சலியுரை நிகழ்த்த முறையே அறிமுகப்படுத்திய உதயன் பிரதம ஆசிரியர் கடந்த ஆண்டு மே மாதம் 3வது வாரம் தாயகத்தில் உயிரிழந்த போராளிகளை நினைவுகூர்ந்து, விதையாகிப்போன மாவீரர்களுக்கு விளக்கேற்றி வணங்கிடுவோம் என்று முன்னுரை வழங்கியதற்குப் பின், திருமதி ஜோசப் பரராஜசிங்கம், திருவாளர்கள் ஈழவேந்தன், கணபதிலோகன், மற்றும் பரராஜசிங்கம் ஆகியோர் மங்கள விளக்கேற்றியதைத் தொடர்ந்து தமிழ்தாய் வாழ்த்து, கனேடிய தேசிய கீதம், தாயகத்தில் உயிர் துறந்தவர்களுக்காக அமைதி வணக்கம் ஆகியவை இடம் பெற்றது.



கறுப்பு வைகாசி மாத துயரினை நினைவுபடுத்தும் தினமாகவும், மறைந்த மாவீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வாக அமைந்த இத்துயர் நிகழ்வில் முதலில் உரையாற்றிய திரு லோகன் கணபதி தனது உரையில் இந்த மாதம் முழுவதும் Memorial services என தாயகத்தில் நிகழ்ந்த தமிழனப்படுகொலை மட்டுமின்றி, உலகின் பிற நாடுகளில் பல்வேறு போராட்டங்களில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் மாதம் இது என்றார். மேலும் அன்றைய துயர் தினம் என்பது தன்னைப்பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் mourning day தான் என்பதை தனது உறவுகள், நண்பர்கள் என தொடர்ந்து இழந்துவருவதை நினைவுகூர்ந்தார். நமது எதிரிகளை இனம் கண்டு இன்று சர்வதேசக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வைத்துள்ளது தான் மனதிற்கு ஆறுதல் அளித்துள்ளது என்றார். வன்னியில் விதைப்பதற்குக் கூட விதை நெல்லோ, நிலமோ இன்றி, நமது உறவுகளின் அடிப்படைத் தேவைகளைக் கூட பெற முடியாத நிலையில, திறந்தவெளிச்சிறையில் கைதிகளாக அவதிப்படுவதால், அவர்களின் விடுதலைக்காக Reconstruction History ஐ ஏற்படுத்தி வருகிறோம். இந்த 20-21ம் நூற்றாண்டில் உலகின் பல பகுதிகளான ஜெர்மன், ரஷ்யா, ஆர்மீனியன், கொசாவா, ஈராக், ஈரான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இனப்படுக்கொலை நிகழ்ந்துள்ளதை மேற்கோள் காட்டி, புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் நம் தமிழனம் அனைவரும் கைகோர்த்து ஒற்றுமையுணர்வுடன் மக்களின் மனசாட்சியாக செயல்பட வேண்டிய தருணமிது இது என்றார். கடந்த ஆண்டு அதனை அடையளப்படுத்தும் வகையில் எண்ணற்ற தார்மீக அகிம்சை அமைதி வழிப் போராட்டங்களை நடத்தி அனைத்து உலக அரசின் கவனத்திற்கு முன்னெடுத்து விழிப்புணாவு ஏற்படுத்தி சாதனை புரிந்து, அவர்களையும் நம் பக்கம் இழுத்துள்ளதே ஒரு பெரும் வெற்றியாகும் என்று குறிப்பிட்டார். அவரது உரையைத் தொடர்ந்து மாணவிகளும், வந்திருந்தவர்களும் அஞ்சலி செலுத்தும் வகையில் அனைவரும் தீபம் ஏற்றி பிரார்த்தனையுடன் உயிரிழந்த மாவீரர்களைப் போற்றி வணங்கினார்கள்.




இந்நிகழ்வில் சிறப்புரை ஆற்றிய அஜின்கோட் பாராளுமன்ற உறுப்பினர் திரு ஜம் கர்ஜியானிஸ் மற்றும் மாநகர கல்விச்சபை வேட்பாளர் திரு சாம் ஆகியோர், இங்குள்ள தமிழர்களிடம் தாங்கள் கொண்டுள்ள பற்றையும், நட்புணர்வையும் பெருமைபடக் கூறி, தங்களது சேவை என்றும் நம் பக்கம் உண்டு என்பதை மிகவும் இயல்பாக வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக திரு ஜிம் அவர்கள் உலக மகா யுத்தம் தொடங்கிய காலம் தொட்டு, உலகின் பல நாடுகளில் ஏற்பட்ட புரட்சிகளையும், விடுதலைப் போராட்டத்தின் விளைவுகளையும் கடந்த 95 ஆண்டு வரலாற்றுப் பின்னணியில் ருவாண்டா முதல் இலங்கை வரை நிகழ்ந்த Genocide எனும் இனப்படுகொலையின் விளைவுகளை மேற்கோள் காட்டி உரையாற்றினார். குறிப்பாக தம்மைப்போன்ற அரசியல் பிரமுகர்கள் இலங்கையில் நடைபெற்ற இனப்படுக்கோலை நிகழ்ந்த இடங்களைக் காண சென்றபோது, அதற்கு விசா பெறுவது தொடங்கி, தமிழர்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு செல்வதற்கு ஏற்பட்ட பிரச்சனைகள், தடைகளையும் மேற்கோள் காட்டி, இலங்கை அரசு நடத்திய கபடவேடத்தையும சுட்டிக்காட்டினார்.; மனிதநேயப் பண்பாளராக, தமிழர்களின் மீது வைத்துள்ள ஆழ்ந்த நட்புணர்வை வெளிப்படுத்தி, தர்மம் வெல்லும் என்பதை தனது இரங்கல் உரை மூலம் அனைவரின் மனதையும் தொட்டுவிட்டார். அதிலும் நடைபெற உள்ள G 8, G 20 சர்வதேச மாநாடுகள் நடைபெற உள்ள இக்காலகட்டத்தில், இங்குள்ள அனைத்துத் தமிழர்களும் கனேடியப் பிரதமர் முதல் தங்களது பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் போன்ற அனைத்துத் தரப்பினருக்கும், Genocide பற்றிய தங்களது எதிர்ப்புக்குரலை Letters, e mail, fax போன்றவற்றின் மூலம் அனுப்பி மீண்டும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் என்று வலியுறுத்தினார். அதன் மூலம் தான் உலக நாடுகளின் கவனம் கூடுதலாகி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வைக்கும் என்பதை தெளிவுப்படுத்தினார். தமிழ் மக்களும் உங்கள் மக்கள் தான் என்பதை கனேடிய அரசும் கருதி மனிதநேய உணர்வுடன் செயல்பட முன்வரும் என்பதோடு உங்களது உரிமைகளும் காக்க முடியும் என்பதே தனது எதிர்பார்ப்பாகும் என்று அனைவருக்கும் நன்றி பாராட்டிச் சிறப்பித்து, தங்களது அஞ்சலியுரையை நிறைவு செய்தனர்.

அவர்களது உரையைத் தொடர்ந்து திரு நீதன்ஷான், திருமதி ராஜ்மீரா ராசய்யா, தமிழ் தேசிய அமைப்பின் சார்பில் திரு தேவா சபாபதி, தமிழ் இளைஞர்கள் அணியின் சார்பில் திரு அரவிந்தன் ஆகியோர் தங்களது அஞ்சலியுரையை பல்வேறு கோணங்களில் விமர்சித்து, தமிழனம், தமிழ்மொழி பாதுகாக்கப்பட வேண்டியதின் அவசியத்தையும், நமது விடுதலைப் போராட்ட வரலாற்று நிகழ்வுகள் அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டு, நமது இளைய சமுதாயத்தினரும் அறிந்துகொண்டு, நமது போராட்ட உணர்வுகளிலும், செயல்பாடுகளிலும் முழுமையாக ஈடுபடும் வகையில் நாம் வழிகாட்டவேணடியதன் அவசியத்தையும் வலியுறுத்தி, நமது இலட்சியம் கைகூடும் என்று நம்பிக்கை மேலிட சிறப்பாக உரையாற்றினார்கள்.

நாம் தமிழர் கட்சி: புலிக்கொடி ஏற்றி வீரவணக்கம் - என்னை தலைவராக பார்க்காதீர்கள்: சீமான் பேச்சு

மதுரை 18 : இயக்குநர் சீமானின் நாம் தமிழர் கட்சித் துவக்கவிழா செவ்வாய்க்கிழமை மாலை மதுரையில் நடந்தது. பல ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டில், நாம் தமிழர் இயக்கம் அரசியல் கட்சியாக உதயமானது.

செவ்வாய்க்கிழமை மாலை, மதுரை ரிங் ரோடு அருகே உள்ள மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரமாண்ட மேடையில் நாம் தமிழர் கட்சி, பாயும் புலி கொடியோடு உதயமானது.

மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் ராமசாமி மற்றும் காந்திய அரசியல் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் ஆகியோர் குத்துவிளக்கேற்றித் துவக்கி வைத்தனர்.

பின்னர், ஈழப் போர்க்களத்தில் விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை நீத்த மக்களுக்கும் போராளிகளுக்கும் நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. அடுத்து, சீமான் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. உறுதி மொழியை சீமான் படிக்க, தொடர்ந்து கூடியிருந்த பல்லாயிரக்கணக்கானோர் அதைத் திருப்பிச் சொன்னார்கள்.

7 மணிக்கு துவங்கிய மாநாடு 11 மணிக்கு முடிந்தது.


என்னை தலைவராக பார்க்காதீர்கள் : சீமான் பேச்சு
இம்மாநாட்டில் சீமான் எழுச்சி முழக்கமிட்டார்.

அவர், ‘’கட்சிக்கு நிதிக்கு என்ன செய்யப்போகிறீர்கள் எனு கேட்கிறார்கள். பணத்தை நம்பி நான் இந்த கட்சி ஆரம்பிக்கவில்லை.

இனத்தை நம்பி ஆரம்பித்திருக்கிறேன்.இனம் சேர்ந்தா பணம் தானா வரும்.

திரைப்படங்கள் இயக்கி என்னால் சம்பாதிக்க முடியும். வருமானம் எனக்கு தேவையில்லை; இனமானம்தான் முக்கியம்.

என்னை தலைவராக பார்க்காதீர்கள். அண்ணன் பிரபாகரனுக்கு நான் தம்பி. இங்கே கூடியிருக்கும் அன்பு தம்பிகளுக்கு நான் அண்ணன்.

அரசியல் ஒரு சாக்கடை என்று எல்லோரும் மூக்கை பிடித்துக்கொண்டு போனால் யார்தான் உள்ளே இறங்கி சுத்தம் செய்வது. ஒரு விசயத்தை செயல்படுத்த அரசியல் தேவைப்படுகிறது. அப்போதுதான் புரட்சி செய்ய முடிகிறது. இந்த அரசியல்தானே என் இன மக்களை கொன்று குவித்தது. அதே அரசியலால் தமிழீழம் அமைக்கனும். அதற்காக போராடுவோம்.
இது ஆரம்பம்;இனி நிறைய பேசுவோம்’’என்று முழக்கமிட்டார்.

நாம் தமிழர் அரசியல் மாநாடு : முக்கியத்தீர்மானம் மற்றும் 27 கொள்கைகள்

இயக்குநர் சீமானின் நாம் தமிழர் கட்சித் துவக்கவிழா இன்று இரவு மதுரையில் நடந்தது. இந்த மாநாட்டுக்கு தமிழகம் முழுவதிலுமிருந்து பெரும் அளவில் ஆண்களும் பெண்களும் இளைஞர்களும் குவிந்துவிட்டனர். ஏறத்தாழ ஒரு லட்சம் பேர் வந்திருந்ததாக மாநாட்டு அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

மாநாடு ஆரம்பிக்கும் முன் விரகனூர் சுற்றுவட்ட சாலை அருகே, தியாகி முத்துக்குமார் நினைவு நுழைவாயிலிலிருந்து பேரணி துவங்கப்பட்டது. மாலை 5 மணிக்குத் துவங்கிய இப்பேரணி, 7.30 மணிக்குப் பிறகும் தொடர்ந்தது. ஈழத் தமிழர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு தமிழீழத் தனியரசு அமைப்பதே என்று இந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்த மாநாடு துவங்கும் போது, போர்க் குற்றம் புரிந்த இலங்கை அரசு மற்றும் ராஜபக்சேக்கு சர்வதேச நெருக்கடி ஆய்வுக் குழு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி எடுக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, போர்க்குற்றவாளி ராஜபக்சே, அவருக்கு துணை நின்ற சர்வதேச சக்திகளுக்கு தண்டனை நிறைவேற்றுவதைச் சித்தரிக்கும் வகையில் நாம் தமிழர் அமைப்பினர் நாடகம் நடத்தினர்.

கடந்த மே 17 மற்றும் 18-ம் தேதிகளில் வன்னியில் நடந்த இறுதிப் போரில் பல்லாயிரம் தமிழர்களும் தமிழீழ விடுதலைப் புலிகளும் தங்கள் இன்னுயிரை ஈந்தனர். அந்த நேரத்தில் இயக்குநர் சீமானால் துவக்கப்பட்டதுதான் நாம் தமிழர் இயக்கம்.

முள்ளிவாய்க்கால் படுகொலைகள் முடிந்து ஒரு ஆண்டு நிறைவுறும் இந்த தருணத்தில் நாம் தமிழர் இயக்கத்தை முழுமையான அரசியல் கட்சியாக மாற்றுவதாக அறிவித்தார் சீமான்.

உலகெங்கும் உள்ள தமிழர்கள் மே 18-ம் தேதியை தமிழரின் துக்க நாளாகக் கொண்டாடும் நிலையில், சீமான் இந்த நாளை தமிழரின் எழுச்சி நாளாகக் கொண்டாடுமாறு கோரிக்கை விடுத்தார். இந்த நாளிலேயே நாம் தமிழர் இயக்கத்தையும் முழுமையான அரசியல் கட்சியாக அறிவித்தார். நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள் மற்றும் துணைக் கொள்கைகளை நிர்வாகிகள் படித்தனர்.

தமிழர் இறையாண்மை மீட்பே நமது வாழ்வின் லட்சியம், ஈழப்பிரச்சினைக்கு ஒரே தீர்வு தனி தமிழீழம்தான், தமிழை எங்கும் வாழ வைப்போம், உலகத் தமிழர்களை ஒன்றிணைத்து தமிழர் உரிமை வென்றிடப் பாடுபடுவோம், மகளிருக்கு சம உரிமை, ஊடகம் மூலம் பரவும் பண்பாட்டுச் சீரழிவுகளைத் தடுப்போம், காவிரியில் தமிழகத்துக்கு உரிய பங்கைப் பெற்றுத் தருவது உள்ளிட்ட 26 முதன்மைக் கொள்கைகள் மற்றும் துணைக் கொள்கைகளை அறிவித்தனர்.






                                                                                                                                               

தமிழீழம் கிடைக்கும் வரை இலங்கை மண்ணில் கால்வைக்க மாட்டேன்: மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி.

இன்று ஈழத்தமிழனம் படும்பாடு பெரும் வேதனை அளிக்கிறது. என்றைக்கு தமிழீழ மக்கள் விடுதலை பெறுகிறார்களோ அன்றுதான் அந்த மண்ணில் கால் வைப்பேன் என்றும் இலங்கையின் தொடர் அழைப்பை மறுத்து வருகிறேன்’’என்றும் மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி கூறியுள்ளார்.



நாம் தமிழர் அரசியல் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றுவதற்காக மதுரை வந்திருக்கும், மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறியிருப்பதாவது:-

என்னை பலமுறை இலங்கைக்கு அழைத்தார்கள். என் இனம் அடிபட்டு, உதைபட்டு கிடப்பதை பார்த்து எப்படி என்னால் பொறுத்துக்கொள்ள முடியும். அதனால்தான் இலங்கையை சுற்றிப்பார்க்க செல்ல மறுத்துவிட்டேன்.

என்றைக்கு தமிழீழ மக்கள் விடுதலை பெறுகிறார்களோ அன்றுதான் அந்த மண்ணில் கால் வைப்பேன் என்று இலங்கையின் தொடர் அழைப்பை மறுத்து வருகிறேன்’’என்று கூறினார்.

ஈழத்தமிழர்களுக்கு குரல் கொடுக்கவே இந்தியா வந்தேன்

இன்று ஈழத்தமிழனம் படும்பாடு பெரும் வேதனை அளிக்கிறது. உலகில் பல்வேறு நாடுகளுக்கு தமிழர்கள் அகதிகளாகப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

பல தேசங்களை கட்டி ஆண்ட தமிழினம் இன்று இப்படி பல தேசங்களுக்கு அகதிகளாக போவது வருத்தத்தை அளிக்கிறது. இவை அனைத்துக்குமாகத்தான் தாய்மண்ணில் பேசவேண்டுமென்று தமிழகம் வந்திருக்கிறேன். ஒட்டுமொத்த தமிழினமும் ஒன்றுபட்டு குரல் கொடுத்தால், இந்த தேசத்தை மீண்டும் தமிழகம் கட்டி ஆளும்’’என்று கூறினார்.

போர்க்குற்றங்களுக்கு எதிரான நாள்: மெல்பேர்னில் அனுட்டிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினம்!



தாயகத்தில் கடந்த வருடம் சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட பாரிய மனிதப்பேரவலத்தில் படுகொலை செய்யப்பட்ட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்மக்களை நினைவுகொள்ளும் போர்க்குற்றத்துக்கு எதிரான நாள் இன்று செவ்வாய்க்கிழமை அவுஸ்திரேலியா மெல்பேர்னிலும் நடைபெற்றது.


மெல்பேர்ன் நகரின் மத்தியில் அமைந்துள்ள பெடரேஷன் சதுக்கத்தில் இன்று மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை இடம்பெற்ற இந்த நிகழ்வில் சுமார் ஐந்நூறுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர்.

அகவணக்கத்துடன் ஆரம்பமான நிகழ்வில் முதலாவதாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. சதுக்கத்தின் மத்தியில் அமைக்கப்பட்ட உயர்பீடமொன்றில் நிறுவப்பட்டிருந்த பொதுச்சுடரை - கடந்த வருடம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலையில் தனது மூன்று உறவினர்களை இழந்த - திருமதி விண்மதி சாந்தகுமாரன் ஏற்றிவைத்தார்.


அதனை தொடந்து இன்றைய போர்க்குற்றவியலுக்கு எதிரான நாள் குறித்தும் தாயக உறவுகளின் அவலநிலை குறித்தும் டீக்கன் ஆண்டகை, சின்மயன் திலகராஜன் ஆகியோரும் உரையாற்றினர். இதனைத்தொடர்ந்து, அவுஸ்திரேலிய சோசலிச கட்சியின் கிறீன் அமைப்பு பிரதிநிதி திரு பீற்றர் பேசுகையில் - சிறிலங்கா அரசு போர்க்குற்ற விசாரணைகளின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தினார். இதனை அடுத்து, "முள்ளிவாய்க்கால் மண்ணே வணக்கம்" என்ற நினைவு பாடலுக்கு சிறுமி ருக்சிதா இளம்குமரன் நடன ஆற்றுகையை வழங்கினார்.


இதனை அடுத்து, கீறீன் லெப்ட் பத்திரிகை ஆசிரியரும், அகதிகள் நலன் அமைப்பின் பிரதிநிதியான சுபோல்டனும் தனது சிறப்புரையை வழங்கியதையடுத்து, நாடு கடந்த தமிழீழ அரசுக்கான அவுஸ்திரேலிய பிரதிநிதிகளில் ஒருவரான திருமதி ஜனனி பாலச்சந்திரன் நினைவுரையாற்றினார்.




அடுத்தநிகழ்வாக, மெழுகுவர்த்தி ஏற்றுதல் நிகழ்வு ஆரம்பமானது. கடந்த வருடம் இதே காலப்பகுதியில் தாயகத்தில் படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களதும் நினைவாக நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து மக்களும் கைகளில் தீபம் ஏந்தி தமது துயரை பகிர்ந்துகொண்டனர். அதன்போது, சதுக்கத்தின் மத்தியில் சிறுவர் - சிறுமியர் கைகளில் தீபமேந்தியபடி மே - 18 என்ற வடிவத்தில் நின்று தமது அஞ்சலியை செலுத்திக்கொண்டனர்.

சிறிலங்கா அரசு கொடுமையான போர்க்குற்றங்களை மேற்கொண்ட ஒரு வருட நிறைவு நாளில் மெல்பேர்ன் தமிழ் இளையோர் அமைப்பு எம்மின மக்கள் அவலத்தை அடையாளப்படுத்தும் விதத்தில் உடல்உள்ளுறுப்பு (Organ Donation) மற்றும் இரத்த தான (Blood Donation) நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. அத்துடன், அவுஸ்திரேலியா பிரதமருக்கு கையளிக்கும் கோரிக்கை மனு ஒன்றில் கையெழுத்துக்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையும் இளையோர் அமைப்பினார் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வுகளும் இன்றைய தினத்தில் பெடரேஷன் சதுக்கத்தில் நடைபெற்றன. இந் நிகழ்விற்கு பல்லின மக்களதும், ஊடகங்களினதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.



குறிப்பாக, உடல் உள்ளுறுப்பு தானத்தில் பெயர்களை பதிவு செய்துகொண்ட பட்டியலை பெற்றுக்கொள்வதற்கு இன்றைய தினம் நிகழ்வுக்கு வருகை தந்திருந்த உடல் உள்ளுறுப்புதான அமைப்பு அதிகாரி செல்வி அனா உத்தியோகபூர்வமாக அந்த பெயர் பட்டியலை பெற்றுக்கொண்டார். தமிழ் சமூகம் முன்னெடுத்துள்ள இந்த உணர்வுபூர்வமான நடவடிக்கைக்கும் அவர் தனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்தார்.

இன்றைய நிகழ்வுகளின் இறுதியாக உறுதி உரை இடம்பெற்றது. உறுதிஉரையை திரு. சபேசன் அவர்கள் வாசிக்க அனைத்து மக்களும் அதனை மீளக்கூறி உறுதிப்பிரமாணமாக எடுத்துக்கொண்டனர்.


உறுதியுரை பின்வருமாறு அமைந்தது: -

தமிழீழ தாயகத்தின் விடுதலைக்காக

உறுதியோடு பயணித்த போராளிகளும் மக்களும்

கொடுமையான போராயுதங்களால் கொல்லப்பட்ட இந்நாளில்

தாயக விடுதலையே தமது வாழ்வாக கொண்டு

தம் வாழ்வையே அர்ப்பணித்த

40 000 இற்கும் மேற்பட்ட பொதுமக்களினதும் போராளிகளினதும்

தியாகத்தை நினைவிற்கொண்டு

தமிழீழ மக்களிற்கு சுதந்திரமான கெளரவமான வாழ்வு கிடைத்திட

தமிழீழ தனியரசே பொருத்தமான வழியென கொண்டு

தமிழீழ தேசிய தலைவரின் வழிகாட்டலில்

தொடர்ந்தும் உழைப்பேன் என்று உறுதி எடுத்துக்கொள்கின்றேன்.

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் - என்ற உறுதிப்பிரமாணத்துடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றது.



இதேவேளை, ஆஸ்திரேலிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டின் நடைபெறவுள்ள வைகாசி பேரவலம் நிகழ்வு எதிர்வரும் 22 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மெல்பேர்ன் ஹங்கேரியன் சமூக மண்டபத்தில் உள்ளரங்கு நிகழ்வாக நடைபெறவுள்ளது.

மெல்பேர்ண் தமிழ் ஊடகம்.

அவுஸ்திரேலியா.

தொடர்புகள்:

மின்னஞ்சல்:melbournetamilmedia@gmail.com

+61414185348