எமது விடுதலை? எது பயங்கரவாதம்?

துரத்தித் துரத்தித் துன்புறுத்தினால் பூனைகூடப் புலியாக மாறும் ! தியாகு - பொதுச் செயலாளர்-தமிழ், தமிழர் இயக்கம்

உலகில் விடுதலை அமைப்புகளைப் பயங்கரவாதிகளாகச் சித்திரிக்கும் முயற்சி ஒன்றும் புதியது அல்ல. அமெரிக்காவுக்கு பிடல் காஸ்ட்ரோ பயங்கரவாதி. இஸ்ரேலுக்கு யாசிர் அரபாத் பயங்கரவாதி. தென்னாபிரிக்க வெள்ளை நிறவெறிக்கு நெல்சன் மண்டேலா பயங்கரவாதி. அதன் தொடர்ச்சியாக, சிங்களத்துக்கும் சிங்களத்தைத் தூக்கிப் பிடிக்கும் இந்தியப் பார்ப்பனீயத்துக்கும் பிரபாகரன் பயங்கரவாதி. திருடிவிட்டு ஓடுகிறவன் துரத்துகிறவர்களோடு சேர்ந்து திருடன் ! திருடன்! என்று கூச்சலிட்டு அனைவரையும் ஏமாற்றுவது ஒரு பழைய தந்திரம். அதைப் போலத்தான் பயங்கரவாத நாடுகள் தங்கள் முகத்தை மறைப்பதற்காகப் பயங்கரவாதக் கூச்சல் போடுகின்றன.

ஈழத்தில் ஆயுதப் போராட்டம் என்பது தமிழர்கள் ஆசைப்பட்டு தேர்ந்தெடுத்த பாதையன்று. அது அவர்கள் மீது சுமத்தப்பட்ட ஒன்று என்பதற்குச் சான்றாகத் தந்தை செல்வா காலத்தில் இருந்து தலைவர் பிரபாகரன் காலம் வரையிலான நிகழ்வுகளைப் பட்டியலிட்டாலே போதும். துரத்தித் துரத்தித் துன்புறுத்தினால் பூனைகூடப் புலியாக மாறும். ஈழத்தில் அதுதான் நடந்தது. பதுங்கித் தாக்கிய புலிகள் கெரில்லாப்படை என்ற நிலையில் இருந்து ஒரு தேசிய இராணுவமாக உருப்பெற்றிருக்கிறார்கள். புலிகள் வெறும் பயங்கரவாதிகள் என்றால் இது எப்படிச் சாத்தியமானது? கரும்புலிகளின் தற்கொடைப் போர் முறை என்பதையும் ஒரு சிறிய தேசிய இனம் சிறு இழப்புகளோடு பெரும் வெற்றிகளை ஈட்டுவதற்கான உத்தி என்றே புரிந்துகொள்ள வேண்டும். இதுவும் இலக்கற்ற தற்கொலைத் தாக்குதல் முறையும் ஒன்றல்ல. பின்னையதற்குப் பீதியூட்டுவது தவிர ,வேறு குறிக்கோள் ஒன்றுமில்லை.

2001ஆம் ஆண்டில் நடைபெற்ற இரண்டு நிகழ்ச்சிகளை இங்கு ஒப்பு நோக்கலாம். அந்த ஆண்டு ஜூலை 23ஆம் நாள் கட்டுநாயக்கா விமான நிலையத்தின் மீது புலிகளின் தாக்குதல் நடைபெற்றது. அப்பாவிப் பொதுமக்கள் யாருக்கும் எவ்விதத் தீங்கும் ஏற்படக்கூடாது என்ற கவனத்துடன் புலிகள் அந்தத் தாக்குதலை நடத்தி முடித்தார்கள். மேலும், அந்தத் தாக்குதலுக்குத் தெளிவான போரியல் நோக்கம் இருந்தது. தமிழ்ப் பகுதிகள் மீது குண்டு மழை பொழிந்து பேரழிவை உண்டாக்கும் வானூர்திகளை அழிக்க வேண்டும் என்பதே நோக்கம். ஆனால், அதே ஆண்டு செப்டெம்பர் 11ஆம் நாள் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்களைத் தகர்த்தவர்களுக்கு ஆயிரக்கணக்கான மனிதஉயிர்கள், அப்பாவிகள் அழிவது பற்றிக் கவலை இல்லை. இயன்றவரை அதிகமானவர்களைச் சாகடிப்பதே குறி.
செப்டெம்பர் 11 தாக்குதல் நடந்த நேரத்தில் பாலஸ்தீன ஹமாஸ் இயக்கத் தலைவர் கே்ஷக் அகமது யாசின் சொன்னது குறிப்பிடத்தக்கது. எமது இயக்கம் இஸ்ரேலிய இலக்குகளை எதிர்த்துத் தற்கொலைத் தாக்குதல் நடத்துவது நியாயமானது. ஏனென்றால், நாங்கள் காலனியாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மறுபுறம் அமெரிக்காவில் தாக்குதல் நடத்தியவர்கள் எந்தக் குறிக்கோளுக்காகவும் அப்படிச் செய்யவில்லை என்று குறிப்பிட்டார். இவற்றில் இருந்தே விடுதலைப் போராட்டத்துக்கும் பயங்கரவாதத்துக்குமான வேறுபாட்டை உணரலாம்.

அரச பயங்கரவாதத்தைச் சந்திக்க மக்கள் வேறு வழியின்றி ஆயுதங்களைக் கையில் எடுக்கிறார்கள்! - விடுதலை இராசேந்திரன், பொதுச்செயலாளர் - பெரியார் திராவிடர் கழகம்
அரசுகள் மக்களின் நியாயமான உரிமைகளை மறுக்கும்போதும் இனங்களின் உரிமைகளை அங்கீகரிக்காமல் ஒடுக்கும் போதும் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் வெடிக்கின்றன. அமைதி வழியில் போராடும் மக்களை அரச தனது ஆயுத பலத்தால் அடக்க முயல்கிறது. அடக்குமுறைகள் எல்லை மீறும்போது அது அரச பயங்கரவாதமாக உருவெடுக்கிறது. இனியும் ஒடுக்குமுறையின் கீழ் வாழ முடியாது என்று மக்களை உறுதியான நிலைக்கு இட்டுச் செல்வதே இந்த அரச பயங்கரவாதம்தான். அரச பயங்கரவாதத்தை சந்திக்க, வேறு வழியின்றி, மக்கள் ஆயுதங்களைக் கையில் எடுக்கிறார்கள். இது அரச பயங்காரவாதம் என்ற வினைக்கு எதிராக மக்களும் இயக்கங்களும் நிகழ்த்தும் எதிர்வினை. ஆனால், இந்தத் தற்காப்பு நடவடிக்கைகளுக்கு ஒடுக்கும் அரசுகள் சூட்டுகிற பெயர் பயங்கரவாதம். ஆனாலும் ஆதிக்கவாதிகளின் பிடியில் சுழன்று கொண்டிருக்கும் உலக ஒழுங்கு பயங்கரவாதத்துக்கான தெளிவான வரையறைகள் எதையுமே நிர்ணயிக்கவில்லை. அவர்கள் நலனுக்கு ஏற்ப அது உருமாற்றம் பெறுகிறது.
இன்றைய உலக ஒழுங்கமைப்பில் அரச பயங்கரவாதத்தின் முகங்களில் புதிய மாற்றங்கள் வந்துவிட்டன. சீட்டு விளையாட்டில் அனைத்து சீட்டுகளையும் தன்னிடமே வைத்துக்கொண்டு விளையாட்டுகளை நடத்துகின்றன. ஒடுக்கும் அரசுகளின் இந்த சூழ்ச்சியைப் புரிந்து கொண்டுவிட்ட மறுதரப்பினர், அதாவது, அரச பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடுகிறவர்கள் விளையாட்டு விதிகளையே மாற்றிக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார்கள். இந்த மாற்றப்பட்ட விதிகள்தான் அரசுகளை நடுங்க வைக்கின்றன. இப்படி நடுங்க வைத்த சம்பவம்தான் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத்தின் மீது நடந்த செப். 11 தாக்குதல் என்கிறார், பிரபல அமெரிக்க இடதுசாரி ஆய்வாளர் ழான்போத்திரியா!
அரச பயங்கரவாதம் அனைத்துச் செயற்பாடுகளிலும், தன்னை முழுமையான மேலாதிக்க சக்தியாக வடிவமைத்துக் கொண்டு செயல்படுகிறது. ஊடகங்கள் இதற்கு முழு வீச்சில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பயங்கரவாதத்துக்கு இப்போது கருத்தியல் என்று ஒன்றுமில்லை. கருத்தியலையும் அரசியலையும் அது கடந்துவிட்டது. நியாயத்துக்குப் புறம்பாக வளர்ந்து வரும் அரச பயங்கரவாதம் நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான வேறுபாடுகளைக் குலைத்துவிட்டது.
ழான் போத்ரியா மாார்க்சியம் கடந்த இடது சாரி சிந்தனையாளராக வர்ணிக்கப்படுபவர். இவர் இது பற்றி துல்லியமான சிந்தனையை முன்வைக்கிறார். நன்மை தீமையை வெல்லுவதில்லை. தீமை நன்மையை வெல்லுவதில்லை. ஒன்றினுள் ஒன்றாகச் சுருக்க முடியாத நிலையில் அவை ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தவையாகவும் இருக்கின்றன. இறுதியில் நன்மை தனது நல்ல தன்மையை இழப்பதன் மூலமே தீமையை வெற்றி கொள்ள முடிகிறது. உலக அளவிலான அதிகாரத்தை நாடும் நன்மை, அச் செயல்பாட்டின் ஊடாகவே தனக்கு எதிரான உலகளாவிய வன்முறையையும் உருவாக்குகிறது என்கிறார்.
அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிடும் ராஜபக்‌ஷ, விடுதலைப்புலிகள் இயக்கத்தைப் பயங்கரவாதிகள் என்று கூறும்போது, அதை மேற்கத்திய சமூகம், கண்களை மூடி ஏற்றுக்கொள்வது எதைக் காட்டுகிறது?
இதைத்தான் தமிழ் ஈழத் தேசியத் தலைவர் பிரபாகரன் தனது மாவீரர் நாள் உரையில், பயங்கரவாதம் என்ற பதத்திற்கு ஒரு தெளிவான தீர்க்கமான வரைவிலக்கணம் இல்லாததால், தர்மத்தின் வழி தழுவி நிகழும் நியாயமான அரசியற் போராட்டங்களும் பயங்கரவாதமாகத் திரிபுபடுத்தப்படுகின்றன. இந்த வகையில் இனவாத ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து போராடும் சுதந்திர இயக்கங்களுக்கும் பயங்கரவாதச் சேறு பூசப்படுகிறது. பயங்கரவாதத்துக்கு எதிரான இன்றைய சர்வதேச எதிர்ப்பியக்கத்தில் அடக்குமுறை அரசுகளின் இராணுவ பயங்கரவாதம் மூடி மறைக்கப்படுகிறது. ஆயினும் அந்த அரச பயங்கரவாதத்தை எதிர்த்து நிற்பவர்கள் மீதே பயங்கரவாத முத்திரை குத்தப்படுகிறது. இந்த துர்ப்பாக்கிய நிலைதான் எமது விடுதலை இயக்கத்துக்கும் ஏற்பட்டிருக்கிறது என்று சுட்டிக்காட்டினார்.
பயங்கரவாத சேறு பூசும் ராஜபக்‌ஷக்களின் பொய்மையை மட்டுமல்ல, உலக ஒழுங்கமைப்பு தனக்கு சாதகமாக கட்டமைக்கும் பயங்கரவாதத்தையும் மிகச் சரியாகவே அடையாளம் காட்டுகின்ற வரலாற்று வரிகள் இவை!
இஸ்லாமிய இயக்கங்களுக்கு எதிரான உலகின் நிலைப்பாடு இன்று எல்லா விடுதலை இயக்கங்களையும் பயங்கரவாதிகளாக சித்திரிக்கும் நிலைக்கு விரிக்கப்பட்டுவிட்டது - கவிஞர் வ.ஐ. ச. ஜெயபாலன், சமூகவியல் ஆய்வாளர்
இஸ்லாமிய சர்வதேசியம் எழுச்சிபெற்று அரபு நாடுகள் பலமான ஒரு ஒன்றியமாக மாறிவிடக்கூடாது என்பதற்காகவும் எண்ணெய் விலையைத் தன் பிடிக்குள் கொண்டு வருவதற்காகவும் ஆரம்பம் முதலே அமெரிக்கா அரபு நாடுகளில் திட்டமிட்ட சீர்குலைவுகளை மேற்கொண்டு வந்துள்ளது. அமெரிக்காவின் இந்த எதேச்சாதிகாரம், அமெரிக்கா எங்களை வாழவிடாது என்ற விரக்தியை அரபு நாடுகளில் விதைத்தது. இதுவே இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களின் தோற்றத்துக்கு காரணம். இந்த இயக்கங்கள் இஸ்லாமிய நாடுகளை சீர்குலைப்பதற்காக அமெரிக்கா கையாண்ட பயங்கரவாத நடவடிக்கைகளின் அடிப்படையில் அமெரிக்காவுக்கு எதிரான நடவடிக்கைகளை பயங்கரவாத தாக்குதல்களாகவே மேற்கொண்டு வருகின்றன. இதற்கு அமெரிக்காவே பொறுப்பேற்க வேண்டும். இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகள் அரபு நாடுகளில் உள்ள அமெரிக்காவின் கைப்பாவை அரசுகளை அகற்றி, அந்தந்த நாடுகளின் நலன்களுக்கு முன்னுரிமை தரக்கூடிய அரசுகளை அமைப்பதற்கான போராட்டங்களின் மூலமே தங்களை புரட்சிகரமான விடுதலை அமைப்புகளாக மாற்றலாம். அதுவரை இவற்றை அமெரிக்காவுக்கு எதிரான பயங்கரவாத இயக்கங்களாகவே உலகம் பார்க்கும். துரதிர்ஷ்டவசமாக இஸ்லாமிய இயக்கங்களுக்கு எதிரான உலகின் இந்த நிலைப்பாடு இன்று எல்லா விடுதலை இயக்கங்களையும் பயங்கரவாதிகளாகச் சித்திரிக்கும் நிலைக்கு விரிக்கப்பட்டுவிட்டது.
பெரும்பான்மை இனத்தின் விடுதலை இயக்கங்களைவிட எப்போதுமே சிறுபான்மை இனங்களின் விடுதலை இயக்கங்களுக்கு சவால்கள் அதிகம். ஆயுதமும் அதிகாரமும் வளமும் கொண்ட அரசுகளுக்கு எதிரான போராட்டங்களில் தங்கள் மத்தியில் இருந்து காட்டிக் கொடுக்கக்கூடியவர்கள் தொடர்பாகவும் அச்சம் இருக்கிறது. இதனால் புரட்சிகர வன்முறைகள் கட்டுமீறி இடம் பெறுவதற்கான ஏராளமான வாய்ப்புகள் போராட்டங்களில் உள்ளன. இவை தொடர்பாக விடுதலை இயக்கங்களுக்கிடையே விமர்சனங்கள் இருக்க வேண்டும். விமர்சனங்கள் உத்தமமான நிலையில் அமைகின்றபொழுது வன்முறைகளை தவிர்க்க இயலாத வன்முறை என்ற வரையறைக்குள் ஓரளவுக்கேனும் கட்டுப்படுத்த முடியும். ஆனால் விடுதலை இயக்கங்களில் இந்த விமர்சனங்களுக்கு அவகாசம் இருப்பதில்லை. அவகாசத்தைக் கொடுக்காத அளவில் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டு விடுகிறார்கள். இதைத் தவிர்ப்பதற்காகவே விடுதலை இயக்கம் முந்த வேண்டியுள்ளது.
ரஷ்யப் புரட்சி, சீனப் புரட்சி பற்றி எழுதப்பட்ட நூல்களை வாசித்ததில் அந்தப் புரட்சிகளைப் பயங்கரவாதத் தன்மைகளற்ற போராட்டங்களாகத்தான் நாங்கள் அடையாளப்படுத்தி வைத்திருக்கிறோம். இன்றைக்கு, இந்தப் போராட்டங்களிலும் அளவுக்கு அதிகமான வன்முறைகள் இடம் ெபற்றிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளன. ஆனால், இந்த வன்முறைகளைக் கொண்டு ரஷ்ய, சீனப் புரட்சிகளை புரட்சி இல்லை என்று நிராகரித்துவிட முடியாது. அதுபோலத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்திலும் பகத்சிங், சுபாஸ் சந்திரபோஸ் போன்றவர்களின் போராட்டங்களில் மட்டுமீறிய வன்முறைகள் இருந்தபோதும் அவற்றைப் பயங்கரவாதமாக யாரும் சிதைக்க முற்படுவதில்லை.
ஆனால், இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளை உலகு பயங்கரவாதிகளாக அடையாளப்படுத்திய பிறகு விடுதலை இயக்கங்களையும் அந்தப் பட்டியலில் சேர்த்து விடும் நோக்கில் அதிகார வர்க்கங்கள் செயற்படத் தொடங்கியுள்ளன. மக்களுக்கெதிரான ஆதிக்க அரசுகள் விடுதலை இயக்கங்களின் நடவடிக்கைகள் மீதான விமர்சனங்களை, விடுதலை இயக்கங்களின் இருப்பையே நிராகரிப்பதற்குரிய விமர்சனமாக வளர்த்தெடுக்கின்றன. இந்தப் பின்னணியிலேயே எமது விடுதலை இயக்கத்தையும் பார்க்க வேண்டும். எல்லா விதமான விமர்சனங்களுக்கும் அப்பால், வடக்கு ,கிழக்கு இணைந்த பிரதேசம் சார்ந்த சுயாட்சி என்ற ஈழத்தமிழர்களின் ஐம்பது வருட கால அபிலாஷையை விடுதலைப்புலிகளே முன்னெடுத்துச் செல்கிறார்கள். பயங்கரவாதம் என்ற முத்திரை குத்தப்பட்டதால் இந்த விடுதலைப் போராட்டம் தோற்றுவிடாது.
உலகமயமாக்கல் விடுதலை கேட்டுப் போராடுகின்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக உள்ளது.

0 comments:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.