
வன்னியில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைகளின்போது ஆயிரக்கணக் கான மக்கள் கொல்லப்பட்ட விடயத்தில் இந்தியாவுக்கும் தொடர்புள்ளது எனக் கடும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்திய அமைதிப்படையின் முன்னாள் தளபதி மேஜர் ஜெனரல் அசோக் மேத்தாவும் இரு சர்வதேச அமைப்புகளும் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன என்று லண்டனில் இருந்து வெளிவரும் "த ரைம்ஸ் " பத்திரிகை தெரிவித்துள்ளது.
"த ரைம்ஸ் " மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:
பெருமளவு பொதுமக்கள் கொல்லப்பட்ட இறுதிக்கட்டத் தாக்குதலில் இந்தியா தொடர்புபட்டிருந்தது என மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா "த ரைம்ஸ் "இற்குத் தெரிவித்துள்ளதுடன், இது ஆழ்ந்த கவலையையும் மனக்குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை இராணுவம் முன்னெடுத்த நடவடிக்கைக்கு ஆதரவளிப்பது என இந்தியா முடிவெடுத்தது. பின்னர் முழுமையாக ஆதரவளித்ததுடன் மோதல் பகுதிகளில் என்ன நடைபெறுகின்றது என்பதை அலட்சியம் சேய்து விட்டது எனவும் அசோக் மேத்தா தெரிவித்துள்ளார்.
தமது சேல்வாக்கை இலங்கையில் அதிகரித்துக் கொண்டுள்ள சீனா மற்றும் பாகிஸ்தானை முறியடிக்க நினைத்து, காங்கிரஸ் கட்சி தலைமையிலான இந்திய அரசுகடந்த சில வருடங்களாக இலங்கைக்கு அதிகளவு ஆயுதங்களை வழங்கியுள்ளது. இதன்மூலம் 1991 இல் ராஜீவ் காந்தி கொலைக்காக காங்கிரஸ் கட்சி விடுதலைப் புலிகளைப் பழிவாங்க நினைத்ததென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கற்பனை சேய்முடியாத மனிதாபிமான பேரழிவு குறித்து சேஞ்சிலுவை சர்வதேசக் குழு எச்சரித்த போதிலும் இந்தியா அதனைத் தடுக்க முடியாமல் போனதற்கு இந்த இரு காரணங்களையும் வைத்து நியாயப்படுத்த முடியாதென மனித உரிமைக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இந்தியா உரிய நடவடிக்கையை எடுத்திருந்தால் பல உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம். யுத்தத்தின் முடிவை இது பாதித்திருக்காது என்றும் அந்த அமைப்புத் தெரிவித்துள்ளது.
புலிகளைத் தோற்கடிப்பதற்காக பொதுமக்களை கொல்லலாம் விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்காக எவ்வளவு பொதுமக்களைக் கொல்லவேண்டுமோ அவ்வளவு பொதுமக்களைக் கொல்லலாம் என்ற இலங்கை அரசின் கருத்தை இந்தியா எவ்வித ஆட்சேபனையும் இன்றி ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை நம்பவேண்டியுள்ளது என சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய பசுபிக் இயக்குநர் சாம் ஜரிவி குறிப்பிட்டுள்ளார்.
6 கோடி தமிழர்கள் வாழ்கின்ற தேசம் என்கின்ற போதிலும், இந்தியா இலங்கைக்கு இராணுவ உபகரணங்கள், பயிற்சிகள் மற்றும் புலனாய்வுத் தகவல்கள் ஆகியவற்றை வழங்கியுள்ளது என இராஜதந்திர வட்டாரங்கள் "த ரைம்ஸ் " பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளன.
மேலும் சர்ச்சைக்குரிய விதத்தில் இந்தியா இலங்கைக்கு தளர்வற்ற இராஜதந்திர ஆதரவை வழங்கியதுடன் பொதுமக்கள் தப்புவதை உறுதி சேய்வதற்காக யுத்தநிறுத்தம் ஒன்றுக்கு ஏற்பாடு சேய்யத் தவறிவிட்டது என்றும் அவை சுட்டிக்காட்டியுள்ளன.
இந்தியா தனது முழுமையான இராஜதந்திர பலத்தையும் பயன்படுத்தாத அதேவேளை, யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முழுமையான ஆதரவையும் அனுமதியையும் வழங்கியது எனவும் இராஜதந்திரிகள், மனித உரிமைப் பணியாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மோதல் காரணமாகப் பெருமளவு அகதிகள் தமிழ்நாட்டுக்கு வருவது குறித்து மாத்திரம் இந்தியா கவலையடைந்திருந்தது எனத் தெரிவித்துள்ள இராஜதந்திர வட்டாரங்கள் பான் கீமூனின் பிரதிநிதி விஜய் நம்பியாரின் பணி குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளன.
இப்படி "த ரைம்ஸ் " பத்திரிகை தெரிவித்துள்ளது.
0 comments:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.