இந்தியாவைச் சூழும் பேரபாயம் சீனா-பாக்-சிங்களர் கூட்டுச்சதி

இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளைப் புதிய வேகத்துடன் தொடர்வதற்காக சீனாவும் பாகிஸ்தானும் இலங்கையுடன் கைகோர்த்து:க் கொண்டு களத்தில் இறங்கியுள்ளன.
இந்தியாவுடன் பலவகையிலும் பகைமை பாராட்டி வரும் பாகிஸ்தானுடனும் சீனாவுடனும் இணைந்து இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளை சிங்கள அரசு பகிரங்கமாக முடுக்கி விட்டுள்ளது. சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிடமிருந்து ஏராளமான ஆயுதங்களையும் இராணுவ ரீதியான உதவிகளையும் சிங்கள அரசு பெற்று வருகிறது. இதற்குக் கைமாறாக அவை இலங்கையைத் தளமாகக் கொண்டு இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட சிங்கள அரசு ஒப்புதல் தந்துள்ளது.


பாகிஸ்தான்

இந்தியாவில் உள்ள பல்வேறு நாடுகளின் தூதரகங்கள் தில்லியில் அமைக்கப்பட்டுள்ளன. சில நாடுகளுக்கு துணைத் தூதரகங்களை சென்னையில் அமைத்துக் கொள்ள இந்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் பாகிஸ்தான் அரசின் துணைத் தூதுவர் அலுவலகத்தை சென்னையில் நிறுவிக்கொள்ள இதுவரை இந்திய அரசு அனுமதி தரவில்லை. தென்னிந்தியாவின் முக்கிய நகரமாக விளங்கும் சென்னையில் பாகிஸ்தானின் துணைத் தூதுவர் அலுவலகம் இயங்க அனுமதித்தால் அதன் விளைவுகள் இந்தியாவின் பாதுகாப்பு நலன்களைப் பெரிதும் பாதிக்கும் என்ற காரணத்தினால் இந்த அனுமதி மறுக்கப்பட்டே வந்தது.

இந்தியாவின் வடக்கு எல்லையில் சீனாவும் மேற்கு எல்லையில் பாகிஸ்தானும் இந்தியாவின் பாதுகாப்புக்கு அறைகூவல்கள் விட்டுக்கொண்டிருக்கும் நிலையில் வடஇந்திய மாநிலங்களில் இந்திய பாதுகாப்புத் துறையின் தொழிற்சாலைகள் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த தொழிற்சாலைகள் அமைக்கப்படுவதை இந்திய அரசு தவிர்த்தே வந்திருக்கிறது., ஆயுதத் தொழிற்சாலைகளும் முக்கிய பெரிய தொழிற்சாலைகளும் தென்னிந்தியாவிலேயே அமைக்கப் பெற்றுள்ளன. சென்னை ஆவடியில் டாங்கித் தொழிற்சாலை, திருச்சியில் துப்பாக்கித் தொழிற்சாலை, உதகமண்டலத்தில் வெடிமருந்துத் தொழிற்சாலை, பெங்களூரில் விமான உற்பத்தித் தொழிற்சாலை போன்ற பல முக்கியமான தொழிற்சாலைகள் தென்னிந்தியாவில் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, சென்னையில் பாகிஸ்தான் துணைத் தூதரகம் அமைக்கப்படுவதன் மூலம் இத்தொழிற்சாலைகள் குறித்த உளவறியும் பணியிலும் நாச வேலைப் பணிகளிலும் ஈடுபட பாகிஸ்தானுக்கு வசதியாக இருக்கும் என்பதால் இதுவரை சென்னையிலோ அல்லது தென்னிந்தியாவின் எந்த நகரத்திலோ பாகிஸ்தானின் துணைத் தூதரகம் அமைக்க இந்திய அரசு ஒப்புக்கொள்ளவில்லை.

ஆனால் தென்னிந்தியாவிற்கு மிக அருகில் உள்ள இலங்கையில் செயல்பட்டுவந்த பாகிஸ்தான் தூதரகத்தை தென்னிந்தியாவில் தனது நடவடிக்கைகளுக்குரிய தளமாக மாற்ற பாகிஸ்தான் அரசு முடிவு செய்தது. எனவேதான் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் இயக்குநராக இருந்து ஓய்வுபெற்ற பசீட் வாலி முகமது என்பவரை இலங்கையில் தனது தூதுவராக பாகிஸ்தான் நியமித்தது. இலங்கையின் கிழக்கு மாநிலத்தில் சிங்கள அரசுக்கு ஆதரவாக இயங்கும் ஜிகாத் குழுவினருக்கு பாகிஸ்தானில் பயிற்சி அளிக்கவும் ஆயுதங்கள் வழங்கவும் திட்டமிட்டு இவர் உதவினார். கோவையில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் இவருக்குத் தொடர்பு இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. சிங்கள அரசுக்கு இரண்டு கப்பல்கள் நிறைய ஆயுதங்களை பாகிஸ்தானில் இருந்து பெற்றுத் தந்தவர் இவரே. சிங்கள அரசுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மிக நெருக்கமான உறவை ஏற்படுத்தியவரும் இவர்தான். அண்மையில் கொழும்பில் இவருக்கு எதிராக நடந்த தாக்குதலில் எப்படியோ தப்பிப் பிழைத்தார். இந்திய 'ரா' உளவுத்துறைதான் தன்னைப் படுகொலை செய்ய முயன்றதாக இவர் குற்றம்சாட்டினார்.

இவர் பதவியில் இருந்து விலகிச்சென்ற பிறகு பாகிஸ்தான் விமானப் படையின் துணைத் தலைமைத் தளபதியாக இருந்து அண்மையில் ஓய்வுபெற்ற ஏர்வைஸ்' மார்சல் சேக் சட் அஸ்லம் சவுத்திரி என்பவரை இலங்கையின் தூதுவராக பாகிஸ்தான் நியமித்துள்ளது.

பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் பகுதியில் நடைபெற்றுவரும் விடுதலைப் போரை ஒடுக்குவதில் பாகிஸ்தானிய விமானப்படையை இவர் தீவிரமாகப் பயன்படுத்தினார். சீனாவுடன் இணைந்து ஜே.எப்-17 என்னும் அதிரடித் தாக்குதல் விமானங்களை உற்பத்தி செய்வதற்கான உடன்பாட்டை நிறைவேற்றியவர் இவர். சீனா மற்றும் வடகொரியாவிடமிருந்து எம்.9, எம்-11 ஏவுகணைகளை ரகசியமாக கொள்முதல் செய்ததில் இவர் பங்கு முக்கியமானதாகும். இத்தனை திறமை வாய்ந்த ஒரு நபரை இலங்கை போன்ற சிறிய நாட்டிற்கு தூதுவராக பாகிஸ்தான் அனுப்பி வைத்திருப்பது ஆழமான சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இந்தியாவின் முக்கியத் தொழில் மையங்களும் ஆயுதத் தொழிற்சாலைகளும் நிறைந்திருக்கும் தென் இந்தியாவை இலக்கு வைத்தே மிக உயர்நிலை அதிகாரிகளை இலங்கைக்கு தனது தூதுவராக பாகிஸ்தான் நியமித்து வருகிறது. தென் மாநிலங்களின் தலைநகரங்களாக விளங்கும், சென்னை, பெங்களூர், திருவனந்தபுரம், ஹைதராபாத் போன்றவற்றிலும் இம்மாநிலங்களைச் சேர்ந்த பிற முக்கிய நகரங்களிலும் மதரீதியான மோதல்களை ஏற்படுத்த நடைபெற்ற முயற்சிகள் வெற்றிபெறவில்லை. மும்பை நகரில் மத மோதல்களை உருவாக்குவதில் பாகிஸ்தான் வெற்றிப்பெற்றதைப் போல மேற்கண்ட நகரங்களில் ஏற்படுத்த முயன்று தோல்வியை பாகிஸ்தான் சந்தித்துள்ளது. ஆனால் கொழும்புவில் பாகிஸ்தான் புலனவாய்வுத் துறையால் பயிற்றுவிக்கப் பட்டவர்கள் இந்த நகரங்களில் எளிதில் ஊடுருவும் சாத்தியங்கள் அதிகரித்துள்ளன. இத்தகைய ஊடுருவல்கள் இந்தியாவின் அரசியல் நிலைத்தன்மைக்கு ஆபத்தை விளைவிக்கும். ஆனால் இந்திய அரசின் மேல்மட்டத்தில் உள்ளவர்கள் இந்தியாவிற்கு எதிரான சதிச்செயல்களை ஊக்குவிக்கும் தளமாக கொழும்பு பயன்படுத்தப்படுவதையும் அதற்கு சிங்கள அரசு உறுதுணையாக இருந்து வருவதையும் இன்னமும் உணரவில்லை.


சீனா

1962ஆம் ஆண்டு இந்தியாவின் வட எல்லைப் பகுதியில் பெரும் படையெடுப்பை நடத்தி பெரும் பகுதியைக் கைப்பற்றியது சீனா. இதன் விளைவாக இருநாடுகளுக்கும் இடையே மூண்ட போர் என்பது உலக நாடுகளின் தலையீட்டால் நிறுத்தப்பட்டது. ஆனாலும் இந்தியாவுக்கு எப்போதும் அச்சுறுத்தல் தரும் வகையில் சீனப்படைகள் வடஎல்லையில் இன்னமும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவுடன் பகைமை உணர்வு கொண்டுள்ள பாகிஸ்தானை தனது நட்பு நாடாக சீனா தக்கவைத்துள்ளது. இமயமலைப் பகுதியில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கு பாகிஸ்தானை சீனா பயன்படுத்துகிறது. இந்தியாவுக்கு எதிராக தனது முற்றுகை வலையை சீனா திட்டமிட்டு விரித்துள்ளது.

வங்க தேசத்தின் சிட்டகாங் துறைமுகத்தில் வலிமையான கடற்படைத் தளத்தை சீனா அமைத்துள்ளது.

இந்தியாவின் மற்றொரு அண்டை நாடான பர்மாவிலும், சிங்கப்பூரிலும் கடற்படைத் தளங்களை சீனா அமைத்துள்ளது. இந்தியாவிற்குத் தெற்கே மாலத்தீவிலும் தனது ராணுவ நிலையை சீனா உறுதிசெய்துள்ளது.

பாகிஸ்தானில் உள்ள கத்வார்த் துறைமுகத்தை பெரும் செலவில் உருவாக்கி அரபிக் கடல் பகுதியிலும் இந்தியாவுக்கு ஒரு அச்சுறுத்தலை சீனா உருவாக்கியுள்ளது. இவ்வாறு இந்தியாவைச் சுற்றி தனது முற்றுகைத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.

இப்போது இலங்கையிலும் சீனா காலூன்றியுள்ளது., இதற்கான முன்னேற்பாடுகள் ஜெயவர்த்தனா இலங்கையின் அதிபராக இருந்தபோது தொடங்கப்பட்டன. 1984ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஜெயவர்த்தனா சீனாவுக்குச் சென்று அதன் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். சிங்களக் கடற்படையை வலிமையாக்குவதற்கு உதவிகோரினார். இதிலிருந்து தொடர்ந்து இலங்கை சீனா உறவு மிகநெருக்கமடைந்தது. இலங்கையில் சீனாவின் முதலீட்டு மதிப்பானது 2001 ஆம் ஆண்டில் 13 மில்லியன் அமெரிக்க மில்லிய டாலராக உயர்ந்தது. சேதுக்கால்வாய் திட்டத்தை இலங்கை எதிர்ப்புக்கிடையே இந்தியா தொடங்கிவிட்ட நிலையில் அதற்குப் போட்டியாக இலங்கையின் அம்பந்தோட்டை துறைமுகத்தை சீரமைத்துக்கொடுக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது.

இப்போது தமிழகத்தின் எதிர்க் கரையில் மன்னார் வளைகுடாப் பகுதியில் சீனாவை இலங்கை இறக்கிவிட்டுள்ளது. இந்தியாவின் இறையாண்மைக்குப் பெரும் அறைகூவலாகும். காவிரிப் படுகைப் பகுதியில் எண்ணெய் வளம் உள்ளது. இந்த எண்ணெய் வளத்தில் 65 சதவீதம் தமிழ்நாட்டுப் பகுதியிலும் 35 சதவீதம் இலங்கையில் உள்ள மன்னார் பகுதியிலும் உள்ளது.

1956ஆம் ஆண்டில் காவிரிப்படுகையில் எண்ணெய் வளம் இருப்பதை சோவியத் நிபுணர்கள் உறுதி செய்தனர். 1960களின் தொடக்கத்தில் இலங்கை அரசும் மன்னார் பகுதியில் எண்ணெய் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டது. இதன் விளைவாக 1980களின் நடுவில் அங்கு எண்ணெய் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மன்னார் எண்ணெய்ப் படுகையானது மொத்தம் 6 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் 2 பகுதிகளை சீனாவிற்கு சிங்கள அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டின் கடற்கரையில் இருந்து 20 மைல் தொலைவில் சீன நிபுணர்கள் எண்ணெய் எடுக்கும் பணியில் ஈடுபடுவார்கள். அத்துடன் உளவு வேலைகளிலும் அவர்கள் ஈடுபடும் சாத்தியம் உள்ளது.

இந்தியாவும் இலங்கையும் செய்துகொண்டுள்ள உடன்பாட்டின்படி மன்னார் வளைகுடாப் பகுதியில் உள்ள எண்ணெயை எடுக்கும் முயற்சியில் இருநாடுகளும் கூட்டாக ஈடுபடவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த உடன்பாட்டிற்கு எதிராக இப்போது சீனாவிற்கு எண்ணெய் எடுக்கும் உரிமையை சிங்கள அரசு வழங்கியிருப்பதின் மூலம் இந்தியாவின் தெற்கு எல்லை வாயிலில் சீனா நுழைவதற்கு இடமளித்திருக்கிறது.


யார் காரணம்?
இந்தியாவைச் சுற்றிலும் உள்ள நாடுகளில் சீனா தனது தளங்களை அமைப்பதற்கும் இலங்கையில் சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா போன்ற நாடுகள் ஊடுருவுவதற்கும் பொறுப்பு யார் என்பதை டெல்லியில் உள்ள அதிமேதாவிகள் எண்ணிப்பார்க்க வேண்டும். இந்தியாவின் பிரதேசப் பாதுகாப்பு நலன்களுக்கு உள்பட்ட நாடுகளாக நேபாளம், பூடான், இலங்கை, மாலத்தீவு ஆகிய நாடுகளை இந்தியா கருதியது. இந்த நாடுகளும் தங்களின் வெளியுறவுக் கொள்கையைப் பொறுத்தவரையில் இந்தியாவுக்கு எதிராக எதுவும் செய்வதில்லை என்ற கொள்கையை கடைப்பிடித்துவந்தன.

இந்தியாவின் பிரதமராக இந்திரா காந்தி இருந்தபோது 'இந்துமாக் கடல்பகுதியில் எந்த அந்நிய வல்லரசின் தளம் அமைக்கப்பட்டாலும் அது இந்தியாவுக்கு எதிரான செயலாகக் கருதப்படும் அதை ஒருபோதும் இந்தியா அனுமதிக்காது' என இந்திய நாடாளுமன்றத்தில் வெளிப்படையாகவே எச்சரித்தார். திரிகோணமலையில் இருந்த எண்ணெய் குதங்களை குத்தகைக்கு அமெரிக்காவுக்கு கொடுக்கும் பிரச்சினையிலும் 'வாய்ஸ் ஆப் அமெரிக்கா' வானொலி தளம் இலங்கையில் அமைவதற்கும் சிங்கள அரசு ஒப்புக்கொண்டபோதும் பிரதமர் இந்திரா அதில் தலையிட்டு சிங்கள அரசை எச்சரித்தார். இதன் விளைவாக சிங்கள அரசும் அமெரிக்காவும் பின்வாங்கின. இந்திரா காந்தியின் காலம் வரையில் இலங்கையில் ஊடுருவுவதற்கு அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல், பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் துணியவில்லை. இந்நாடுகளின் ராணுவ உதவிகளைப் பெற சிங்கள அரசும் துணியவில்லை. ஆனால் அவரின் மறைவுக்குப் பிறகு பிரதமராக ராஜிவ் காந்தி பொறுப்பேற்றபோது நிலைமை அடியோடு மாறியது. திறமையும் அனுபவமும் குறைந்தவர் ராஜீவ் காந்தி என்பதை உணர்ந்து கொண்ட சிங்கள அரசு இந்தியாவின் நலன்களுக்கு எதிராகத் துணிந்து செயல்படத் தொடங்கியது. இந்தியக் கொள்கை வகுப்பாளர்களாகவும் ராஜீவ் காந்தியின் ஆலோசகர்களாகவும் இருந்தவர்கள் அவருக்குத் தவறான வழியைக் காட்டினார்கள். அவர்களின் ஆலோசனையின் பேரில் ஜெயவர்த்தன விரித்த வஞ்சக வலையில் ராஜிவ்காந்தி வீழ்ந்தார். ஜெயவர்த்தனாவுடன் அவர் செய்துகொண்ட உடன்பாட்டினை தமிழர்களும் ஏற்கவில்லை. சிங்களவர்களும் எதிர்த்தார்கள். ஜெயவர்த்தனாவுக்குப் பின் பதவியேற்ற பிரேமதாசாவின் காலத்தில் இந்தியப் படை உடனே வெறியேறவேண்டும் என்று வற்புறுத்தினார். தமிழர்களும் சிங்களர்களும் விரும்பாத நிலையில் இந்தியப் படை அவமானகரமாக வெளியேற வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

இலங்கையில் அந்நிய நாடுகள் ஊடுருவுவதை பிரதமர் இந்திரா வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியதுபோல ராஜிவ்காந்தியால் நிறுத்த முடியவில்லை. எல்லா வகையிலும் ராஜிவ் காந்தியின் வெளியுறவுக் கொள்கை படுதோல்வியடைந்தது. அவரது தவறான அணுகுமுறையின் விளைவாக ஈழத் தமிழர்கள் பெரும் பாதிப்புக்குள்ளானார்கள். அதைவிட அதிகமான அளவில் இந்தியாவின் பிராந்திய நலன்களும் மிகப்பெரிய இழப்புகளுக்கு ஆளாயின. இலங்கையில் இராசதந்திர ரீதியாக மட்டுமல்ல இராணுவரீதியாகவும் அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான், இஸ்ரேல் போன்ற நாடுகள் தங்கள் தடத்தைப் பதித்துள்ளன. இதன் விளைவாக இந்தியா தனது தென்வாயிலில் அபாயத்தை உருவாக்கிக்கொண்டுள்ளது.

ராஜிவ்காந்தியின் தோற்றுப்போன அணுகுமுறையையே இன்னமும் இந்திய அரசு கடைப்பிடித்துவருவது வெட்கக்கேடானது. இந்த வெளியுறவுக் கொள்கை என்பது இந்தியாவிற்கு எதிரான சக்திகளோடு கரம் கோர்த்துக் குளாவிக்கொண்டிருக்கக்கூடிய சிங்கள அரசுக்கு சாதகமாக இருக்கிறது என்பதுதான் வேதனைக்குரியதாகும். இந்திய ராணுவத்தின் ஓய்வு பெற்றத் தளபதியான லெப். கர்னல் தாகூர் குல்துப் எஸ். உத்ரா என்பவர் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ள வற்றை இங்கே சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும்.

'சர்வதேச அளவில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே முருகல் நிலை ஏற்படும்போது சிங்கள அரசு அமெரிக்காவின் பக்கம் சார்ந்து இருந்தால் இந்தப் பிரதேசம் முழுதும் பெரும் போர்க்களமாக மாறும். இந்தியாவுக்கு எதிராக டிக்கோகாசியாவில்- கொழும்பு, திரிகோணமலை, சிங்கப்பூர் தளங்களில் இருந்து அமெரிக்கா இயங்கும். இந்த நிலையில் சிங்கள அமெரிக்கக் கூட்டை எதிர்ப்பதில் இந்தியாவின் முக்கிய கூட்டாளிகளாக ஈழத்தமிழர்கள்தான் இருப்பார்கள்.

ஆசிய பிராந்திய அளவில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் முருகல் நிலை ஏற்படும் சி,ஙகள அரசு சீனாவின் பக்கம் நிற்கும். பாகிஸ்தானும் அந்த அணியில் இணைந்து இந்தியாவிற்கு எதிரான முக்கூட்டு உருவாகும். அப்போது இந்தியாவின் கடற்படையை அந்த அணி வீழ்த்தும் சாத்தியம் உள்ளது. அத்தகைய அணிக்கெதிராக மூன்றுக்கும் மேற்பட்ட களமுனைகளை இந்தியா உருவாக்கவேண்டியிருக்கிறது.,

பிரதேச அளவில் இலங்கையும் பாகிஸ்தானும் இணைந்து நிற்பது இந்தியாவுக்கு சிக்கலை ஏற்படுத்தும். எனவே அத்தகைய சூழ்நிலையில் இலங்கையில் உள்ள தமிழர்களை இந்தியா ஆதரிக்க வேண்டும். இலங்கையோடு சீனா இணையாமல் தடுக்க வேண்டுமானால் திரிகோணமலைத் துறைமுகத்தை ஈழத்தமிழர்களின் உதவியுடன் இந்தியா காப்பாற்ற வேண்டியிருக்கும்.' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் கொண்டிருக்கும் நிலைப்பாடு இலங்கையில் அந்நிய வல்லரசுகள் காலூன்றுவதற்கு வழிவகுத்துவிட்டது. இதன் விளைவாக இந்தியாவின் இறையாண்மைக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஆனால் அதைச் சற்றும் உணராமல் சிங்கள அரசுக்கு இன்னமும் ஆயுத உதவிகளை இந்தியா செய்துகொண்டிருக்கிறது. இதன் மூலம் இந்தியாவின் இறையாண்மையை சிங்கள அரசுக்கு அவர்கள் விற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

0 comments:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.