இறுதிப் போர் யாருக்கு சாதகம்?

நன்றி : தினக்குரல்
முல்லைத்தீவில் இறுதிப்போரில் படையினர் ஈடுபட்டுள்ளனர். முல்லைத்தீவைச் சுற்றி சகல முனைகளிலும் குவிக்கப்பட்டுள்ள படையினர் ஆங்காங்கே பாரிய தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். எனினும் விடுதலைப் புலிகளின் கடும் பதில் தாக்குதல்களால் பின்னடைவையும் சந்திக்கின்றனர். தங்களது சகல வளங்களையும் திரட்டி முல்லைத்தீவை குறிவைத்துள்ள படையினருக்கு புலிகளின் பதில் நடவடிக்கைகள் குறித்தும் பலத்த சந்தேகங்கள் உள்ளன. இதுவரை காலமும் பின்வாங்கிய புலிகளின் பதில் நடவடிக்கைகள் எப்படியிருக்கும் என்பது குறித்தும் படையினர் தீவிர கவனம் செலுத்தியுள்ளனர்.

வன்னிப் போரில் படையினரின் கையே ஆரம்பம் முதல் ஓங்கியுள்ளது. வன்னியில் பெரும்பாலான பகுதிகளை அவர்கள் கைப்பற்றி விட்டனர். வவுனியா, மன்னார் மாவட்டங்களும் யாழ்.மாவட்டமும் தற்போது படையினரின் பூரண கட்டுப்பாட்டில் உள்ளது. கிளிநொச்சியின் பெரும் பகுதியையும் அவர்கள் கைப்பற்றியுள்ளதுடன் முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் கணிசமான அளவு பகுதிகளுக்குள்ளும் சென்றுள்ளனர். இதன் மூலம் முல்லைத்தீவையும் விரைவில் முழுமையாகக் கைப்பற்றிவிட முடியுமென்றும் கருதுகின்றனர். இதனால் முல்லைத்தீவில் படையினர் தங்கள் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர். முல்லைத்தீவைச் சுற்றி எட்டு முனைகளில் இந்தப் பாரிய படைநகர்வு நடைபெறுகிறது.

இந்தப் போரில் 50,000 படையினர் வரை ஈடுபட்டுள்ளதாக படைத்தரப்பு கூறுகின்ற போதும் வன்னியின் அனைத்துப் பகுதியிலும் அதிலும் குறைவான படையினரே நிலைகொண்டுள்ளதாக கூறப்படுகிறது. யாழ்.குடாவை படையினர் முழுமையாகக் கைப்பற்றியதன் மூலம், அங்கு நிலைகொண்டிருந்த ஆயிரக்கணக்கான படையினரில் கணிசமானோர் வன்னிப் போர் முனைக்கு வந்துள்ளனர். புலிகளைத் தற்போது முல்லைத்தீவுக்குள் மட்டும் முடக்கியுள்ளதால் படையினரின் முழுக்கவனமும் முல்லைத்தீவிலேயே மையங் கொண்டுள்ளது. அவர்களது ஆயுத வளங்களும் முல்லைத்தீவைச் சுற்றியே குவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவுக்குள் முடங்கிப் போயிருக்கும் புலிகளை முற்றாக அழித்து விட வேண்டுமென்பதற்காக முல்லைத்தீவைச் சுற்றி சகல முனைகளிலும் ஆட்லறிகள், பல்குழல் ரொக்கட்டுகள், கனரக மோட்டார்கள் நிறுத்தப்பட்டுள்ளன. கவசப் படையணியின் யுத்த டாங்கிகளும் முல்லைத்தீவை நோக்கி நகர்ந்து வருகின்றன.

கிளிநொச்சியை படையினர் கைப்பற்றி விடுதலைப் புலிகளை "9' வீதியின் கிழக்குப் புறத்தினுள் தள்ளியபோது புலிகள் 40 கிலோ மீற்றர் X 40 கிலோமீற்றர் பரப்பளவுக்குள் முடக்கப்பட்டனர். எனினும் அதன் பின்னரான போரின் மூலம் புலிகள் தற்போது 30X20 கிலோமீற்றர் பரப்புக்குள் முடங்கியுள்ளதாக படைத்தரப்பு தெரிவிக்கின்றது. புலிகளுடன் 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களும் இந்தச் சிறிய இடத்திற்குள் முடங்கியுள்ளதால் இந்தப் போரில் அப்பாவி மக்களின் இழப்பு தினமும் அதிகரித்து வருகிறது. கடந்த ஒருவாரத்தில் ஷெல் மற்றும் விமானத் தாக்குதல்களால் ஐம்பதிற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டும் 150 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துமுள்ளனர். எங்கு ஷெல் விழுந்தாலும் அங்கு பொது மக்களுக்கு இழப்புகள் ஏற்படுகின்றன. புலிகளின் பகுதி மிகவும் குறுகிவிட்டதால் ஒவ்வொரு விமானத் தாக்குதலிலும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

வன்னிக்குள் படையினர் பாரிய படைநகர்வை ஆரம்பித்து எப்படி படிப்படியாக நிலங்களைக் கைப்பற்றி புலிகளை பின்நகரச் செய்தார்களோ அப்படி புலிகளின் பின்நகர்வுகளின் போது மக்களும் பின்நகர்ந்தார்கள். இந்தப் பாரிய படைநகர்வின் போது புலிகளின் பகுதிகளிலிருந்து மக்களை தங்கள் பகுதிகளுக்குள் வரவழைக்க அரசும் படைத்தரப்பும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் அது பலனளிக்கவில்லை. தற்போது இறுதிப் போர் நடைபெற்று வரும் பகுதியில் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். இந்தப் போரில் தினமும் அவர்கள் பலத்த இழப்புகளைச் சந்தித்து வருகின்றனர். எனினும் மக்களின் இழப்புகள் குறித்து எந்தவொரு நாடும் சிறிதும் அலட்டிக் கொள்ளவில்லை. தினமும் இடம்பெறும் கடும் ஷெல் வீச்சாலும் விமானத் தாக்குதலாலும் பெருமளவானோர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் வருகையில் அங்கிருந்து ஒருவாறு வெளியேறி வரும் மக்களின் தொகையும் ஓரளவு அதிகரித்தே வருகிறது. இதனால் மக்களை அங்கிருந்து மேலும் மேலும் வெளியேற்றுவதற்காக அங்கு தாக்குதல்களும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

வன்னியில் ஒவ்வொரு படைநகர்வின் போதும் பெருமளவு பிரதேசங்களைக் கைப்பற்றிய படையினர் அவற்றை தக்கவைப்பதற்காக பெருமளவு படையினரை ஒவ்வொரு பகுதியிலும் நிறுத்த வேண்டியிருந்தது. இவ்வாறு படையினர் கைப்பற்றிய பகுதிகளைத் தக்கவைப்பதற்காக அதிகளவானோரை ஈடுபடுத்தியுள்ளதால் தொடர்ந்தும் சில படையணிகளே முன்னேற்ற முயற்சியில் ஈடுபடுவதுடன் போரில் பலத்த இழப்புகளையும் சந்தித்து வருகின்றன. முன்னைய காலங்களைப் போலன்றி தற்போது வடக்கிலும் கிழக்கிலும் மிகப்பெரும்பாலான பகுதிகள் படையினர் வசமுள்ளதால் அவற்றைத் தக்கவைப்பதற்காக அனைத்துப் பகுதிகளிலும் நிறுத்தப்பட்டுள்ள படையினரின் எண்ணிக்கை மிக மிக அதிகம். அப்படியிருக்கையில் முல்லைத்தீவுக்கான இறுதிப் போரில் ஐம்பதாயிரம் படையினரை எப்படி அவர்களால் ஈடுபடுத்த முடிகிறது என்ற கேள்வியும் எழுகிறது. இதனால் இறுதிப் போரில் ஈடுபடும் படையினரின் எண்ணிக்கை குறித்து மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியிடப்படுகின்றன, அல்லது புலிகள் வசமிருந்து கைப்பற்றிய பகுதிகளில் மிக மிகக் குறைவானவர்களை நிறுத்திவிட்டு பெரும்பாலானோரை யுத்த முனையில் நிறுத்தியுள்ளார்களோ என்ற கேள்வியும் எழுகிறது.

படையினர் கைப்பற்றிய பகுதிகளைத் தக்க வைப்பதற்காக நிறுத்தப்பட்டுள்ள படையினரின் எண்ணிக்கை மிகக் குறைவென்றால், முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்டுள்ள படையினரின் பின்புறப் பகுதி பலவீனமாகவும் வெற்றுக் கோதாகவுமேயிருக்கும். இது பாரிய சமரின் போது புலிகள் முறியடிப்புத் தாக்குதலை அல்லது ஊடறுப்புத் தாக்குதலை மேற்கொண்டு முன்னேறினால் படையினருக்கு பெரும் பாதகமாகிவிடும். கோதாக இருக்கும் பகுதிகளுக்குள் புலிகளின் ஊடுருவலும் அதிகரித்து விடும். இது படையினரை புலிகள் பின்புறத்தால் தாக்க வழிசமைத்து விடுமென்பதுடன் படையினரின் கனரக ஆயுதங்களுக்கும் ஆபத்தாகிவிடும். இதனால் கடைசிப் போரில் புலிகளின் பாரிய ஊடுருவல்களைத் தடுக்க வேண்டிய கட்டாய தேவை படையினருக்கு ஏற்பட்டுள்ளது. அதேநேரம் முல்லைத்தீவுக்குள் மிகக் குறைந்தளவு புலிகளே முடங்கிப் போயிருப்பதாக படையினர் கணக்குப் போடுவதால் புலிகளின் முறியடிப்புத் தாக்குதல் அல்லது ஊடறுப்புத் தாக்குதல் பாரியளவில் இருக்காதென படைத்தரப்பு கருதுகிறது. எனினும் புலிகளின் நடவடிக்கை குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு இராணுவத் தளபதி போர் முனைத் தளபதிகளை எச்சரித்துள்ளார்.

வவுனியாவுக்கு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை விஜயம் செய்த இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா வன்னிக் கட்டளைத் தலைமையகத்தில் போர் முனைத் தளபதிகளைச் சந்தித்து இறுதிப் போருக்குரிய பல்வேறு அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளார். படையினரால் கைப்பற்றப்பட்ட பகுதிகளுக்குள் புலிகளின் ஊடுருவல்களைத் தடுக்க, முடிந்தவரை பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறு அவர் கூறியுள்ளார். மோதல்கள் உச்சக் கட்டத்தை அடையும் போது புலிகள் ஊடறுப்புத் தாக்குதல்களை நடத்துவதன் மூலமும் ஊடுருவல்கள் மூலமும் படையினர் கைப்பற்றிய பகுதிகளுக்குள் நுழைந்து விட்டால் மோசமான விளைவுகள் ஏற்பட்டுவிடுமென்பதே அவரது இந்த எச்சரிக்கைக்கு காரணம். இதனால் இறுதிச் சமரின் போது புலிகளின் பகுதிகளை நோக்கி படையினர் முன்னேறும் அதேநேரம் அடர்ந்த காடுகளினூடாக புலிகள், படையினர் வசமுள்ள பகுதிகளுக்குள் ஊடுருவுவதையும் தடுக்க வேண்டிய கட்டாய தேவையும் ஏற்பட்டுள்ளது.

இதேநேரம், அரசும் படைத்தரப்பும் பிரசாரப் போரையும் தீவிரப்படுத்தியுள்ளன. தமிழ் மக்களை, குறிப்பாக விடுதலைப் புலிகளுக்கு பல்வேறு வழிகளிலும் உதவும் புலம் பெயர்வாழ் தமிழ் மக்களின் மனோபலத்தை தகர்க்கும் நோக்கில் இந்தப் பிரசாரங்கள் தீவிரமடைந்துள்ளன. புலிகளின் கதை முடிந்து விட்டது. புலிகள், போரிட்டு மடிவதா அல்லது படையினரிடம் சரணடைவதா அல்லது தற்கொலை செய்வதா எனத் தெரியாது தடுமாறி வருவதாக அந்தப் பிரசாரங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. புலிகளின் தலைவர் பற்றியும் முக்கிய தளபதிகள் பற்றியும் தினமும் புதுப்புதுக் கதைகளும் பரப்பப்பட்டு வருகின்றன. ஒருபுறம் கடும் போரைத் தொடுத்துள்ள அரசு மறுபுறம் பிரசாரப் போரையும் தீவிரப்படுத்தியுள்ளது. தற்போதைய நிலையில் இறுதிப்போர் தங்களுக்கு மிகவும் சாதகமாயிருப்பதாகக் கூறும் படையினரும், புலிகளால் இனித் தப்பிக்கவோ அல்லது தாக்குதல் நடத்தவோ முடியாதென்றே கூறிவருகின்றனர். புலிகள் வசமுள்ள பகுதி மிகவும் குறுகிவிட்டதாலும் அவர்கள் வசமிருக்கும் போராளிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டதாலும் இறுதிப் போரில் படையினர் சுலபமாக வெற்றிபெறுவரென்றே படையினரும் கூறிவருகின்றனர். தினமும் படைநகர்வுகள் வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லப்படுவதுடன் இதன் மூலம் புலிகளின் பகுதிகள் மேலும் மேலும் விரைவாகச் சுருங்கி வருவதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த நிலையில் புலிகளால் இனியும் தொடர்ந்து பின்நகர முடியாது. இனிமேல் அவர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு பின் நகர்வுகளும் மிக மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும். கிளிநொச்சியை இழந்த பின்னராவது அவர்கள் தற்காப்புச் சமரை விடுத்து தாக்குதல் சமரில் இறங்குவரென அனைவரும் எதிர்பார்த்தனர். மிகக் குறுகலான பகுதிக்குள்ளிருந்து எவ்வாறு பாரிய தாக்குதல் சமரை ஆரம்பிக்க முடியுமென்ற கேள்விகளும் எழுப்பப்பட்டன. குறுகிய பிரதேசத்திற்குள்ளிருந்து மேற்கொள்ளும் தாக்குதல் சமர் தோல்வியடைந்தால் அது நிலைமையை மோசமடையச் செய்துவிடலாமென்ற கருத்துக்களும் நிலவுகின்றன. புலிகளின் தொடர்ச்சியான பின் நகர்வுகள் குறித்து படையினர் மத்தியிலும் பலத்த சந்தேகம் நிலவுகிறது. கடைசி நேரத்தில் புலிகள் தங்கள் ஆட்பலம் மற்றும் ஆயுதவளங்களை ஒருமித்து திரட்டி மிகப்பெரும் தாக்குதலை நடத்தலாமென்ற சந்தேகமிருப்பதால் முல்லைத்தீவு நோக்கிய முன்நகர்வில் அவர்கள் சற்று கவனம் செலுத்துகின்றனர். முழு அளவில் போர் தீவிரமடையாத போதிலும் படையினர் தங்கள் நெருக்குதலைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். முல்லைத்தீவுக்குள்ளிருக்கும் மக்களை முடிந்தவரை வெளியேற்றவும் முயன்று வருகின்றனர்.

இதேநேரம், இறுதிப் போர் குறித்து புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் புலம்பெயர் வாழ் தமிழ் மக்களுக்கு சில வேண்டுகோள்களை விடுத்துள்ளார். எதிரிகூறுவது போல் விடுலைப் புலிகள் பலவீனமடையவில்லை. தமிழீழப் போராட்டத்திற்கு புலம்பெயர் வாழ் மக்கள் தொடர்ந்தும் பூரண ஆதரவை வழங்க வேண்டுமென அவர் கேட்டுள்ளார். புலிகளின் தலைவரும் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசனும் அருகருகே இருந்து உரையாற்றும் ஒளிப்பதிவு நாடாக்கள் புலம்பெயர் வாழ் தமிழ் மக்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில், "விடுதலைப் புலிகள் இதுவரை தற்காப்புச் சமரில் மட்டுமே ஈடுபட்டு வந்தனர். இந்த தற்காப்புச் சமருக்காகவே இதுவரை புலிகள் பின்நகர்வுகளை மேற்கொண்டு வந்ததுடன் தங்கள் வசமிருந்த பகுதிகளையும் இழக்க வேண்டியிருந்தது. பெருமளவில் போராளிகள் கொல்லப்படுவதைத் தடுப்பதற்காகவும் போராளிகளின் எண்ணிக்கையையும் ஆயுத வளங்களையும் தொடர்ந்தும் அதிக எண்ணிக்கையில் பேணிப் பாதுகாப்பதற்காகவும் இவ்வாறான தந்திரங்களை பயன்படுத்த வேண்டியிருந்தது. தற்போது தற்காப்புச் சமரை நிறுத்தி தாக்குதல் சமரை ஆரம்பிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகிவிட்டன. தங்களது நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பமாகுமென்றும் தாங்கள் தொடர்ந்தும் விடுதலை இராணுவமாகவே செயற்படுவோமென்றும் விடுதலைப் புலிகள் கெரில்லா அமைப்பாக மீண்டும் மாற்றப்படாதெனவும் கூறியுள்ளதுடன் புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் முழு ஆதரவையும் கோரியுள்ளனர்.

புலிகளின் தலைவரதும் அரசியல் துறைப் பொறுப்பாளரதும் இந்த உரைகளை அரசும் படைத்தரப்பும் நன்கு அறிந்திருக்கும். அதற்கேற்ப அவர்களும் தங்கள் நடவடிக்கைகளை அமைத்திருப்பர்.புலிகள் தற்போது வடமராட்சி கிழக்கின் சுண்டிக்குளம் முதல் தென்மேற்கே பரந்தன்-முல்லைத்தீவு வீதியை (35) முரசுமோட்டைப் பகுதியில் ஊடறுத்து இரணைமடுக்குளம் வரை பாரிய பாதுகாப்பு அரண்களை உருவாக்கியுள்ளதாக படைத்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. வன்னியில் அனைத்துப் பகுதிகளிலும், யாழ்.குடாநாட்டிலிருந்த தங்கள் முழு ஆள்பலத்தையும் ஆயுத வளத்தையும் புலிகள் முல்லைத்தீவின் அனைத்துப் பகுதிகளிலும் குவித்துள்ளனர். இராணுவத் தளபதி கூறுவது போல் புலிகள் வசம் 2000 பேர் வரைதான் இருக்கின்றார்களா என்பது தெரியாது. ஆனால், அவர்களது எண்ணிக்கை அவர் கூறியதை விட பல மடங்கென சுயாதீனத் தகவல்கள் கூறுகின்றன. குடாநாட்டை புலிகள் முழுமையாக இழந்ததன் மூலம் அவர்கள் வசமிருந்த கடலோரப் பிரதேசமும் மிகவும் குறுகிவிட்டது. முன்னர் முல்லைத்தீவு முதல் வடமராட்சி கிழக்கு வரை சுமார் 40 கிலோ மீற்றர் கரையோரப் பகுதி அவர்களது கட்டுப்பாட்டிலிருந்தது. ஆனால், தற்போது வடமராட்சி கிழக்கை முற்றாக இழந்து விட்டதால் சுமார் 20 கிலோ மீற்றர் கடலோரப் பகுதியே அவர்கள் வசமுள்ளது. இந்தப் பகுதியை கடற்படையினர் 24 மணிநேரமும் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

முல்லைத்தீவுக்கான போரின் போது படையினருக்கான விநியோகங்களை இலகுவாக மேற்கொள்ளக் கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. "9' வீதி, ".34' வீதி (மாங்குளம்-முல்லைத்தீவு வீதி), பரந்தன-முல்லைத்தீவு வீதியிலும் (35) படையினர் தர்மபுரம் வரை சென்றுள்ளதால் அவர்களுக்கான விநியோகப் பாதைகள் மிக நன்றாகவே உள்ளன. வடக்கே மாரி மழையும் முடிந்து விட்டதால் வன்னியில் கனரக ஆயுதங்கள் சகிதம் புலிகளின் பகுதிகளுக்குள் மேலும் முன்னேறுவதற்கு படையினர் தொடர்ந்தும் முயற்சித்து வருகின்றனர். புலிகளும் மிகக் கடுமையான பதில் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இந்தச் சமர்களில் புலிகள் பலத்த இழப்புகளைச் சந்தித்து வருவதாக படைத்தரப்பு கூறுகின்றபோதும் படையினரும் கணிசமான இழப்புகளைச் சந்தித்தே வருகின்றனர். தற்போதைய நிலையில் முல்லைத்தீவைச் சுற்றி சகல முனைகளிலும் கடும் சண்டை நடைபெற்று வருகிறது. முல்லைத்தீவு நகரைக் கைப்பற்றி முல்லைத்தீவு கடலோரத்தை கைப்பற்றிவிட படையினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். விடுதலைப் புலிகள் இந்த முனையில் கடும் பதில் தாக்குதலை நடத்தி வருவதால் படையினர் இங்கு நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளனர்.

முல்லைத்தீவு மீதான இறுதிப்போருக்கு இந்தியாவின் ஆசி கிடைத்தது இலங்கை அரசுக்கு மிகவும் வாய்ப்பாகிப் போய்விட்டது. ஒரு புறம் இனவாதிகள் இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை தொடர்ந்தும் கூறிவந்தாலும் இந்தியா தமிழர்களோடில்லை என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். இந்தியாவின் நிலைப்பாட்டை வரவேற்றுக் கொண்டு இந்த யுத்தத்தை செய்வதன் மூலம் இந்தியாவுக்கு சங்கடத்தை கொடுக்கக் கூடாதென்பதால் இந்தியாவுக்கெதிரான கருத்தைக் கூறி இந்தியாவை இலங்கை எப்போதுமே விரோதியைப் பார்ப்பதுபோல் பார்க்கிறதென்ற உணர்வை ஏற்படுத்திக் கொண்டு அவர்களிடமிருந்து இராணுவ உதவியையும் ஆதரவையும் பெறுவதில் இனவாதிகள் வெற்றி பெற்றுவிட்டார்களென்றே கூற வேண்டும். ஏழுகோடித் தமிழர்களை விட இந்தியா இலங்கை அரசுக்கு ஆதரவு வழங்கவேண்டுமென்பதில் மிகத் தீவிரமாகவே செயற்பட்டு வந்தது. இந்தப் போரில் புலிகளை இலங்கைப் படையினர் தோற்கடித்து விட்டால் இலங்கைத் தமிழருக்கான குரலாக தான் செயற்படலாமெனக் கருதியே இந்தியா இலங்கைப் படையினருக்கு உதவிகளை வழங்கியதென்றால் அதன் எண்ணம் ஒருபோதும் ஈடேறமாட்டாதென்பது உண்மை.

விடுதலைப் புலிகள் பலமாயிருக்கும்போதே இலங்கையை பணியவைக்க முடியவில்லையென்றால் அதன் பின் எப்படி இந்தியாவால் இலங்கையை பணிய வைக்க முடியும். எதிரி யார், நண்பன் யார் எனத் தெரியாது இந்தியா எடுத்த முடிவுகள் இன்று தமிழீழத்தையல்ல இந்தியாவில் தமிழ் நாட்டையே பிரிந்து செல்லும் போராட்டத்திற்குள் தள்ளிவிட்டு வருகிறதென்றால் இந்தியாவின் துரோகம் ஈழத் தமிழருக்கு மட்டுமல்ல, இந்தியத் தமிழருக்கும் எதிரானதென்பது தற்போது தெளிவாகிவிட்டது.

விதுரன்

0 comments:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.