முல்லைத்தீவுக்கான இறுதிப் போர்?

தகவல் : நன்றி தினக்குரல்

முல்லைத்தீவுக்கான இறுதிப் போருக்கு படையினர் தயாராகின்றனர். கிளிநொச்சியின் வீழ்ச்சியைத் தொடர்ந்து யாழ்.குடாநாட்டில் விடுதலைப் புலிகள் வசமிருந்த பகுதிகளும் படையினர் வசமாகிவிட்டதால் தற்போது படையினரின் கவனம் முல்லைத்தீவை நோக்கி திரும்பியுள்ளது. ஈழப் போரின் இறுதிப்போராக இது இருக்குமெனப் படையினர் கருதுவதால் இந்தப் பிரதேசத்தையும் கைப்பற்றிவிட அவர்கள் தங்கள் முழுப் பலத்தையும் இங்கு பிரயோகிக்க முயல்வர். இதற்கான சகல ஏற்பாடுகளையும் அவர்கள் துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர். அடுத்து வரும் நாட்களில் இந்தப் போர் முழுஅளவில் தொடங்கக் கூடும்.

கிழக்கில் திருகோணமலையின் மாவிலாறில் படையினர் ஆரம்பித்த போர் கிழக்கையும் கடந்து வடக்கிலும் பரவி இன்று கடைசிக் கட்டத்திற்கு வந்துள்ளது. கிழக்கின் புவியியல் நிலைமைக்கேற்ப பின்நகர்ந்த புலிகள் வடக்கிலும் பின்நகர்வுகளை மேற்கொண்டனர். படையினருக்கு ஆளணிப் பற்றாக்குறை அதிகளவில் இருந்தபோதும் புலிகளின் பின் நகர்வுகளையடுத்து படையினரும் தங்கள் முன்நகர்வுகளை துரிதப்படுத்தினர். கிழக்கிலும் வடக்கிலும் அகலக்கால் வைத்தனர். கடந்த இரண்டரை வருடங்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக அவர்கள் பெரும் போரில் ஈடுபட்டு வருகின்றனர். பாரிய இழப்புகளையும் சந்தித்துள்ளனர். கொல்லப்பட்ட மற்றும் படுகாயமடைந்த படையினரால் ஆயிரக்கணக்கானோர் களமுனைகளிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். எனினும் எந்தவொரு கட்டத்திலும் அரசு போரை நிறுத்த முன்வரவில்லை.

போர்தான் இந்த அரசின் அரசியலாயிருப்பதால் போரின் வெற்றியே இந்த அரசின் வெற்றிகளையும் தீர்மானிப்பதாயிருக்கிறது. மிக மோசமான பொருளாதாரக் கொள்கைகளால் நாடு பெரும்

நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டபோதும் போரில் கிடைக்கும் வெற்றியின் மூலம் அவற்றை மூடி மறைப்பதில் அரசு அக்கறை காட்டியது. போர்முனை வெற்றிகள், அரசுக்கெதிரான உணர்வுகளையெல்லாம் மழுங்கடித்ததுடன் இந்த வெற்றிகள் சிங்கள இனவாதிகளை தட்டியெழுப்பியது. இனவாதிகளின் உணர்வுகளுக்கு இந்த அரசும் தீனிபோடவே யுத்தத்தால் நாடு சின்னாபின்னமாகி சீரழிந்தாலும் வாழ்க்கைச் செலவு ரொக்கட் வேகத்தில் சென்றாலும் தமிழர்களுக்கெதிரான போரில் வெற்றி பெற்று விட வேண்டுமென்ற உணர்வை இனவாதிகளிடம் வளர்த்தது. அதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் சிறப்பாக தலைமை தாங்க தெற்கில் எதுவித தயக்கமுமின்றி யுத்தத்தை ஆதரிப்போரின் தொகையும் அதிகரித்தது. இதனால் வன்னிப் போரில் பேரிழப்புகள் ஏற்பட்ட போதும் அதற்கு பெரும் எதிர்ப்புகள் கிளம்பவில்லை. யுத்தத்தின் பேரால் ஊடக சுதந்திரம் அடக்குமுறைக்குள் வந்துவிட யுத்த முனையில் என்ன நடக்கிறதென்று எவருக்குமே தெரியவில்லை. வெற்றிச் செய்திகள் மட்டுமே வெளியாகின்றன.

வன்னியில் ஒவ்வொரு பகுதியையும் படையினர் கைப்பற்றியபோது அடுத்த பகுதிக்கான நகர்வில் அரசு ஆர்வம் காட்டியது. இந்தியாவின் முழுமையான ஆசி இலங்கை அரசுக்கு கிடைத்தாலும் சீனா, பாகிஸ்தான், ஈரானுடன் போட்டி போட்டு இந்தியாவும் இலங்கை படையினருக்கு இராணுவ உதவிகளை வழங்கியதாலும் இலங்கை அரசுக்கு இந்த யுத்தத்தை முன்னெடுத்துச் செல்வது இலகுவாகிவிட்டது. ஏழு கோடி தமிழர்களதும் உணர்வை இந்திய அரசு உதாசீனம் செய்ய அதற்கு தமிழக முதல்வர் கருணாநிதியின் ஆதரவும் கிடைத்தது. மத்திய அரசுக்கு எந்த நெருக்கடியும் கொடுக்கக் கூடாதென கருணாநிதி தீர்மானித்தபோது அதனைச் சாதகமாக்கி இந்திய அரசும் ஈழத் தமிழருக்கெதிரான போருக்காக இலங்கை அரசுக்கு உதவியது. இதன் மூலம் ஈழத் தமிழருக்கெதிரான போருக்கு தமிழக அரசும் மறைமுகமாக உதவுவதை கருணாநிதி இதுவரை புரிந்து கொள்ளவில்லை. இதனால்தான், விடுதலைப் புலிகளுக்கெதிரான போரில் இலங்கைப் படையினர் வெற்றிகொண்ட பின்னர் இலங்கை தமிழர் பிரச்சினையில் தலையிடலாமென இந்தியா இலவு காத்திருக்கிறது.

இந்த நிலையில்தான் வன்னியில் இறுதிப் போர் தொடங்கப் போகிறது. வன்னியின் பெரும்பாலான பகுதிகளிலிருந்து பின்வாங்கிய விடுதலைப் புலிகள் இன்று முல்லைத்தீவுக்குள் மட்டும் முடக்கப்பட்டுள்ளனர். பரந்தனை புலிகள் கைவிடத் தீர்மானித்தபோது யுத்தம் முல்லைத்தீவுக்கு மட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. பரந்தன் சந்தியிலிருந்து விலகிய புலிகளால் அங்கிருந்து முகமாலை வரை தொடர்ந்து நிலைகொள்ள முடியவில்லை. இதனால் பரந்தன் முதல் முகமாலை வரையான பலமைல் தூரத்தை எந்தவித யுத்தமுமின்றி படையினரிடம் இழக்க வேண்டிய சூழ்நிலை புலிகளுக்கு ஏற்பட்டது. பூநகரியை புலிகள் கைவிட்டபோது பரந்தனையும் விடவேண்டிய சூழ்நிலை ஏற்படுமென்பது புலிகளுக்குத் தெரியும். பரந்தனையும் கைவிடும்போதும், அதற்கப்பால் ஆனையிறவு, பளை, கிளாலி, முகமாலை மற்றும் வடமராட்சி கிழக்கென குடாநாட்டின் அனைத்துப் பகுதிகளும் எதுவித மோதலுமின்றி படையினரிடம் வீழுமென்பதும் புலிகளுக்குத் தெரியும். ஈழப்போர் 4 தொடங்கியபின் இதுவரை கிளாலி, முகமாலை மற்றும் நாகர்கோவில் பகுதிகளில் படையினர் சந்தித்த இழப்புகள் கொஞ்ச நஞ்சமல்ல. ஒவ்வொரு சமரிலும் நூற்றுக்கணக்கானார் கொல்லப்பட்டே, பல நூற்றுக்கணக்கானோர்கள் படுகாயமடைந்தே ஆயிரக்கணக்கானவர்கள் களமுனைகளிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட பகுதியை, எதுவித மோதல்களுமின்றி புலிகள் கைவிட வேண்டிய நிலைமையேற்பட்டது.
பரந்தனை புலிகள் கைவிட்டதால் குடாநாட்டில் அவர்கள் வசமிருந்த அனைத்துப் பகுதிகளும் ஒருவாரத்தில் படையினர் வசமாகிவிட்டது. அத்துடன் யுத்த முனையும் முல்லைத்தீவுப் பக்கமாகத் திரும்பிவிட்டது. குடாநாட்டில் தங்கள் வசமிருந்த பகுதிகளைப் புலிகள் இழந்தபோது குடாநாட்டுக்கான தரைவழிப் பாதையையும் படையினர் திறக்கும் வாய்ப்பு கிட்டியது. பூநகரியை படையினர் கைப்பற்றியிருந்தபோதும், பரந்தன் முதல் கிளாலி வரையான பகுதி புலிகள் வசமிருந்ததால் படையினரால் பூநகரி ஊடாக சங்குப்பிட்டி கேரதீவு பாதையைத் திறக்க முடியவில்லை. அதேநேரம் பரந்தனைக் கைப்பற்றிவிட்டால் பின்னர் குடாநாட்டின் ஏனைய பகுதிகளும் தங்கள் வசமாகிவிடுமென்பதை உணர்ந்திருந்த படையினர் பூநகரி ஊடான பாதையைத் திறப்பதில் அக்கறை காட்டவில்லை. தற்போது "ஏ9' வீதி முழுமையாகப் படையினரின் கட்டுப்பாட்டினுள் வந்து விட்டதால் இனி பூநகரி பாதை பற்றி படையினர் சிந்திக்கத் தேவையில்லை. அத்துடன், "ஏ9' வீதி திறக்கப்பட்டதன் மூலம் குடாநாட்டில் நிலைகொண்டிருந்த 53 ஆவது மற்றும் 55 ஆவது படையணிகளும் வன்னிக்குள் வந்துள்ளதால் படையினரின் ஆட்பலம் அதிகரித்துள்ளது.

வன்னிப் போரில் படையினருக்கு ஆட்பற்றாக்குறை பெருமளவில் இருந்தது. எனினும் குடாநாட்டில் நிலைகொண்டிருந்த படையினரை வன்னிக்கு கொண்டு வர முடியவில்லை. வன்னிக்குள் போரைத் தீவிரப்படுத்தும்போது புலிகள் குடாநாட்டில் பாரிய தாக்குதலைத் தொடுக்கலாமென்ற அச்சத்தால் குடாநாட்டில் பல்லாயிரக்கணக்கான படையினர் நிறுத்தப்பட்டிருந்தனர். ஆனால் தற்போது குடாநாட்டிலிருந்து புலிகள் முற்றாக விலகிவிட்டதால் அங்கிருந்தே ஆயிரக்கணக்கான படையினர் முல்லைத்தீவுக்கான இறுதிச் சமரில் பங்கேற்கப் போகின்றனர். இது படையினருக்கு நன்கு சாதகமாயுள்ளது. தற்போது புலிகள் ஆனையிறவுக்கு தென்கிழக்கே முள்ளியான், செம்பியன்பற்று, கட்டைக்காடு மற்றும் சுண்டிக்குளம் பகுதிகளில் நிலைகொண்டுள்ளனர். அவர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளில் படையினர் உடனடியாக இறங்க முயல்வர். இந்தப் பகுதிகளிலிருந்தும் புலிகளை அப்புறப்படுத்திவிட்டால் புலிகளை முல்லைத்தீவுக்குள் முற்றாக முடக்கிவிட முடியுமென படையினர் கருதுகின்றனர்.

இதன் மூலம் புலிகளை, பரந்தன்-முல்லைத்தீவு வீதிக்கும் (ஏ35) மாங்குளம்-முல்லைத்தீவு வீதிக்கும் (ஏ34) இடையில் முடக்கிவிட முடியும். ஏற்கனவே "ஏ9' வீதியும் படையினர் வசமாகி விட்டதால் சுமார் 40 கிலாமீற்றர் நீளமும் சுமார் 40 கிலோமீற்றர் அகலமும் கொண்டபெட்டி போன்ற பகுதிக்குள் புலிகள் முடக்கப்பட்டு விடுவரென படையினர் கருதுகின்றனர். இந்தப் பகுதிக்குள்ளேயே மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களும் முடக்கப்பட்டுள்ளனர். இதனால் முல்லைத்தீவுக்கான இறுதிப் போரை படையினர் ஆரம்பிக்கும்போது அப்பாவிப் பொதுமக்கள் பேரிழப்புகளைச் சந்திக்கும் நிலையேற்படலாம். தினமும் அங்கு ஏற்படும் அழிவுகளைப் பார்க்கும்போது இறுதிப் போரில் பொது மக்களின் இழப்புகள் மிக உச்சமாகிவிடுமெனவும் அஞ்சப்படுகிறது.

முல்லைத்தீவுக்கான நகர்வில் எட்டுப் படையணிகளும் நூறு படைப்பிரிவுகளும் களமிறங்கவுள்ளதாக படைத்தரப்பு கூறுகின்றது. குடாநாட்டிலிருந்து ஆனையிற வூடாக பரந்தனுக்கு வந்துள்ள 53 ஆவது, 55 ஆவது படையணியும், பரந்தனிலிருந்து ஆனையிறவு நோக்கி முன்னேறிய 57 ஆவது படையணியும், பரந்தன் முல்லைத்தீவு வீதியில் (ஏ35) முன்னேறி முரசுமோட்டைக்குச் சென்றுள்ள 58 ஆவது படையணியும் "ஏ9' வீதிக்கு கிழக்கே அம்பகாமம் பகுதியில் முன்னேறும் விஷேட படையணி 3, மாங்குளம் முல்லைத்தீவு வீதியில் (ஏ34) ஒலுமடு பகுதியிலிருந்து முன்னேறும் விஷேட படையணி 2, அதேவீதியில் ஒட்டுசுட்டான் பகுதியிலிருந்து முன்னேறும் விஷேட படையணி 4, அந்த வீதியில் முள்ளியவளைப் பகுதியில் முன்னேறும் 59 ஆவது படையணியுமென எட்டுப் படையணிகளும் அவை ஒவ்வொன்றினதும் உப பிரிவுகளென சுமார் நூறு பிரிவுகளைச் சேர்ந்த 50,000 படையினர் இந்தக் கடைசிப் போரில் ஈடுபடுத்தப்படுவரென இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சகா தெரிவித்துள்ளார். இவர்களுக்கு உதவியாக ஆட்லறிகள், பல்குழல் ரொக்கட்டுகள், மோட்டார்கள், கவசப் படையணிகள், விமானப்படையினர் மற்றும் முல்லைத்தீவு கடற்பரப்பிலிருந்து கடற்படை படகுகளென ஒரே நேரத்தில் முப்படைகளதும் சகல வளங்களையும் பயன்படுத்த படையினர் திட்டமிட்டுள்ளனர்.

இராணுவத் தளபதியின் கணக்குப்படி 2000க்கும் குறைவான விடுதலைப் புலிகள் தற்போது உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த யுத்தம் ஆரம்பித்த நாள் முதல் புலிகள் தொடர்பாக படைத்தளபதிகளும் அரசும் கூறிய கணக்குகள் ஒவ்வொரு முறையும் தவறானவை என்பதை பின்னர் அவர்கள் கூறிவந்த கணக்குகள தெளிவுபடுத்தியுள்ளன. வன்னிப் போரில் கொல்லப்படும் புலிகள் தொடர்பாக அவர்கள் தெரிவித்த கணக்குகள், வன்னிப் போரில் பங்கேற்றிருப்பதாக படையினரும் அரசும் கூறிய புலிகளின் எண்ணிக்கையை விட பல மடங்காகிவிடவே, பின்னர் வன்னிப் போரில் ஏற்படும் இழப்புகள் குறித்து கணக்கை வெளியிடுவதைப் படைத்தரப்பு நிறுத்திவிட்டது. இதனால் இறுதிப் போரில் பங்கேற்கும் விடுதலைப் புலிகள் குறித்த சரியான எண்ணிக்கை படைத்தரப்புக்கு தெரியாது. எனினும் இறுதிப் போரில் பங்கேற்கப் போகும் புலிகளின் எண்ணிக்கை படையினர் தெரிவித்த எண்ணிக்கையின் பல மடங்காயிருக்குமென எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

விடுதலைப் புலிகள் மீதான தடை புலிகளுக்கு எதுவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால் புலிகளைத் தடைசெய்த அரசு அது தொடர்பாக விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ள விதிகள் ஊடகவியலாளர்களுக்கு பலத்த கட்டுப்பாடுகளைப் போட்டுள்ளன. புலிகளுக்கு சார்பாக கருத்துத் தெரிவிப்பதும் பிரசாரம் செய்வதும் தண்டனைக்குரிய குற்றமென அதில் வலியுறுத்தப்பட்டுள்ளதால் இனிவரும் போரில் புலிகள் என்ன செய்வார்களெனக் கூற முற்படுவது அவர்களுக்கு சார்பான பிரசாரமாகக் கருதப்பட்டு அதற்கெதிராக அரசால் நடவடிக்கை எடுக்க முடியுமென்பதால் இறுதிப் போரில் புலிகளின் நடவடிக்கைகள் எப்படியிருக்குமென்பதை ஊடகவியலாளர்களால் கூறமுடியாததொரு நிலையேற்பட்டுள்ளது. எனினும், புலிகளின் ஆட்பலம் அனைத்தும் ஆயுத வளங்கள் அனைத்தும் தற்போது முல்லைத்தீவில் குவிக்கப்பட்டுள்ளதை அனைவரும் அறிவர். ஆரம்பம் முதலே இந்தப் போரில் அவர்கள் தங்கள் ஆட்பலம் மற்றும் ஆயுத வளங்களுக்கேற்பவே பல்வேறு பகுதிகளிலிருந்தும் தந்திரமாகப் பின்நகர்ந்து தங்களது ஆட்பலத்தையும் ஆயுத வளத்தையும் அழியவிடாது தேவைக்கேற்ப தேவையான இடங்களில் மட்டும் கடும் பதில் தாக்குதலை நடத்தி படையினருக்கு இழப்புகளை ஏற்படுத்தி வந்தனர். புலிகளின் பின் நகர்வுகள் மூலம் படையினர் அகலக்கால் வைத்து வன்னி முழுவதும் பரவி நிற்கின்றனர். இதனால் அவர்களும் பெரும் ஆளணிப் பற்றாக்குறையை எதிர்நோக்குகின்றனர்.

வன்னிப் போரில், போரிடும் ஆற்றலுள்ள படையணிகள் பேரிழப்புகளைச் சந்தித்துள்ளன. போரிடும் ஆற்றல்மிக்க பெருமளவு படையினர் கொல்லப்பட்டும் படுகாயமடைந்தும் களமுனைகளிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். அண்மைக் கால போர்களில் கொல்லப்பட்ட படையினரில் பலரது சடலங்களை புலிகள் கைப்பற்றிய போது அவர்கள் சிறுவர்களென்ற குற்றச்சாட்டுகள் கூட எழுந்ததால் கடைசி நேரங்களில் பல படையணிகளிலும் களமிறங்கிய படையினரின் ஆற்றல்கள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியிருந்தன. இவ்வாறானதொரு நிலையில் முல்லைத்தீவை நோக்கி எட்டு முனைகளிலும் பாரிய படைநகர்வுகள் மேற்கொள்ளப்படும்போது படையினரின் பின்தளப் பகுதிகள் பெரும் கோதாகவே இருக்குமென்ற கருத்து நிலவுகிறது. இது அவர்களுக்கு பாதகமானதொன்றாகவே இருக்கும். இந்தப் படை நகர்வுக்கெதிராக புலிகள் எவ்வாறான தாக்குதல்களைத் தொடுப்பரென்பதையும் படையினர் அறிவர். கிழக்கிலிருந்தும் குடாநாட்டிலிருந்தும் வன்னியின் ஏனைய பகுதிகளிலிருந்தும் புலிகளின் அணிகளெல்லாவற்றுடனும் அவர்களது ஆட்லறிகள், மோட்டார்கள் மற்றும் கனரக ஆயுதங்களும் தற்போது முல்லைத்தீவுக்குள் வந்து விட்டதால் எட்டு முனைகளிலும் பாரிய படைநகர்வின்போது படையினர் எங்கெங்கிருந்து வருகிறார்களென்பதை புலிகளால் அறியமுடியுமென்பதால் அவர்களது அனைத்து போர்த் தளபாடங்களும் அந்தப் பகுதிகளை இலக்கு வைக்குமென்பதை படையினரும் அறிவர்.

புலிகளை குறுகிய நிலப்பரப்புக்குள் முடக்கிவிட்டதால் சகல களமுனைகளிலிருந்தும் ஒரே நேரத்தில் நகர்ந்து புலிகளைப் பதில் தாக்குதல்களை நடத்த விடாதவாறு குண்டுகள், ரொக்கட்டுகள், மோட்டார் ஷெல்களைப் பொழிந்து அவர்களைத் திகைப்படையச் செய்துவிட்டு முல்லைத்தீவுக்குள் நகர்ந்துவிட முடியுமென படைத்தரப்பு கருதுகிறது. தற்போது முல்லைத்தீவுக்குள் 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். இதனால் அந்த மக்கள் குறித்து அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். அதுபற்றி அரசு கவனத்தில் எடுக்காவிட்டால் அதன் விளைவுகள் எங்கிருந்தெல்லாம் எதிரொலிக்குமென்பதை இந்த அரசு இதுவரை உணர்ந்திருக்குமென்றே எதிர்பார்க்கப்படுகிறது. மக்களை புலிகள் மனிதக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள். மக்களை வன்னியிலிருந்து வெளியேற புலிகள் அனுமதிக்கவில்லையெனக் கூறி அரசு அவர்களைத் தடை செய்து விட்டதால் இனி அது குறித்து கேட்கக்கூடிய சந்தர்ப்பத்தையும் அரசு இழந்துவிட்டது.

யுத்தம் கடைசிக் கட்டத்திற்கு வந்து விட்டதாகக் கருதும் அரசு, புலிகள் பக்கம் உலகத் தமிழர்களது, குறிப்பாக தமிழ் நாட்டவர்களது கவனம் செல்லும்போது பாரிய விளைவுகள் ஏற்படுமென்பதால் அது குறித்த பிரசாரங்களை உள்நாட்டுக்குள் தடை செய்ய முனைந்துள்ளது. புலிகள் மீதான தடைக்கு இதுவும் ஒரு காரணமென்பதுடன் உலகத் தமிழர்களின் மனோதிடத்தை தகர்க்கவும் அரசு இந்தப் புலித் தடையை அமுலுக்கு கொண்டு வந்துள்ளது.
இந்த நிலையில் முல்லைத்தீவுக்கான போருக்கான தயாரிப்புகளில் படையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் பாரிய படைநகர்வுக்கு முன்னர் புலிகள் பாரிய தாக்குதல் எதனையும் மேற்கொள்ளாதவாறும் அதற்காக புலிகள் அணிதிரள்வதைத் தடுப்பதற்காகவும் முல்லைத்தீவின் சகல பகுதிகளிலும் படையினர் தினமும் தொடர்ச்சியாக கடும் ஷெல் தாக்குதல், பல்குழல் ரொக்கட் தாக்குதல், மோட்டார் தாக்குதல் மற்றும் விமானத் தாக்குதலையும் நடத்தி வருவதுடன் புலிகளின் பகுதிகள் குறுகிவிட்டதென்பதால் அவர்களது தலைவர்களை இலக்கு வைத்து தினமும் பல்வேறு பகுதிகளிலும் விமானப் படை விமானங்களும் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்தத் தாக்குதல்களால் தினமும் பல பொதுமக்கள் கொல்லப்படுவதுடன் பெருமளவானோர் படுகாயமடைந்தும் வருகின்றனர்.

பல்வேறு நாடுகளதும், குறிப்பாக இந்தியாவின் பூரண ஆசியுடன் முன்னெடுத்துச் செல்லப்படும் இந்த யுத்தத்தில் இதுவரை பெருமளவு பொதுமக்கள் கொல்லப்பட்டபோதும் எந்தவொரு நாடோ எந்தவொரு சர்வதச அமைப்போ இதுபற்றி ஏன் என்றுகூடக் கேட்கவில்லை. புலிகளை முற்றாக அழிப்பதன் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வும் கிட்டிவிடுமென்பதே இந்தியாவினதும் இலங்கையினதும் எண்ணமாகும். இதனால்தான் 2000ஆம் ஆண்டில் குடாநாட்டை புலிகள் கைப்பற்றுவதைத் தடுத்த இந்தியா இன்று வன்னியை இலங்கைப் படையினர் கைப்பற்றுவதற்கு முழுமையான ஆதரவை வழங்குகின்றது.

முல்லைத்தீவு மீதான தாக்குதலை உடனடியாகத் தொடுக்கவே அரசு முனைகிறது. வன்னியின் ஏனைய பகுதிகளில் கிடைத்த வெற்றிபோல் இங்கும் வெற்றியை பெற்றுவிட வேண்டுமென அரசு முனைகிறது. எத்தனை ஆயிரம் படையினர் கொல்லப்பட்டாலும் வன்னியை முழுமையாகப் பிடித்து விடவேண்டுமென அரசு கங்கணம் கட்டி நிற்கிறது. இதுவரை கிடைத்த வெற்றியின் மூலம் தென்பகுதியை தனது பிடிக்குள் வைத்துக்கொண்டு அரசு முழு அளவிலான இறுதிப் போருக்கு தயாராகியுள்ளது. இதனால் ஏற்படப் போகும் மிக மோசமான விளைவுகள் குறித்து எதிர்க்கட்சிகள் எச்சரித்து வருகின்றன. தமிழ்நாடு கொந்தளித்துள்ளது. ஆனாலும் இறுதிப் போருக்கான அறைகூவலை விடுக்க அரசு தயாராகிவிட்டது.

0 comments:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.