கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகமும் அரசியல்துறை காரியாலயமும் ஸ்ரீ லங்காவின் விமானத் தாக்குதலிற்குள்ளாகி சேதமடைந்துள்ளது.
2003 ஆம் ஆண்டு தைப்பொங்கல் திருநாளில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இச்செயலகத்தின் சிதைவானது, சமாதானம் இனி இல்லையென்கிற அரசின் செய்தியை தெளிவாக உணர்த்துகிறது. நோர்வே சமாதான அனுசரணையாளர்கள் மற்றும் பன்னாட்டு இராஜதந்திரிகளின் சந்திப்பிற்கான ஒன்றுகூடுமிடமாகத் திகழ்ந்தது இக்கட்டிடம். அதேவேளை தாக்கப்பட்ட இலக்கானது, பரவிப் பாஞ்சானில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் படைக் கட்டளை மையமென கூறுகிறது அரச பாதுகாப்பு ஊடகச் செய்திகள்.
வாகரை முற்றுகைப் பாணியில் மேற்கொள்ளப்படும் கிளிநொச்சி வல்வளைப்பானது, அரசின் இறுதியான இன அழிப்புச் செய்தியை உள்ளடக்கியுள்ளது. அரச தரப்பினர் அண்மைக் காலமாக விடுக்கும் பேரினவாதப் பிரகடனங்களும் இதையே சுட்டிக்காட்டுகின்றன. இந் நாடு சிங்களவர்களுக்கு மட்டுமே சொந்தமானதென்று இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும், பயங்கரவாதிகள் எல்லோரும் தமிழர்கள் என்று பாதுகாப்புத் துறை செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவும், வெளிப்படுத்தி வரும் அதிரடி பேரினவாதக் கோஷங்கள் யாவும் மாற்ற முடியாத இராணுவத் தீர்வினை நோக்கி சிங்களம் நகர்வதை தமிழர்களுக்கு புரிய வைக்கின்றன. தமிழர்களின் சமாதானக் குறியீட்டிற்கு குண்டு வீசிய ஸ்ரீ லங்கா அரசின் மீது கண்டனக் கணைகளைத் தொடுக்காத சர்வதேசம், பேச்சுவார்த்தை மேசைக்கு விடுதலைப் புலிகள் வரவேண்டுமென வேண்டுகோள் விடுப்பது, நாகரிகமான ஜனநாயக முறைமையல்ல.
ஜெயசிக்குறுவும் தீச்சுவாலையும் கட்டுநாயக்க விமானப் படைத் தளமும் உணர்த்திய படைவலுச் சமநிலைப் பரிமாணமே சமாதான ஒப்பந்தத்திற்கு தென்னிலங்கையையும் சர்வதேசத்தையும் அழைத்து வந்தது. 2002ஆம் ஆண்டு பெப்ரவரி ஒப்பந்தத்திற்கு முன்னர் ஒருதலைப் பட்சமான போர் நிறுத்தத்தை விடுதலைப் புலிகள் பிரகடனம் செய்தார்கள். அதைப் புரிந்து கொள்ளாத தென்னிலங்கை, இராணுவ முனைப்பினை கூர்மையாக்கி, யுத்தத்தை நீடித்த வேளையில் அரச தரப்பு இழப்பு அதிகமாகி, படைவலுச் சமநிலை மாறுதலடைவதை உணர்ந்து பேச வந்தது. அதேபோன்று கடந்த "சார்க்' மாநாட்டு காலத்தில் ஒருதலைப்பட்ச யுத்த நிறுத்தத்தை விடுதலைப் புலிகள் பிரகடனம் செய்தார்கள்.அத்தோடு யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து தாம் இன்னமும் விலகவில்லையென்றும், நோர்வே அனுசரணையை ஏற்றுக் கொள்வதாகவும், தற்போது தற்காப்பு யுத்தமொன்றை மட்டுமே தாம் முன்னெடுப்பதாகவும் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்கள் தெரிவித்திருந்தார். சென்ற வாரம் அவர் விடுத்த செய்தியொன்று மிகவும் மாறுபட்டிருந்ததை அவதானிக்கலாம். அதாவது வலிந்த தாக்குதலிற்கான களச் சூழல் உருவாகுவதை நடேசன் அவர்கள் தெளிவாகக் கூறியிருந்தார்.
இக் கருத்தின் உள்ளார்ந்த பரிமாணத்தைத் தரிசித்தால் தேசியத் தலைவரின் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம், இராணுவம் நகர்வதும், சில இடங்களில் தடுக்கப்படுவதும் நிகழ்த்தப்படுகிறதென்பதை புரியக்கூடியதாக இருக்கிறது. இராணுவ நிகழ்ச்சி நிரலில் பருவமழை ஆரம்பிக்கும் முன்பாக இரணைமடு, கிளிநொச்சியைக் கைப்பற்றிவிட வேண்டுமென்கிற அவசரம் தெரிகிறது. பூநகரி நோக்கிய நகர்வில், நாச்சிக்குடா, அக்கராயன், வன்னேரிக்குளம் பகுதிகளில் விடுதலைப் புலிகளின் தடுப்பரண்கள் பலமாக இருப்பதால் போரியல் தந்திரோபாய உத்தியில் சடுதியான மாற்றங்களை வடிவமைத்து, ஏ9 பாதை நோக்கிய படை நகர்வினை இராணுவம் முன்னெடுக்கிறது. வன்னியின் கிழக்குப் பகுதியானது பருவ மழை காலத்திற்கு பொருத்தமான பிரதேசமல்ல என்பதை ஜெயசிக்குறு நாட்களில் ஸ்ரீ லங்கா இராணுவம் உணர்ந்திருக்கும்.
ஆனாலும் கிளிநொச்சி, இரணைமடு, கொக்காவில் நோக்கிய நகர்வானது பாரிய பொறிக்குள் அவர்களை இழுத்துச் செல்லுமென்பதை படைத்தரப்பு ஆலோசகர்கள் புரிந்தாலும், அரசியல் தரப்பினரின் அழுத்தங்களை புறக்கணிக்க முடியாத இக்கட்டான நிலைக்குள் தாம் மாட்டுப்பட்டிருப்பதை வெளிப்படுத்த முடியாமல் இருக்கிறார்கள். களமுனையில் அரச தரப்பிற்கு தினமும் இழப்புகள் அதிகமென்று பல தரப்புச் செய்திகள் கூறுகின்றன. ஜெயசிக்குறுச் சமர் காலத்தில் இதேபோன்று அரச தரப்பு இழப்புகள் மூடி மறைக்கப்பட்டன.
தோல்வியின் விளிம்பில் இராணுவம் தரித்து நின்ற வேளையில் எதிர்க்கட்சியினரால் இழப்புகளின் எண்ணிக்கை அம்பலமானது. அதேபோன்று மாங்குளம், புளியங்குளம், ஒலுமடு, நெடுங்கேணியென்று ஒட்டுசுட்டான் வரை இராணுவம் நகரும்போது, விடுதலைப் புலிகளின் சவப்பெட்டிக்கு இறுதி ஆணி அடிக்கும் வேளை வந்துவிட்டதென அன்று ஆர்ப்பரித்தது தென்னிலங்கை. மறுபடியும் சிங்கள மக்களின் வரலாற்று பதிவுகள் குறித்த ஞாபக சக்தியை பரீட்சித்துப் பார்க்கிறது இன்றைய ஆட்சி. தமிழக, புலம்பெயர் தமிழ் மக்களின் எழுச்சியினால் உலக உணவுத் திட்டம் மூலம் நிவாரணங்கள் வன்னிக்குச் செல்ல ஆரம்பித்துள்ளன. வன்னியிலுள்ள புலிகளின் வெடிமருந்தின் கையிருப்பு தீர்ந்து விட்டதால், வவுனியாவிலிருந்து இரண்டரைக் கிலோ "சீ4' வெடி மருந்து பார ஊர்திகளில் கொண்டு செல்லப்படுவதாக போட்ட நாடகத்தை எவரும் நம்பாததினால், இறுதியில் வன்னிக்குள் உணவு அனுப்ப வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
எறிகணை வீச்சுக்களும் விமானத் தாக்குதல்களும் தொடர்ந்த வண்ணமுள்ளன. நாச்சிக்குடாவிலும் பாலமோட்டையிலும் இனவாத ஆற்றுக்கு அணை போட்டதால், அந்த ஆறு, வந்த வேகத்தில் திசை மாறி ஓடுகிறது. அணை போட்டவர்களுக்கே பயணிக்கும் புதிய பாதை புரியும். இரணைமடு, திருமுருகண்டி, கொக்காவில் இதில் எந்த மையத்தை உடைத்துக் கொண்டு ஏ9 பாதையைக் கடந்தாலும் கிளிநொச்சியை சுற்றி வளைக்கும் பாதைக்கே அதிக முக்கியத்துவத்தை இராணுவம் வழங்கும். தொப்பிகல படை நடவடிக்கையின் போது கொடுத்த பரப்புரைக் கனதியை, கிளிநொச்சி மீதும் செலுத்த அரசு முற்படுகிறது.
விடுதலைப் புலிகளின் நிர்வாக மையமான கிளிநொச்சியைக் கைப்பற்றி விட்டேனெனப் பிரகடனம் செய்வதன் ஊடாக, சற்று ஊசலாடும் சர்வதேசத்தை முழுமையாகத் தன் பக்கம் ஈர்த்து விடலாமென்று கணக்குப் போடும் இன்றைய அரசு, இவ்வெற்றிச் செய்தியை முதலீடு செய்து கிழக்கை சிங்கள மயமாக்கும் திட்டத்திற்கு அமெரிக்கா, இந்தியாவிடமிருந்து நிதி பெறலாமெனக் கற்பிதம் கொள்கிறது. ஆனாலும் 2002இல் உருவான, இனப்பிரச்சினையை மையமாகக் கொண்ட, சர்வதேச ஒப்பந்தத்தின் தமிழர் தரப்பு சமாதானக் குறியீடு அழிக்கப்பட்டுள்ளது.
இனி அடக்குமுறையாளர்கள் எல்லோரும் சிங்களவர்கள் என்கிற கருத்துருவமும் தமிழ் மக்களிற்கான ஒற்றைத் தெரிவு சுயநிர்ணய உரிமைதான் என்கிற கோட்பாடும், மிதப்பு நிலை அடையும் காலம் அண்மித்து விட்டதை தரிசிக்கக்கூடியதாகவிருக்கிறது.
[நன்றி - வீரகேசரி]
0 comments:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.