தலைவர்களைத் திணிக்கும் எத்தனமா?


விடுதலைப் புலிகளைத் தோற்கடித்தமை தொடர்பான வெற்றிக் கொண்டாட்டங்கள் தலைநகர் கொழும்பில் இன்று கோலாகலமாக நடைபெறுகின்றன.

விடுதலைப் புலிகளைத் தோற்கடித்தமை தொடர்பாகத் தாம் ஏற்கனவே வெற்றிப் பெருமிதத்தில் நாட்டுக்கு ஆற் றிய உரையில் "இது புலிகளின் தோல்வியே தவிர, தமிழர் களின் தோல்வியே அல்ல!" என்று ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ கூறியிருந்தார். இன்று நடைபெறும் தமது படை களின் வெற்றித் திருவிழாக் கொண்டாட்டங்களின் போது நாட்டு மக்களுக்குத் தாம் ஆற்றும் உரையில் இதை மீண்டும் அவர் குறிப்பிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஆனாலும், இராணுவ ரீதியில் தோற்றவர்கள் புலிகளாக இருந்தாலும், அரசியல் ரீதியிலும் முற்றாகத் தோற்றுப் போய், தூக்கி வீசப்பட்டு விட்டோமோ என்ற வெறுப்பு நிலை வெறுமை நிலை இலங்கைத் தீவின் தமிழர்கள் மனதில் ஆழமாகப் பற்றிப் பீடித்து நிற்காமல் இல்லை என் பதையும் குறிப்பிட்டேயாக வேண்டும்.

தென்னிலங்கையில் சிங்களத் தலைமைகளிடமிருந்து அதிகாரவர்க்கத்தவரிடமிருந்து வரும் செய்திகள், அறிவிப்புகள், பிரகடனங்கள் அப்படித்தான் தோன்றுகின்றன.
"போரில் தோற்கடிக்கப்பட்டவர்கள் புலிகளே; தமிழர் கள் அல்லர்" என்று ஜனாதிபதியும் அவரது அரசின் ஏனைய தலைவர்களும் வாயால் கூறும் வார்த்தைகள் உண்மை யானவையாக இருக்குமானால், நாதியற்றிருக்கும் ஈழத் தமிழ் இனத்தைப் பெரும்பான்மையினர் வெளிப்படை யாகவே அரவணைத்துக் காட்டவேண்டிய மிகப் பொருத் தமான அவசியமான சமய, சந்தர்ப்பம் இதுவாகும். ஆனால் அதற்கு மாறாக, அவர்களைப் புறமொதுக்கி, மனக் கிலேசத் துக்கு உள்ளாக்கும் விடயங்களே இப்போதும் வெளிப்படுத் தப்படுகின்றன.

இராணுவ வெற்றிக் களிப்பில் மிதக்கும் பேரினவாதக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய "தமிழ்த் தேசியக் கூட் டமைப்பினரை நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்ற வேண்டும்!" என்ற கூக்குரலைத் தீவிரப்படுத்தியிருக் கின்றது.
நாட்டில் பாதுகாப்பு விடயங்களில் ஜனாதிபதிக்கு அடுத்து மிகச் செல்வாக்கு மிக்கவராக விளங்குபவரும், ஜனாதி பதியின் சகோதரரும், இலங்கைப் படைகளின் இன்றைய வெற்றி நிலைக்குக் காரணமான கதாநாயகன் என்று தென் னிலங்கையால் போற்றப்படுபவரும், பாதுகாப்பு அமைச் சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ஷவும் இக்கருத் தையே வலியுறுத்தியிருக்கின்றார்.

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை நாடாளுமன்றத் திலிருந்து வெளியேற்றவேண்டும் என்பதே எமது நிலைப் பாடாகும். இதனைப் பலமுறை வலியுறுத்தியிருக் கிறேன்." என்று அவரே அண்மையில் பகிரங்கப் பேட்டி ஒன்றில் கூறியிருக்கின்றார்.
இந்த நாடாளுமன்றத்தில் முடியாவிட்டால் அடுத்த நாடாளுமன்றத்திலாவது இதைச் செய்யவேண்டும் என அவர் வலியுறுத்தியிருக்கின்றார்.

ஒருபுறம் தமிழ் அரசியல் கட்சிகளை ஆளும் கட்சி யுடன் சேருமாறு வெளியே புலப்படாத அழுத்தம் அவற் றுக்கு. மறுபுறம் சுயாதீனமாகச் செயற்படும் தமிழ்க் கட்சிக ளையும் புலிகளை ஒழிப்பது போன்று அழித்தொழிக்கும் எத்தனம்.
தமிழர்களின் நியாயமான தேசியக் கோரிக்கைகளைப் பிரதிபலிப்பனவாகக் காட்டிக்கொண்ட வெகுஜன ஊடகங் கள் கூட அழுத்தங்களுக்கு இரையாகி ஆளும் தரப்புக்கு ஜால்ரா போடும் நிலைமை இன்னொருபுறம்.

இவற்றுக்கு மத்தியில் "தோற்றது புலிகள்தான்; தமிழர் கள் அல்லர்! என்ற கருத்து எடுபடக் கூடியதே அல்ல.

தமிழர்களின் நியாயமான அபிலாஷைகளை நிறைவு செய்யக்கூடிய தீர்வு எட்டப்படுவதன் மூலம் அமைதியும், சமாதானமும் ஏற்படுத்தப்பட வேண்டும் என யாரும் கருது வார்களேயானால், அதற்கு அத்தகைய அபிலாஷைகளை நேர்மைத் திறத்துடன் பிரதிபலிக்கக்கூடிய தமிழ்த் தலை மைகளுடன்தான் பேசவேண்டும்.

தென்னிலங்கை ஆட்சித் தலைமைகளின் அதிகாரத் துக்குள் ஈர்க்கப்பட்டவர்களுடனோ அல்லது அதிகாரத் தரப்பின் விருப்புக்கு இசைவாக ஆடுபவர்களுடனோ மட் டும் பேசி இணக்கத் தீர்வு காண்பது என்ற எத்தனத்தின் மூலம் இலங்கை அரசுத் தலைமை தான் விரும்பும் அல்லது தனக்குப் பிடித்தமான ஒரு திட்டத்தைத் தீர்வாகத் தமிழர் கள் மீது திணிக்க முயல்கிறது போலும்.

ஆனால் அதன் மூலம் இணக்கமான உண்மையான நீடித்து நிலைக்கக்கூடிய சமாதானமும் அமைதியும் ஏற் பட்டு விடாது; மாறாக, அடக்குமுறையின் மீது கட்டப் படும் போலி அமைதி மட்டுமே அதன்மூலம் எட்டப்படக் கூடும்.

ஈழத் தமிழர்களின் ஏக அதிகாரபூர்வ பிரதிநிதிகள் தாமே என்பதைப் பிரகடனப்படுத்தி, முன்னிறுத்திச் செயற் பட்ட புலிகள் இயக்கத்தை, இராணுவ நடவடிக்கைகள் மூலம் அழித்தொழிப்பதில் வெற்றி கண்டுள்ளதாகக் கரு தும் கொழும்பு, அதனால் ஏற்பட்டிருக்கும் பிரதிநிதித்துவ வெற்றிடத்துக்குத் தான் விரும்பும் தனக்குப் பிடித்தமான தரப்புக்களைக் கொண்டுவந்து நிறுத்தும் தந்திரோபாய எத்தனத்தில் இப்போது ஈடுபட முயல்கிறது. அதன் முதல் கட்டமாகவே தனக்குப் பிடித்தமில்லாத தரப்புக்களை ஓரம்கட்டி, ஒதுக்கி, இல்லாமல் செய்யும் தந்திரத்தை அது இப்படி ஆரம்பித்திருக்கின்றதோ என்ற சந்தேகம் எழு கின்றது.
புலிகளுக்கு எதிரான படை நடவடிக்கைகளுக்கும் ,அந்த இறுதிக் கட்டப் போரில் பல்லாயிரம் பொதுமக்கள் கொன்றொழிக்கப்பட்டமை தொடர்பாக சர்வதேசம் நடத்த எத்தனித்த விசாரணைகளை முட்டுக்கட்டை போட்டுத் தடுப்பதற்கும்
இலங்கைக்கு நேரடியாக ஒத்துழைத்து, உதவி, பங் களித்த பாரதம் இப்போது தமிழர்கள் தரப்பின் சுயாதீனப் பிரதிநிதிகளைக் கொழும்பு தன் விருப்புக்கேற்ப களை யெடுத்து நீக்கி, இசைவானவர்களை மட்டும் தேர்ந் தெடுத்து முன்நிறுத்தும் எத்தனத்துக்கு உடந்தையாகிப் போகும் வாய்ப்புகளும் உள்ளன.

அதற்காகத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முந்திக்கொண்டு போய்சென்னையினதும் புதுடில்லியினதும் காலில் விழுந்து இறைஞ்ச முயல்கின்றதோ என்று அரசியல் அவதானிகள் சந்தேகம் எழுப்புகின்றனர்.

0 comments:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.