மனிதகுல சரித்திரத்தில் முன்னென்றும் இல்லாத பட்டினி
ஐக்கிய நாடுகள் உணவு விவசாய நிறுவனம் கடந்த வாரம் வெளியிட்டிருக்கும் அறிக்கையொன்றில் உலகில் தற்போது 100 கோடிக்கும் அதிகமான மக்கள் பட்டினிக் கொடுமையில் வாடுவதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தற்போது தீவிரமடைந்திருக்கும் சர்வதேச பொருளாதார மந்தநிலை நெருக்கடி காரணமாக கடந்த வருடத்தை விட பட்டினி கிடப்போரின் எண்ணிக்கை சுமார் 10 கோடியால் அதிகரித்திருக்கிறது என்றும் இன்றைய மனித குலத்தின் ஆறில் ஒருபங்கினர் பட்டினி அவலத்திற்குள் தள்ளப்பட்டிருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் 64 கோடி 20 இலட்சம் மக்களும் ஆபிரிக்காவின் தென்பிராந்திய நாடுகளில் 26 கோடி 50 இலட்சம் மக்களும் லத்தின் அமெரிக்க மற்றும் கரிபியன் பிராந்தியத்தில் 5 கோடி 30 இலட்சம் மக்களும் மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் 4 கோடி 20 இலட்சம் மக்களும் அபிவிருத்தியடைந்த நாடுகளில் ஒரு கோடி 50 இலட்சம் மக்களும் பட்டினியில் வாடுவதாக உணவு விவசாய நிறுவனத்தின் மதிப்பீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மனித குலத்தின் சரித்திரத்திலேயே இந்தளவு பெரிய எண்ணிக்கையில் மக்கள் பட்டினிக் கொடுமையால் வாடுவது இதுவே முதற்தடவையாகும் என்று உணவு விவசாய நிறுவனத்தின் அபிவிருத்தி திணைக்களப் பணிப்பாளரான கோஸ்ராஸ் ஸ்ரமோலிஸ் சுட்டிக்காட்டியிருக்கிறார். உலக சனத் தொகையில் ஆறில் ஒருபங்கினர் அதாவது 102 கோடி பேர் பட்டினி அவலத்தில் சிக்கியிருக்கும் தற்போதைய நிலைவரம் உலகின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் பாரதூரமான அச்சுறுத்தலைத் தோற்றுவிக்கும் என்று எச்சரிக்கை செய்திருக்கும் உணவு விவசாய நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் ஜாக்குவெஸ் டியோவ் உலகில் பட்டினியை துரிதமாக ஒழிப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பரந்தளவிலான கருத்தொற்றுமை காணப்பட வேண்டியது அவசியமாகும் என்று வலியுறுத்தியிருக்கிறார். விவசாயத்துறையை குறிப்பாக சிறுபயிர்ச் செய்கையாளர்களை ஊக்குவிப்பதற்கான பொருளாதார உதவிகளை அரசாங்கங்கள் வழங்க வேண்டும். பெரும்பாலான வறிய நாடுகளைப் பொறுத்தவரை துடிப்பு மிக்க விவசாயத்துறையே வறுமையையும் பட்டினியையும் வெற்றி கொள்வதற்கு அவசியமானது என்பதுடன் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சிக்கும் விவசாயத்துறையே முன்தேவையாக இருப்பதால் அத்துறையிலான முதலீடுகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் டியோவ் ஆலோசனை தெரிவித்திருக்கிறார்.
தினமொன்றுக்கு மனிதர்களுக்குச் சராசரியாகத் தேவைப்படுகின்ற 1,800 கலோரிகளைவிடவும் குறைவான கலோரிகளை உட்கொள்பவர்களே போஷாக்கின்மையினால் பாதிக்கப்படுகிறார்கள். இதை அளவுகோலாகக் கொண்டே பட்டினியால் வாடுபவர்களை உணவு விவசாய நிறுவனம் மதிப்பிடுகிறது. அதன் அடிப்படையில் நோக்குகையில் இன்று உலகில் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் தினமொன்றுக்கு 1,800 கலோரிகளுக்கும் குறைவாகவே உட்கொள்கிறார்கள். கடந்த வருடம் பட்டினியில் வாடுபவர்களின் எண்ணிக்கை 91 கோடி 50 இலட்சம் என்று கணிப்பிடப்பட்டிருந்தது. இவ் வருடம் முதல் 6 மாதங்களுக்குள் அந்த எண்ணிக்கை 11 சதவீதத்தினால் அதிகரித்திருப்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது. உலகில் சனத்தொகை அதிகரிக்கும் வேகத்தை விட பட்டினிக் கொடுமைக்குள் தள்ளப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வேகம் கூடுதலானதாக இருக்கிறது. இந்தப் பட்டினி நெருக்கடிக்கு உலகின் எந்தப் பிராந்தியமுமே விதிவிலக்கில்லை. உலகின் சகல பகுதிகளுமே இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. உலகில் போஷாக்கின்மையால் வாடுவோரில் அதிகப் பெரும்பான்மையானவர்கள் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளிலேயே வாழ்கிறார்கள். கடந்த வருடத்தில் இருந்து உலகின் சகல பிராந்தியங்களிலும் பட்டினி வீதம் இரட்டை இலக்கத்தில் அதிகரிக்க ஆரம்பித்ததை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.
உணவு விவசாய நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் விபரங்களின் படி உலகில் உள்ள வறிய பாவனையாளர்கள் தங்களது வருமானத்தில் 60 சதவீதத்தை அன்றாடம் தேவைப்படுகின்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கே செலவிடுகிறார்கள். இதன் அர்த்தம் அந்த மக்களின் கொள்வனவுச் சக்தி கடுமையான அளவுக்கு வீழ்ச்சி கண்டிருக்கிறது என்பதேயாகும். 20062008 கால கட்டத்தில் உலகில் நிலவிய எரிபொருள் உணவுத் தானிய நெருக்கடிக்குப் பிறகு தற்போது உலகச் சந்தையில் பொருட்களின் விலைகள் குறைவடைந்திருந்தாலும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் உணவுக்கான செலவு இப்போது மேலும் கூடுதலானதாகவே இருக்கிறது. சர்வதேச பொருளாதார மந்தநிலை காரணமாக நகரங்களில் வாழ்கின்ற வறிய மக்களே கூடுதலான நெருக்கடிகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்று ஐ.நா.எச்சரிக்கை செய்திருக்கிறது. ஏற்றுமதிக்கான கிராக்கி குறைவதனாலும் வெளிநாட்டு முதலீடுகளில் வீழ்ச்சி ஏற்படுவதனாலும் நகர்ப்புறங்களில் தொழில்களைத் தேடிக்கொள்வது பெரும் கஷ்டமாக இருக்கப் போகிறது. பொருளாதார மந்தநிலை மக்களின் வருமானங்களில் கடும் வீழ்ச்சியையும் வேலையில்லாத் திண்டாட்டத்தில் கடும் அதிகரிப்பையும் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.
றோம் நகரைத் தலைமையகமாகக் கொண்டிருக்கும் இன்னொரு ஐ.நா. உணவு நிறுவனமான உலக உணவுத் திட்டத்தைச் சேர்ந்த உயரதிகாரியான ஜோசெற் ஷீரான் வெளியிட்டிருக்கும் விபரங்களின்படி கடந்த வருடம் குறைந்தது 30 நாடுகளில் பட்டினியால் வாடிய மக்கள் கலவரங்களில் ஈடுபட்டிருந்ததாக தெரிய வருகிறது. உணவுப் பொருட்களின் விலைகள் கடுமையாக அதிகரித்ததை ஆட்சேபித்து கரிபியன் நாடான ஹெய்டியில் இடம்பெற்ற கலவரங்களையடுத்து பிரதமர் பதவியில் இருந்து தூக்கியெறியப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பட்டினி உலகம் மிகவும் அபாயகரமானதாகும். ஒருநாட்டில் உணவு இல்லாவிட்டால் மக்களுக்கு மூன்று மார்க்கங்களே இருக்கின்றன. கலவரங்களில் ஈடுபடுவது, நாட்டை விட்டு வெளியேறுவது அல்லது செத்து மடிவது இவையே அந்த மூன்று மார்க்கங்களாகும். இவற்றில் எந்தவொன்றையும் மக்கள் தெரிவு செய்து கொள்வது ஏற்புடையதல்லவே.
ஐக்கிய நாடுகள் 2000 ஆம் ஆண்டில் நிர்ணயித்த மிலேனியம் அபிவிருத்தி இலக்குகளில் பிரதானமானது உலகில் வறுமையை 2015 ஆம் ஆண்டளவில் அரைவாசியாகக் குறைப்பது என்பதாகும். இந்த இலக்கை நோக்கிய செயற்பாடுகளுக்காக வரையறுக்கப்பட்ட 15 வருட காலகட்டத்தில் அரைவாசிக்கும் கூடுதலான வருடங்களை உலகம் இப்போது கடந்து விட்டது. பட்டினிக் கொடுமைக்குள் தள்ளப்படுகின்ற மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் வீதத்தை நோக்கும் போது வறுமை ஒழிப்பில் மிலேனியம் இலக்கை அடைவதென்பது குறித்து உலகம் கனவுகூடக் காண முடியாது என்றே கூற வேண்டியிருக்கிறது. உணவு விவசாய நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் கடந்த வருடம் தெரிவித்திருந்த கருத்தொன்றை இச் சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்துவது பொருத்தமானதாக இருக்கும். "உலகின் தற்போதைய நிகழ்வுப் போக்குகளை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் போது வறுமை ஒழிப்பில் மிலேனியம் அபிவிருத்தி இலக்கை 2015 இல் அல்ல 2050 இல் தான் அடைய முடியும் போல் தெரிகிறது'.
நன்றி :
தலைப்புகள்
ஆய்வு கட்டுரைகள்
0 comments:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.