வினாச காலம் நெருங்குகையில் விபரீத புத்தி தானே தேடிவரும்.
"கெடுவான் கேடு நினைப்பான்" என்று கூறுவார்கள்.
"விநாச காலே விபரீத புத்தி" என்ற பேச்சு வழக்கும் கூட நம்மத்தியில் உண்டு.
அழிவுகாலம் நெருங்கி விட்டால் மதி கண்ணை மறைக்கும். எதைச் செய்யவேண்டும், எதைச் செய்யக் கூடாது என்ற புரிதல்களை எல்லாம் அறிவில் தெளிய விடாமல் செய்து விடுமாம் அந்தக் கெட்டகாலம்.
இலங்கை இனப்பிரச்சினையை ஒட்டி யுத்தம் கோர வடிவெடுத்து, அப்பாவிப் பொதுமக்களின் பேரழிவுக்கு வழி செய்துள்ள பின்னணியில், அதைத் தடுத்து நிறுத்துவதற்கு சர்வதேசம் எடுத்த முயற்சிகள் அனைத்தும் "விழலுக்கு இறைத்த நீராக" "புறக்குடத்து நீராக" "செவிடன் காதில் ஊதிய சங்காக" வீணாகின.
வன்னியில் மோதலில் சிக்கியுள்ள மக்களின் நிலை தொடர்பான சர்வதேச சமூகத்தின் கவலை அதிகரித்துள்ளமையைத் தொடர்ந்து இங்கு யுத்தநிறுத்தம் ஒன்றை மேற்கொள்ளச் செய்யும் நோக்குடன், அதற்காக இலங்கை அரசை வலியுறுத்துவதற்கென கொழும்புக்கு வந்த பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபாண்ட், பிரெஞ்சு வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் கௌச்னர் ஆகியோர் வெறுங்கையோடு இலங்கையை விட்டுப் புறப்பட்டிருக்கின்றனர்.
சம்பந்தப்பட்ட தரப்பினர் விநாச காலத்தைப் புரிந்து கொள்ளாமல் விபரீத புத்தியுடன் போர்வெறித் தீவிரத்துடன் சன்னதம் கொண்டு நிற்பதால்தான் இந்த இரு வல்லரசுகளினதும் வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டாக எடுத்த முயற்சி பலனளிக்காமல் பயன்தராமல் தோல்வியில் முடிவடைந்தது என்பது வெளிப்படை.
"இலங்கை இறைமையுள்ள நாடு. அதன் தலைமைத்துவத்துக்குச் சொல்லிப் பார்த்தோம். அவர்கள் கேட்பதாக இல்லை. இனி நாம் என்ன செய்ய முடியும்?" என்று இத்தகைய வல்லரசு நாடுகள் இவ்விடயத்தை அப்படியே போட்டு விட்டு வாளாவிருந்து விடும் என எண்ணுவது அபத்தம்.
மூன்று மாத காலத்தில் சுமார் ஏழாயிரத்து ஐந்நூறு பொதுமக்கள் பரிதாபமாக சாகவும் பதினைந்தாயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயமடையவும் காரணமான கொடூர யுத்தம், மேலும் கோர வடிவு எடுக்கும் பேராபத்து நிலைமை சூழ்ந்து வருகின்றது. இதனை வெறும் உள்நாட்டு யுத்தமாகக் கருதி அவை ஒதுங்க விடா.
"இலங்கையில் மோதல் நடைபெறும் வடபகுதியில் நிலைமை மிகவும் அபாயகரமான கட்டத்தை அடைந்துள்ளது" என ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான தூதரகம் எச்சரித்திருக்கின்றது. இலங்கையில் கடமையாற்றி வரும் தமது பணியாளர்களை மேற்கோள் காட்டி அந்த அமைப்பின் பேச்சாளர் வில்லியம் ஸ்பின்ட்லெர் இதனைத் தெரிவித்திருக்கின்றார்.பொதுமக்களின் நிலைமை தொடர்பான இலங்கை அரசின் கடப்பாடுகளையும்,அரசு தனது சொந்த மக்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் மீள வலியுறுத்திச் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
இதேசமயம், இலங்கையில் மோதல் இடம்பெறும் முல்லைத்தீவுப் பகுதியில் விமானங்கள் மற்றும் கனரக ஆயுதங்களின் பாவனை நிறுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு அறிவித்துள்ள போதிலும் அப்பிரதேசத்தில் தொடர்ந்து கடும் ஷெல் வீச்சுகள் நீடிக்கின்றமை தொடர்பாக அமெரிக்கா கடும் கவலை தெரிவித்துள்ளமை கவனிக்கத்தக்கது.
இதற்கிடையில் வன்னியில் இடம்பெறும் மோதல்களின்போது கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தப் போவதில்லை என்று அரசு அறிவித்துள்ள போதிலும் இலங்கை இராணுவம் ஷெல் வீச்சுக்களை மேற்கொள்கின்றது என ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சுமத்தியிருப்பதாக "த டெய்லி டெலிகிராவ்" நாளிதழ் தகவல் வெளியிட்டிருக்கின்றது.
உலகின் எங்கோ ஒரு மூலையில், மிகவும் பின்தங்கிய பிரதேசம் ஒன்றின் தெருவழியே மிக வேகமாகச் சென்றுகொண்டிருக்கும் ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டியின் கைக்கடிகாரத்தில் காட்டும் நேரத்தை அமெரிக்காவில் ஒரு கண்காணிப்பு மையத்தில் இருந்தபடி துல்லியமாகப் பார்த்தறி யக்கூடிய அளவுக்கு நவீன தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட காலம் இது.
வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டில் எஞ்சியுள்ள குறுகிய நிலப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலி கக் கூடாரங்களைத் தமது செய்மதிகள் மூலமான வீடியோ கமராக்கள் மூலம் துல்லியமாகக் கணக்கிட்டு, அதனடிப் படையில் அங்கு எஞ்சியுள்ள மக்களின் எண்ணிக்கையை இட்டுமட்டாக மதிப்பிடக்கூடிய வல்லமையில் அமெரிக்காவும் ஏனைய மேற்குலகும் உள்ளன என்பதும் புதுமையான விடயமல்ல.
எனவே, விமானத் தாக்குதல்கள் மற்றும் ஷெல் பீரங்கி போன்ற கனரக ஆயுதப் பாவனை தொடர்பாகக் கொழும்பிலோ அல்லது பிற இடங்களிலோ ஓர் அறிவிப்பும், களத்தில் வேறு நிலைப்பாடுமாக இரட்டை வேடம் போடலாம் என்று யாரும் நினைப்பார்களாயின் அது பேரபத்தம் இன்றி வேறில்லை.
இத்தகைய பின்புலத்தில்தான், இப்போது இலங்கைக்கு வந்து யுத்த நிறுத்தம் ஒன்றை உடன் ஏற்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டு, அது பலனளிக்காத நிலையில் வெறுங்கையோடு நாடு திரும்பிய பிரிட்டிஷ் பிரெஞ்சு வெளிவிவகார அமைச்சர்களின் எத்தனங்களை நாம் நோக்கவேண்டும். இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. இந்த விடயத்தைப் புரிந்துகொண்டு எச்சரிக்கை அறிவிப்பு விடுத்திருக்கின்றது.
"இலங்கை அரசு இராஜதந்திர அணுகுமுறையைப் புரிந்துகொள்ளாது முன்பின் யோசிக்காது சர்வதேசத்துடன் சண்டைபோட்டு வீண் பகைமையை வளர்த்துக்கொள்கின்றது" எனச் சுட்டிக்காட்டியிருக்கின்றார் ஐ.தே.கட்சியின் எம். பியும் பொதுச் செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்க.
"இலங்கை அரசு சர்வதேசத்துடன் ஒன்றிணையாது தனிப் பயணம் செய்ய முயல்கிறது. முன்பின் நேரக்கூடிய விளைவுகளைப் பற்றி சிந்திக்காது சர்வதேசத்துடன் முரண்பட்டு நிற்கின்றது." என்று கூறுகின்றார் அவர்.இப்படி விபரீத புத்தியுடன் கொழும்பு செயற்படுவது வினாச காலத்துக்கு வெற்றிலை வைத்து அழைக்கும் செயற்பாடே.
தலைப்புகள்
ஆய்வு கட்டுரைகள்
0 comments:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.