உத்தேச தீர்வுத் திட்டம் 13 ஆவது திருத்தம்


இந்தியன் எக்ஸ்பிரஸ் பிரதம ஆசிரியருக்கு அளித்த பேட்டியில் - ராஜபக்ஷ

உத்தேச அரசியல் தீர்வானது அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்திலும் பார்க்க கூடுதலானதாக அமையும் என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, சகலருமே அதனை அமுல்படுத்துவதற்கு அவசியம் இணங்குவதாக இந்த 13 ஆவது திருத்தத்திலும் கூடுதலான தீர்வு விளங்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

இந்த உத்தேச யோசனைகள் தொடர்பாக தமிழ்க் கட்சிகளுடன் ஒன்றுசேர்ந்து தீர்மானிக்க வேண்டியது அவசியமென்றும் தான் இந்த விடயத்தில் அவர்களை நிர்ப்பந்திக்கப் போவதில்லை என்றும் தீர்வுத் திட்டமானது ஒவ்வொரு மக்கள் மத்தியில் இருந்தும், தலைவர்களிடமிருந்தும் வெளிவர வேண்டியது அவசியம் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

"இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆசிரியர் சேகர் குப்தாவிற்கு என்.டி.ரி.வி.யின், "வோக் த ரோக்' நிகழ்ச்சியில் பேட்டியளித்திருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பயங்கரவாதத்திலிருந்து, விடுதலைபெற்ற நிலையில் சேகர் குப்தாவுடன் தற்போது தான் உரையாடுவதாக குறிப்பிட்டிருக்கிறார்.

பேட்டியில் ஜனாதிபதி மேலும் தெரிவித்திருப்பதாவது;

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இழைத்த பாரிய தவறு ராஜீவ் காந்தியை கொன்றதாகும். ஏனெனில், இந்தியாவின் முழு அனுதாபத்தையும் அவர்கள் பகைத்துக்கொண்டனர். அந்த நேரத்தில் அவர் செய்த பாரிய தவறு இதுவென நான் நினைக்கிறேன். இரண்டாவதாக அவர் தெற்கின் சக்தியைப் பற்றி அளவிட்டிருக்கவில்லை. அவர் இழைத்த மற்றொரு தவறாகும் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் அவர் விரும்பியிருக்கவில்லை. முழு நாட்டையுமே அவர் கைப்பற்ற விரும்பியிருந்தார். அவருடைய திட்டம் முழு நாட்டையும் கைப்பற்றுவதாகும். பயங்கரவாதத்தினாலும், துப்பாக்கியினாலும் சகலரையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்று அவர் நினைத்திருந்தார். 30 வருடங்களில் அவருடைய பாரிய தவறு ராஜீவ் காந்தியின் படுகொலையாகும். அதுவே அவரது வீழ்ச்சிக்கு இட்டுச் சென்றது என்பது உண்மையாகும்.

இந்தப் பிரச்சினையை யார் உருவாக்கியது என்பது உங்களுக்கு தெரியும். இந்த மனிதர் எப்பொழுது இதனை ஆரம்பித்தார் மற்றும் இந்தியாவில் அவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது என்பது யாவருக்கும் தெரியும். இறுதியாக அவர்கள் இந்திய மக்களால் அன்பு செலுத்தப்பட்ட தலைவரை கொன்றனர். தமிழ் மக்களால் மட்டுமன்றி முழு இந்தியாவுமே அன்பு செலுத்தியவரை அவர்கள் கொன்றனர். தமிழ்நாட்டில் அவரைக் கொன்றனர். தமது ஜாக்கெட்டை அவர் (ராஜீவ்) கொடுத்தார் என்று நான் கேள்விப்பட்டேன். இது சரியானதா என்பது எனக்கு தெரியாது. அவர் இந்த மனிதருக்கு தமது சொந்த குண்டு துளைக்காத ஜாக்கெட்டை கொடுத்தார். எமது அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் தீர்வொன்றை ஏற்படுத்த அவர் (ராஜீவ் காந்தி) முயற்சித்தார். அதனை நாம் இப்போது வைத்திருக்கின்றோம். இந்திய சமாதானப்படை இலங்கைக்கு வந்தபோது நாம் மகிழ்ச்சியடையவில்லை. நானும் கூட சந்தோஷப்படவில்லை. நான் எதிர்த்தரப்பில் இருந்தேன். அந்த நேரத்தில் நாம் எதிர்த்தோம். ஆனால், இப்போது அவர்கள், அல்லது நாம் இந்திய அமைதி காக்கும் படையை மேலும் ஓரிரு மாதங்களுக்கு தங்கியிருக்க அனுமதித்திருந்தால் இதனை அவர்கள் முடித்து வைத்திருப்பார்கள்.

இந்திய அமைதி காக்கும் படையுடன், போரிட பிரேமதாஸா புலிகளுக்கு ஆயுதங்களை கொடுத்ததாக லலித் அத்துலத் முதலி தமக்கு கூறியதாக சேகர் குப்தா கேள்வியெழுப்பியபோது, சரி என்று ஜனாதிபதி பதிலளித்துள்ளார். 5 ஆயிரம் ரி56 ரக துப்பாக்கிகளை புலிகளுக்கு அவர் கொடுத்ததாக கேள்வியெழுப்பப்பட்டபோது, ஆம் என்று ஜனாதிபதி பதிலளித்துள்ளார்.

விடுதலைப்புலிகள் எப்போதுமே யுத்த நிறுத்தத்தை பயன்படுத்தியோ அல்லது இந்தியாவையோ அல்லது மேற்கு சக்திகளையோ பயன்படுத்த முயன்றதாகவும், ஜனாதிபதி கூறியுள்ளார்.

புலிகள் பிரேமதாஸாவை கொன்றனர், அவர்களுக்கு உதவியவர்களை கொன்றனர், ராஜீவ் காந்தியை கொன்றனர், காமினி திசாநாயக்காவை கொன்றனர், அமிர்தலிங்கம், லக்ஷ்மன் கதிர்காமர், நீலன் திருச்செல்வன் போன்ற அவர்களின் சொந்த தலைவர்களையே கொன்றனர். சமாதானத்தை விரும்பியவர்களை கொன்றனர்.

ராஜீவ் காந்தியை கொன்றதன் மூலம் அவர் ஏன் இந்த மாதிரியான பாரிய தவறினை செய்தார். அதுபற்றி நீங்கள் ஆராய்ந்துள்ளீர்களா? ஏதாவது தகவல்களை பெற்றுள்ளீர்களா? என்று ஜனாதிபதியிடம் கேட்கப்பட்டபோது, ராஜீவ் காந்தி அரசியல் தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க முயன்றார் என்றும், அதனை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்ததால் ராஜீவ் காந்தியை அவர் வெறுத்தார் என்றும், தான் கருதுவதாக ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார். அவர் (பிரபாகரன்) எந்த தீர்வையும் விரும்பவில்லை. தான் மன்னனென கருதினார். இந்தியா தமிழ்நாட்டின் மனநிலை குறித்து அவர் கவலைப்படவில்லை. அவருடன் அனுதாபம் கொண்ட சில தலைவர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். அவர்களைப் பற்றி குறிப்பிட நான் விரும்பவில்லை. அவர்களின் பெயரை நீங்கள் அறிவீர்கள். அவர்கள் யாவரும் மக்களால் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். தென்னிந்திய வாக்காளர்கள் புத்திசாலிகள் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

இறுதி நாட்களைப் பற்றி கூறுமாறும் இறுதியாக எவ்வாறு அவரையும் ஏனைய முக்கியமான தலைவர்களையும் கண்டுபிடித்ததாகவும் சேகர் குப்தா கேள்வியெழுப்பியபோது பதிலளித்த ஜனாதிபதி, அவர்கள் தப்பிச்செல்ல முயற்சித்ததாகவும், சிறிய நிலப்பகுதியில் ஓரங்கட்டப்பட்டிருந்த அவர்கள் 3 குழுக்களாக இருந்ததாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். அந்த 3 குழுக்களில் ஒரு சாரார் வடக்கு பக்கமாகவும், மற்றவர்கள் தெற்கு பக்கமாகவும் இடையில் ஏரிப் பக்கமாகவும் சென்றதாகவும், பிரபாகரனும் ஏனையவர்களும் முன்னோக்கி நகர்ந்ததாகவும், அச்சமயம் இராணுவத்துடன் மோதல் ஏற்பட்டதாகவும், ஜனாதிபதி கூறியுள்ளார். அப்போது அவர்கள் சுற்றிவளைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கட்டாரில் ஜனாதிபதி இருந்தபோது பிரபாகரனின் மரணம் குறித்து அவருக்கு தெரிவிக்கப்பட்டதாக தாங்கள் கேள்விப்பட்டதாக சேகர் குப்தா குறிப்பிட்டபோது, இல்லை எனவும் 19 ஆம் திகதியே தாம் செய்தியை பெற்றுக்கொண்டதாகவும், ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.

இதேவேளை, இந்தியாவிடமிருந்து அதிகளவிலான பிரதிபலிப்புகள் வெளிப்படுத்தப்பட்டதா, உதாரணமாக ஆஸ்பத்திரி மீது குண்டுவீச்சு இடம்பெற்ற போது, என்று சேகர் குப்தா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, அவ்வாறான ஒன்றுமே நடைபெறவில்லை என்றும் அது ஒரு பிரசாரம் என்றும் மருத்துவர்கள் தங்களுடன் இருப்பதாகவும் இந்த மாதிரியாக அறிவிக்குமாறும், தங்களுக்கு கூறப்பட்டதென அவர்கள் தெரிவித்ததாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். ஆஸ்பத்திரி மீது குண்டுவீச்சு இடம்பெறவில்லை எனவும், இது முற்றுமுழுதான பிரசாரம் எனவும் அவர் தெரிவித்தார்.

பொதுமக்களின் இழப்புகள் குறித்து கேட்கப்பட்டபோது 100 இலும் குறைவானவர்களே இறந்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். எந்தவொரு பொதுமக்களுக்கு எந்தவொரு இழப்புகளும் ஏற்படக்கூடாது என தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியிருந்ததாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் அவர்கள் செய்தது போன்று நாம் ஒருபோதும் அவ்வாறு செய்யவில்லை எனவும் ஜனாதிபதி கூறியிருக்கிறார்.

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது செய்மதி மூலமான பிரதிமைகளைப் பெற உதவியை பெற்றுக்கொண்டீர்களா என்று கேட்கப்பட்டபோது, எங்கிருந்தும் நாங்கள் செய்மதி புகைப்படங்கள் தொடர்பாக உதவியைப் பெற்றிருக்கவில்லை என்று தெரிவித்தார்.

இந்தியாவின் தேர்தல் வேளையில் அதாவது ஆறு கிழமைகள் தொடக்கம் பிரபாகரனின் மரணம் வரை இந்தியாவுடனான தொடர்பாடல் எவ்விதம் அமைந்திருந்தது என்று கேட்கப்பட்டபோது, நாம் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தோம். ஆரம்பத்தில் அவர்கள் பொதுமக்கள் இழப்புகள் தொடர்பாக கவலையடைந்திருந்தனர் என்று ஜனாதிபதி தெரிவித்தார். அவர்கள் ஏதாவது அழுத்தத்தைக் கொடுத்தார்களா எனக் கேட்டபோது, அவ்வாறான அழுத்தம் எதுவும் இல்லை என்று குறிப்பிட்ட அவர், நண்பர்கள் மத்தியில் அழுத்தங்கள் இருக்க முடியாது என்று கூறினார்.

நீங்கள் யுத்தத்தில் வெற்றி பெற்றுள்ளீர்கள். சமாதானத்தை எவ்வாறு இப்போது தோற்றுவிக்கப் போகிறீர்கள் என்று கேட்கப்பட்டபோது, முதலாவதாக நாங்கள் அவர்களை மீளக்குடியமர்த்த வேண்டும். முகாம்களுக்குள் இருந்தவாறு மக்களால் அரசியலைப் பற்றி சிந்திக்க முடியாது உடனடியாக நாம் மேற்கொள்ளப்படவேண்டியது அந்தப் பகுதிகளை மீளக்கட்டியெழுப்ப வேண்டும். அப்பகுதிகளில் உள்சார் கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். அதன் பின்னர் அவர்களை மீளக்குடியமர்த்த வேண்டும். இதற்கு 180 நாட்கள் திட்டத்தை வைத்திருக்கின்றோம். அந்த நடவடிக்கைகளில் நாம் ஈடுபட்டுள்ளோம். அதற்கான பணத்தை கண்டுபிடிக்கவேண்டும். ஒன்றிரண்டு பில்லியன் தேவைப்படுகிறது. இந்தியா எமக்கு உதவவேண்டும். அவர்கள் அதனைச் செய்வார்கள் என நினைக்கிறேன். மீளக் கட்டியெழுப்ப அவர்கள் உதவவேண்டும்.

தமிழ் மக்களை சமனான பிரஜைகளாக நீங்கள் நடத்துவீர்களா என்றும் உங்களது முறைமையில் சமத்துவம் உள்ளதா எனவும் இப்போது தாங்கள் தோற்கடிக்கப்பட்டதாக அவர்கள் உணர்வதாகத் தென்படுகிறதெனவும் கேட்கப்பட்டபோது எனது பாராளுமன்ற உரையை நீங்கள் பார்த்தால் இனிமேல் இங்கு சிறுபான்மையினர் இல்லையென்று நான் கூறியுள்ளேன். இங்கு இரண்டு வகையான மக்களே இருப்பார்கள். ஒன்று இலங்கையை நேசிப்பவர்கள் மற்றவர்கள் இலங்கையை நேசிக்காதோர். இதுவே மக்கள் மத்தியில் உள்ள வேறுபாடாக அமையும். சகல மக்களும் எனது மக்கள். அவர்கள் தமிழரோ, சிங்களவரோ, முஸ்லிம்களோ மலாயர்களோ, யாராகவிருந்தாலும் அவர்கள் எமது மக்கள் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

யாவரையும் தான் சமமாகவே நடத்துவதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

1983 இல் இது தொடர்பாக வரலாறு உள்ளது என்று கேட்கப்பட்டபோது, வரலாற்றை நாம் மறந்துவிட வேண்டும். நாம் புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார். தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்குமிடையில் நீங்கள் வேறுபாட்டைக் காண்பிப்பதில்லையா என்று கேட்டபோது, இல்லை, நான் அவ்வாறு செய்யமுடியாது. ஏனெனில், எனது உறவினர்களில் சிலர் தமிழர்கள். எனது பெறாமகள் ஒரு தமிழரைத் திருமணம் செய்துள்ளார். அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறார் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

உங்களது விருப்பத்துக்குரிய கிரிக்கெட் கதாநாயகன் தமிழரான முத்தையா முரளிதரனா என்று கேட்கப்பட்டபோது, எவ்வாறு அதை நான் கூறமுடியும். எனது சொந்த வீட்டிற்குள் அதனை அவ்வாறு கூறமுடியாது என்று ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.

சிங்கள மேலாதிக்கவாதம் என்பது யதார்த்தமானதாக இருந்தது பற்றி கேள்வி எழுப்பப்பட்டபோது, நான் அதனைக் கூறமாட்டேன். ஏனென்றால், சகல அரசியல்வாதிகளுமே அதனைத் தொடக்கியிருந்தனர் என்று தெரிவித்தார். நீங்கள் கிராமத்துக்குச் சென்றால் தமிழர்களுடன் பேசினால் அவர்களுக்கு இந்தப் பிரச்சினை இல்லை. ஆனால் அரசியல்வாதிகள் அதிகாரத்திற்காக இதனைச் செய்கிறார்கள் என்றும் அதிகாரத்திற்கு வருவதற்கான ஒரே வழியாக அது இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமக்கு அந்தமாதிரியாக செயற்படும் நோக்கமில்லை என்று தெரிவித்திருந்த ஜனாதிபதி, முழு நாடுமே தமக்கு வாக்களிக்க விரும்புவதாக அவர் கூறியுள்ளார். துரிதமாக தேர்தல் இடம்பெறும் சாத்தியம் பற்றி குறிப்பிட்டிருக்கும் ஜனாதிபதி, நவம்பர் மாதத்தில் அது தொடர்பாக தம்மால் தீர்மானம் எடுக்க முடியுமென்று கூறியுள்ளார்.

நிரந்தரமான சமாதானத்தை ஏற்படுத்த முடியுமென்று குறிப்பிட்ட அவர், தேர்தலில் தமிழ் மக்களையும் உள்ளீர்த்துக் கொள்வதை ஏற்கனவே செய்திருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

0 comments:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.