ஒரு பெண்மணிக்காக ஓராயிரம் மக்களைப் பழிவாங்க வேண்டுமா? : பாரதிராஜா கேள்வி


"சோனியா காந்தி என்ற ஒரு பெண்மணிக்காக ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்துக் கொண்டிருக்கிறது காங்கிரஸ். காங்கிரஸ் கட்சி தமிழர்களின் முதல் எதிரி" என்று கூறினார் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா.


ஆங்கில இணையதளம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்தப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது :

"நாங்கள் கடந்த ஆறு மாத காலமாக இலங்கையில் தமிழ் மக்கள் படும் துயரத்தைக் கண்டித்து போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் மத்திய அரசு எதுவித நடவடிக்கையுமே எடுக்கவில்லை. தொடர்ந்து இலங்கையில் தமிழர்கள் குண்டடிபட்டும், பட்டினி கிடந்தும் மடிந்து கொண்டிருக்கின்றனர்.

சிவ்சங்கர் மேனன் 2 முறை கொழும்பு போனார். பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் இலங்கை ஜனாதிபதியுடன் போனில் பேசித் தமிழ் மக்களைப் பாதுகாக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

ஆனால் இதெல்லாம் வெட்டி வேலை. யாராவது இந்தியாவிலிருந்து இலங்கைக்குப் போனாலோ அல்லது போனில் பேசினாலோ, உடனே இலங்கை அதிபர் ஒரு அறிக்கை விடுவார். தீவிரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியா எங்களுக்கு துணை நிற்கிறது என்பார். ஆனாலும் தொடர்ந்து அப்பாவிகள், நிராயுதபாணிகள் கொல்லப்பட்டுக் கொண்டுதான் வருகின்றனர்.

தமிழனின் இன்றைய அவலத்துக்கு காங்கிரஸே காரணம்

இன்றைய இந்த நிலைக்கு முழுக் காரணம் காங்கிரஸ் கட்சிதான். அதுதான் பொறுப்பு. அவர்களால் தடுத்து நிறுத்த முடியும், ஆனால் செய்ய மாட்டேன் என்கிறார்கள்.

காங்கிரஸ் கூட்டணி அரசுதான் இலங்கைக்கு ஆயுதங்களை வழங்குகிறது; இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கிறது; இலங்கை அரசு போரில் வெல்ல பணத்தையும் அள்ளித் தருகிறது.

சோனியா காந்திக்காக அவர்கள் பழி வாங்குகிறார்கள். ஒரு பெண்மணிக்காக ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்படுகிறார்கள்.

காங்கிரஸுக்கு வாக்களிக்காதீர்கள் என்று கூறுவதை காங்கிரஸ் எதிர்ப்பது சிறுபிள்ளைத்தனமானது. அவர்கள் ஜனநாயக ரீதியில் எங்களுடன் மோதட்டும். எங்களுக்கு வாக்களியுங்கள் என்று கேட்க அவர்களுக்கு உரிமை இருக்கிறதென்றால், அவர்களுக்கு வாக்களிக்காதீர்கள் என்று கேட்க எங்களுக்கும் உரிமை உள்ளது. நாங்கள் வாக்கே அளிக்காதீர்கள் என்று மக்களிடம் கூறவில்லையே?

காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே எதிர்ப்பு

நாங்கள் எந்தக் கட்சியையும் ஆதரிக்கவில்லை. காங்கிரஸுக்கு எதிராக மட்டுமே நாங்கள் பிரசாரம் செய்கிறோம். வேறு எந்தக் கட்சிக்கு எதிராகவும் நாங்கள் பிரசாரம் செய்யவில்லை. காங்கிரஸைத் தவிர வேறு எந்தக் கட்சிக்கும் மக்கள் வாக்களிக்கட்டும்.

ஜனநாயகத்தில் கருப்புக் கொடி காட்டுவதில் தவறே இல்லை. அது நமது எதிர்ப்பைக் காட்டும் ஓர் அடையாளம். முடிந்தால் நாங்கள் கருப்புக் கொடி காட்டுவதை அவர்கள் தடுத்து நிறுத்திக் கொள்ளட்டும்.

எதிர்வரும் 11ஆம் திகதி மாலை 5.00 மணி வரை காங்கிரஸ் எங்கெல்லாம் போட்டியிடுகிறதோ அங்கெல்லாம் போய் தீவிரமாகப் பிரசாரம் செய்வோம். காங்கிரஸ் கட்சி தமிழர்களின் எதிரி, அக்கட்சிக்கு வாக்களிக்காதீர்கள் என மக்களிடம் கேட்டுக் கொள்வோம். அதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம்."

இவ்வாறு பாரதிராஜா தெரிவித்தார்.

0 comments:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.