இலங்கை அகதிகள் திருப்பி அனுப்பப்படுவர்


இலங்கையில் சகஜநிலை திரும்பியதும் தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் இலங்கைக்கு திரும்பிச் செல்லுமாறு கோரப்படுவார்கள் என்று இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவையில் மீண்டும் உள்துறை அமைச்சராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்ட சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, இலங்கையில் விடு தலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டுவிட்டதால் அங்கு இயல்பு நிலை திரும்பும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் திருப்பி அனுப்பப்படுவார்களா என்று செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த சிதம்பரம், சகஜநிலை திரும்பினால் சொந்த நாட்டுக்குத் திரும்பிச் செல்ல அகதிகளே ஆர்வமாய் இருப்பார்கள் என்றும், இலங்கையில் இயல்பு நிலை திரும்பும்போது அகதிகள் கண்டிப்பாகத் திரும்பிச் செல்வார்கள் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் கொல்லப்பட்டது தொடர்பாக முரண்பட்ட தகவல்கள் வெளிவருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த சிதம்பரம், இலங்கை அரசே அதை உறுதிப்படுத்திவிட்ட நிலையில், பிரபாகரன் மரணம் தொடர்பாக ஐயப்பாடுகளை எழுப்பத் தேவையில்லை என்று தெரிவித்தார்.

தமிழகக் கடலோரப் பகுதிகள் வழியாக விடுதலைப் புலிகள் ஊடுருவ வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு பதலளித்த சிதம்பரம், அது தொடர்பாக தமிழக அரசுக்கு உரிய அறிவுறுத்தல்களை மத்திய அரசு வழங்கியிருப்பதாகவும், மாநில அரசும் அதை ஏற்று பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியிருப்பதால் ஊடுருவல் நடைபெற வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார்.

0 comments:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.