வன்னியில் நடை பெற்ற இறுதிக் கட்டப் போரின் பொழுது இலங்கை பேரினவாத அரசினால் திட்டமிட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொது மக்களையும் போராளிகளையும் நினைவுகூறும் முள்ளிவாய்க்கால் படுகொலையின் முதலாம் ஆண்டு நினைவு நாள் அயர்லாந்து தலைநகர் டப்ளின் ( Dublin) இல் இன்று பிற்பகல் 3.00 மணியளவில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது .
படுகொலை செய்யப்பட்ட பொது மக்களையும் போராளிகளையும் நினைவுகூர்ந்து முதலில் பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுச்சுடரினை ரஜனி அவர்கள் ஏற்றிவைத்தார், அவரைத் தொடர்ந்து நினைவு நாளில் கலந்து கொண்ட அனைவரும் கைகளில் ஈகைச்சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தியதுடன் மலர் வணக்கத்தையும் செலுத்தினர்.
தொடர்ந்து இலங்கை சமாதானத்திற்கான அயர்லாந்தின் அமைப்பின் முக்கிய உறுப்பினர் உரை நிகழ்த்தினார். இவர் தனது உரையில் வன்னியில் இடம்பெற்ற இனப்படுகொலையை விபரித்துக் கூறியதுடன் தாயக மண்மீட்புப் போரிற்காய் தங்களை அர்ப்பணித்த போராளிகளையும் அவர்கள் தடுப்பு முகாமில் இன்று அனுபவிக்கும் இன்னல்கள் பற்றியும் எடுத்துக் கூறியதுடன் இன்னும் ஒரு முள்ளிவாய்க்கால் படுகொலை இடம்பெறாமல் இருக்க உலகத்தமிழ் மக்கள் ஆகிய நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய முள்ளிவாய்க்கால் நினைவு நாள் ஒருங்கமைப்பாளர் இலங்கை அரசினால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொது மக்களையும் போராளிகளையும் நினைவு கூர்ந்ததுடன், புலம்பெயர்ந்து இங்கு வாழும் நாங்கள் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்காகவும், எமது தேச விடுதலைக்காகவும் ஒற்றுமையாக குரல் எழுப்புவதுடன் அவர்களுக்கு உதவுவது எமது தலையாய கடமையாகும் எனவும் கூறினார்.
இந் நினைவு நாள் நடைபெற்ற அரங்கத்தில் ஓவியக் கண்காட்சியும் நடைபெற்றது, இந்த ஓவியங்களானது வன்னியில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் பொழுது அங்கு இருந்து பின்னர் வவுனியா இடைத்தங்கல் முகாமில் தங்கி இருக்கும் ஓவியரால் வரையப்பட்ட ஓவியங்களாகும். இந்த முள்ளிவாய்க்கால் நினைவு நாள் ஒன்று கூடலில் பலதரப்பட்ட வயதினரும் மற்றும் பல்லின சமூகத்தினரும் கலந்து கொண்டனர்.
0 comments:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.