முல்லைத்தீவு எனும் களமே யாழ்ப்பாணம் முதலாக தென்தமிழீழம் வரை, மீட்டுத்தரும் ஒரு வியூகமாக அமையலாம்!
வன்னிப் போர்முனை விரித்த வலை புதியது,புரியாதது! பல எண்ணற்ற அரசியல் ஆய்வாளர்களின் தலையில் ஏறித் தாண்டவமாடிக் கொண்டது இந்தப் போர்முனை. பலமான ஒரு மையப்பகுதியாக விளங்கியது கிளிநொச்சி. விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியின் முக்கிய தலைநகரமாக விளங்கிய கிளிநொச்சியை விடுதலைப் புலிகள் கைவிடுவதற்கான காரணம் என்ன?
அதன் அறம் புறம் என, உள்ளடகப்பட்ட விடயங்கள் என்ன? வடபோர்முனையில் ஸ்ரீலங்கா இராணுவம் இதுவரை சந்திக்காத பேரிழப்புக்களைச் சந்தித்த போதும்
கிளிநொச்சி மண்ணை விடுதலைப் புலிகள் கைவிடுவதற்கான முழுக் காரணம் என்ன? போரீடும் வலுவை ஸ்ரீலங்கா இராணுவம் இழந்து விடும் சூழல்தான்; கிளிநொச்சியில் இருந்தது.
போர்க்களத்தையோ அல்லது போரையோ எந்த நகரமும் தீர்மானிப்பதில்லைத்தான், இருந்த போதும் வலுவான ஒரு படைபலத்துடன் புலிகள் அங்கு போராடிய போதும், திடீரென கிளிநொச்சியை விட்டு, அதைத் தொடர்ந்து ஆனையிறவு முகமாலையென விடுதலைப் புலிகளின் முக்கிய நிர்வாகப் பகுதியாக விளங்கிய இடங்களையெல்லாம் கைவிட்டுப் போவதற்கான உண்மைக் காரணம் என்ன?
ஸ்ரீலங்கா இராணுவம் வடபோர்முனைக்கான போர் வாயைத் திறந்தபோது இருந்த எதிர்பார்ப்போ, அல்லது கிளிநொச்சியின் வாசல் வரைக்கும் வந்து போரிட்ட திறனோ இங்கு முக்கிய இடத்தைப் பெறவில்லை. வடபோர் முனையில் ஸ்ரீலங்கா படைகள் சண்டையிட்டு பிடித்த இடங்களை விடவும் புலிகள் பின்வாங்கிய இடங்களை படைத்தரப்பினர் பிடித்தனர் என்பதுதான் உண்மை. தந்ரோபாய அடிப்படையில் இடங்களை விட்டு விடுதலைப் புலிகள் பின் வாங்கினார்கள் என்பதுதான் இன்றுவரை இருக்கக் கூடிய யதார்த்தம்.
தந்ரோபாய நடவடிக்கையாக இருந்தாலும, விட்டுக் கொடுப்பின் தன்மை அல்லது விட்டுக் கொடுக்கவென நினைத்த தூரம் இவையாவும் ஒன்றாக சேர்ந்து கொண்டதுதான் இன்றைக்கு நடக்கக் கூடிய முல்லைத்தீவு மீட்கும் போர் என்றால் மிகையாகாது. முல்லைத்தீவை ஸ்ரீலங்கா இராணுவம் மீட்டுவிடும் என்றோ அல்லது விடுதலைப் புலிகளை ஸ்ரீலங்கா அரசு அழித்து விடும் என்றோ அர்த்தமில்லை. கனவு காண்பது என்பது ஒவ்வொரு மனிதனுக்குமான சுதந்திரம் மகிந்த அன்ட் கொம்பனிக்கும் ஒரு கனவிருக்கிறது அவர்களும் காண்கிறார்கள்.
உண்மையில் அரசு திறந்த வடபோர் முனையானது, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு முக்கிய திருப்பு முனையாகத்தான் இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்திருக்கப் போவதில்லை. தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனைப்படி, அவருடைய கடந்தகால போர் வியூகங்களை வைத்து உற்று நோக்கும் போது
ஒரு உண்மை புலப்படும். இராணுவ முகாங்களைத் தேடி சண்டைகளை நகர்த்துவதை விட, அவர்களை இருந்த இடத்துக்கே வரவழைத்து யுத்தம் நடத்துவதன் மூலம் இலக்கை அடையலாம் என்ற கணிப்பாகக் கூட இருக்கலாம்.
ஸ்ரீலங்கா அரசின் சிந்தனையில் இராணுவத் தீர்வு ஒன்றுதான் போரை முடிவுக்கு கொண்டு வரும். இராணுவ வெற்றி மூலம் சமாதானத்தை ஏற்படுத்தி விடலாம் என நம்புகிறது அரசாங்கம்.
ஆகவேதான் அவர்களுடைய சிந்தனை ஓட்டத்திற்கு ஒத்திசைவான போக்கினைக் கொண்டு, அரசாங்கத்தின் இராணுவ பலத்தின் மீது மோதுவதைப் பார்க்கிலும்,
இராணுவ வெற்றியென்ற மமதையில் போரைத் திணித்துக் கொண்டிருக்கும் அரச படைகள் மீது, மெது மெதுவாக வருடிக் கொடுத்தவாறே வாலை நறுக்கும் வித்தையாகக் கூட இந்தப் போரை தேசியத் தலைவர் அவர்கள் வகுத்திருக்கலாம்.
1990 விடுதலைப்புலிகள் மேற்கொண்ட ஓயாத அலைகள் நடவடிக்கை மூலம் கிளிநொச்சி,ஆனையிறவு முகமாலை என நீண்ட போரானது பின்பு அரியாலை வரை காலை நீட்டிக் கொண்டது. அப்போது ஸ்ரீலங்கா படைகளின் மீது அதிக அக்கறை கொண்ட நாடாக இன்றுவரை விளங்கக் கூடிய இந்திய அரசின் தலையீடானது, அந்தப் போர் நடவடிக்கையை கைவிட வேண்டியதாகிப் போய்விட்டது.
தமிழீழ விடுதலைப் போரானது தமிழர் தேசங்களை முற்று முழுதாக மீட்டு, தமிழர் நிலப்பரப்புக்களை ஒரு இராணுவ சஞ்சாரமற்ற பிரதேசமாக உருவாக்குவதே தேசியத் தலைவர் அவர்களுடைய நோக்கம்.
இந்த வன்னிப் போரானது ஸ்ரீலங்கா அரசுக்கும், படைத்தரப்பினருக்கும் அவர்களுடைய நலன்சார் வல்லாதிக்க நாடுகளுக்கும் ஒருபெரும் வெற்றியாக காட்சி கொடுத்தாலும். வன்னிமண் அதன் புவிசார் அமைப்பு என்பதெல்லாம் விடுதலைப்புலிகளுக்கு சாதகமானவைகளே! விடுதலைப் புலிகள் மரபுப் போர்முறையில் தேர்ச்சி பெற்றவர்களாக பல களங்களில் நிருபித்திருந்தாலும் கரந்தடித் தாக்குதல், கரும்புலித் தாக்குதல் என்பவற்றில் அவர்கள் கைதேர்ந்தவர்கள். களங்கள் மாறும் போது யுத்த குணங்களையெல்லாம் மாற்றி போராடக்கூடிய அளவுக்கு தேசியத் தலைவர் அவர்கள் தனது போராளிகளையும் தளபதிகளையும் உருவாக்கி இருக்கன்றார் என்பதுதான் நிஜம்.
அகலக் காலெறிவதில்தான் ஸ்ரீலங்கா படைகளின் வெற்றி அல்லது சிங்கள இனவாதிகளின் குதூகலம் என்றால்? அதன் அர்த்தத்தை அறிவதற்கு நீண்டகாலம் தேவைப்படாது.
உண்மையில் விடுதலைப்புலிகளின் பொறிக்குள்தான் இராணுவமும் உலக வல்லரசுகளும் விழுந்து விட்டனரோ என்ற சந்தேகமும் பரவலாக உள்;ளது.
இன்று அரசாங்கம் திறந்துள்ள முல்லைத்தீவுக்கான போர் என்பது. முழு படைபலத்துடன் கூடிய யுத்தமாக உருவாக்கம் பெற்றள்ள நிலையில், முல்லைத்தீவு எனும் களமே யாழ்ப்பாணம் முதலாக தென்தமிழீழம் வரை, மீட்டுத்தரும் ஒரு வியூகமாகக்கூட இந்தப் போர் இருக்கலாம்.
தலைப்புகள்
முல்லைத்தீவு
0 comments:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.