இன்று "வெசாக்" பண்டிகைத் திருநாள். அத்துடன் சித்திரா பௌர்ணமி தினமும் கூட.
இலங்கைத் தீவின் இரு பெரும் மதங்களான பௌத்தத்துக்கும் இந்து சமயத்துக்கும் போற்றுதற்குரிய மிக முக்கிய நோன்பு நாள்கள் இவை.
இந்த வெசாக் தினம் பௌத்தர்களால் போற்றிப் பூஜிக்கப் படுவதற்கு முக்கிய காரணம் உண்டு. பௌத்த சீலத்தை உலகுக் குப் போதித்த கௌதம புத்தர் நேபாளத்தின் எல்லைப்புறத்தில் அவதரித்ததும், அரசமரத்தடியில் ஞானோதயம் பெற்றதும், அன்பு மார்க்கத்தைப் போதித்து பரிநிர்வாணம் அடைந்ததும் இந்த வெசாக் புண்ணிய தினத்தில்தான்.
சித்தார்த்த கௌதமரின் சிந்தனையில் இத்தினத்தில் ஒரு சிறு பொறியாகப் பட்டுத் தெறித்த ஞானம், தெளிந்த ஞானக்கடலாகப் பின்னர் பரந்து வியாபித்து, விசாலித்து, உலகைப் பற்றிப் பிடித்து, வழிப்படுத்தி, நெறிப்படுத்தியது என்பதால் இத் தினம் மகத்துவமானதாகின்றது.
உயரிய வாழ்க்கை நெறியை பஞ்ச சீல மார்க்கத்தை உலகுக்கு ஈந்த ஓர் அவதரிப்பை பெரு மகிழ்வோடு கொண் டாடுவது அதுவும் அந்த உயரிய மார்க்கம் தழைத்து, பரவி, நிலைநிறுத்தப்பட்டிருப்பதாக உரிமை கோரும் ஒரு தேசம் அதைக் கொண்டாடுவது பொருத்தமானதுதான். ஆனால் இந்த உயரிய நிகழ்வைக் கொண்டாடி அனுஷ்டிக்கும் தகுதியும், தகைமையும், உரிமையும் இந்த இலங்கைத் தீவுக்கு இன்று உண்டா என்பதுதான் இன்றைய பிரதான கேள்வியாகும்.
சுமார் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கௌதம புத்தரிடம் இருந்து வெளிப்பட்ட இந்த அறிவியல் அதிர்வு இன்றுவரை உலகை வளப்படுத்தி, வழிப்படுத்தி, வலுப்படுத்தும் ஓர் உயரிய மார்க்கமாகப் போற்றப்படுகிறது அது பெருமைக்குரிய விடயமாகும்.
மனிதத்துவம் பற்றியும், ஒழுக்கமான வாழ்க்கை குறித்தும் ஞான சீலர் புத்தரிடமிருந்து வெளிப்பட்ட சிந்தனைகளும், போதனைகளும், அதை நடைமுறை வாழ்வில் வளமுறப் பயன்படுத்தி அனுபவ வாயிலாக அதை வெளிப்படுத்திய அவரின் வழிகாட்டல்களும் ஆசியாவின் கிழக்கேயும் மேற்கேயும் பெரும் புயலாகப் பற்றிப் பரவிப் பிடித்து நிலைகொண்டன. இலங்கை யில் மட்டுமல்லாமல், கொரியா, ஜப்பான், சீனா, தாய்லாந்து எங்கும் அவரின் போதனைகளும் அவர் நெறிப்படுத்திய உயரிய மார்க்கமும் இன்னும் ஆழமாக நிலைபெற்று சுடர்விட்டுப் பிர காசிக்கின்றன.
இன்று உலகில் தார்மீக சிந்தனையையும் சீரிய வாழ்வியல் முறைகளையும் போதிக்கும் மார்க்கங்களுக்குள் மதங்களுக்குள் மிக உயர்ந்ததாகப் போற்றப்படும் அளவுக்கு பௌத்தத்தின் கோட்பாடுகளும், சிந்தனைகளும், வழிகாட்டல்களும் அது வலி யுறுத்தும் அறநெறித் தத்துவங்களும் விஞ்சி விளங்குகின்றன.
கருணை, சமத்துவம், சமரசம், அன்பு, பரிவு, நேசம், குரோதமின்மை, பழிவாங்காமை, அரவணைப்பு, கண்ணியம், கட்டுப்பாடு போன்ற சமாதான அமைதி வாழ்வுக்கு அடிப்படை யான பண்பியல்புகளைக் கடைப்பிடிப்பதை மட்டுமே பௌத் தம் போதித்தது. குரோதத்தையும், விரோதத்தையும், கொலை வெறிப் போக்கையும், கொடூரத்தையும் நோக்கி மனிதத் துவத்தை அது வழிப்படுத்தவில்லை. யுத்த வெறியை அது வர வேற்கவில்லை.
சித்தார்த்தரின் உயரிய விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட பௌத்தநெறி அஹிம்சையையும், அன்பையும், சாத் வீகத்தையும் அரவணைத்துச் செல்ல வலியுறுத்திய அதேச மயம், தன் நெறியைப் பரப்புவதற்கேனும் மேலாதிக்கத்தை ஒரு வழியாகக் கொள்ள அது கூறவில்லை. யுத்தத்தை வெறுத்து சமாதானத்தை நிலைநாட்டத் தனது ஞான வழிகாட்டலைப் பயன்படுத்தினார் சித்தார்த்தர். யுத்த வெற்றி மூலமும், ஆக் கிரமிப்பு மற்றும் அடக்குமுறைகள் மூலமும் அதிகாரத்தைத் தக்க வைக்கும் கொலை வெறிக் கலாசாரத்தை அவர் நமக்குப் போதிக்கவில்லை. அதனை அவர் வெறுத்தார்.
ஆனால், இன்று அவரின் ஞான சீலத்தைப் பரப்புபவர்க ளாகத் தம்மைக் காட்டிக்கொள்ளும் தென்னிலங்கைத் தலை வர்கள் யதார்த்தத்தில் என்ன செய்கின்றார்கள்?
கௌதம புத்தர் எதை வெறுத்து ஒதுக்கினாரோ, அதனை அவரின் நெறியை மார்க்கத்தை நிலை நிறுத்தும் செயற்பாடாகக் காட்டிக்கொண்டு முன்னெடுக்கின்றார்கள் நவீன சித் தார்த்தர்கள்! என்னே கொடூரம் இது.....?
உயர்ந்த அறநெறி மார்க்கம் என்று முழு உலகமுமே வியந்து போற்றி, ஏத்தி மகிழும் பௌத்த தர்மம் உலகில் பரப்பப்படுவதற்கும் நிலைநிறுத்தப்படுவதற்குமாக ஒரு வாள் கூட நிமிர்த்தப்படவில்லை. ஒரு துளி இரத்தம் கூட சிந்தப்படவில்லை. ஆனால் இன்று இங்கு நடப்பது என்ன?
பௌத்தம் என்ற பிரபஞ்ச நெறி, இந்தத் தீவில் தான் பரவி நிற்பதாகக் கூறப்பட்டாலும், அது உண்மையாகவும், உணர்வுபூர்வமாகவும் இங்கு உணரப்படவேயில்லை என்பதுதான் வேதனைமிக்க யதார்த்தமாகும்.
வாளேந்திய சிங்கக்கொடியை, பௌத்த சிங்களப் பேரினவாதத்தின் மேலாதிக்கச் சின்னமாக முன்நிறுத்தி, பௌத்த சீலத்தையும், சமயத்தையும் பரப்புவதாகக் கொள்ளும் பேதமை இத்தீவில் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றது.
திட்டமிட்ட குடியேற்றங்கள் மூலமும், புத்தரின் சிலைகளை ஆங்காங்கே நிலைநிறுத்துவதன் மூலமும் பௌத்தத்தைப் பரப்புவதாகக் கொள்ளும் ஒவ்வாதபோக்கு இங்குதான் அரங்கேறுகின்றது.
பௌத்த மதத்துக்கு முதன்மைத்தானம் வழங்கப்படும் விதத்தில் தனது அரசியல் சாசனத்தில் தனியாக இரண்டாவது அத்தியாயத்தில் "பௌத்த சாசனத்தைப் பாதுகாத்தலும் பேணி வளர்த்தலும் அரசின் கடமையாக இருக்கவேண்டும்" என்று உறுதிப்படுத்தியிருக்கும் இத் தேசத்தில்தான், அந்த பௌத்த சாசனத் தைப் பேணும் பெயரால் பௌத்தத்தின் உயரிய நெறிக்கு விரோதமான கொடூர யுத்தமும், கொலை வெறியும் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன.
பௌத்த மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளையும், வாழ் நிலைப் பண்புகளையும், மேன்மைச் சிறப்புமிக்க விழுமியங் களையும், மாண்புமிக்க மகத்துவ வழிகாட்டல்களையும் மறந்து, துறந்து, ஒதுக்கிவிட்டு, அவற்றுக்கு மாறாக பௌத்த சிங்கள தேசிய வாதத்தைப் பலாத்கார வழியிலும், கட்டாயப்படுத்தல் மூலமும், பௌத்தம் வெறுத்து ஒதுக்கும் ஆயுத கலாசார வெறிப் போக்கு மற்றும் கொடூர யுத்தம், கொலைவெறி ஆக்கிரமிப்பு ஆகியவை மூலமும் முன்னெடுக்க முயல்கிறது தென்னிலங்கை.
காருண்ய சீலர் புத்தபகவான் இன்று இங்கு இருப்பாரானால் வன்னியில் பௌத்த சீல ஆட்சியின் பெயரால் இன்று அரங் கேறும் மனிதநேயமற்ற சமரசம் துறந்த குரோதத் தனமான அடக்குமுறை அவலங்களைக் கண்டு மனம் கொதித்துப் போவார். தாம் போதித்த உயரிய நெறி, மக்கள் அழிவுக்கான வழி காட்டலாகப் பயன்படுத்தப்படுகின்றது என்பது கண்டு விசனப் பட்டுப் போவார். இத்தகைய இழிசெயலைப் பின்பற்றும் மக் கள் கூட்டத்துக்குத் தமது அவதரிப்பையும், ஞானம் பெற்ற சிறப் பையும், பரிநிர்வாணம் அடைந்த பக்குவத்தையும் போற்றி மகி ழும் தினத்தைக் கொண்டாடுவதற்கு என்ன அருகதை உண்டு என்று எண்ணி எண்ணி மனம் வெதும்புவார் அவர் என்பது உண்மை.
0 comments:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.