இலங்கைக்கு மிகப் பெருமளவு ஆயுதங்களை விற்ற பிரிட்டனும் ஐரோப்பிய நாடுகளும்


இலங்கை அரசினால் விடுதலைப்புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தின் நடவடிக்கைக்கு பல மில்லியன் ஸ்ரேலிங் பவுண் போர்த்தளபாடங்கள் பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளால் இலங்கைக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதாக "லண்டன் ரைம்ஸ்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
விடுதலைப்புலிகளுக்கு எதிராக இலங்கை அரசினால் முன்னெடுக்கப்பட்ட இரத்தக்களரி நிறைந்த சிவில் யுத்தத்திற்காகவே கடந்த மூன்று வருட காலப் பகுதியில் பெருமளவான ஆயுதங்கள் ஐரோப்பிய நாடுகளால் இலங்கைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் ரைம்ஸ் சுட்டிக் காட்டியுள்ளது.

பிரிட்டிஷ் அரசின் அதிகார பூர்வமான தரவுகளின் அடிப்படையில் கவச வாகனங்கள், இயந்திரத் துப்பாக்கிகள்,அரைத் தன்னியக்க கைத்துப்பாக்கிகள் உள்ளிட்ட யுத்த தளபாடங்கள் 13.6 மில்லியன் ஸ்ரேலிங் பவுணுக்கும் அதிகமான பெறுமதிக்கு பிரிட்டனால் இலங்கைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஸ்லோவாக்கியா 1.1 மில்லியன் பவுண்ஸ்கள் பெறுமதியான 10 ஆயிரம் ரொக்கட்டுகளை விநியோகித்துள்ளமையும் பல்கேரியா 1.75 மில்லியன் பவுண்ஸ்கள் பெறுமதியான துப்பாக்கிகள் மற்றும் வெடி பொருட்களை விற்பனை செய்ய அனுமதியளித்துள்ளமையும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆவணங்கள் மற்றும் அதிகாரிகள் மூலம் தெரியவந்துள்ளது.

இவ்வாறு விற்பனை அனுமதி வழங்கப்பட்ட போர்த் தளபாடங்கள் அனைத்தும் விநியோகப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த முடியாத வகையில் அரசாங்கங்கள் தலையிட்டுள்ளன.

ஸ்லோவாக்கிய மட்டுமே ரொக்கட்டுகளை விநியோகித்தமையை உறுதிப்படுத்தியுள்ளது.

இலங்கையின் 26 வருடகால சிவில் யுத்த வரலாற்றில் கடந்த 5 மாத காலப்பகுதியில் 20 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள இந்த யுத்தத்திற்கு ஐரோப்பிய ஒன்றியத்தால் விநியோகிக்கப்பட்ட இந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்ற கேள்வியை ரைம்ஸ் எழுப்பியுள்ளது.

இந்த ஆயுதங்கள் எதற்குப் பயன்பட்டன என்பதற்கான பதிலை அரசாங்கம் வழங்க வேண்டியது அவசியமென பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினரும் ஆயுத ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சபையின் உறுப்பினருமான மிக் காபேஸ் வலியுறுத்தியுள்ளார்.

உள்நாட்டு மோதல்களை எதிர்கொண்டுள்ள அதேவேளை, மிக மோசமான மனித உரிமை நிலைவரத்தையும் சர்வதேச சட்ட விதிகளையும் மீறியுமுள்ள நாடுகளுக்கான ஆயுத விநியோகம் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் 1998 ஆம் ஆண்டின் சட்ட விதிகளை இந்த ஆயுத விநியோகம் மீறியுள்ளதெனவும் ரைம்ஸ் தெரிவிக்கின்றது.

இலங்கையை சமாதான பேச்சுவார்த்தைக்கு அழைத்த ஐரோப்பிய ஒன்றியம் இராணுவ நடவடிக்கை மூலமான தீர்விற்கு ஆதரவளிப்பதில்லையென உறுதியளித்திருந்ததுடன் 2002 ஆம் ஆண்டில் யுத்த நிறுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கவலையையும் வெளியிட்டிருந்தது.

அமெரிக்காவும் 2006 2007 ஆம் ஆண்டுகளில் ஒரு மில்லியன் பவுண்ஸ் பெறுமதியான போர்த் தளபாடங்களை இலங்கைக்கு விற்பனை செய்திருந்தது. ஆனால், இலங்கையின் மனித உரிமை மீறல்கள் காரணமாகக் கடந்த ஆண்டு முற்பகுதியில் அனைத்து இராணுவ உதவிகள் மற்றும் போர்த் தளபாட விற்பனையை நிறுத்தியது.

யுத்த நிறுத்தம் முறிவடையத் தொடங்கிய 2006 ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியமும் ஆயுத விநியோகத்தை நிறுத்தியிருக்க வேண்டுமென ஆயுத விற்பனை நடவடிக்கைகளுக்கு எதிரானவர்களான பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

போர்த் தளபாடங்களை விநியோகிப்பதில்லையென ஐரோப்பிய ஒன்றியத்திடம் உறுதிமொழி ஒன்று இருப்பதாக அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு திரும்பிய லிபரல் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மல்கொம் பு?ஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பிரிட்டனின் இந்த ஆயுத விநியோகம் தொடர்பில் பதிலளிக்க முடியாத பல வினாக்கள் இருப்பதாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்ட விதிகளை பிரிட்டன் மீறியிருப்பதாகவும் பு?ஸ் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, மனித நேயப் பணியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது இலங்கை அரசினால் விதிக்கப்பட்டிருக்கும் அனைத்து கட்டுப்பாடுகளையும் இலங்கை அரசு நீக்கும் வரை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் இலங்கைக்கான ஆயுத விநியோகத்தை உடனடியாக நிறுத்த வேண்டுமென தொழில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பொதுநலவாய வெளிவிவகார அமைச்சருமான ஜோன் பற்றிள் வலியுறுத்தியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிகளின் படி அதன் அங்கத்துவ நாடுகள் ஆயுதப் போராட்டத்தை அதிகரிப்பதும் வகையிலோ அல்லது தூண்டும் வகையிலோ ஆயுத ஏற்றுமதிகளை மேற்கொள்ளக் கூடாது. அத்துடன், உள்நாட்டு கிளர்ச்சிகளை அடக்குவதற்காக ஆயுதங்களை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்க முடியாது.

இந்நிலையில், ஸ்லோவாக்கியா இலங்கைக்கு ரொக்கட் விற்பனை செய்தமை தவறல்ல எனத் தெரிவித்துள்ளது. ஏனெனில், இலங்கைக்கு ஆயுத விற்பனை மேற்கொள்ள ஐ.நா. தடை ஏதும் விதிக்கவில்லை. அத்துடன், அந்நாடும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமையுள்ளதுடன் புலிகள் அமைப்பை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்துள்ளது எனவும் ஸ்லோவாக்கியா தெரிவித்துள்ளது.

ஸ்லோவாக்கியாவின் நிலைப்பாட்டை அந்நேரத்தில் பிரிட்டன் ஆதரிக்காத போதிலும் தமது ஆயுத விநியோகத்திற்கு சீனா போன்று அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.