ஆஸ்பத்திரிகளில் வேதனையுடன் சிறுவர்கள்


கிழிந்த மெத்தைகள் வரிசையாகக் காணப்பட்டன. இலங்கையின் தலைநகர் கொழும்பை ஜன்னலால் காயமடைந்த குழந்தையொன்று பார்த்துக்கொண்டிருந்தது. அந்தக் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டவேளை அந்தக் குழந்தையை பெண் உறவினர் ஒருவர் சாந்தப்படுத்திக்கொண்டிருந்தார். வட இலங்கையில் மோதல் இடம்பெற்ற இறுதிக் கட்டங்களின் போது வயிற்றில் சூட்டுக் காயங்களுடன் இந்தக் குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது. அந்தப் பெண் குழந்தையின் வயிற்றின் குறுக்கே அதிகளவு தையல்கள் போடப்பட்டிருந்தன. மருத்துவர்கள் சத்திரசிகிச்சை செய்து சன்னத்தை அகற்றியிருந்தனர். அக்குழந்தையின் வலது காலில் கணிசமானளவு சதை எடுக்கப்பட்டிருந்தது.

இலங்கையிலுள்ள மருத்துவமனைகளில் பொதுமக்களின் பார்வைக்குத் தென்படாமல் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கானவர்களில் இந்தச் சிறுமியும் ஒருவராவார். ஆஸ்பத்திரி வார்ட்டுகளில் படையினரும் பொலிஸாரும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இந்த காயமடைந்தவர்கள் தங்களால் எழுந்து நடக்கக்கூடிய நிலைமைக்கு வந்த பின்பே அவர்கள் முகாம்களுக்கு திரும்பிச் செல்வார்கள். அந்த முகாம்களில் சுமார் 3 இலட்சம் மக்கள் தங்கியுள்ளனர்.

யுத்தம் நடைபெற்ற இறுதி வாரங்களில் மிக மோசமாக காயமடைந்த சிறுவர்கள் வயது வந்தோர்களுக்குத் தேவையான சிகிச்சையளிப்பதற்காக நாட்டின் மருத்துவ சேவைகள் போதியளவு இல்லையென்று சுகாதார பணியாளர்களும், மனித உரிமைகள் ஆர்வலர்களும் கூறுகின்றனர். இந்த அனர்த்தத்தின் உண்மையான அளவு பொதுமக்களின் கண்களுக்குத் தென்படாத தன்மையே காணப்படுகின்றது. மோதல் பகுதியில் பணியாற்றிய 3 மருத்துவர்கள் இழப்புகள் தொகை தொடர்பாக திரித்துக் கூறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐ.நா. வின் உத்தியோகபூர்வமற்ற புள்ளிவிபரத்தின் பிரகாரம் கடந்த 4 மாதங்களில் 8 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் பலியாகி இருப்பதாகவும் 17 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த தொகையில் கடைசி 3 நாட்களில் இடம்பெற்ற இழப்புகள் தொடர்பாக உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. பிந்திய எண்ணிக்கை தொடர்பான விபரம் தன்னிடம் இல்லை என சுகாதார அமைச்சு கூறுகிறது. சிறுவர்களின் இழப்புகள் அதிகளவில் இருப்பதாக ஆரம்பகட்ட ஆய்வுகள் தெரிவிப்பதாக ஐ.நா. வட்டாரங்கள் கூறுகின்றன.

முழுத்தொகையில் சிறுவர்கள் இழப்புகள் 45% என்று கூறப்படுகின்றது. இதன் பிரகாரம் 3600 சிறுவர்கள் கொல்லப்பட்டும், 7650 பேர் காயமடைந்தும் இருப்பதாக கணிப்பிடப்படுகிறது. ஆயினும், காயமடைந்தவர்கள் சிகிச்சையளிக்க முடியாததால் பின்னர் மரணமடைந்திருப்பதாக நம்பப்படுவதாக சிலர் கருதுகின்றனர். கொழும்பிலுள்ள சிறுவர்கள் மருத்துவமனைக்கு 23 ஆம் திகதி சனிக்கிழமை சென்று அங்குள்ள அதிகாரிகளுடன் பேசுவதற்கு முயற்சிக்கப்பட்டது.

அந்த மருத்துவமனையின் 6 ஆம் மாடியில் வார்ட் இருந்தது. அங்கு மிகவும் மோசமாக காயமடைந்த சிறுவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. அது மிகவும் மனவருத்தத்தை ஏற்படுத்தும் காட்சியாகும். அங்கங்கள் இழந்த, துப்பாக்கிச் சூட்டுக்கு காயமடைந்த, தோல் எரியுண்ட சிறிய பிள்ளைகள் அந்த வார்ட்டில் இருந்தனர். இந்த மாதிரியான பலர் அங்கு வந்ததாக அங்கிருந்த தலைமைத் தாதி கூறினார். யுத்த வலயத்திலிருந்து சிகிச்சைக்காக விசேட சிறுவர் மருத்துவமனைக்கு அவர்கள் கொண்டுவரப்பட்டதாக அவர் தெரிவித்தார். எவ்வளவு தொகையினர் என்பது பற்றி அவரால் கூறமுடியவில்லை. இந்த சிறுமிக்கு வயிற்றில் சுடப்பட்டிருக்கிறது என்று அவர் தெரிவித்தார். மருத்துவர்கள் சன்னத்தை அகற்றிய பின் போடப்பட்ட தையல்களே இவை என்று அவர் தெரிவித்தார்.

ஏனைய குழந்தைகள் கதிரைகளில் அமர்ந்திருந்தனர். ஒரு குழந்தையின் தோள்மூட்டில் பிளாஸ்டர் போடப்பட்டிருந்தது. பையன் ஒருவன் எரிகாயப்பட்டிருந்ததாகத் தோன்றியது. ஏனையோர் தொட்டில்களில் இருந்தனர். அவர்களின் காயங்களுக்கு கட்டுப் போடப்பட்டிருந்தது. வார்ட்டுகள் துப்புரவாக இருந்தன. அவர்கள் அங்கு விருந்தாளி ஒருவர் வந்ததைப் பார்த்து ஆச்சரியமடைந்ததாக தென்பட்டது. ஏனெனில், ஆஸ்பத்திரிக்கு பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. இந்தக் குழந்தைகள் குணமடைந்தவுடன் வவுனியாவிலுள்ள முகாம்களில் தங்கியிருக்கும் தமது பெற்றோரிடம் அனுப்பப்படுவார்கள்.

ஒவ்வொரு குழந்தையும் எவ்வாறு காயமடைந்தது என்பது பற்றி நிரூபிப்பதற்கான சாத்தியம் இல்லை. மருத்துவமனையின் பணிப்பாளரின் அனுமதியின்றி நோயாளரின் உறவினர்களையோ அல்லது நோயாளிகளையோ பேட்டி காண்பதற்கு அங்குள்ள ஊழியர்கள் அனுமதிக்க மாட்டார்கள். பத்திரிகையாளர்கள் அங்கு செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. ஏனையோர் கூறிய விபரத்தின் பிரகாரம் ஏனைய மருத்துவமனைகளிலும் நிலைமை ஒரே மாதிரித்தான் என்று தெரிவிக்கப்பட்டது.

யுத்தத்தால் ஏற்பட்ட இழப்புகளினால் வார்ட்டுகள் நிரம்பி வழிந்தன. மருத்துவர்கள் குணப்படுத்துவதற்கு பகீரத பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்தனர். அளவுக்கதிகமாகவும் பயங்கரமாகவும் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கொழும்பிலுள்ள யுனிசெவ் பேச்சாளர் ஜேம்ஸ் ஹெல்டர் தெரிவித்தார். காயமடைந்த குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்க மருத்துவ முறைமைகள் முழு அளவில் பயன்படுத்த வேண்டியிருப்பதாக அவர் தெரிவித்தார். காயமடைந்த குழந்தைகளும் அவர்களின் பெற்றோரும் முகாம்களை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட வேண்டும் என அவர் அரசாங்கத்திடம் வலியுறுத்தியிருக்கிறார். சிலரே காயமடைந்தும், கொல்லப்பட்டும் இருப்பதாக நிரூபிப்பதற்கான தீர்மானத்துடன் அரசாங்கம் இருப்பதாகத் தென்படுவதாக மாற்றுக்கோள்களுக்கான நிலையத்தைச் சேர்ந்த பவானி பொன்சேகா என்பவர் கூறினார்.""பேசக்கூடாது என்ற கொள்கை உள்ளது யாவற்றையும் சுருட்டி வைத்துவிட வேண்டும்' என்று அவர் தெரிவித்தார்.

ஆனால், பலர் காயமடைந்துள்ளனர். அவர்கள் கப்பலில் நாட்டிலுள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர் என்பதே உண்மை. ஆஸ்பத்திரிகளில் நீங்கள் பார்த்தால் இது அதிக தொகை என்பதை நீங்கள் கண்டுகொள்ள முடியும் என்று அவர் மேலும் தெரிவித்திருக்கிறார். இரண்டு மருத்துவமனைகளுக்குச் சென்றிருந்த பொன்சேகா இரு கால்களை இழந்த அல்லது இரு கால்களும் முடமாக்கப்பட்ட குழந்தைகளை தான் பார்த்ததாக தெரிவித்தார். அங்கவீனர்களான தலைமுறையினரையே நாங்கள் கொண்டிருக்கப்போகின்றோம் என்று அவர் கூறினார். உளரீதியாக பாதிக்கப்பட்ட சில குழந்தைகளின் நிலைமை மேலும் மோசமடையும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

முகாம்களுக்குள் உரிய மருத்துவ வசதிகள் போதாது என்று ஐ.நா. விளங்கிக் கொண்டுள்ளது. ஆனால், வெளியிடத்திலிருந்து உதவிகளை கிடைக்கச் செய்வதற்கு அரசு தயங்குகிறது. சனிக்கிழமை ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் முகாமொன்றுக்குச் சென்றபோது ஒரு சிறுமி ஒருவரை சந்தித்தார். அந்தச் சிறுமியின் இரு கால்களும் காயமடைந்திருந்தன. சிதறல்கள் பட்டதால் தனக்கு காயமேற்பட்டதாகவும் முகாமில் மருத்துவ வசதிகள் இல்லை என்றும் அந்தச் சிறுமி அவருக்கு தெரிவித்திருக்கிறார்.

0 comments:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.