ஈழத் தமிழர்கள் யாருமற்ற அனாதைகள் அல்லர். அவர்களுக்கு இன்னல்கள் ஏற்பட்டால் தொப்புள்கொடி உறவுகளான ஏழு கோடி தமிழர்கள் தமிழகத்திலிருந்து குரல் கொடுப்பார்கள் என்ற செய்தியே சிறிலங்கா அரசிற்கும், இந்த உலகத்திற்கும் முக்கிய செய்தியாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் பெருமிதம் வெளியிட்டுள்ளார்.
தமிழகத்திலிருந்து வெளிவரும் ஜூனியர் விகடன் (11.01.09) வாரமிருமுறை இதழுக்கு அவர் அளித்த நேர்காணல்:
பத்தாண்டுகளாக உங்கள் கட்டுப்பாட்டில் இருந்த கிளிநொச்சி கடைசியில் சிறிலங்கா வசம் போய்விட்டது புலிகளுக்கு பின்னடைவுதானே..?
கிளிநொச்சி இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது முதல் தடவையல்ல பல தடவைகள் இராணுவத்திடமிருந்து கிளிநொச்சியை நாம் மீட்டது மட்டுமல்ல கட்டுப்பாட்டுக்குள்ளும் நீண்ட காலம் வைத்திருந்துள்ளோம். இதுதான் வரலாறு. நாம் இதனைப் பின்னடைவாகப் பார்க்கவில்லை.
தற்போது நடந்து வரும் போரில் விடுதலைப் புலிகள் சில இடங்களில் எதிர்த்தாக்குதல் நடத்தாமல் பின்வாங்கி போகிறார்களே ஏன்...?
யுத்தத்தில் இழப்புக்களை குறைப்பதற்காக பின்வாங்குவதென்பது தந்திரோபாயம் இந்தப் போரால் என்ன சாதிக்க நினைக்கிறது சிறிலங்கா அரசு? முழுத்தமிழ் தேசிய இனத்தையும் பூண்டோடு அழிக்கவே சிறிலங்கா அரசு நினைக்கின்றது. ஈழத் தமிழர்கள் யாருமற்ற அனாதைகள் அல்லர் என்பதையும் ஈழத் தமிழர்களுக்கு இன்னல்கள் ஏற்பட்டால் தொப்புள்கொடி உறவுகளான ஏழு கோடி தமிழர்கள் தமிழகத்திலிருந்து குரல் கொடுப்பார்கள் என்ற செய்தியை சிறிலங்கா அரசிற்கும் உலகத்திற்கும் முக்கிய செய்தியாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது.
பிரபாகரனின் கனவு நகரமாக உருப்பெற்ற கிளிநொச்சி சிதைந்து தகர்க்கப்பட்டதில் உங்களுக்கு வருத்தம் இல்லையா...?
வருத்தம்தான். கட்டடங்கள் பாதிக்கப்பட்டனவே ஒழிய விடுதலைக்கான எமது கதவுகள் தகர்க்கப்படவில்லை. மீளவும் இழந்த பிரதேசங்களை கைப்பற்றி கட்டடங்களை உருவாக்குவோம். ஆனால் காவல்துறை வங்கி, நிதித்துறை என்பன இடம்பெயர்ந்த நிலையில் இயங்கி வருகிறது என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.
கிளிநொச்சியில் இருந்த மக்கள் எல்லாம் இப்போது எங்கே இருக்கிறார்கள்?
அவர்கள் அனைவரும் வன்னிப்பெரு நிலப்பரப்பில் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து உள்ளனர். எமக்கு சாதகமாக சூழல் ஏற்படும்பொழுது கிளிநொச்சியை மீளவும் கைப்பற்றி மக்களை குடியேற்றுவோம்.
சமீபத்தில் போரில் கொல்லப்பட்ட பெண் புலிகளின் உடைகளை உறித்தெறிந்து சிங்கள படையினர் நடத்திய பாலியல் அத்துமீறல்களை பற்றி...?
சிங்கள அரச படையினரின் மனிதாபிமானமற்ற இத்தகைய செயற்பாடானது சிங்கள அரசின் பேரினவாத சிந்தனைக் கோட்பாட்டின் பிரதிபலிப்பேயாகும். இவ்வாறான அநாகரிக செயற்பாடுகளை பார்த்தபின்னராவது அனைத்துலக சமூகம் எமது மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான இந்த உரிமைப் போராட்டத்தை அங்கீகரிப்பதற்கு முன்வரவேண்டும்.
புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலபரப்பில் தற்போதுள்ள நிலமை என்ன?
எம்முடைய மக்கள் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகளுக்கும் இடப்பெயர்வுகளுக்கும் முகம்கொடுத்த நிலையில் இழந்த பிரதேசங்களை மீளக்கைப்பற்ற வேண்டும் என்ற மனோநிலையில் வாழ்ந்து வருகின்றனர். இதற்காக சகல மக்களும் அளப்பரிய தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் நல்கி வருகின்றனர்.
புலிகளின் தலைமை மற்றும் புலிகளின் மனவுறுதி குறித்து வரும் செய்திகள் பற்றி...?
இந்த விடுதலைப் போராட்டம் ஒரு மக்கள் விடுதலைப் போராட்டமாக வளர்ச்சிபெற எம்முடைய மனவலிமையே காரணம். இந்த மனவலிமையே கடந்த முப்பது வருடங்களாக சிங்கள இராணுவத்துடன் வீராவேசத்துடன் நாங்கள் போரிடக் காரணம்.
புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் சிறிலங்கா இராணுவத்தின் பிடியில் போனது அவர்களுக்கு பலம் என்பதை ஒத்துக்கொள்கிறீர்களா?
சிறிலங்கா ஒரு அரசு. அதற்கு பல நாடுகள் இராணுவ பொருளாதார உதவிகளை நல்கி வருகின்றன. நாம் ஒரு விடுதலை இயக்கம். தமிழ் தேசிய இனத்தின் எண்ணிக்கை சிங்கள தேசிய இனத்தின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது சிறியதே. எம்முடைய மக்களின் பலத்துடனும் உலகத்தமிழ் இனத்தின் தார்மீக ஆதரவுடனும் இந்த விடுதலைப் போராட்டம் நடைபெற்று வருகின்றது. சமர்க்களங்களில் இடங்கள் பறிபோவதும் மீள நாம் கைப்பற்றுவதும் வழமை.
புலிகள் மீதான தடையை அகற்றி, விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும் என்கிறீர்கள். இது நடக்ககூடியதா?
உலகத் தமிழினம் ஒன்றுபட்டு எமது விடுதலைப் போராட்டத்திற்காக நல்கிவரும் ஆதரவு, எதிர்காலத்தில் இது சாத்தியம் என்பதை காட்டுகிறது.
புலிகளைவிட சிறிலங்கா அரசு மீது இந்தியாவுக்கு நேசம் அதிகமாக இருக்கிறதே...?
இது எமக்கு மிகவும் மனவேதனையை தருகின்றது. இந்தியாவின் உண்மையான நண்பர்கள் தமிழ்மக்கள் தான் என்பதனை இந்திய அரசு விளங்கிக் கொள்ளவேண்டும் என்ற உண்மையை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
இலங்கையோடு பிற நாடுகள் கைகோர்த்துக் கொண்டு போர் நடத்தி வருகிறது என்று சொல்லப்படுகிறதே?
இது முற்றிலும் உண்மை. அவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து கப்பல் கப்பலாக ஆயுதங்கள் வந்த வண்ணம் உள்ளன. இதை கொழும்பில் உள்ள ஊடகங்களே உறுதிப்படுத்துகின்றன.
இலங்கை பிரச்சினையில் இந்தியாவின் தலையீடு எந்த வடிவில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
சிறிலங்கா அரசுக்கு இராணுவ உதவிகளை நிறுத்தி எம்முடைய மக்களின் விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டுமென எதிர்பார்க்கிறோம்.
சிறிலங்கா அரசின் வானூர்தி குண்டு வீச்சுகள், ஏவுகணைத் தாக்குதல்கள் அதிகமாகி வருகிறதே... இதில் இருந்து மக்கள் எப்படி தங்களை தற்காத்து கொள்கிறார்கள்?
முப்பது வருடகாலமாக எம்முடைய மக்கள் வானூர்தி குண்டு வீச்சுக்களுக்கும் எறிகணை வீச்சுக்குக்களுக்கும் பாரிய இராணுவ நடவடிக்கைகளுக்கும் முகம்கொடுத்த வண்ணமே வாழ்ந்து வருகின்றனர். அரசின் கொடிய தாக்குதல்களுக்கு இலக்காகும் பொழுது தம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்பதில் மக்களுக்கு நிறைய அனுபவங்கள் உண்டு. போராட்டமே வாழ்வாக மாறிவிட்ட எம் மக்கள் சிறு குழந்தைகளிலிருந்து முதியோர் வரை தம்மை தற்காத்துக்கொள்வதில் தேர்ச்சிபெற்று வருகின்றனர். உலக அளவில் தடைசெய்யப்பட்ட கிளஸ்டர் குண்டுகளையே அரசு எம்மக்கள் மீதான தாக்குதல்களுக்கு பயன்படுத்தி வருகின்றது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
தமிழக மக்கள் அனுப்பிய நிவாரணப் பொருட்கள் நேர்மையான முறையில் விநியோகிக்கப்பட்டதா?
தமிழக மக்களால் அனுப்பப்பட்ட உணவுப்பொருட்களும் உடைகளும் எம்முடைய பிரதேசத்தில் செயற்பட்டுவரும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினூடாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன. முழுமையாக நேர்மையான முறையில் பொருட்களின் விநியோகம் இருக்கிறது. தொப்புள்கொடி உறவுகளான தமிழக மக்களின் இவ்வுதவி எமது மக்களின் மனங்களில் பசுமரத்தாணி போல பதிந்துள்ளது என்றார் .
0 comments:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.