கனடாவில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற “விதையாகிப் போனவர்க்காய் விளக்கேற்ற வாரீர்” அஞ்சலி நிகழ்வு

கடந்த 16ம் திகதி முதல் 18ம் வரை ஒரு மாபெரும் தமிழினப்படுகொலையின் வரலாற்றை உருவாக்கிய விதத்தில், டொரொன்டோவின் அனைத்துப் பகுதிகளும் வாழும் தாயக உறவுகள் அனைவரும் ஒன்றிணைந்து பல்வேறு இடங்களில், தாயகத்தில் உயிர் துறந்த மாவீரர்களையும், தமிழனப்படுகொலையில் உயிர் துறந்தவர்களையும் வணங்கி அவர்களது ஆத்மா சாந்தியடைய ஆத்மார்த்தமான அஞ்சலியை செலுத்தி தமிழர்களின் ஒற்றுமையுணர்விற்கு கூடுதல் பெருமை அளித்துள்ளனர்.



அந்த வகையில் கனடாவில் உள்ள அனைத்து முன்னணிக் கலைஞர்கள், நடன ஆசிரிய ஆசிரியைகள் போன்ற கலைத்துறை சார்ந்தவர்கள் அனைவரும் இணைந்து, 16.5.10 அன்று பிரிச்மௌண்ட் வீதியில் உள்ள கனடா கந்தசாமி ஆலய கலையரங்கில் ‘விதையாகிப்போனவர்க்காய் விளக்கேற்றுவோம் வாரீர்’ எனும் நிகழ்வினை அனைவரின் உள்ளத்தைத் தொடும் வகையில் நடத்தி, தமிழர்களின் மனிதநேயப் பண்பாட்டினை பறைசாற்றியுள்ளர்கள். அன்றைய தினம் நம்மைச் சுற்றி பல இடங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் ‘ வலி சுமந்த மாதம்’ என்ற உணர்வோடு அனுட்டிக்கபட்டிருந்தாலும், இந்நிகழ்வில் பங்குகொண்ட நமது உறுவுகளில் குறிப்பிடத்தக்க வகையில் பல்வேறு பிரமுகர்களான ஊடகவியலாளர்கள் கலைஞர்கள், நடன ஆசிரியைகள், முக்கியமாக மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு பரராஜசிங்கம் அவர்களின் துணைவியார் திருமதி ஜோசப்பரராஜசிங்கம், பாரளுமன்ற உறுப்பினர் திரு ஈழவேந்தன், மாநகர சபை உறுப்பினர்களான திருவாளர்கள் லோகன் கணபதி மற்றும் நீதன்ஷான், சிறப்பு விருந்தினர்களாக அஜின்கோட் பாராளுமன்ற உறுப்பினர் திரு ஜிம் கர்ஜியானிஸ் மற்றும் மாநகரசபை கல்விச்சபை வேட்பாளர் திரு சாம், திருவாளர்கள் பரராஜசிங்கம், நிருத்திய கலாஞ்சலி நாட்டியப்பள்ளி அதிபர் திருமதி நிரோதினி பரராஜசிங்கம் மற்றும் உதயன் பிரதம ஆசிரியர் திரு ஆர்.என்.லோகேந்திரலிங்கம் ஆகியோரும், விழா மண்டபத்திற்கான உதவியை இங்குள்ள பிரபல Able Legal Services Inc. அதிபர் கௌசிகன் ஏகாம்பரம் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். அரங்க மேடையில் ஒரு பெரிய குத்துவிளக்கு மலர்களால் அலங்கரிக்கபட்டு அனைவரும் அஞ்சலி செலுத்தும் வகையில் அதன் கீழே தீபக் கிண்ணங்கள் வரிசையாக வட்டவடிவில் அமைக்கப்பட்டிருந்தது.


கனேடிய தமிழ் கலைஞர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் அனைவரையும் வரவேற்றும், வந்திருந்த பிரமுகர்களை மேடைக்கு அழைத்து அஞ்சலியுரை நிகழ்த்த முறையே அறிமுகப்படுத்திய உதயன் பிரதம ஆசிரியர் கடந்த ஆண்டு மே மாதம் 3வது வாரம் தாயகத்தில் உயிரிழந்த போராளிகளை நினைவுகூர்ந்து, விதையாகிப்போன மாவீரர்களுக்கு விளக்கேற்றி வணங்கிடுவோம் என்று முன்னுரை வழங்கியதற்குப் பின், திருமதி ஜோசப் பரராஜசிங்கம், திருவாளர்கள் ஈழவேந்தன், கணபதிலோகன், மற்றும் பரராஜசிங்கம் ஆகியோர் மங்கள விளக்கேற்றியதைத் தொடர்ந்து தமிழ்தாய் வாழ்த்து, கனேடிய தேசிய கீதம், தாயகத்தில் உயிர் துறந்தவர்களுக்காக அமைதி வணக்கம் ஆகியவை இடம் பெற்றது.



கறுப்பு வைகாசி மாத துயரினை நினைவுபடுத்தும் தினமாகவும், மறைந்த மாவீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வாக அமைந்த இத்துயர் நிகழ்வில் முதலில் உரையாற்றிய திரு லோகன் கணபதி தனது உரையில் இந்த மாதம் முழுவதும் Memorial services என தாயகத்தில் நிகழ்ந்த தமிழனப்படுகொலை மட்டுமின்றி, உலகின் பிற நாடுகளில் பல்வேறு போராட்டங்களில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் மாதம் இது என்றார். மேலும் அன்றைய துயர் தினம் என்பது தன்னைப்பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் mourning day தான் என்பதை தனது உறவுகள், நண்பர்கள் என தொடர்ந்து இழந்துவருவதை நினைவுகூர்ந்தார். நமது எதிரிகளை இனம் கண்டு இன்று சர்வதேசக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வைத்துள்ளது தான் மனதிற்கு ஆறுதல் அளித்துள்ளது என்றார். வன்னியில் விதைப்பதற்குக் கூட விதை நெல்லோ, நிலமோ இன்றி, நமது உறவுகளின் அடிப்படைத் தேவைகளைக் கூட பெற முடியாத நிலையில, திறந்தவெளிச்சிறையில் கைதிகளாக அவதிப்படுவதால், அவர்களின் விடுதலைக்காக Reconstruction History ஐ ஏற்படுத்தி வருகிறோம். இந்த 20-21ம் நூற்றாண்டில் உலகின் பல பகுதிகளான ஜெர்மன், ரஷ்யா, ஆர்மீனியன், கொசாவா, ஈராக், ஈரான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இனப்படுக்கொலை நிகழ்ந்துள்ளதை மேற்கோள் காட்டி, புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் நம் தமிழனம் அனைவரும் கைகோர்த்து ஒற்றுமையுணர்வுடன் மக்களின் மனசாட்சியாக செயல்பட வேண்டிய தருணமிது இது என்றார். கடந்த ஆண்டு அதனை அடையளப்படுத்தும் வகையில் எண்ணற்ற தார்மீக அகிம்சை அமைதி வழிப் போராட்டங்களை நடத்தி அனைத்து உலக அரசின் கவனத்திற்கு முன்னெடுத்து விழிப்புணாவு ஏற்படுத்தி சாதனை புரிந்து, அவர்களையும் நம் பக்கம் இழுத்துள்ளதே ஒரு பெரும் வெற்றியாகும் என்று குறிப்பிட்டார். அவரது உரையைத் தொடர்ந்து மாணவிகளும், வந்திருந்தவர்களும் அஞ்சலி செலுத்தும் வகையில் அனைவரும் தீபம் ஏற்றி பிரார்த்தனையுடன் உயிரிழந்த மாவீரர்களைப் போற்றி வணங்கினார்கள்.




இந்நிகழ்வில் சிறப்புரை ஆற்றிய அஜின்கோட் பாராளுமன்ற உறுப்பினர் திரு ஜம் கர்ஜியானிஸ் மற்றும் மாநகர கல்விச்சபை வேட்பாளர் திரு சாம் ஆகியோர், இங்குள்ள தமிழர்களிடம் தாங்கள் கொண்டுள்ள பற்றையும், நட்புணர்வையும் பெருமைபடக் கூறி, தங்களது சேவை என்றும் நம் பக்கம் உண்டு என்பதை மிகவும் இயல்பாக வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக திரு ஜிம் அவர்கள் உலக மகா யுத்தம் தொடங்கிய காலம் தொட்டு, உலகின் பல நாடுகளில் ஏற்பட்ட புரட்சிகளையும், விடுதலைப் போராட்டத்தின் விளைவுகளையும் கடந்த 95 ஆண்டு வரலாற்றுப் பின்னணியில் ருவாண்டா முதல் இலங்கை வரை நிகழ்ந்த Genocide எனும் இனப்படுகொலையின் விளைவுகளை மேற்கோள் காட்டி உரையாற்றினார். குறிப்பாக தம்மைப்போன்ற அரசியல் பிரமுகர்கள் இலங்கையில் நடைபெற்ற இனப்படுக்கோலை நிகழ்ந்த இடங்களைக் காண சென்றபோது, அதற்கு விசா பெறுவது தொடங்கி, தமிழர்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு செல்வதற்கு ஏற்பட்ட பிரச்சனைகள், தடைகளையும் மேற்கோள் காட்டி, இலங்கை அரசு நடத்திய கபடவேடத்தையும சுட்டிக்காட்டினார்.; மனிதநேயப் பண்பாளராக, தமிழர்களின் மீது வைத்துள்ள ஆழ்ந்த நட்புணர்வை வெளிப்படுத்தி, தர்மம் வெல்லும் என்பதை தனது இரங்கல் உரை மூலம் அனைவரின் மனதையும் தொட்டுவிட்டார். அதிலும் நடைபெற உள்ள G 8, G 20 சர்வதேச மாநாடுகள் நடைபெற உள்ள இக்காலகட்டத்தில், இங்குள்ள அனைத்துத் தமிழர்களும் கனேடியப் பிரதமர் முதல் தங்களது பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் போன்ற அனைத்துத் தரப்பினருக்கும், Genocide பற்றிய தங்களது எதிர்ப்புக்குரலை Letters, e mail, fax போன்றவற்றின் மூலம் அனுப்பி மீண்டும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் என்று வலியுறுத்தினார். அதன் மூலம் தான் உலக நாடுகளின் கவனம் கூடுதலாகி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வைக்கும் என்பதை தெளிவுப்படுத்தினார். தமிழ் மக்களும் உங்கள் மக்கள் தான் என்பதை கனேடிய அரசும் கருதி மனிதநேய உணர்வுடன் செயல்பட முன்வரும் என்பதோடு உங்களது உரிமைகளும் காக்க முடியும் என்பதே தனது எதிர்பார்ப்பாகும் என்று அனைவருக்கும் நன்றி பாராட்டிச் சிறப்பித்து, தங்களது அஞ்சலியுரையை நிறைவு செய்தனர்.

அவர்களது உரையைத் தொடர்ந்து திரு நீதன்ஷான், திருமதி ராஜ்மீரா ராசய்யா, தமிழ் தேசிய அமைப்பின் சார்பில் திரு தேவா சபாபதி, தமிழ் இளைஞர்கள் அணியின் சார்பில் திரு அரவிந்தன் ஆகியோர் தங்களது அஞ்சலியுரையை பல்வேறு கோணங்களில் விமர்சித்து, தமிழனம், தமிழ்மொழி பாதுகாக்கப்பட வேண்டியதின் அவசியத்தையும், நமது விடுதலைப் போராட்ட வரலாற்று நிகழ்வுகள் அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டு, நமது இளைய சமுதாயத்தினரும் அறிந்துகொண்டு, நமது போராட்ட உணர்வுகளிலும், செயல்பாடுகளிலும் முழுமையாக ஈடுபடும் வகையில் நாம் வழிகாட்டவேணடியதன் அவசியத்தையும் வலியுறுத்தி, நமது இலட்சியம் கைகூடும் என்று நம்பிக்கை மேலிட சிறப்பாக உரையாற்றினார்கள்.

0 comments:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.