இந்திய அரசின் பதில் என்ன? - சி. மகேந்திரன்


கிளிநொச்சி வீழ்ந்ததைப் பற்றியும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிடிபடப் போகிறார் என்பதைப் பற்றியும் பரபரப்பாக பேசுவதை கொஞ்சம் நிறுத்தி வைத்துவிட்டு, யுத்தத்தின் மறுபக்கத்தை கொஞ்சம் திரும்பிப் பார்ப்பது அவசியமானதாகும்.

போரில் நேரடியாக ஈடுபடுபவர்களை விட பொது மக்கள் அடையும் துயரம் வார்த்தைகளால் சொல்லி மாளாது. ஆகாயத்திலிருந்து கொட்டப்படும் குண்டுகளிலிருந்து உயிர் காத்துக் கொள்ள முயற்சிக்கும் போராட்டம் இவர்களுக்கு. ஒரு லட்சம் மக்கள் கிளிநொச்சியை விட்டு வெளியேறிவிட்டார்கள் என்ற செய்தி பலருக்கு நம்ப முடியாததாக இருக்கிறது.

இவர்கள் அனைவரும் மனித கேடயத்திற்காகப் பிடித்துச் செல்லப்பட்டுள்ளார்கள் என்பதும் பரப்பப்படுகிறது. புலிகளுடன் இணைந்து செல்வது என்பது இவர்களுக்குத் தவிர்க்க முடியாததாகிவிட்டது. போர் நிறுத்தம், பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு ஆகிய இரண்டும் தான் இன்றைய இலங்கையின் தேவை. தமிழ் மக்களின் உயிருக்கும், தொன்மைமிக்க பண்பாட்டு வாழ்க்கைக்கும் ஒரு பேரழிவு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது எவ்வளவு உண்மையானதோ, அவ்வளவு உண்மை, சிங்கள மக்களின் எதிர்காலமும் இந்த போர் மூலம் நாசப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதும்.

இலங்கையின் இந்த ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் புறக்கணித்துவிட்டு, ராணுவத்திற்காக மட்டுமே தொகை ஒதுக்கிய பட்ஜெட்டாக அமைந்துவிட்டது. மொத்த வரவு செலவுத் திட்டத்தில் 20 சதவீதத்தை ராணுவத்திற்கு ஒதுக்கியிருக்கிறார்கள். இது இலங்கை ரூபாயில் 17 ஆயிரம் கோடி என்று கூறப்படுகிறது.

இன்றைய உலகில் இத்தகைய பெரும் தொகையை ராணுவத்திற்கு எந்த நாடும் ஒதுக்கியதில்லை. அமெரிக்கா, பாகிஸ்தான், இஸ்ரேல், சீனா, இந்தியா, ஈரான் முதலான நாடுகள் இலங்கையுடனான ஆயுத வியாபாரத்தில் பெருந்தொகையைப் பெற்றுவிட்டன. இதைத் தவிர, பெரும் எண்ணிக்கையில் இலங்கை ராணுவத்தினர் இறந்த பிறகும், சிங்களர் குடும்பங்கள் ஒவ்வொன்றும் ஒருவரை இலங்கை ராணுவத்திற்குத் தர வேண்டும் என்று அண்மையில் அதிபர் ராஜபக்ஷ வெளிப்படையாகவே கூறியுள்ளார்.

ஒருகாலத்தில் தனி ஆட்சி நடத்திய தமிழ் மன்னர்களின் மீது பகைமை கொண்டு படை திரட்டிய சிங்கள அரசர்களின் வெறிச் செயலைத்தான் இது நமக்கு நினைவுபடுத்துகிறது. இலங்கை ராணுவத்தின் இன்றைய நெருக்கடியை, முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் மங்கல சமரவீர தெளிவுபடுத்தியிருக்கிறார். இதன்படி கொல்லப்பட்ட ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 10 ஆயிரம் என்றும் ஊனமுற்றவர்கள் 25 ஆயிரம் பேர் என்றும் தெரிகிறது.

அண்மையில் வெளியாகியுள்ள ஒரு தகவல் பெரிதும் நம்மை யோசிக்க வைக்கிறது. படைமுனையில் போர் புரியும் ராணுவ வீரர்களுக்கான சம்பளத்தைக்கூட இலங்கை அரசாங்கத்தால் கொடுக்க முடியவில்லை என்பது தெரிகிறது. இப்பொழுது மீண்டும் 37 ஆயிரம் பேரை ராணுவத்தில் சேர்த்திருக்கிறார்கள். இலங்கை ராணுவத்தின் சார்பில் போரில் பங்கேற்று இறந்து கிடப்பவர்களைப் பார்த்தால் அனைவரும் பள்ளி மாணவர்களைப் போலவே தோற்றத்தில் காணப்படுகிறார்கள்.

இவர்களில் மூன்று ராணுவ வீரர்களின் அடையாள அட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களின் வயது 17 என்று இணையதளங்களில் செய்திகள் வெளியாகியிருக்கிறது. அனைத்து தகவல்களையும் தொகுத்துப் பார்த்தால், தமிழ் மக்களை அழிப்பதுதான் யுத்தத்தின் நோக்கமாகத் தெரிகிறது. இலங்கை விடுதலை அடைந்த போது சிங்கள மக்களின் எண்ணிக்கை 70 லட்சம் என்று கூறப்பட்டது. தமிழ் மக்களின் அன்றைய மக்கள்தொகை 35 லட்சம். இதில் மலையகத் தமிழர்களும், முஸ்லிம் தமிழர்களும் அடங்குவார்கள். இன்று இலங்கையில் சிங்கள மக்களின் எண்ணிக்கை 1 கோடியே 25 லட்சம்.

அதேநேரத்தில் இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் எண்ணிக்கை 35 லட்சம் என்று கூறப்படுகிறது. 60 ஆண்டுகளில் சிங்கள மக்களின் எண்ணிக்கை சுமார் இரண்டு மடங்காகப் பெருக்கம் அடைந்துள்ளபோது, தமிழ் மக்களின் எண்ணிக்கை ஏன் பெருக்கம் அடையவில்லை? இதில் அடங்கியுள்ள இன அழிப்பு கொள்கையை எப்படி நம்மால் புரிந்து கொள்ளாமல் இருக்க முடியும்? இதைத் தவிர, இன்றைய இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் அனைவரும் ராணுவத்தால் தேசத் துரோகிகளாகக் கருதப்படுகிறார்கள்.

25 ஆயிரத்துக்கு அதிகமான அப்பாவித் தமிழ் மக்கள் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்கள். இரவு பகல் என்று பாராமல் ராணுவம் நடத்தும், இடைவிடாத சந்தேக வேட்டையில் தமிழ் குடும்பங்கள் முற்றாக தங்கள் நிம்மதியை இழந்துவிட்டனர். மக்களில் பெரும் எண்ணிக்கை, ஒன்று ராணுவப் பாதுகாப்பு வளையத்திற்குள் வைக்கப்பட்டிருக்கிறார்கள் அல்லது திறந்தவெளி சிறைச்சாலையைப் போன்ற அகதி முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதை விடவும் மற்றொரு மனித நேயமற்ற செயலும் நடந்துள்ளது. இந்திய அரசின் மூலம் தமிழக அரசால் அனுப்பப்பட்ட பொருள்கள்கூட, இலங்கைத் தமிழக மக்களுக்கு சரியாகப் போய்ச் சேரவில்லை. உணவுப் பொருள்களில் ஒரு பகுதி திருட்டுப் போய்விட்டதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. தமிழக மக்கள் அனுப்பிய உணவுப் பொருள்களையே திருடி எடுத்துக்கொண்டவர்கள் எவ்வாறு அரசியல் உரிமைகளைத் தரப்போகிறார்கள் என்ற கேள்வியையும் ஊடகங்களில் அங்குள்ள தமிழ் மக்கள் எழுப்பியிருக்கிறார்கள்.

இலங்கை அரசின் மற்றொரு முகம் மிகவும் கொடூரம்மிக்கதாக இருக்கிறது. தமிழ் மக்களின் மீதான வான்வெளித் தாக்குதலை இது நடத்துகிறது. இதுவரை ஆறாயிரம் முறை குண்டுகள் போடப்பட்டுள்ளன. அடிப்படையான போரைத் தரையில் நின்று இலங்கை ராணுவம் நடத்தவில்லை. பன்னாட்டு ராணுவத்தின் துணை கொண்டு வான்வெளித் தாக்குதலை நடத்துகிறது. விமானத்திலிருந்து போடப்படும் குண்டுகள் உலகில் பல நாடுகளில் தடை செய்யப்பட்டவை.

கண்ணி வெடிகள் அபாயம் மிகுந்தவை. இவை மொத்தம் 10 லட்சம் பேரை கம்போடியாவில் மட்டும் கொலை செய்திருக்கிறது. கண்ணி வெடியைப் போன்ற அபாயம் நிறைந்ததாகக் கருதப்படும் மற்றொன்றுதான் கொத்து வெடிகுண்டுகள் (கிளஸ்டர் குண்டுகள்). வானிலிருந்து பாராசூட்டுகள் மூலம் கீழிறக்கப்படும் இந்த குண்டுகள் ஒன்று நூறாகப் பிரிந்து வெடித்து மண், மரம், செடி, கொடிகளுக்கு பேராபத்தை விளைவிக்கக் கூடியவை. ஒரு குறிப்பிட்ட இனமக்களை அழிக்க, இந்த வகையாக குண்டுகள்தான் பயன்படுத்தப்படுகின்றன. பாலஸ்தீனத்தின் காசா பகுதிகளில் இந்த குண்டுகள் போடப்பட்டுள்ளன. காற்றில் வெடித்து உரசி வெடிக்கக் கூடியவை இந்த குண்டுகள். வெடிக்காமல் கிடக்கும் குண்டுகள் பல ஆண்டுகள் காத்திருந்து மக்கள் உயிரை வாங்கும் அபாயத்தையும் தனக்குள் தேக்கி வைத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை இந்த கிளஸ்டர் குண்டுகளின் அபாயம் குறித்த ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளது. 2008-ம் ஆண்டு ஜனவரி 2-ம் தேதி நார்வே தலைநகர் ஓஸ்லோவில் சிறப்புக் கூட்டம் நடந்துள்ளது. இதில் 122 நாடுகள், ""கிளஸ்டர் குண்டுகளை உற்பத்தி செய்வதும் இல்லை, விற்பனை செய்வதும் இல்லை'' என்று ஐ.நா.வின் வழிகாட்டுதலின்படி கையொப்பமிட்டுள்ளன. கொடுமைமிக்க கிளஸ்டர் குண்டுகள்தான் இலங்கைத் தமிழ் மக்களின் மீது பெரும் எண்ணிக்கையில் போடப்பட்டுள்ளது. எதிரிகளின் இலக்குகள் பற்றி கவலையில்லாமல் குண்டுகளைப் போடுதல் பொதுமக்களை அழிக்கும் நோக்கம் கொண்டதாகத்தான் இருக்க முடியும்.

தமிழ் மக்களைக் கொன்றும், ஊனப்படுத்தியும் மகிழ்ச்சியடையும் இந்த யுத்தம் மூலம் தமிழ் மக்களின் பூர்வ பிரதேசங்கள் எதற்கும் பயன்படாதவாறு குண்டுகளின் மூலம் நாசப்படுத்தப்பட்டுவிட்டது. மனிதனைப் போலவே மண்ணும் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் உயிரை இழந்து கொண்டிருக்கிறது. உலகமயமும், தாராளமயமும் இன்று உலக இன அழிப்பு மயத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது என்பது தெளிவாகிவிட்டது.

ஆப்கானிஸ்தானிலும், இராக்கிலும், பாலஸ்தீனத்திலும் புகழ்மிக்க ஆதியினங்களின் அடையாளங்களை யுத்தத்தின் மூலம் அழிக்கும் முயற்சியில் இடைவிடாது ஈடுபட்டு வருகிறது அமெரிக்கா. இலங்கைத் தமிழ் மக்களையும் இவ்வாறு அழிப்பதற்கு இதேபோன்று திட்டங்களைச் செயல்படுத்துகிறார்களா என்ற கேள்வி தவிர்க்க முடியாமல் எழுந்துவிட்டது. அமெரிக்கத் தளபதியுடன் இணைந்து இந்தியத் தளபதியும், பாகிஸ்தான் தளபதியும் வன்னிப்பிரதேசத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான போருக்குத் திட்டம் வகுத்துக் கொடுத்துள்ளனர்.

இதன் மூலம் தமிழக மக்களை படுகொலை செய்யும் யுத்தத்தை இந்திய அரசு முன்னின்று நடத்துகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனைப் போக்க வேண்டிய கடமை மன்மோகன் சிங்குக்கு இருக்கிறது. இல்லாவிட்டால் தமிழகத்தின் 6 கோடி மக்களும் அவரை எதிர்காலத்தில் மன்னிக்க மாட்டார்கள் என்பதை அவர் உணர்ந்து கொள்ளுதல் ,.அவசியமானதாகும்

0 comments:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.