இலங்கைத் தமிழரின் நிலையைப் பார்த்து முழுநாடுமே கண்ணீர் வடிக்கிறது
இலங்கைத் தமிழர்களின் நிலையைப் பார்த்து நாடே கண்ணீர் விடுகிறது, வேதனைப்படுகிறது. ஆனால் இலங்கைத் தமிழர்களைக் காக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறினார்.
பா.ஜ.க.வுக்கு ஆதரவாக நரேந்திரமோடி சனிக்கிழமை தமிழகத்தில் பிரசாரம் செய்தார்.
முதலில் கன்னியாகுமரி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து அவர் நாகர்கோவிலில் பேசினார். அங்குள்ள நாகராஜா கோவில் திடலில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி; பேச்சைத் தொடங்குவதற்கு முன்பு பாரத நாட்டின் தென்கோடியில் வாழும் கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு எனது வணக்கம் என தமிழில் பேசினார்.
அவர் இங்கு கூறியதாவது;
குடும்ப அரசியல் நாட்டை மோசமான நிலைக்குக்கொண்டு சென்று விட்டது. டில்லியைப் பார்த்து தமிழ் நாட்டிலும் குடும்ப அரசியல் நடைபெறுகின்றது. தி.மு.க.வில் ஒரு பகுதியினர் டில்லியையும் சிலர் தமிழ் நாட்டையும் பார்த்துக் கொள்கின்றனர். அப்படியும் குடும்ப சண்டை தீராததால் தமிழ்நாட்டின் வடக்கை அவர் பார்த்துக் கொள்ளட்டும் தெற்கை இவர் பார்த்துக் கொள்ளட்டும் என்று பிரித்துக் கொண்டுள்ளார்கள்.
தமிழகத்தையே இவர்கள் பங்கு போட்டு கொள்ளையடித்து வருகிறார்கள். இதேபோல டில்லியில் சோனியா காந்தி குடும்பத்தினர் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த அரசியல் முடிவுக்கு வரவேண்டும். இந்த வாக்கு வங்கி அரசில் குடும்ப அரசியலால் நமக்கு பல சிக்கல்கள் உள்ளன. நாடு முன்னேற வேண்டுமானால் இந்த வாக்கு வங்கி அரசியலையும் குடும்ப அரசியலையும் ஒழிக்க வேண்டும்.
இலங்கைத் தமிழர்களுக்காக நாடே அழுகிறது
இலங்கையில் தமிழ் சகோதரர்கள் கொல்லப்படுவதை மத்திய அரசால் தடுக்க முடியவில்லை. இலங்கைத் தமிழர்கள் இரத்தமும் நம் இரத்தமும் ஒன்றுதான். இலங்கைத் தமிழர்களின் நிலையைப் பார்த்து நாடே கண்ணீர் விடுகிறது. வேதனைப்படுகிறது. ஆனால் இலங்கைத் தமிழர்களைக் காக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இலங்கை தமிழர்களுக்கு சமஉரிமையுடன் வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்றால் மத்தியில் பா.ஜ.க.ஆட்சி அமைய வேண்டும். அதற்கு நீங்கள் ஆதரவு தர வேண்டும்.
உங்கள் விரல் நுனியில் இருக்கும் சக்தி பகவான் கிருஷ்ணணின் விரல் நுனியில் இருக்கும் சக்தியைவிட அதிக சக்தி வாய்ந்தது. உங்கள் விரல் நுனி மூலம் ஒரு பட்டனை அழுத்தினால் ஒரு அரசையே ஆட்டி அசைக்கலாம்.
தலைப்புகள்
தமிழ்நாட்டு செய்திகள்
0 comments:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.