திட்டமிடப்பட்ட சீர்திருத்தமே அவசியம்


தூரநோக்கற்ற திட்டங்களாலும் செயற்பாடுகளினா லும் நாட்டின் பல்வேறு துறைகளும் சீரழிந்து வருவது வெளிப்படையானது.இவ்வாறு குழம்பிவரும் துறைகளுள் நாட்டின் கல்வித் துறை பிரதானமானது. காலத்துக்குக் காலம் ஆட்சிக்கு வந்த அரசுகள் ஒவ்வொன்றும் தத்தமது கொள்கைகள், கோட் பாடுகள், சிந்தனைகள், எண்ணங்கள் என்பனவற்றுக்கு ஏற்ப கல்விச் சீர்திருத்தம் என்ற பெயரில் அவ்வப்போது கொண்டுவந்த ஏற்பாடுகளும், ஒழுங்குகளும், மாற்றங்க ளும் திருப்திதரத் தக்கனவாக அமையவில்லை என்பதே பொதுவான குற்றச்சாட்டு.ஓர் அரசுஆட்சிக்கு வந்ததும் கல்விச் சீர்திருத்தத்துக்கான "வெள்ளை அறிக்கை"என்று தொடங்கி ஆரம்பிக்கும் ஏற் பாடுகள் அடுத்த அரசுவரும்போது சீந்துவாரின்றி கேட்பாரின்றி அலுமாரிகளுக்குள் தூசுபடிந்து அடங்கிப் போய் விடுவது வழமை.பாடத்திட்டங்கள் மாத்திரமின்றி, பரீட்சை முறைகள் மாத்திரமின்றி, அடிப்படைக் கல்வி முறைமைகளிலேயேஅவ்வப்போது மாற்றங்கள் வருவதும், பின்னர் சில ஆண்டுகளில் அவை அடிபட்டுப் போவதும்தான் நமது கல்வித்துறையின் பட்டறிவு.மாறிவரும் நவீன கல்விப் பண்பியல்புகளுக்கு ஏற்ப நாட்டின் கல்வி முறைமையும் மாறவேண்டும் என்பதும், சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டியமை இன்றியமை யாதது என்பதும் ஏற்புடையவையே. ஆனால் நாளொரு கொள்கை, தவணை ஒரு மாற்றம் என்பது அவசியமற்றது.
அதேபோல, கல்விச் சீர்திருத்தங்கள் தீர்க்க தரிசனத்துடன் முன்னெடுக்கப்படுவதும் மிகவும் முக்கியமானதாகும்.ஆங்கிலத்தில் இருந்த நமது நாட்டின் கல்விமுறை மிகுந்த சர்ச்சைகளின் மத்தியில் அறுபதுகளின் முற் பகுதியில் சுயமொழிப் போதனை முறைக்கு மாற்றப்பட் டது. அது சரியா, தவறா என்ற சர்ச்சை இற்றைவரை தொடர் கின்றது. நாட்டில் தேசிய இனப்பிரச்சினை இத்துணை கூர் மையுடன் முரண்பாடடைவதற்கு பொது மொழியான ஆங்கிலத்தில் அமைந்த கல்வி முறைமை நீக்கப்பட்டு, தமிழ், சிங்களத் தேசிய மொழிகளில் இரு சாராரும் பிரிந்து கற்கவேண்டிய நிலைமை ஏற்பட்டதும் பிரதான காரணம் என்று வாதிடுவோர் உள்ளனர்.இப்போதும் கூட இவ்விடயத்தில் தீர்க்க தரிசனமற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்று சுட்டிக் காட்டப்படுகிறது.சுயமொழிக் கல்விப்போதனை ஏற்படுத்திய விளைவு களின் தாக்கத்தை உணர்ந்தோ என்னவோ அரசுதிடீரென ஆங்கில மொழிமூலக் கல்வி முறைமையை பழைய திட்டத்தை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நாட்டில் திடீ ரெனக் கொண்டுவந்தது. உரிய முன் ஆயத்தங்களைச் செயயாமல்.
இப்போது இந்தத் திட்டத்தின் கீழ் ஜி.சீ.ஈ. (சாதாரண தரம்) வரை ஆங்கிலத்தில் பயின்று சித்தியடைந்த கணிச மான எண்ணிக்கையான மாணவர்கள் ஜி.சீ.ஈ. (உயர்தரம்) வகுப்புகளை ஆங்கிலத்தில் தொடரக் காத்திருக்கின்றார் கள். ஆனால் அவர்களுக்கு ஆங்கில மொழியில் அந்தப் பாடங்களைப் போதிப்பதற்கு உரிய பயிற்சியும் தேர்ச்சியும் பெற்ற ஆசிரியர்கள் இல்லை. அதனால் இந்த மாணவர்கள் இன்று "திரிசங்கு செõர்க்க நிலையில் தவிக்கும் அந்தரிக்கும் ‹ழல் ஏற்பட்டிருக்கின்றது.அரச பாடசாலைகளில் மீண்டும் ஆங்கில மொழிமூலக் கல்வியை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேனும் அறிமு கப்படுத்துவதில் கரிசனை காட்டிய கல்வித்துறை நிர்வாகி கள், அந்த மாணவர்கள் உயர்தர வகுப்புக்குள் நுழையும் போது அவர்களுக்குரிய போதனையை வழங்குவதற்குரிய தேர்ச்சியும், பயிற்சியும், தகுதியும் பெற்ற ஆசிரி யர்களை ஏற்பாடு செய்யாமல் இந்த விடயத்தில் இறங்கியமை கவலைக்குரியது.கடந்த தடவை ஆறாயிரத்துக்கும் அதிகமான மாணவர் கள் ஜி.சீ.ஈ. (சாதாரணதரம்) பரீட்சைக்கு ஆங்கில மொழியில் தோற்றியிருந்தனர். அவர்களில் பெரும்பான் மையானோர் உயர்தர வகுப்புக்கான ஆங்கிலமொழிமூல ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாகத் தமது உயர்வ குப்புப் பாடங்களை மீண்டும் சுயமொழியில் தமிழ் அல்லது சிங்களத்தில் தொடர வேண்டிய கட்டாயத் துக்கு உள்ளாகியிருக்கின்றனர் என்று கூறப்படுகின்றது.இப்படி ஜி.சீ.ஈ. (சாதாரண தரம்)வரை ஆங்கில மொழிமூலம் போதனையை நடத்திய மொத்தம் 601 பாடசாலைகளில் ஆக 57 பாடசாலைகளில் மட்டுமே உயர்தரம் ஆங்கில மொழியில் சில பிரிவுகளுக்கேனும் போதனை வழங்குவதற்கு ஆசிரியர்கள் உள்ளனர் என் கின்றன புள்ளி விவரங்கள்.
இதன்படி, இந்த மாணவர்கள் தமது கல்வியைத் தொடர்வதற்கு பல்வேறு பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற குறைந்த பட்சம் நானூறு ஆங்கில மொழிமூல ஆசிரியர் களாவது அவசரமாகத் தேவை என்றும் சுட்டிக்காட்டப் படுகின்றது.இந்த ஆசிரிய வள ஆளணியை உடன் தேடிப் பெறுவ தற்கான வாய்ப்புகள் மிகமிகக் குறைவு என்றும் கூறப்ப டுவதால், தமது பிள்ளைகளை ஆங்கில மொழி மூலக் கல்விக்கு மாற்றிய பெற்றோர்கள் அந்த வழியில் அவர்கள் கல்வியைத் தொடர்வதற்கான விடயத்தில் அடியோடு நம்பிக்கை இழந்தவர்களாகி வருகின்றனர்.ஆங்கில மொழிமூல உயர்வகுப்புக் கல்வி வசதி உள்ள பாடசாலைகளைத் தேடி அவர்கள் அலைகின்றனர். அத்த கைய பாடசாலைகளில் தமது பிள்ளை தேர்ச்சிபெற்று கல்வித்துறையில் தொடர்வதற்கு வசதி இல்லாவிட்டால், அங்கு இருக்கும் துறைக்குத் தமது பிள்ளைகளைக் கட்டா யப்படுத்தி மாற்றும் இக்கட்டும் அவலமும் அவர்க ளுக்கு நேர்ந்திருக்கின்றது.
இதனால் விஞ்ஞானத்திலோ, கலைத் துறையிலோ தேர்ச்சிபெற்ற பிள்ளை வர்த்தகத்துறைக்கோ,வர்த்தகத்துறையில் தேர்ச்சிபெற்ற பிள்ளை பிற துறைக்கோ கட்டாயப்படுத்தி மாற்றப்பட்டுக் கல்வியைத் தொடரும் நிலையும் வந்திருக்கின்றது."பாடசாலைகளில் ஆங்கில மொழிமூலக் கல்வியை மீண்டும் ஏற்படுத்தும் முயற்சியை உரியமுறையில் திட்ட மிடாமல் கல்வி அமைச்சுமுன்னெடுத்ததால் வந்த வினை இது!" என்கின்றார் இலங்கை ஆசிரியர் தொழிற் சங்கத்தின் தலைவர் ஜோஸப் ஸ்டாலின்.பாவம், இந்தப் பிள்ளைகள்!

மனிதகுல சரித்திரத்தில் முன்னென்றும் இல்லாத பட்டினி


ஐக்கிய நாடுகள் உணவு விவசாய நிறுவனம் கடந்த வாரம் வெளியிட்டிருக்கும் அறிக்கையொன்றில் உலகில் தற்போது 100 கோடிக்கும் அதிகமான மக்கள் பட்டினிக் கொடுமையில் வாடுவதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தற்போது தீவிரமடைந்திருக்கும் சர்வதேச பொருளாதார மந்தநிலை நெருக்கடி காரணமாக கடந்த வருடத்தை விட பட்டினி கிடப்போரின் எண்ணிக்கை சுமார் 10 கோடியால் அதிகரித்திருக்கிறது என்றும் இன்றைய மனித குலத்தின் ஆறில் ஒருபங்கினர் பட்டினி அவலத்திற்குள் தள்ளப்பட்டிருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் 64 கோடி 20 இலட்சம் மக்களும் ஆபிரிக்காவின் தென்பிராந்திய நாடுகளில் 26 கோடி 50 இலட்சம் மக்களும் லத்தின் அமெரிக்க மற்றும் கரிபியன் பிராந்தியத்தில் 5 கோடி 30 இலட்சம் மக்களும் மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் 4 கோடி 20 இலட்சம் மக்களும் அபிவிருத்தியடைந்த நாடுகளில் ஒரு கோடி 50 இலட்சம் மக்களும் பட்டினியில் வாடுவதாக உணவு விவசாய நிறுவனத்தின் மதிப்பீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மனித குலத்தின் சரித்திரத்திலேயே இந்தளவு பெரிய எண்ணிக்கையில் மக்கள் பட்டினிக் கொடுமையால் வாடுவது இதுவே முதற்தடவையாகும் என்று உணவு விவசாய நிறுவனத்தின் அபிவிருத்தி திணைக்களப் பணிப்பாளரான கோஸ்ராஸ் ஸ்ரமோலிஸ் சுட்டிக்காட்டியிருக்கிறார். உலக சனத் தொகையில் ஆறில் ஒருபங்கினர் அதாவது 102 கோடி பேர் பட்டினி அவலத்தில் சிக்கியிருக்கும் தற்போதைய நிலைவரம் உலகின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் பாரதூரமான அச்சுறுத்தலைத் தோற்றுவிக்கும் என்று எச்சரிக்கை செய்திருக்கும் உணவு விவசாய நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் ஜாக்குவெஸ் டியோவ் உலகில் பட்டினியை துரிதமாக ஒழிப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பரந்தளவிலான கருத்தொற்றுமை காணப்பட வேண்டியது அவசியமாகும் என்று வலியுறுத்தியிருக்கிறார். விவசாயத்துறையை குறிப்பாக சிறுபயிர்ச் செய்கையாளர்களை ஊக்குவிப்பதற்கான பொருளாதார உதவிகளை அரசாங்கங்கள் வழங்க வேண்டும். பெரும்பாலான வறிய நாடுகளைப் பொறுத்தவரை துடிப்பு மிக்க விவசாயத்துறையே வறுமையையும் பட்டினியையும் வெற்றி கொள்வதற்கு அவசியமானது என்பதுடன் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சிக்கும் விவசாயத்துறையே முன்தேவையாக இருப்பதால் அத்துறையிலான முதலீடுகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் டியோவ் ஆலோசனை தெரிவித்திருக்கிறார்.

தினமொன்றுக்கு மனிதர்களுக்குச் சராசரியாகத் தேவைப்படுகின்ற 1,800 கலோரிகளைவிடவும் குறைவான கலோரிகளை உட்கொள்பவர்களே போஷாக்கின்மையினால் பாதிக்கப்படுகிறார்கள். இதை அளவுகோலாகக் கொண்டே பட்டினியால் வாடுபவர்களை உணவு விவசாய நிறுவனம் மதிப்பிடுகிறது. அதன் அடிப்படையில் நோக்குகையில் இன்று உலகில் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் தினமொன்றுக்கு 1,800 கலோரிகளுக்கும் குறைவாகவே உட்கொள்கிறார்கள். கடந்த வருடம் பட்டினியில் வாடுபவர்களின் எண்ணிக்கை 91 கோடி 50 இலட்சம் என்று கணிப்பிடப்பட்டிருந்தது. இவ் வருடம் முதல் 6 மாதங்களுக்குள் அந்த எண்ணிக்கை 11 சதவீதத்தினால் அதிகரித்திருப்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது. உலகில் சனத்தொகை அதிகரிக்கும் வேகத்தை விட பட்டினிக் கொடுமைக்குள் தள்ளப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வேகம் கூடுதலானதாக இருக்கிறது. இந்தப் பட்டினி நெருக்கடிக்கு உலகின் எந்தப் பிராந்தியமுமே விதிவிலக்கில்லை. உலகின் சகல பகுதிகளுமே இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. உலகில் போஷாக்கின்மையால் வாடுவோரில் அதிகப் பெரும்பான்மையானவர்கள் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளிலேயே வாழ்கிறார்கள். கடந்த வருடத்தில் இருந்து உலகின் சகல பிராந்தியங்களிலும் பட்டினி வீதம் இரட்டை இலக்கத்தில் அதிகரிக்க ஆரம்பித்ததை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.

உணவு விவசாய நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் விபரங்களின் படி உலகில் உள்ள வறிய பாவனையாளர்கள் தங்களது வருமானத்தில் 60 சதவீதத்தை அன்றாடம் தேவைப்படுகின்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கே செலவிடுகிறார்கள். இதன் அர்த்தம் அந்த மக்களின் கொள்வனவுச் சக்தி கடுமையான அளவுக்கு வீழ்ச்சி கண்டிருக்கிறது என்பதேயாகும். 20062008 கால கட்டத்தில் உலகில் நிலவிய எரிபொருள் உணவுத் தானிய நெருக்கடிக்குப் பிறகு தற்போது உலகச் சந்தையில் பொருட்களின் விலைகள் குறைவடைந்திருந்தாலும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் உணவுக்கான செலவு இப்போது மேலும் கூடுதலானதாகவே இருக்கிறது. சர்வதேச பொருளாதார மந்தநிலை காரணமாக நகரங்களில் வாழ்கின்ற வறிய மக்களே கூடுதலான நெருக்கடிகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்று ஐ.நா.எச்சரிக்கை செய்திருக்கிறது. ஏற்றுமதிக்கான கிராக்கி குறைவதனாலும் வெளிநாட்டு முதலீடுகளில் வீழ்ச்சி ஏற்படுவதனாலும் நகர்ப்புறங்களில் தொழில்களைத் தேடிக்கொள்வது பெரும் கஷ்டமாக இருக்கப் போகிறது. பொருளாதார மந்தநிலை மக்களின் வருமானங்களில் கடும் வீழ்ச்சியையும் வேலையில்லாத் திண்டாட்டத்தில் கடும் அதிகரிப்பையும் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.

றோம் நகரைத் தலைமையகமாகக் கொண்டிருக்கும் இன்னொரு ஐ.நா. உணவு நிறுவனமான உலக உணவுத் திட்டத்தைச் சேர்ந்த உயரதிகாரியான ஜோசெற் ஷீரான் வெளியிட்டிருக்கும் விபரங்களின்படி கடந்த வருடம் குறைந்தது 30 நாடுகளில் பட்டினியால் வாடிய மக்கள் கலவரங்களில் ஈடுபட்டிருந்ததாக தெரிய வருகிறது. உணவுப் பொருட்களின் விலைகள் கடுமையாக அதிகரித்ததை ஆட்சேபித்து கரிபியன் நாடான ஹெய்டியில் இடம்பெற்ற கலவரங்களையடுத்து பிரதமர் பதவியில் இருந்து தூக்கியெறியப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பட்டினி உலகம் மிகவும் அபாயகரமானதாகும். ஒருநாட்டில் உணவு இல்லாவிட்டால் மக்களுக்கு மூன்று மார்க்கங்களே இருக்கின்றன. கலவரங்களில் ஈடுபடுவது, நாட்டை விட்டு வெளியேறுவது அல்லது செத்து மடிவது இவையே அந்த மூன்று மார்க்கங்களாகும். இவற்றில் எந்தவொன்றையும் மக்கள் தெரிவு செய்து கொள்வது ஏற்புடையதல்லவே.

ஐக்கிய நாடுகள் 2000 ஆம் ஆண்டில் நிர்ணயித்த மிலேனியம் அபிவிருத்தி இலக்குகளில் பிரதானமானது உலகில் வறுமையை 2015 ஆம் ஆண்டளவில் அரைவாசியாகக் குறைப்பது என்பதாகும். இந்த இலக்கை நோக்கிய செயற்பாடுகளுக்காக வரையறுக்கப்பட்ட 15 வருட காலகட்டத்தில் அரைவாசிக்கும் கூடுதலான வருடங்களை உலகம் இப்போது கடந்து விட்டது. பட்டினிக் கொடுமைக்குள் தள்ளப்படுகின்ற மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் வீதத்தை நோக்கும் போது வறுமை ஒழிப்பில் மிலேனியம் இலக்கை அடைவதென்பது குறித்து உலகம் கனவுகூடக் காண முடியாது என்றே கூற வேண்டியிருக்கிறது. உணவு விவசாய நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் கடந்த வருடம் தெரிவித்திருந்த கருத்தொன்றை இச் சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்துவது பொருத்தமானதாக இருக்கும். "உலகின் தற்போதைய நிகழ்வுப் போக்குகளை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் போது வறுமை ஒழிப்பில் மிலேனியம் அபிவிருத்தி இலக்கை 2015 இல் அல்ல 2050 இல் தான் அடைய முடியும் போல் தெரிகிறது'.

நன்றி :

"கப்டன் அலி"கப்பல் மீதான கரிசனை


வன்னியில் பேரவலப்படும் தங்களின் இரத்த உறவு களுக்காக ஐரோப்பா வாழ் ஈழத் தமிழர்கள் ஒன்றுசேர்ந்து திரட்டி அனுப்பிய நிவாரண மற்றும், மருத்துவப் பொருள் களுடன் "வணங்கா மண்"(எம்.வி.கப்டன் அலி) என்ற கப்பல் இப்போது சென்னைத் துறைமுகத்துக்கு வெளியே 18கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் அந்தரித்துக் கொண்டு நிற்கின்றது.









வன்னியில் நடந்த போரில் படுகாயமடைந்த பலர் இன் னும் மருத்துவ வசதி இன்றி வாடிக்கொண்டிருக்கின்றார் கள். அவர்களில் பலரின் அடிப்படை மனிதாபிமானத் தேவைகள் நிறைவு செய்யப்படவில்லை. அவர்களுக்கான உணவு விநியோகம் கூட இன்னும் சீரடையவில்லை.

இந்தப் பின்னணியிலேயே ஐரோப்பிய வாழ் ஈழத் தமிழ் உறவுகள் திரட்டி அனுப்பிய நிவாரண, மருத்துவ மற் றும் உணவுப் பொருள்களுடன் "கப்டன் அலி"கப்பல் இலங்கைக் கடல் எல்லைக்குள் பிரவேசித்தது.



சுமார் 884 தொன் எடை கொண்ட அந்த நிவாரணப் பொருள்களை இறக்கி, அவை அதிகம் தேவைப்படும் வன்னி அகதிகளுக்கு விநியோகிக்க கொழும்பு அரசுஅனுமதிக்கவில்லை. அதனால் கப்பல் இலங்கைக் கடற் பிராந்தியத்துக்கு வெளியே செல்லும்படி இலங்கை அதி காரிகளினால் பணிக்கப்பட்டது.

இந்தக் காரணத்தினால் அருகில் இந்தியக் கடற் பரப்பில் நுழைந்த அந்தக் கப்பல் இப்போது சென்னைத் துறைமுகத்துக்கு வெளியே நங்கூரமிட்டுள்ளது. ஈழத் தமிழர் நலன் கருதிப் புறப்பட்ட கப்பல் என்று கருதியோ, என்னவோ இக்கப்பலையும் தீண்டத் தகாத தரப்புப் போன்று கருதி அதை சென்னைத் துறைமுகத்துக்குள் அனுமதிக்க இந்திய அதிகார வர்க்கம் மறுத்துவிட்டது.




ஈழத் தமிழர் விவகாரத்தை மையமாக வைத்துத் தமது அரசியல் பகடைக்காய்உருட்டல் விளையாட்டை முன்னெ டுக்கும் தமிழக மற்றும் இந்தியஅரசியல்வாதிகள் இப் போது வணங்கா மண் கப்பல் பிரச்சினையை "கப்"பெனப் பிடித்துக் கொண்டு தமது சித்து விளையாட்டை ஆரம்பித்து விட்டனர்.

இதனால் இந்தக்கப்பல் மீதும், அதில் பணியாற்றும் சிப் பந்திகள் மீதும் பல அரசியல் தலைவர்களுக்குத் திடீரென கரிசனை பிறந்துவிட்டது.
தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தமது கைப்பட ஒரு கடிதம் இது தொடர்பாக எழுதி, தமது மாநில அமைச்சர் பொன்முடி மற்றும் தி.மு.க. சார்பில் மத்திய அமைச்சராக விருக்கும் ஆ. ராசா ஆகியோர் மூலம் இந்திய வெளியுற வுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் நேரடியா கக் கையளிக்கச் செய்திருக்கின்றார்
தமிழக முதல்வரின் கோரிக்கைப்படி இந்தக் கப்பலில் வந்த பொருள்களை இறக்கி, வன்னியில் இடம்பெயர்ந்தஅக திகளுக்கு அவற்றை வழங்கச் செய்யத் தாம் நடவ டிக்கை எடுப்பார் என இந்திய வெளிவிவகார அமைச்சர் கூறியி ருக்கின்றார் என்றும் தகவல் வெளியாகியிருக்கின்றது.



நல்லது. என்றாலும், "சோழியன் குடுமிசும்மா ஆடாது"என்பதும் ஈழத் தமிழர் தரப்புக்குத் தெரியாததல்ல என் பதைக் குறிப்பிட்டேயாகவேண்டும்.
வன்னியில் நடந்த போரில் விடுதலைப் புலிகள் தோற்று சிதைவடைந்தமைக்கு இலங்கைத் தரப்புக்கு நேரடியாகப் பக்க பலமாக நின்று இந்தியா வழங்கிய உத வியும் ஒத்தாசையுமே பிரதான காரணம் என்று புலம் பெயர் வாழ் தமிழர்கள் நினைக்கின்றார்கள். அதற்காக மன துக்குள் கறுவிக் கொள்கின்றார்கள்.



அது மாத்திரமல்ல, அந்தக் கொடூர யுத்தத்தில் சிக்கி, அப்பாவித் தமிழர்கள் பல்லாயிரக் கணக்கில் கொன் றொழிக்கப்பட்டமை தொடர்பான ஐ.நா.மனிதஉரிமைக் கவுன்ஸிலின் விசாரணைக்கு முட்டுக்கட்டை போட்ட தன் காரணமாக அந்தக் கொடூரங்களுக்கு உதவி, ஒத்து ழைத்த குற்றப் பொறுப்பு பாரதத்துக்கும் உண்டு என புலம்பெயர் தமிழர்கள் கருதுகின்றனர்.

இதனால், இலங்கை அரசிலும் பார்க்க பாரதத் தரப்பு மீதே புலம் பெயர் தமிழர்களுக்கு எரிச்சலும், கோபமும், விசனமும், சீற்றமும் , ஆதங்கமும் அதிகம் உள்ளன. விடு தலைப் புலிகளை ஒழிக்க நேரடியாக உதவியதன் மூலம், சர்வதேசரீதியில் பரந்தும் வலுவான சக்தியாகவும் வாழும் புலம் பெயர் தமிழர்களின் நிரந்தர எதிரியாகத் தன்னை நிலைப்படுத்தி விட்டது இந்தியா. இதனால் பார தத்தைப் பழிவாங்கும் உணர்வு புலம் பெயர் வாழ் ஈழத் தமிழர்கள் மத்தியில் ஆழமாகப் புரையோடிப் போய்நிற்பது வெளிப்படையானது.
புலம்பெயர் வாழ் ஈழத் தமிழர்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி பற்றிய மனப்பதிவு இதைவிட வேறானதல்ல. உலகத் தமிழினத்தின் தலைவராக அவரை முன்னிறுத்த அவரது ஆதரவாளர்கள் முயன்றாலும் கூட, ஈழத் தமிழர் விவகாரத்தில் இதுவரை அவர் நடத்திய குத்துக்கரண அரசியல் மற்றும் பதவிமோக தகடுதத்தங்கள் காரணமாக அவரை உலகத் தமிழினத்துக்கு வந்த தலைவராக அல்லாமல் தலைவிதியாகவே புலம்பெயர் வாழ் தமிழர்கள் நினைக்கின்றார்கள்.




இப்படிப் புலம்பெயர் வாழ் தமிழர்கள் பாரதத்தையும் அங்குள்ள அரசியல் தலைவர்களையும் பழி தீர்க்கப்பட வேண்டிய எதிரிகளாக நோக்க முயல்வது அற்பமான விடயம் அல்ல என்று புதுடில்லி கருதுவதும் தெளிவு. இவ்விடயத்தில், ஒரு தலைமையின் கீழ் அல்லாது சிதறிக் கிடக்கும் புலம் பெயர் வாழ் ஈழத் தமிழ் சமூகம் புறம் ஒதுக்கத்தக்க அற்ப சக்தி அல்ல. ஆபத்தான தரப்பு அது.

அதைச் சமாளித்துக் கையில் போட, அந்தச் சமூகத் தினால் அனுப்பப்பட்ட கப்பல் விடயத்தில் ஆக்கபூர்வமாக நடந்துகொண்டு ஏதும் செய்வது உசிதமானது என்று கருதி, காய்நகர்த்தலுக்கு முனைகிறது பாரதம். தமிழக முதல்வர் கலைஞரின் ஒவ்வொரு அரசியல் காய்நகர்த்தலுக்குப் பின்னாலும்சுயநல அரசியல் நோக்கம் தொக்கியிருப்பது போல இவ்விடயத்திலும் விவகாரம் அமைந்துள்ளது.

ஆனால், ஈழத் தமிழர் தரப்பைப் பொறுத்தவரை இன் றைய நிலையில் "யார் குற்றினாலும் அரிசியானால் சரி"என்ற இக்கட்டுத்தான்.
எனவே, இவ்விடயத்தில் இந்தியா மற்றும் தமிழக முதல்வரின் முயற்சிகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றாலும் அவற்றைத் தமது கணக்கில் வைத்துக் கொண்டே இவற்றின் பெறுபேறுகளை ஈழத் தமிழினம் உள்வாங்கி மதிப்பீடு செய்யும் என்பது தெளிவு.

சமஷ்டியை ஏற்க இரு தரப்பும் மறுப்பு;அதனாலேயே சமாதான முயற்சி முறிவு!அம்பலப்படுத்துகிறார் எரிக் சொல்யஹய்ம்


"இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் சமஷ்டித் தீர்வை ஏற் றுக்கொள்ளத் தயாராக இருக்கவில்லை. அதனாலேயே,வெற்றிபெறும் நிலையில் இருந்த சமாதான முயற்சிகள் இறுதிக்கட்டத்தில் முறிவடைந்தன"என்று தெரிவித்திருக்கிறார்நோர்வேயின் சர்வ தேச அபிவிருத்தி அமைச்சரும் இலங்கைக்கான முன்னாள் விசேட சமாதானப் பிரதிநிதியுமான எரிக்சொல்ஹெய்ம்.பி.பி.ஸியின் ஹார்ட் "டோக்"நிகழ்ச்சிக்கு வழங்கிய பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ள அவர், இப்போதைய நிலையில்இலங்கைக்கு எதிரான தடைகள் அவசியமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இலங்கையின் மனிதாபிமானப் பணிகளுக்காக அரசுக்கு நிதியுதவி வழங்குவதாக இருந்தால், இடம்பெயர்ந்தோரின்முகாம்களுக்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படுவது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிக் சொல்ஹெய்ம் மேலும் தெரிவித்தவை வருமாறு:

இலங்கையில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு மனிதாபிமான அமைப்புகள் செல்வதற்கானஅனுமதியைப் பெறும் விடயத்தில் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்படுகின்றோம்.

இது தொடர்பாக பல உத்தியோகப்பற்றற்ற பேச்சுகள் இடம்பெற்றுள்ளன.
இலங்கை மீது தடைகள் விதிப்பது குறித்து நான் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை.
எனினும் அந்த மக்களுக்கு நாங்கள் எதற்காக நிதி வழங்குகிறோம் என்பதை எமது மக்களுக்குக் காண்பிக்க வேண்டும்.இதற்காக முகாம்களுக்குச் செல்ல அனுமதி அவசியம்.
போராட்டத்தை அமைதி வழியில் முன்னெடுக்க வேண்டும்
இலங்கையைப் பொறுத்தவரை ஆயுத மோதல் முடிவுக்கு வந்துவிட்டது.

தமிழ் மக்கள் தமது போராட்டத்தை அமைதி வழிகளில் முன்னெடுக்க வேண்டும்.
அதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் எதிர்காலம் குறித்து சிந்திப்பதுடன் தாராள மனோபாவமுள்ள பல் கலாசாரதேசமொன்றை உருவாக்க முயல வேண்டும்.
விடுதலைப் புலிகளுடன் பேசுவது என்பது நாங்கள் மாத்திரம் மேற்கொண்ட முடிவல்ல. இலங்கை அரசின் வேண்டுகோளின்பேரிலேயே இதனைச் செய்தோம்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் தற்போதைய ஜனாதிபதி என அனைவரும் எம்மிடம் வேண்டுகோள் விடுத்தனர். உற்சாகப் படுத்தினர். நாங்கள் எப்படி மாட்டோம் எனக் கூற முடியும்?

விடுதலைப் புலிகளுடன் பேச்சுகளில் ஈடுபட்டதைச் சரியான விடயமாகவே கருதுகிறேன்.
என்றாலும், இறைமையுள்ள அரசை விடுதலைப் புலிகளுடன் ஒப்பிட நான் முயலவில்லை.
எமது இந்த முயற்சி வெற்றி பெறுவதற்கு மிக நெருக்கமாக வந்தது.
சமாதானப் பேச்சுகளின் காலத்தில் ஆகக் குறைந்தது ஆயிரம் உயிர்களையாவது காப்பாற்றினோம்.

விடுதலைப் புலிகளின் தலைவரை 10 தடவைகளுக்கு மேல் சந்தித்தேன். சந்திக்க வேண்டிய தேவை இருந்தது.அவரைச் சந்தித்த பல தமிழ்த் தலைவர்கள் நீங்கள்தான் கடவுள், நீங்கள் தமிழ் மக்களுக்குக் கொடை என மாத்திரம்தெரிவித்தனர். ஆனால் நான் யதார்த்தத்தைத் தெளிவுபடுத்தினேன்.அரச தலைவர்களுக்கும் இதுவே இடம்பெற்றது.

மீண்டும் மீண்டும் அவர்களுடன் பேசி சமாதானத் தீர்விற்கு முயன்றதன் மூலம் விடுதலைப் புலிகளுக்கு ஓரளவு சட்டபூர்வதன்மையை வழங்கினேன் என்பது உண்மைதான்.
சர்வதேச சமூகமும் இதனைத்தான் எதிர்பார்த்தது.

பிரபாகரன் செய்த பெரும் பிழை என்னவென்றால், சமஷ்டியை ஏற்றுக்கொள்ள அவர் தயாராக இருக்கவில்லை.பிரபாகரனும் இலங்கை அரசும் சமஷ்டியை ஏற்றுக்கொள்வதால் ஏற்படக்கூடிய அபாயத்தை எதிர்கொள்ளத் தயாராகஇருக்கவில்லை.

உண்மையில் என்ன நடைபெற்றது என்பதனை அறிய முடியாமல் உள்ளது
பிரபாகரனின் கூற்றுகளை நான் நம்பினேன். அவர் இராணுவ நடவடிக்கைகள், பயங்கரவாதச் செயல்கள் சிறிது காலத்திற்குநிறுத்தப்படும் என உறுதியளித்தார். அதனைக் காப்பாற்றினார். எனினும், சில மாதங்களுக்குப் பின்னர் அவரால் அதனைப்பின்பற்ற முடியவில்லை.
மோதலின் இறுதிக் காலங்களில் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடைவதே ஒரே வழி என விடுதலைப் புலிகளுக்குத்தெளிவாகத் தெரிவித்தோம்.

வெள்ளைக் கொடியுடன் வந்து சரணடையுமாறும், ஒலிபெருக்கி மூலம் நோக்கத்தை இராணுவத்துக்குத் தெரிவிக்குமாறும்கூறினோம்.அவர்கள் அதனைச் செய்ய முயன்றனர். எனினும், கொல்லப்பட்டனர்.உண்மையில் என்ன நடைபெற்றது என்பதை அறியமுடியாமலுள்ளது.

எனினும், அவர்கள் அரச படைகளால் கொல்லப்பட்டமை தெளிவாகின்றது.
என்ன நடைபெற்றது என்பது தெரிய வரவில்லை. தெரிய வருவதற்கு பல வருடங்கள் எடுக்கலாம். விடுதலைப் புலிகள் சரணடைவதை இலங்கை இராணுவம் வேண்டுமென்றே அலட்சியம் செய்ததா என்பதும் எமக்குத் தெரியாது என்றார் அவர்.

காலாவதியாகி முடிவுக்கு வரும் மற்றொரு கண்துடைப்பு நாடகம் ????


அரசுக்குக் கெட்ட பெயர் வாங்கித் தருகின்ற அல்லது அரசுஉடனடியாக தீர்வு காண விரும்பாத ஒரு சர்ச்சைக் குரிய விடயம் எழும் என்றால் அதனை சமாளித்து, காலத்தை இழுத்தடிப்பதற்கு அரசுத் தலைமைக்கு ஒரு வழியுண்டு.

சம்பந்தப்பட்ட விடயம் குறித்து ஆராய்ந்து, விரிவாக விசாரித்து, உரிய சிபாரிசுகளை நீண்ட அறிக்கை வடிவத்தில் சமர்ப்பிப்பதற்கு ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ஓய்வு பெற்ற நீதியரசர்களையோ, பிரமுகர்களையோ கொண்ட ஆணைக்குழு ஒன்றை அவ்விடயம் குறித்து விசாரிக்க நியமிப் பதுதான் அந்த ஒரே வழி.

ஆணைக்குழு அமைக்கப்படுவதற்கான அறிவிப்புடன் அந்த சர்ச்சைஅடங்கிப் போய்விடும். காலத்தை இழுத்து, நேரத்தை விழுங்கி, பெருமளவு நிதியைச் செலவிட்டு சில சமயங்களில் விசாரணை பூர்த்தியடையாமலேயே ஆணைக் குழு காலாவதியாகிச் செத்துவிடும். இல்லையேல் கண் துடைப்புக்காக இடைக்கால அறிக்கை, இறுதி அறிக்கை என்று பெரும் ஆரவாரத்துடன் அது சமர்ப்பிக்கும் மிக மொத்த மான கோவைகள், அவற்றை அரசுத் தலைவரிடம் கையளிப் பது தொடர்பான படங்கள் ஊடகங்களில் வெளியாவதுடன் அடங்கிப் போய்விடும். அதற்கு மேல் எதுவும் நடக்காமல் அந்த விடயம் கிணற்றில் போட்ட கல்லாக அமுங்கி விடும்.

இதுதான் பொதுவாக இந்த தேசத்தின் ஆணைக்குழுக்கள் பற்றிய பொதுவான பட்டறிவு.
மோசமான மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் நிஸங்க உடலகம தலைமையிலான எட்டு ஆணையாளர்களைக் கொண்ட ஆணைக்குழுவின் கதியும் கடைசியில் இப்படித் தான் போய்முடிந்திருப்பது போலத் தெரிகின்றது.

மர்மமான முறையில் யாழ் வண.பிதா ஜிம் பிறவுண் காணாமற் போனமை, வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர், ரவிராஜ் எம்.பி., ஜோசப் பரராஜசிங்கம் எம்.பி., அரசசமாதானச் செயலகத்தின் பிரதி இயக்குநர் லோகநாதன் கேதீஸ்வரன் ஆகியோரின் படுகொலைகள், திருகோண மலை நகரில் ஐந்து தமிழ் மாணவர்கள் படுகொலை, மூதூ ரில் இருந்து கந்தளாய்க்குப் பயணித்துக் கொண்டிருந்த 14 கிராம வாசிகள் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டமை, செஞ் சோலையில் 51 பேர் கொல்லப்பட்டமை, ரதல்ல கிராமத்தின் பத்து முஸ்லிம் கிராமவாசிகள் கொலையுண்டமை, கெப்பிட் டிக்கொலாவையில் 68 பயணிகள் கிளைமோரில் கொல்லப் பட்டமை, தம்புள்ளவில் 98 படையினர் தற்கொலைத் தாக் குதலில் கொல்லப்பட்டமை, வெலிகந்தவில் தலையில்லா ஐந்து முண்டங்கள் கண்டு பிடிக்கப்பட்டமை போன்ற மோசமான மனித உரிமை மீறல் சம்பவங்கள் பதினாறு குறித்து விசாரிப்பதற்காக இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருந்தது.

இந்தச் சம்பவங்கள் யாவும் 2006 ஆம் ஆண்டில் இடம்பெற் றவையாகும்.
நாட்டில் இடம் பெற்று வந்த மோசமான மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் கடும் கண்டனக்குரல்கள் எழுந்தபோது அவற்றைச் சமாளிப் பதற்காக பெயருக்கு இந்த ஆணைக்குழு நியமனம் பற்றிய அறிவிப்பு அரசுத் தலைமையால் வெளியிடப்பட்டது. அப்போதே இது வெறும் கண்துடைப்பு நாடகம் என்று இப் பத்தியில் சுட்டிக்காட்டியிருந்தோம்.

சுமார் இரண்டு வருடங்கள் இழுத்துப்பறித்து, காலத்தை விழுங்கிய பின், உருப்படியாக எதையும் சாதிக்காமலேயே இப்போது அந்த ஆணைக்குழுவின் பதவிக்காலம் முடிவுற்று, அது செத்துச்செல்லாக்காசாகி விட்டது. நாம் குறிப்பிட்ட மாதிரியே அது கண்துடைப்பு நாடகமாக இப்போது முடிவுக்கு வந்திருக்கின்றது.

இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்ட போதே அதன் விசா ரணைப் போக்குக் குறித்து உள்நாட்டிலும் சர்வதேசமட்டத் திலும் பல்வேறு சந்தேகங்களும் முன் ஆட்சேபனைகளும் தெரிவிக்கப்பட்டன.இதனையடுத்து, இந்த ஆணைக்குழுவின் விசாரணை களைக் கண்காணிப்பதற்காக அவை ஒழுங்காக நடைபெறு கின்றனவா என்பதை மதிப்பீடு செய்வதற்காக சர்வதேசபிரமுகர்களைக்கொண்ட கண்காணிப்புக் குழு ஒன்றை இந்தியாவின் ஓய்வு பெற்ற பிரதம நீதியரசர் பகவதி தலை மையில் இலங்கை அரசுத் தலைவர் நியமித்தார்.
அந்தக் கண்காணிப்புக் குழுவும் இலங்கையில் வந்து தங்கியிருந்து இந்த ஆணைக்குழு விசாரணைகளின் போக்கை யும் நோக்கையும் ஆற அமர அவதானித்தது.

விசாரணை களை ஆரம்பிப்பதில் காட்டப்பட்ட வேண்டுமென்ற போக் கிலான இழுத்தடிப்பு, விசாரணைகளில் அரசுசட்ட முகவர் களின் அளவுக்கு மீறிய பங்களிப்பு, அழுத்தம் போன்ற வற்றை எல்லாம் கவனத்தில் கொண்ட சர்வதேசபிரமுகர்களின் கண்காணிப்புக்குழுவும், இந்த விசாரணைகள் வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும் இவற்றைக் கண்காணிப்பதில் அர்த்தமில்லை என்றும் பகிரங்க அறிக்கை மூலம் தெளிவுபடுத்தி விட்டு நாட்டை விட்டு வெளியேறிவிட்டது.

ஆக, பெரிய ஆரவாரத்துடன், பெருமளவு நிதியையும் காலத்தையும் விழுங்கியவாறு ஆரம்பிக்கப்பட்ட இந்த கண் துடைப்பு நாடகம் அந்த ஆணைக்குழுவின் சேவைக்காலம் திரும்பவும் நீடிக்கப்படாமல் காலாவதியாக விடப்பட்ட நிலையில் இப்போது தானாகவே முடிவுக்கு வந்துவிட்டது.

இனி என்ன?
இதுவரை நடைபெற்ற "சமாளிப்பு"விசாரணை தொடர் பான அறிக்கைகளை அரசுத் தலைவரிடம் கையளிப்பது போன்ற மற்றொரு நாடக அங்கத்தை அரங்கேற்றி விட்டு இவ்விவகாரத்தை அப்படியே கிடப்பில் போடவேண்டியது தான்.

2006 இல் இடம்பெற்ற மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பான கண்டனங்களையும், ஆட்சேபங்களை யும், கடும் எதிர்ப்புக்களையும் மீறும் வகையில் அண்மைக் காலத்தில் மிகமிக மோசமாக அரங்கேறிய இனவழிப்புக் கொலைகள், மனித உரிமை மீறல் கொடூரங்கள் தொடர்பான ஆட்சேபனைகள் வந்து விட்டதால் பழையவற்றைக் கிடப் பில் போட்டு அப்படியே அமுங்கிப் போகவிடுவது சில சமயங் களில் நியாயமானதாகவும் கூட அர்த்தப்படுத்தப்பட்டு விட லாம். என்ன செய்வது, அப்படித்தான் உள்ளது நமது நாட்டு நிலைமை.....!

தமிழர்பால் மனிதாபிமானம், மறக்கப்பட்டு வருகிறதா?


குடாநாட்டில் ரயில்வே திணைக்களத்துக்குச் சொந்தமான ரயில் பாதைகள் மற்றும் ரயில் நிலை யங்கள் அமைந்திருந்த காணிகளில் வசித்து வரு வோரை இம்மாத இறுதிக்குள் வெளியேற்றுமாறு அரசாங்கத்தின் சார்பில் யாழ்ப்பாணம் அரசஅதிபர் அந்தந்தப் பகுதி பிரதேசசெயலர்களுக்கு உத்தர விட்டுள்ளார்.

தெற்கிலிருந்து வடக்கே யாழ்ப்பாணத்துக்கு 19 வருடங்களின் பின்னர் ரயில் சேவையை விரைந்து மீண்டும் ஆரம்பித்துவிட வேண்டும்; அதனைத் தனக்குச் சார்பான பிரசாரப் பொருளாக்கி தமிழர்களின் மனங்களை வென்றுவிட வேண்டும் என்று அரசாங்கம் துடியாய்த் துடிக்கிறது புலப்படு கிறது.

வன்னியை விடுவிக்கப்பட்ட பிரதேசமாக்கிய கையோடு, வடக்கில் அபிவிருத்தியை விரைந்து ஏற்படுத்தினால் வன்னியில் உயிர்நீத்த ஆயிரக்கணக் கான தமிழர்களின் இழப்புக் குறித்து ஆற்றாது அழுது கண்ணீர் வடிக்கும் குடாநாட்டு மக்களின் துன்பத்தை, சோகத்தை குறைத்து விடலாம் என்று அரசாங்கம் கணக்குப் போட்டிருக்கின்றதா....? அல்லது வடக்கு அபிவிருத்தி என்ற மேலுறையுடன் வெளிநாடு களிடம் இருந்து பெரும் நிதியுதவியைக் கறக்க லாம் என்ற திட்டமோ...? அதனால் வேக வேகமாக உட்கட்டுமானத்தை உயர்த்திக் காட்டுவதற்கு அரசு அவசரப்படுவதாகவே தோன்றுகிறது.

அந்த நோக்குடனான வீச்சில் கண்ணை மூடிக் கொண்டு அல்லது மண் விண் தெரியாமல் என்றும் கூறலாம், பல புதிய திட்டங்களை, வடக்கின் அபி விருத் திக்கென வடக்கின் வசந்தம் என்ற எழுச்சிப் பெயரில் முன்னெடுக்கப்போவதாக அரசு பிரசாரம் செய்கின்றது.
வடக்கை அபிவிருத்தி செய்ய வேண்டாம் என்றோ, இங்கு வாழும் மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்த வேண்டாம் என்றோ அல்லது இப்பிரதே சத்தின் உட் கட்டுமானங்களை சீர்செய்யவேண் டாம் என்றோ இந்தப் பிரதேசத்தின் எந்தப் பிரஜை யும் சொல்லமாட்டார்; வரவேற்காது இருக்கவும் மாட்டார்.

ஆனால் தற்போதைய தள நிலைமைகளை, கருத்தில் கொள்ளாது தமிழர்களின் மனங்களை வெல்கிறோம் அல்லது வெல்வோம் என்று வெளி யுலகத்துக்கு காட்டிக்கொள்வதற்காக மக்களுக்கு இடைஞ்சல் தரும் அலுவல்களை ஆற்றுவது எந்த வகையிலும் பொருத்தமாகாது; ஏற்புடையதும் அல்ல.

குடாநாட்டுக்கு ரயில் சேவை தேவைதான். அதற் கான பணிகள் நடைபெறத்தான் வேண்டும். அத னைச் செய்வதில் அளவுக்கு விஞ்சிய அவசரம் தேவை தானா? அதுவும், ஏற்கனவே அரசாங்கம் குடாநாட் டில் எண்பதுகளிலும் அதன் பின்னரும் நடத்திய போரின் காரணமாக, தமிழர்கள் பூர்வீக காலம் தொட்டு வாழ்ந்துவந்த வலிகாமம் வடக்குப் பிர தேசத்தை அரசு இராணுவ வலயம் ஆக்கியதால் அங்கிருந்து வெளியேற் றப்பட்டு இடம்பெயர்ந்து வந்து ரயில் பாதைகளிலும் ரயில் நிலையங் களிலும் குடியமர்ந்த மக்களை ஆகக் குறைந்தது மூன்றுமாத கால முன்னறிவித்தல் தானும் இல்லா மல் வெளியேற்றி மீண்டும் அவர்களை அகதி களாக்கி அவதிப்பட வைக்க வேண்டுமா?

அரசாங்கம் என்பது மக்கள் நலன் நாடியே செயற் பட வேண்டும். ஆனால் தமிழர்களைப் பொறுத்த வரை அவர்களை சொந்த மண்ணிலேயே துன்பப் படுத்தி ஏதிலிகளாக்கும் கருமங்களிலேயே கொழும்பு அரசாங்கங்கள் கடந்த பல தசாப்தங்களாக இன்பம் கண்டு வருகின்றன பாதுகாப்பு என்ற கேடயத்துடன்!

ஓமந்தையில் ரயில் நிலையம் கட்டுவதற்காகக் கடந்த வாரம்தான் அத்திவாரக்கல் நடப்பட்டிருக் கின்றது. அதனைப் பூர்த்திசெய்து யாழ்ப்பாணத்துக்கு ரயில்பாதை இடவும், இடையில் ரயில் நிலையங் களை நிர்மாணிக்கவும் ஆகக் குறைந்தது ஒரு வருடம் தேவைப்படாதா?

அந்தக் காலப் பகுதிக்குள் இப்போது குடாநாட்டில் ரயில் நிலையக் காணிகளில் குடியிருப்போருக்கு அவர்கள் வேறு இடங்களில் வசிப்பதற்கான வசதி களை அரசு செய்து கொடுக்க முடியாதா? அத்தகைய ஒரு ஏற்பாட்டுக்கு முன்னர் வெளியேற வேண்டும் என்றால் 275 குடும்பங்களைச் சேர்ந்த முன்னைய அகதிகள் மீண்டும் அகதிகளாக்கப்படவேண்டுமா?
தமிழ் மக்களை அகதிகளாக்கி வேடிக்கை பார்க்க வேண்டும் என்பதில் கொழும்பு அரசுகளுக்கு இப் படி அடிக்கடி அவ்வப்போது அலாதி விருப்பம் உண்டாவதற்குக் காரணம் என்ன? அவர்கள் இரண் டாம்தரப் பிரஜைகள் தானே; பாதுகாப்பு என்ற முத் திரை குத்தி அவர்களை எதுவும் செய்யலாம்; தட் டிக் கேட்பதற்கு எவரும் இல்லை என்பதாலா? இந்த நாட்டில் வாழும் பெரும்பான்மை இனத்தவர் போன்று தமிழர்களும் சம பிரஜைகள், அதாவது உரிமைகள் உள்ள பிரஜைகள் என்ற நிலைக்கு வருவதற்கு அவர்களுக்கு வலுவில்லை என்று கருதுவதாலா? தமிழர்களைப் பொறுத்தவரை அவர்கள்பால் மனிதநேயம் அவர்கள் மீது மனிதாபி மானம் காட்டுவது என்பதெல்லாம் வசதியாக மறக் கப்பட்டு வருகின்றது என்பதாலா? இந்த நிலை எப் போது மாறும்?

தமிழ்ப் பகுதிக் காணிகளின் உரிமையின் எதிர்காலம்......


விடுதலைப் புலிகளின் பகுதிகளில் சிங்களவர் களால் விற்கப்பட்ட காணிகளின் உரிமைகள் ரத்துச் செய்யப்பட வேண்டும்.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வாழ்ந்த சிங்கள மக்கள், அச் சம் காரணமாகத் தமது காணிகளை விற்றுவிட்டுப் போய்விட்டனர். இப்போது அந்த நிலங்களின் உரிமையை ரத்துச் செய்துவிட்டு, அவற்றை அர சாங்கம் கையேற்க வேண்டும்.
இவ்வாறு அர சாங்கத்திற்கு, அதன் அருமைத் தோழமைக் கட்சியின் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் இலங்கைத் தேசியத்தின் சொந்தக்காரக் கட்சியின் தலைவர் வண.எல்லாவல மேத்தானந்த தேரர் ஆலோ சனை (அல்லது சிபார்சு என்று கூடச் சொல்லலாம்) வழங்கியுள்ளார்.

இதேவேளை, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் உள்ள சகல நிலப்பகுதி களையும் அர சாங்க நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரு வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தகவல் ஏற்கனவே வெளிவந்தது. மேற்குறிப்பிட்ட மூன்று மாவட்டங்களி லும் உள்ள சகல நிலப்பகுதிகளையும் அவ சரகாலச் சட்டத்தின்கீழ் அரசின் உரிமையாக்கும் திட்டம் குறித்து உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அந்தத் தகவல் கூறியது.

மேற்குறிப்பிட்ட இரண்டையும் அதாவது ஜாதிக ஹெல உறுமயவின் யோ சனையையும் அர சாங்கத் தரப்பின் உத்தே சத்தையும் பொருத்திப் பார்த்தால் உள்ளூர ஒரு பெரும் சதி வலைப்பின்னல் உருவாகி வருகிறதோ என்று ஊகிக்க வைக்கிறது.
தமிழர்கள் தமக்கென்று ஒரு தாயகப் பகுதி உண்டு என்று உரிமை கொண்டாடாமல் செய்துவிடவேண்டும் என்ற பேரினவாதம் பரகசியமாக அர சாங்கத்தினால் கட்டவிழ்த்துவிடப்படுவதற்கான முத்தாய்ப்புக்களே, மேலேசுட்டிக்காட்டப்பட்ட ஆலோ சனையும் திட்ட மும் இரண்டுமாகும் என்பது புலப்படுகிறது.

தமிழர்களை இந்த நாட்டின் சம பிரஜைகளாக சம உரிமை உள்ள பிரஜைகளாக வைத்திருக்காமல் செயல் ரீதியாகவும் சட்டரீதியாகவும் இரண்டாந்தரப் பிர ஜைகளாக வைத்திருக்க வேண்டும் என்ற பேரின வாதத்தின் மூளையம் பெரும்பான்மைச் சமூகத்தின ரிடம் இன்று நேற்றுக் கருக்கொண்டதல்ல. இலங்கைக் குப் பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் கிடைத்த ஒரு சில வருடங்களிலேயே அது முளை விட்டு, இலை வந்து, கிளை பரப்பி, மரமாகி, பெரு விருட் சமாகி நிற்பது விவரித்து விளக்க வேண்டிய ஒன்றல்ல.
அது மீண்டும் ஒரு மலர்ச்சி காணப் போகிறது என்பதற்கான முகிழ்ப்பாகவே ஆரம்பத்தில் குறிப்பிடப் பட்ட இரண்டும் அமைகின்றன.

1983 ஆம் ஆண்டில் தென்னிலங்கையில் கொழுந்து விட்டு எரிந்த இனக் கலவரத்தின் இன அழிப்பின் பின்னர், சிங்கள மக்களுடன் சகோதரர்களாக வாழ்ந்த தமிழர் அழிப்பில் இருந்து எஞ்சிய தமது சொத்துகளையும் வர்த்தக நிலையங்களையும், நிலங்களையும் சொற்ப பணத்துக்கு விற்றுவிட்டுத் தமிழ்ப் பகுதிகளுக்குத் திரும்பினார்கள். ஆனால் நிலைமை சீரான பின்னர் அவை அர சாங்கத்தால் சுவீகரிக்கப்பட்டனவா? நியாய மான விலை கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டதா? இல்லையே.... இப்போது.....

தமிழ்ப் பகுதிகளில் வாழ்ந்த சிங்கள மக்கள் தமிழர் களுக்கு விற்றுவிட்டுச் சென்ற காணிகளின் உரிமை களை ரத்துச் செய்துவிட்டு அரசு கையேற்க வேண்டும் என்று கூறப்படுவதில் சமன்பாடு எதுவும் உண்டா?
அதேபோன்று, போரிலிருந்து தப்பி தமது உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அர சாங்கத்தின் அகதி முகாம்களில் போய்த் தஞ் சம் அடைந்து அவலப்படும் முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மாவட்ட வன்னி மக்களின் நிலங்களை அர சாங்கம் தனது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு சுவீகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல்களும் உள்நோக்கம் ஒன்றுடன், வன்னிப் பகுதியைத் தமிழர் பிரதே சம் என்று அடையாளப் படுத்தப்படு வதைத் தவிர்ப்பதற்கான உள்நோக்கம் கொண்ட சூழ்ச்சியுடன் முன்வைக்கப்படும் திட்டம் என்றே தமிழ் மக்கள் கருதுகிறார்கள்.

மேற்படி மூன்று மாவட்டங்களிலும் உள்ள காணி களுக்கு அந்தந்த மாவட்டக் காணிப் பதிவகத்தில் உரிய ஆவணங்கள் பேணப்பட்டன. அவற்றின் பிரதிகள் கொழும்பில் உள்ள இலங்கை முழுவதற்கு மான தலைமைக் காணிப் பதிவகத்தில் இருக்கும். அவ்வாறிருக்க அகதி முகாம்களில் வாழும் மக்களின் நிலங்களை மற்றொருவர் அபகரித்து வைத்து உரிமை கொண்டாட வாய்ப்பில்லையே!

அவ்வாறெனின் காணிச் சொந்தக்காரர்களுக்கு உதவும் பொருட்டே மூன்று மாவட்டங்களிலும் உள்ள தனியார் காணிகளை நிலங்களை அர சாங்க நிர் வாகத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்ற திட்டம் எதற்கு?
இதிலும் உள்நோக்கம் எதுவும் இல்லை என்று கொள்ளமுடியுமா? கூறமுடியுமா?
தமிழர் பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வு காணப் பட வேண்டும் என்ற குரல், போர் ஓய்ந்த பின்னர், சர்வ தே சரீதியாக ஒலிக்கத் தொடங்கியிருக்கும் இவ் வேளை யில்
இப்போதைக்கு வேண்டாத மேற்கூறிய செயற் பாடுகள் அவசியம் தானா? சிவபூசைக்குள் கரடி உட் புகும் கதை ஆரம்பமாகிறது என்பதற்கான முன்னோட் டமா கவே இந்தச் செயற்பாடுகளைக் கொள்ளலாம். வேறெப் படிக் கூறுவது....!

ஈழப் போர் - 3

அது நடந்துவிட்டது என்பதனை நம்புவதற்கு நம்மில் பலருக்கு இப்போதும் முடியாமல் இருக்கின்றது. தெளிவாக அறிவுக்குத் தெரிகின்ற ஒரு விடயத்தைக் கூட மனதால் ஏற்றுக்கொள்ள முடியாத உளவியல் தாக்கத்தில் நாம் தவிக்கின்றோம்.
சிறிலங்கா காட்டிய அந்தப் படங்களில் இருந்த அந்த உடல் அவருடையது அல்ல என்றே எம்மில் சிலர் இப்போதும் நம்புகின்றோம்.

வாழும் காலத்திலேயே கடவுளுக்கு நிகராக நாங்கள் அவருக்கு கொடுத்திருந்த புனித நிலை இப்போது இன்னும் உறுதியானது ஆகின்றது.

கடவுளைப் போலவே அவரும் இருக்கிறாரா இல்லையா என்ற ஆய்வுகளைச் செய்யாமல் - அவர் காட்டிய வழியில் பயணிக்க வேண்டும் என கருதுகின்றோம்.

எங்கோ ஓர் இடம் போயுள்ளார் என்றும், என்றோ ஒரு நாள் அவர் திரும்பி வருவார் என்றும் காத்திருக்கின்றோம்.



எமது மனங்களில் என்ன இருந்தாலும் - நாம் நம்ப மறுத்தாலும் - அவர் இனித் திரும்பி வரப் போவதில்லை என்பதே உண்மையானது.

தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலை பற்றிய தூய்மையான கனவைச் சுமந்து - 37 ஆண்டுகளாக அந்தக் கனவை நனவாக்குவதற்கு மட்டுமே போராடிய அந்த உன்னதமான மனிதர் - எமது இனத்தின் பெருந் தலைவர் - அந்தப் போராட்டக் களத்திலேயே வீழ்ந்து போனார்.

'தமிழீழத் தனியரசு' ஒன்றே தமிழர்களுக்கு நிரந்தர விடுதலையைப் பெற்றுத்தரும் என்று அவர் நம்பினார். அதனை அமைப்பதற்குச் சிறந்த வழி என தான் நம்பிய ஒரு வழியை அவர் தேர்ந்தெடுத்தார். அந்த வழியிலே தன் பின்னால் அணிதிரண்ட ஆயிரமாயிரம் போராளிகளுக்கு அவர் தலைமையேற்றார். அந்த வழியிலேயே தன்னை முழுமையாக அர்ப்பணித்து - எந்த விட்டுக்கொடுப்புக்களையும் செய்யாமல் போராடினார். அந்த வழியிலேயே தன்னைப் பின்தொடர்ந்து வந்த ஒவ்வொரு போராளியையும் அவர் அனுப்பி வைத்தார். அந்த வழியிலேயே அந்தப் போராளிகளை வழிநடத்திய தனது தளபதிகளையும் அனுப்பி வைத்தார். அந்த வழியிலேயே தானும் போராடி எமது கண்களை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து அவர் போய்விட்டார்.



தமிழீழத் தேசியத் தலைவரும், தமிழீழத்தின் தலைமைப் போர்த் தளகர்த்தருமான மேன்மை மிகு திருவேங்கடம் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் - தமிழர் சரித்திரத்தின் மகுடமாக, எமது நெஞ்சத்தில் நிலைத்த நினைவாக, எம்மை வழிநடத்திச் செல்லும் ஆன்ம சக்தியாக - இனி எங்கள் மனங்களிலும், அறிவிலும் வாழ்வார்.

அந்தப் படங்களைப் பார்த்தேன்: தமிழ்த் தேசிய இனத்தின் கடந்த ஐநூறு ஆண்டுகால வரலாறு அங்கே சரிந்து கிடந்தது.

விடுதலைப் போராட்டம் பெற்ற அரசியல் வெற்றிகளின் பெருமை பாலா அண்ணையைச் சாரும்.

விடுதலைப் போராட்டம் பெற்ற இராணுவ வெற்றிகளின் பெருமை தீபன், பால்ராஜ், சூசை, பொட்டு, கே.பி.... என இன்னும் சிலரைச் சாரும்.

விடுதலைப் போராட்டத்திற்கு இயங்கு சக்தியைக் கொடுத்த பெருமை தமிழ்த் தேசிய இனத்தையும், அந்தச் சனத்திலிருந்து வந்த எம் போர் வீரர்களையும் சாரும்.

ஆனால் - சதிகளும், தோல்விகளும், துரோகங்களும், விலை போதல்களும், நெருக்கடிகளும் நிறைந்து கிடந்த மிகக் கரடு முரடான பாதை வழியாக - மனம் தளராமல் - விடுதலைப் போராட்டத் தேரை முன்னோக்கி ஓட்டிச் சென்ற பெருமை பிரபாகரனையே சாரும்.

கடைசிக் காலத்தில் என்னவிதமான சிந்தனைகள் அவரது மனதில் ஓடியிருக்கும் என்ற யோசனை எழுவதை என்னால் தடுக்க முடியவில்லை.



தமிழர் பேராட்டத்தில் நீதியும் தர்மமும் இருந்தும் ஏன் எல்லாம் இவ்வாறு அழிந்து போய் விட்டது என்று யோசித்திருப்பாரா?...

அல்லது - 'நீதியும் தர்மமும் இந்த உலகை இயக்குவதில்லை; வல்லரசுச் சக்திகளின் கேந்திர நலன்கள் சார்ந்து மாறி வரும் உலக ஒழுங்கிற்கு ஏற்ப நாமும் மாற்றங்களைச் செய்து இயங்க வேண்டும்' என்று பாலா அண்ணை திரும்பத் திரும்பச் சொல்லிய ஆலோசனைகளைக் கிரகித்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது என்று நினைத்திருப்பாரா?...

அல்லது - வெளிநாட்டுப் பணயங்களை முடிந்துக்கொண்டு ஒவ்வொரு முறையும் தன்னிடம் திரும்பி வரும் தமிழ்ச்செல்வன், மாறி வரும் உலகின் போக்கு பற்றி சரியான தகவல்களைத் தராமல் தன்னைத் தவறாக வழி நடத்திவிட்டார் என்று நினைத்திருப்பாரா?...

அல்லது - உறுதியான ஒர் அரசியல் அடித்தளத்தைப் போடாமல், இராணுவ இயந்திரத்தை மட்டுமே கட்டி வளர்த்ததால் - தமிழினத்தின் அரசியல் விடுதலைக்கான போராட்டத்தை இராணுவ பலத்தை மட்டுமே அடிப்படையாக்கி வளர்த்ததால் - இன்று அந்த இராணுவக் கட்டமைப்பு உடைந்து நொருங்கும் போது - தமிழ்த் தேசிய இனத்தின் எதிர்காலமே நொருங்கி விழுகின்றது என்று உணர்ந்திருப்பாரா?...



அல்லது - கடந்த காலங்களில் செய்யப்பட்ட சில விடயங்களைச் செய்யாது தவிர்த்திருக்க வேண்டும் என்றோ, செய்யாது தவிர்த்த சில விடயங்களைச் செய்திருக்க வேண்டும் என்றோ நினைத்திருப்பாரா?..

அல்லது - தவறுகள் பற்றிய எந்தச் சிந்தனையுமே இன்றி - எல்லாவற்றையும் தான் சரியாகவே செய்து, எல்லா முடிவுகளையும் தான் சரியாகவே எடுத்திருந்ததாக நம்பியிருப்பாரா?..

எனக்கு எதுவும் தெரியாது.

ஆனால் - கடைசிக் காலத்தில் - குழப்பங்கள் ஏதுமற்று அந்த மனிதர் மிகத் தெளிவாக இருந்திருக்கின்றார் என்பதை என்னால் உணர முடிகின்றது.

தப்பி ஓடி வேறு ஊர்களுக்குச் சென்று விடாமல் அந்த மண்ணிலேயே அவர் வாழ்ந்திருக்கின்றார்.

வீட்டுக்கு ஒரு பிள்ளையைப் போராட்டத்திற்காகக் கேட்டவர், தனது பிள்ளைகளையும் அதே போராட்டத்திற்காக அனுப்பி சாகக் கொடுத்திருக்கின்றார்.

உருவங்கள் மாற்றி மறையாமல் - தலைமயிருக்கு கறுப்பு மை பூசி, சீராக முகத்தைச் சவரம் செய்து - கலக்கம் இல்லாமல், ஒழுக்கம் கலையாமல் அவர் இருந்திருக்கின்றார்.

அடையாளம் மறைத்து காணாமல் போகாமல் - தான் கனவு கண்ட "தமிழீழம்" என்ற நாட்டிற்கென அவரே உருவாக்கி - மக்களுக்கு வழங்கிய அந்த 'தேசிய குடிமக்கள் அட்டை'யைத் தன் கழுத்திலே அவர் சுமந்திருக்கின்றார்.



மாற்று உடை தரித்து மாயமாய் போகாமல் - தமிழீழத்தின் தேசியப் படைக்கென அவரே உருவாக்கி - தன் போராளிகளை களங்களில் அணியச் செய்த சீருடையை அவர் நேர்த்தியாக அணிந்திருக்கின்றார்.
ஒவ்வொரு போராளியின் கழுத்திலும் அணிவித்து களத்திற்கு அனுப்பிய சயனைட் நச்சுக் குப்பியை தன் கழுத்திலும் அவர் அணிந்திருக்கின்றார்.

எத்தனையோ கரும்புலிகளின் உடல்களில் அணிந்து அனுப்பி வைத்த வெடி குண்டு அங்கியை - துப்பாக்கிக் குண்டு பட்டு தற்செயலாக வெடித்து விடலாம் என்ற முன்னெச்சரிக்கையுடன் பொட்டம்மான் வற்புறுத்திக் கழற்றும் வரையிலும் - தன் உடலில் அவர் அணிந்திருந்திருக்கின்றார்.
எல்லாவற்றுக்கும் மேலாக - தானே துப்பாக்கியை ஏந்திப் போரிட்டு, இறுதியில் தன்னைத் தானே சுட்டு - களத்தில் அவர் மடிந்திருக்கின்றார்.

மில்லர் முதல், திலீபன் முதல் - தான் வழியனுப்பி வைத்த ஒவ்வொரு கரும்புலி வீரரிடமும் - "நீங்கள் முன்னாலே செல்லுங்கள் நான் பின்னாலே வருவேன்" என்று எவ்வளவு தெளிவுடன் சொன்னாரோ - அதே தெளிவுடனேயே அவர்கள் பின்னாலேயே அவரும் சென்றிருக்கின்றார்.

தன்னால் செய்ய முடியாத ஒன்றைச் செய்யும் படி அடுத்தவர்களிடம் கேட்காத மகோன்னதமான தலைமைத்துவப் பண்பின் இலக்கணமாக அவர் வாழ்ந்திருக்கின்றார்... வீழ்ந்திருக்கின்றார்.

முப்பது வருட காலமாகப் போராடி - சிறிது சிறிதாக அவர் பார்த்துப் பார்த்து கட்டி வளர்த்த தமிழ் சாம்ராச்சியம் - அவரது கண்களுக்கு முன்னாலேயே துகள்களாக உடைந்த நொருங்கி மண்ணோடு மண்ணாகி விட்டது. ஆனால் -

இந்த முப்பது வருட காலப் போராட்டத்தில் பிரபாகரன் சாதித்தது உண்மையில் அவர் இந்த மண்ணுக்கு மேலே கட்டி வளர்த்த அந்தத் தமிழ் சாம்ராச்சியம் அல்ல. ஏனெனில் - மண்ணுக்கு மேலே கட்டப்படும் சாம்ராச்சியங்கள் எழுவதும் வீழ்வதுமே வரலாறு.

பிரபாகரன் படைத்த உண்மையான சாதனை என்பது - ஒவ்வொரு தமிழனின் மனங்களுக்கு உள்ளும் அவர் கட்டியெழுப்பிய தமிழ் சாம்ராச்சியம் தான். அது நிமிர்ந்து எழுந்து கம்பீரமாக நிற்கின்றது. அது வீழ்ச்சி அற்றது.

"தமிழீழம்" என்ற விதையை எம் ஒவ்வொருவரது ஆத்மாவிற்குள்ளும் அறிவிற்குள்ளும் அவர் ஆழப் புதைத்துவிட்டு சென்றிருக்கின்றார்.

விடுதலை பெற்ற மனிதர்களாக - மதிப்புடனும் பெருமையுடனும் - இந்த உலகில் நாம் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்ற வெறியையும், வாழ முடியும் என்ற நம்பிக்கையையும் எமக்குள் அவர் ஊட்டிவிட்டுச் சென்றிருக்கின்றார்.

தமிழ்த் தேசியத்தை திடப்படுத்தி, தமிழர் தாயகக் கோட்பாட்டை வலுப்படுத்தி, தமிழர் தன்னாட்சி உரிமைக் போரிக்கையைப் பலப்படுத்தி -

எங்கள் இனத்தின் சின்னமாக, எங்களது அரசியல் அடையாளமாக, எங்கள் தேசியத்தின் குறியீடாக, எங்கள் கோபத்தினதும் சோகத்தினதும் மகிழ்ச்சியினதும் வெளிப்பாடாக - தனது சாவுக்குப் பின்னாலும் நின்று நிலைத்து வாழும் வகையான ஒரு கொடியைத் தமிழுக்கு அவர் தந்துவிட்டுச் சென்றிருக்கின்றார்.

இன்று இந்த உலகமும், சிங்களவர்களும், இந்தியாவும் அச்சப்படும் விடயம் -
பிரபாகரன் எங்கள் மனங்களுக்குள் கட்டியெழுப்பிவிட்டுச் சென்றிருக்கும் அந்த வீழ்த்த முடியாத சாம்ராச்சியம், அவர் எமக்கு ஊட்டிவிட்டுச் சென்றிருக்கும் உறுதியும் துணிவும் வீரமும் தான்.

பிரபாகரன் தோன்றுவதற்கு முன்னால் - வீரம், துணிவு, உறுதி என்பவை பற்றியெல்லாம் தமிழர்கள் புத்தகங்களில் படித்து, திரைப்படங்களில் பார்த்ததோடு சரி.

ஆயுதப் போராட்டமே ஒரே வழி எனத் துணிந்து வந்தவர்கள் கூட இந்தியாவின் ஆதிக்க ஆளுமைக்கு விட்டுக்கொடுத்து தமிழர்களின் உரிமைகளைக் கைவிடும் நிலைக்குள் தள்ளப்பட்டனர்.

சரியோ தவறோ - அந்த மனிதர் மட்டுமே தொடர்ந்து நடந்தார்; அந்த மனிதர் மட்டுமே - எங்கள் ஆத்ம தாகத்தின் முகமாக இந்த உலகிலே திகழ்ந்தார்.

அந்த மனிதர் மட்டுமே - எங்களாலும் முடியும் என்று எங்களையே நம்ப வைத்தார்.

தம்மைத் தாமே ஆளும் வகையான நிரந்தர அரசியல் தீர்வு ஒன்று தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு இந்த உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக ஆகுவதற்கு அந்த மனிதர் மட்டுமே காரணம்.

சரிகளுக்கும் தவறுகளுக்கும் அப்பால் அந்த மனிதர் ஒரு புனிதமான கனவோடு வாழ்ந்தார். நாம் எல்லோருமே சுமந்த அந்தக் கனவை நிறைவு செய்வதற்குச் சிறந்த வழி எனத் தனக்குப்பட்ட ஒரு வழியில் எந்தச் சலசலப்பும் இன்றி அவர் நடந்தார்.

அந்தப் பணயத்தில் சில தவறுகளைச் செய்யும் சூழ்நிலைக்குள் வரலாறு அவரை நிர்ப்பந்தித்தவிட்டது. தவறுகளாகப் பார்க்கப்படும் இன்னும் சில நிகழ்வுகள் உண்மையிலேயே தவறுகள் தானா என்பதை அந்த வரலாறே நாளை தீர்மானிக்கட்டும்.

தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் விடுதலை என்ற அதியுயர் இலக்கு நோக்கிய ஒரு மிகப் பிரமாண்டமான போராட்டத்தை நகர்த்திச் செல்லும் போது - அந்த இலக்கு மட்டுமே அவரது கண்களுக்குத் தெரிந்ததால், ஏனைய சில விடயங்களை அவர் பார்க்கத் தவறிவிட்டார் என்பது உண்மை தான்.

அவரைப் பொறுத்தவரையில் - தமிழ் மக்களைத் தலைநிமிர்ந்து வாழ வைக்க வேண்டும் என்பது தான் அவர் வரித்துக்கொண்ட இலட்சியம். அந்த இலட்சியத்தில் களங்கமற்றவராகவே அவர் எப்போதும் இருந்தார்.

அந்த இலட்சியத்திற்காகவே வாழ்ந்து, அந்த இலட்சியத்திற்காகவே தன்னை அர்ப்பணித்து, அந்த இலட்சியத்திற்காகவே வீழ்ந்தும் போனார் அந்தப் பெருமனிதன்.

அவரது இழப்பைத் தாங்கும் மனத் திடம் எமக்கு இல்லாமலிருக்கலாம்; அல்லது, அவரது வீரச்சாவை ஏற்க முடியாமல் வேறு ஏதும் காரணங்கள் எம்மைத் தடுக்கலாம்; ஆனால், அத்தகைய எமது மனப் பலவீனங்களோ, அல்லது வேறு காரணங்களோ - 37 ஆண்டுகளாக எமக்காகவே போராடி வீழ்ந்த அந்த மாதலைவனுக்கு நாம் செலுத்த வேண்டிய இறுதி வணக்க மரியாதைகளைச் செய்ய விடாமல் எம்மைத் தடுப்பவையாக இருப்பது நியாயப்படுத்த முடியாத பெரும் தவறு... ஒரு வகையில், அது நாம் அவருக்கு இழைக்கும் துரோகமும் கூட.

அவர் "இருக்கிறார்" என்றும் "இல்லை" என்றும் ஒரு மர்மத்தை நீடித்துச் சென்று, அவர் இருப்பதைப் போலவே ஒரு மாயையை வளர்த்துச் சென்று, திரும்பவும் எழுந்தருளி அவர் வருவார் என்ற பொய்யான நம்பிக்கையை ஊட்டிச் செல்வது ஏற்றுக்கொள்ள முடியாத பெரும் தவறு... ஒரு வகையில், அது அவரை நம்பி இந்தப் போராட்டத்தின் முதுகெலும்பாய் இருந்த மக்களுக்குச் செய்யும் இரண்டகம்.

அவரது இல்லாமையை ஏற்றுக்கொண்டு, அவருக்குரிய இறுதி வணக்கங்களைச் செலுத்திவிட்டு, விடுதலைப் போராட்டம் பற்றிய முழுமையான தெளிவைப் பெற்றுக்கொண்டு, அவர் விட்டுச் சென்றிருக்கும் தலைமைத்துவ இடைவெளியைப் பொருத்தமான முறையில் நிவர்த்தி செய்துகொண்டு - வரலாற்றை அடுத்த கட்டத்திற்கு நாம் எல்லோருமாகச் சேர்ந்து நகர்த்துவதே தேவையானதும் நேர்மையானதுமாகும்... ஒரு வகையில் அதுவே நாம் அவருக்குக்கு வழங்கும் மரியாதையும் கூட.

தேசத் தந்தை எஸ். ஜெ.வி செல்வநாயகத்தி்ன் மறைவுடன் அமைதி வழியில் முன்னெடுக்கப்பட்ட 'தமிழீழப் போர் - 1' முடிவுக்கு வந்தது.

தேசியத் தலைவர் வே. பிரபாகரனின் வீரச்சாவுடன் ஆயுதம் தாங்கி முன்னெடுக்கப்பட்ட 'தமிழீழப் போர் - 2' முடிவுக்கு வந்துள்ளது.

ஆனால் - தமிழர் போராட்டம் இன்னும் முடிவுக்கு வந்துவிடவில்லை.

ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் நாம் இழந்த எமது ஆட்சியும், கடந்த அறுபது ஆண்டு காலமாக நாம் இழந்து வரும் எம் அடிப்படை அரசியல் உரிமைகளும் இன்னும் மீளவும் வென்று எடுக்கப்பட்டுவிடவில்லை.

மிகக் கொடூரமான இன அழிப்புப் போரிற்குள் சிக்கி - உருக்குலைந்து - முட்கம்பி வேலிகளுக்குள் முடங்கிச் சிறையிடப்பட்டிருக்கும் எமது மக்களின் கெளரவமான வாழ்வு இன்னும் மீளவும் பெற்று எடுக்கப்பட்டுவிடவில்லை.
முன்னாலே சென்றுவிட்ட அந்தத் தலைவன் வழியில் பின்னாலே செல்வதே இப்போது எம் முன்னால் உள்ள தலையாய கடமை.

பிறந்திருக்கின்ற இந்தப் புதிய சூழலில் - புதிய சிந்தனையுடன், புதிய வழிமுறைகளில் - இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்கர்கள் என்று பிரிந்திருக்காமலும் அமைப்புக்கள், இயக்கங்கள், கட்சிகள் என்று சிதறியிருக்காமலும் - திறந்த மனதுடன் - "தமிழர்கள்" என்ற ஒரே அடையாளத்தின் கீழ் மட்டும் நாம் அணிதிரள்வோம்.

அவர் காட்டிய உறுதியுடன்... அவர் காட்டிய விடா முயற்சியுடன்... அவர் காட்டிய ஒழுக்கத்துடன்... அவர் காட்டிய இன பக்தியுடன்... - முப்பது ஆயிரம் தமிழ் போர் வீரர்கள் அணிவகுத்த - அவர் ஏற்றி வைத்துவிட்டுப் போயிருக்கும் எங்கள் தேசத்தின் தேசியக் கொடியின் கீழ் நாமும் அணிதிரள்வோம்.

அவர் விட்டுச் சென்ற இடத்திலிருந்து புதிய வேகத்துடன், முன்னெடுப்போம்... 'தமிழீழப் போர் - 3'

தி.வழுதி

"வணங்கா மண் "பொருள்களுக்கு நேர்ந்த கதி!

போரின் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கவென உணவுப் பொருள்கள், மருந்துப்பொருள் கள் மற்றும் வலது குறைந்தவர்களுக்கு உதவி உப கரணங்கள் என்பவற்றை எடுத்து வந்த கப்டன் அலி என்ற "வணங்கா மண் "கப்பல், இலங்கை அரசாங் கத்தினால் திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது.

போரினால் நிர்க்கதியற்று நிற்கும் தமது உறவுக ளுக்கு, தொலைதேசத்தில் வாழ்ந்தாலும் உதவ வேண் டும் என்ற பாசஉணர்வுடன் ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் வழங்கிய பொருள் களையே "வணங்கா மண் "கப்பல் ஏற்றி வந்தது. உறவினர்கள் என்று மட்டும் இல்லாமல் உணவுக்கும் மருந்துக்கும் வழியின்றி தமது சொந்தங்கள் செத்து மடிந்துவிடக்கூடாது என்ற மனித உணர்வுடன் அனுப்பப்பட்ட உதவிப் பொருள்கள் அவை.
முல்லைத்தீவில் போர் பெருமெடுப்பில் தொடங் கப்பட்ட காலத்திலிருந்தே, நாடு நாடாகக்சென்று புலம்பெயர் சமூகத் தொண்டர்கள் சேகரித்த உதவிப் பொருள்கள் அவை. அல்லல் உற்று ஒரு நேரக் கஞ் சிக்கும் வசதியின்றி இருந்த தமது உறவுகளுக்கு உதவ வேண்டும் என்ற பரிவுடன், வாஞ்சையுடன் புலம் பெயர் தமிழ் மக்கள் அனுப்பி வைத்த உதவிப் பொருள் களுடனேயே "வணங்கா மண் "பிரான்ஸிலிருந்து இலங்கை நோக்கிப் பயணமானது.



வன்னித் தமிழ் மக்களுக்கு உதவுவதற்கான உணவு, மருந்து மற்றும் பொருள்கள் பிரிட்டன், பிரான்ஸ், சுவிற்சர்லாந்து, ஜேர்மனி என்ற பெருவரிசைநாடுக ளில் வாழும் புலம்பெயர் மக்களால் உதவிப்பொருள் களென இரகசியமாக அன்றிப் பரகசியமாக வே சேகரிக் கப்பட்டன. அதுதொடர்பான தகவல்கள் உலகளாவிய ரீதியில் ஊடகங்களில் பிரசித்தப்பட்டிருந்தன.



"வணங்கா மண் "ஏற்றி வந்தபொருள்கள் இரகசிய மாக வோ சட்டவிரோதமாக வோ திரட்டப்பட்டவை அல்ல. அந்தந்த நாட்டு அரசாங்கத்தின் பெருந்தன்மை யோடும் தாராள மனதுடனும் அனுமதியோடும் அவை சேகரிக்கப்பட்டன. மிகக்குறிப்பாகப் பாதிக்கப்பட்ட வேற்று நாட்டு மக்கள் மீது கொண்ட இரக்கம், தாராள மனதுடன் அந்நாட்டுப் பிரசைகளும் தாமாக பரோப காரம் செய்தனர்.

ஆனால், தமிழ் மக்களைத் தனது சொந்த மக்க ளென்று உரிமைகொண்டாடும் இலங்கை அரசாங்கம், மனித நேயத்துடன் சேகரிக்கப்பட்ட பொருள்களை கப்பலில் இருந்து இறக்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்க மனம் இரங்கவில்லை.
இயற்கை அனர்த்தங்களின் போதும் சரி, மனித னால் தோற்றுவிக்கப்படும் செயற்கை அழிவுகளின் போதும் சரி, தேச, இன, மதம் பாராது, பாகுபாடு காட் டாமல் நிர்க்கதிக்கு ஆளாகி அந்தரிக்கும் மக்களுக்கு மனிதாபிமான இதயத்துடன் உதவுவது மனிதனுக் குள்ள இயற்கையான இயல்பு. அது வே மனிதத்துவ மும் விசேட குணாம்சமும் ஆகும். அதனைச் செய்யத் தயங்குபவர்கள் மனிதர்கள் என்ற வகுப்புக்குள் அடக் கப்பட முடியாதவர்கள். ஏனெனில், ஐந்தறிவு ஜீவன் கள் கூட அடுத்த ஜீவன் துடிப்பதை பொறுக்கமுடி யாது அவலக்குரல் எழுப்பி மற்றவற்றை அழைக்கும் இயல்பு கொண்டவை.




புலம்பெயர் தமிழ் மக்கள் பாசஉணர் வோடும், மனித நேயத்துடனும் அனுப்பிய உதவிப் பொருள்களைக் கொண்டுவந்த கப்பல் அவற்றை மீண்டும் எடுத்துச் செல்கின்றது என்றால், இந்த நாட்டில் புத்தபெருமான் போதித்த தத்துவங்களும் மனித நேயமும் ஜீவ காருண்யமும் முற்றாக வே அற்றுப்போய்விட்டன என் பதற்கான குறியீடே எனக் கருதவைப்பதாகும்.
அதுவும், இடம்பெயர்ந்த மக்களைப் பராமரிக்க போதிய நிதி வளமும் ஏனைய வளங்களும் "கம்மி "என்று ஒப்பாரி வைக்கும் அரசு, பிறப்பால் இலங்கையரான புலம்பெயர் தமிழ் மக்கள் அனுப்பிய பொருள்களை திருப்பி அனுப்பியது எந்த வகையிலும் ஏற்கக்கூடி யதோ நியாயப்படுத்தவல்லதோ அல்ல!





நீண்ட நெடுந்தூரத்தில் இருந்து எடுத்துவரப்பட்ட உதவிப் பொருள்களை ஏற்றுக்கொண்டு அரசாங்கமேஅதனை அகதிகளுக்கு விநியோகித்திருக்கலாம். வெளிநாட்டு அரசாங்கங்களிடமும் ஐ.நா.போன்ற சர்வதேசஅமைப்புக்களிடமும் நிதிக்கும் நிவாரணத் துக்கும் கையேந்தும், உதவிகளை எதிர்பார்க்கும் அரசு, புலம்பெயர் தமிழர்கள் அனுப்பிய பொருள்களை கப்பலுடன் திருப்பி அனுப்பியதை எந்த வகை மனித சமூக இயல்புக்குள் அடக்குவது என்பதனை தமிழர் களால் புரிந்துகொள்ளமுடியவில்லை.

அந்தந்த நாட்டு அரசாங்கத்தின் ஊடாக தமது உதவிப்பொருள்களை புலம்பெயர் மக்கள் உரிய வழி முறையில் நிய மப்பிரகாரம் அனுப்பி இருந்தால், அதனை ஏற்று அகதி களுக்கு விநியோகித்திருப்போம் என்று அரசாங்கம் நியாயம் கூறக்கூடும்.

எந்த விதிக்கும், நியமத்துக்கும் விதிவிலக்கு இல் லாமல் இல்லை. அது அந்தந்தச் சந்தர்ப்ப சூழ்நிலை களுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப, மாற்றி அமைக்கப் படுவது உண்டு. புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்கள் தமது தாய் நாட்டில் உள்ள சொந்தங்களுக்கு, இரத்த உறவுகளுக்கு ஆபத்தான நேரத்தில், நிர்க்கதி யான நேரத்தில் உதவும் பொருட்டு வழங்கிய பொருள் களைப் பெற்று இந்த அரசு வழங்குவதால் எந்த நெறி முறைக்கும் வழு வேறிவிடாது. அனுமதித்திருப்பின் அது மனித நேயத்தினதும் ஜீவகாருண்யத்தினதும் உச் சச் செயற்பாடாக அமைந்திருக்கும்.

போர் முடிந்துவிட்டது. வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழ் மக்கள் இங்கு திரும்பி, சொந்த நாட்டு வளர்ச்சிக்கு உதவலாம் என்று அறைகூவல் விடும் அரசுக்கு, புத்தபெருமான் போதித்த ஜீவகாருண் யம் புலம்பெயர் தமிழர்கள் சேகரித்த பொருள்களை ஏற்கும் விடயத்தில் எத்திசைமாறியது?

இலங்கைக்கு மிகப் பெருமளவு ஆயுதங்களை விற்ற பிரிட்டனும் ஐரோப்பிய நாடுகளும்


இலங்கை அரசினால் விடுதலைப்புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தின் நடவடிக்கைக்கு பல மில்லியன் ஸ்ரேலிங் பவுண் போர்த்தளபாடங்கள் பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளால் இலங்கைக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதாக "லண்டன் ரைம்ஸ்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
விடுதலைப்புலிகளுக்கு எதிராக இலங்கை அரசினால் முன்னெடுக்கப்பட்ட இரத்தக்களரி நிறைந்த சிவில் யுத்தத்திற்காகவே கடந்த மூன்று வருட காலப் பகுதியில் பெருமளவான ஆயுதங்கள் ஐரோப்பிய நாடுகளால் இலங்கைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் ரைம்ஸ் சுட்டிக் காட்டியுள்ளது.

பிரிட்டிஷ் அரசின் அதிகார பூர்வமான தரவுகளின் அடிப்படையில் கவச வாகனங்கள், இயந்திரத் துப்பாக்கிகள்,அரைத் தன்னியக்க கைத்துப்பாக்கிகள் உள்ளிட்ட யுத்த தளபாடங்கள் 13.6 மில்லியன் ஸ்ரேலிங் பவுணுக்கும் அதிகமான பெறுமதிக்கு பிரிட்டனால் இலங்கைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஸ்லோவாக்கியா 1.1 மில்லியன் பவுண்ஸ்கள் பெறுமதியான 10 ஆயிரம் ரொக்கட்டுகளை விநியோகித்துள்ளமையும் பல்கேரியா 1.75 மில்லியன் பவுண்ஸ்கள் பெறுமதியான துப்பாக்கிகள் மற்றும் வெடி பொருட்களை விற்பனை செய்ய அனுமதியளித்துள்ளமையும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆவணங்கள் மற்றும் அதிகாரிகள் மூலம் தெரியவந்துள்ளது.

இவ்வாறு விற்பனை அனுமதி வழங்கப்பட்ட போர்த் தளபாடங்கள் அனைத்தும் விநியோகப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த முடியாத வகையில் அரசாங்கங்கள் தலையிட்டுள்ளன.

ஸ்லோவாக்கிய மட்டுமே ரொக்கட்டுகளை விநியோகித்தமையை உறுதிப்படுத்தியுள்ளது.

இலங்கையின் 26 வருடகால சிவில் யுத்த வரலாற்றில் கடந்த 5 மாத காலப்பகுதியில் 20 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள இந்த யுத்தத்திற்கு ஐரோப்பிய ஒன்றியத்தால் விநியோகிக்கப்பட்ட இந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்ற கேள்வியை ரைம்ஸ் எழுப்பியுள்ளது.

இந்த ஆயுதங்கள் எதற்குப் பயன்பட்டன என்பதற்கான பதிலை அரசாங்கம் வழங்க வேண்டியது அவசியமென பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினரும் ஆயுத ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சபையின் உறுப்பினருமான மிக் காபேஸ் வலியுறுத்தியுள்ளார்.

உள்நாட்டு மோதல்களை எதிர்கொண்டுள்ள அதேவேளை, மிக மோசமான மனித உரிமை நிலைவரத்தையும் சர்வதேச சட்ட விதிகளையும் மீறியுமுள்ள நாடுகளுக்கான ஆயுத விநியோகம் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் 1998 ஆம் ஆண்டின் சட்ட விதிகளை இந்த ஆயுத விநியோகம் மீறியுள்ளதெனவும் ரைம்ஸ் தெரிவிக்கின்றது.

இலங்கையை சமாதான பேச்சுவார்த்தைக்கு அழைத்த ஐரோப்பிய ஒன்றியம் இராணுவ நடவடிக்கை மூலமான தீர்விற்கு ஆதரவளிப்பதில்லையென உறுதியளித்திருந்ததுடன் 2002 ஆம் ஆண்டில் யுத்த நிறுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கவலையையும் வெளியிட்டிருந்தது.

அமெரிக்காவும் 2006 2007 ஆம் ஆண்டுகளில் ஒரு மில்லியன் பவுண்ஸ் பெறுமதியான போர்த் தளபாடங்களை இலங்கைக்கு விற்பனை செய்திருந்தது. ஆனால், இலங்கையின் மனித உரிமை மீறல்கள் காரணமாகக் கடந்த ஆண்டு முற்பகுதியில் அனைத்து இராணுவ உதவிகள் மற்றும் போர்த் தளபாட விற்பனையை நிறுத்தியது.

யுத்த நிறுத்தம் முறிவடையத் தொடங்கிய 2006 ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியமும் ஆயுத விநியோகத்தை நிறுத்தியிருக்க வேண்டுமென ஆயுத விற்பனை நடவடிக்கைகளுக்கு எதிரானவர்களான பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

போர்த் தளபாடங்களை விநியோகிப்பதில்லையென ஐரோப்பிய ஒன்றியத்திடம் உறுதிமொழி ஒன்று இருப்பதாக அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு திரும்பிய லிபரல் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மல்கொம் பு?ஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பிரிட்டனின் இந்த ஆயுத விநியோகம் தொடர்பில் பதிலளிக்க முடியாத பல வினாக்கள் இருப்பதாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்ட விதிகளை பிரிட்டன் மீறியிருப்பதாகவும் பு?ஸ் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, மனித நேயப் பணியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது இலங்கை அரசினால் விதிக்கப்பட்டிருக்கும் அனைத்து கட்டுப்பாடுகளையும் இலங்கை அரசு நீக்கும் வரை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் இலங்கைக்கான ஆயுத விநியோகத்தை உடனடியாக நிறுத்த வேண்டுமென தொழில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பொதுநலவாய வெளிவிவகார அமைச்சருமான ஜோன் பற்றிள் வலியுறுத்தியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிகளின் படி அதன் அங்கத்துவ நாடுகள் ஆயுதப் போராட்டத்தை அதிகரிப்பதும் வகையிலோ அல்லது தூண்டும் வகையிலோ ஆயுத ஏற்றுமதிகளை மேற்கொள்ளக் கூடாது. அத்துடன், உள்நாட்டு கிளர்ச்சிகளை அடக்குவதற்காக ஆயுதங்களை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்க முடியாது.

இந்நிலையில், ஸ்லோவாக்கியா இலங்கைக்கு ரொக்கட் விற்பனை செய்தமை தவறல்ல எனத் தெரிவித்துள்ளது. ஏனெனில், இலங்கைக்கு ஆயுத விற்பனை மேற்கொள்ள ஐ.நா. தடை ஏதும் விதிக்கவில்லை. அத்துடன், அந்நாடும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமையுள்ளதுடன் புலிகள் அமைப்பை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்துள்ளது எனவும் ஸ்லோவாக்கியா தெரிவித்துள்ளது.

ஸ்லோவாக்கியாவின் நிலைப்பாட்டை அந்நேரத்தில் பிரிட்டன் ஆதரிக்காத போதிலும் தமது ஆயுத விநியோகத்திற்கு சீனா போன்று அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதி மோதல் உயிரிழப்புக்களுக்குஇந்தியாவுக்குத் தொடர்பு உண்டு! அமைதிப்படைத் தளபதியின் கருத்தை ஆதாரம் காட்டிக் குற்றச்சாட்டு


வன்னியில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைகளின்போது ஆயிரக்கணக் கான மக்கள் கொல்லப்பட்ட விடயத்தில் இந்தியாவுக்கும் தொடர்புள்ளது எனக் கடும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்திய அமைதிப்படையின் முன்னாள் தளபதி மேஜர் ஜெனரல் அசோக் மேத்தாவும் இரு சர்வதேச அமைப்புகளும் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன என்று லண்டனில் இருந்து வெளிவரும் "த ரைம்ஸ் " பத்திரிகை தெரிவித்துள்ளது.

"த ரைம்ஸ் " மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:
பெருமளவு பொதுமக்கள் கொல்லப்பட்ட இறுதிக்கட்டத் தாக்குதலில் இந்தியா தொடர்புபட்டிருந்தது என மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா "த ரைம்ஸ் "இற்குத் தெரிவித்துள்ளதுடன், இது ஆழ்ந்த கவலையையும் மனக்குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவம் முன்னெடுத்த நடவடிக்கைக்கு ஆதரவளிப்பது என இந்தியா முடிவெடுத்தது. பின்னர் முழுமையாக ஆதரவளித்ததுடன் மோதல் பகுதிகளில் என்ன நடைபெறுகின்றது என்பதை அலட்சியம் சேய்து விட்டது எனவும் அசோக் மேத்தா தெரிவித்துள்ளார்.

தமது சேல்வாக்கை இலங்கையில் அதிகரித்துக் கொண்டுள்ள சீனா மற்றும் பாகிஸ்தானை முறியடிக்க நினைத்து, காங்கிரஸ் கட்சி தலைமையிலான இந்திய அரசுகடந்த சில வருடங்களாக இலங்கைக்கு அதிகளவு ஆயுதங்களை வழங்கியுள்ளது. இதன்மூலம் 1991 இல் ராஜீவ் காந்தி கொலைக்காக காங்கிரஸ் கட்சி விடுதலைப் புலிகளைப் பழிவாங்க நினைத்ததென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கற்பனை சேய்முடியாத மனிதாபிமான பேரழிவு குறித்து சேஞ்சிலுவை சர்வதேசக் குழு எச்சரித்த போதிலும் இந்தியா அதனைத் தடுக்க முடியாமல் போனதற்கு இந்த இரு காரணங்களையும் வைத்து நியாயப்படுத்த முடியாதென மனித உரிமைக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இந்தியா உரிய நடவடிக்கையை எடுத்திருந்தால் பல உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம். யுத்தத்தின் முடிவை இது பாதித்திருக்காது என்றும் அந்த அமைப்புத் தெரிவித்துள்ளது.
புலிகளைத் தோற்கடிப்பதற்காக பொதுமக்களை கொல்லலாம் விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்காக எவ்வளவு பொதுமக்களைக் கொல்லவேண்டுமோ அவ்வளவு பொதுமக்களைக் கொல்லலாம் என்ற இலங்கை அரசின் கருத்தை இந்தியா எவ்வித ஆட்சேபனையும் இன்றி ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை நம்பவேண்டியுள்ளது என சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய பசுபிக் இயக்குநர் சாம் ஜரிவி குறிப்பிட்டுள்ளார்.

6 கோடி தமிழர்கள் வாழ்கின்ற தேசம் என்கின்ற போதிலும், இந்தியா இலங்கைக்கு இராணுவ உபகரணங்கள், பயிற்சிகள் மற்றும் புலனாய்வுத் தகவல்கள் ஆகியவற்றை வழங்கியுள்ளது என இராஜதந்திர வட்டாரங்கள் "த ரைம்ஸ் " பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளன.

மேலும் சர்ச்சைக்குரிய விதத்தில் இந்தியா இலங்கைக்கு தளர்வற்ற இராஜதந்திர ஆதரவை வழங்கியதுடன் பொதுமக்கள் தப்புவதை உறுதி சேய்வதற்காக யுத்தநிறுத்தம் ஒன்றுக்கு ஏற்பாடு சேய்யத் தவறிவிட்டது என்றும் அவை சுட்டிக்காட்டியுள்ளன.
இந்தியா தனது முழுமையான இராஜதந்திர பலத்தையும் பயன்படுத்தாத அதேவேளை, யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முழுமையான ஆதரவையும் அனுமதியையும் வழங்கியது எனவும் இராஜதந்திரிகள், மனித உரிமைப் பணியாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மோதல் காரணமாகப் பெருமளவு அகதிகள் தமிழ்நாட்டுக்கு வருவது குறித்து மாத்திரம் இந்தியா கவலையடைந்திருந்தது எனத் தெரிவித்துள்ள இராஜதந்திர வட்டாரங்கள் பான் கீமூனின் பிரதிநிதி விஜய் நம்பியாரின் பணி குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளன.
இப்படி "த ரைம்ஸ் " பத்திரிகை தெரிவித்துள்ளது.

தலைவர்களைத் திணிக்கும் எத்தனமா?


விடுதலைப் புலிகளைத் தோற்கடித்தமை தொடர்பான வெற்றிக் கொண்டாட்டங்கள் தலைநகர் கொழும்பில் இன்று கோலாகலமாக நடைபெறுகின்றன.

விடுதலைப் புலிகளைத் தோற்கடித்தமை தொடர்பாகத் தாம் ஏற்கனவே வெற்றிப் பெருமிதத்தில் நாட்டுக்கு ஆற் றிய உரையில் "இது புலிகளின் தோல்வியே தவிர, தமிழர் களின் தோல்வியே அல்ல!" என்று ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ கூறியிருந்தார். இன்று நடைபெறும் தமது படை களின் வெற்றித் திருவிழாக் கொண்டாட்டங்களின் போது நாட்டு மக்களுக்குத் தாம் ஆற்றும் உரையில் இதை மீண்டும் அவர் குறிப்பிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஆனாலும், இராணுவ ரீதியில் தோற்றவர்கள் புலிகளாக இருந்தாலும், அரசியல் ரீதியிலும் முற்றாகத் தோற்றுப் போய், தூக்கி வீசப்பட்டு விட்டோமோ என்ற வெறுப்பு நிலை வெறுமை நிலை இலங்கைத் தீவின் தமிழர்கள் மனதில் ஆழமாகப் பற்றிப் பீடித்து நிற்காமல் இல்லை என் பதையும் குறிப்பிட்டேயாக வேண்டும்.

தென்னிலங்கையில் சிங்களத் தலைமைகளிடமிருந்து அதிகாரவர்க்கத்தவரிடமிருந்து வரும் செய்திகள், அறிவிப்புகள், பிரகடனங்கள் அப்படித்தான் தோன்றுகின்றன.
"போரில் தோற்கடிக்கப்பட்டவர்கள் புலிகளே; தமிழர் கள் அல்லர்" என்று ஜனாதிபதியும் அவரது அரசின் ஏனைய தலைவர்களும் வாயால் கூறும் வார்த்தைகள் உண்மை யானவையாக இருக்குமானால், நாதியற்றிருக்கும் ஈழத் தமிழ் இனத்தைப் பெரும்பான்மையினர் வெளிப்படை யாகவே அரவணைத்துக் காட்டவேண்டிய மிகப் பொருத் தமான அவசியமான சமய, சந்தர்ப்பம் இதுவாகும். ஆனால் அதற்கு மாறாக, அவர்களைப் புறமொதுக்கி, மனக் கிலேசத் துக்கு உள்ளாக்கும் விடயங்களே இப்போதும் வெளிப்படுத் தப்படுகின்றன.

இராணுவ வெற்றிக் களிப்பில் மிதக்கும் பேரினவாதக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய "தமிழ்த் தேசியக் கூட் டமைப்பினரை நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்ற வேண்டும்!" என்ற கூக்குரலைத் தீவிரப்படுத்தியிருக் கின்றது.
நாட்டில் பாதுகாப்பு விடயங்களில் ஜனாதிபதிக்கு அடுத்து மிகச் செல்வாக்கு மிக்கவராக விளங்குபவரும், ஜனாதி பதியின் சகோதரரும், இலங்கைப் படைகளின் இன்றைய வெற்றி நிலைக்குக் காரணமான கதாநாயகன் என்று தென் னிலங்கையால் போற்றப்படுபவரும், பாதுகாப்பு அமைச் சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ஷவும் இக்கருத் தையே வலியுறுத்தியிருக்கின்றார்.

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை நாடாளுமன்றத் திலிருந்து வெளியேற்றவேண்டும் என்பதே எமது நிலைப் பாடாகும். இதனைப் பலமுறை வலியுறுத்தியிருக் கிறேன்." என்று அவரே அண்மையில் பகிரங்கப் பேட்டி ஒன்றில் கூறியிருக்கின்றார்.
இந்த நாடாளுமன்றத்தில் முடியாவிட்டால் அடுத்த நாடாளுமன்றத்திலாவது இதைச் செய்யவேண்டும் என அவர் வலியுறுத்தியிருக்கின்றார்.

ஒருபுறம் தமிழ் அரசியல் கட்சிகளை ஆளும் கட்சி யுடன் சேருமாறு வெளியே புலப்படாத அழுத்தம் அவற் றுக்கு. மறுபுறம் சுயாதீனமாகச் செயற்படும் தமிழ்க் கட்சிக ளையும் புலிகளை ஒழிப்பது போன்று அழித்தொழிக்கும் எத்தனம்.
தமிழர்களின் நியாயமான தேசியக் கோரிக்கைகளைப் பிரதிபலிப்பனவாகக் காட்டிக்கொண்ட வெகுஜன ஊடகங் கள் கூட அழுத்தங்களுக்கு இரையாகி ஆளும் தரப்புக்கு ஜால்ரா போடும் நிலைமை இன்னொருபுறம்.

இவற்றுக்கு மத்தியில் "தோற்றது புலிகள்தான்; தமிழர் கள் அல்லர்! என்ற கருத்து எடுபடக் கூடியதே அல்ல.

தமிழர்களின் நியாயமான அபிலாஷைகளை நிறைவு செய்யக்கூடிய தீர்வு எட்டப்படுவதன் மூலம் அமைதியும், சமாதானமும் ஏற்படுத்தப்பட வேண்டும் என யாரும் கருது வார்களேயானால், அதற்கு அத்தகைய அபிலாஷைகளை நேர்மைத் திறத்துடன் பிரதிபலிக்கக்கூடிய தமிழ்த் தலை மைகளுடன்தான் பேசவேண்டும்.

தென்னிலங்கை ஆட்சித் தலைமைகளின் அதிகாரத் துக்குள் ஈர்க்கப்பட்டவர்களுடனோ அல்லது அதிகாரத் தரப்பின் விருப்புக்கு இசைவாக ஆடுபவர்களுடனோ மட் டும் பேசி இணக்கத் தீர்வு காண்பது என்ற எத்தனத்தின் மூலம் இலங்கை அரசுத் தலைமை தான் விரும்பும் அல்லது தனக்குப் பிடித்தமான ஒரு திட்டத்தைத் தீர்வாகத் தமிழர் கள் மீது திணிக்க முயல்கிறது போலும்.

ஆனால் அதன் மூலம் இணக்கமான உண்மையான நீடித்து நிலைக்கக்கூடிய சமாதானமும் அமைதியும் ஏற் பட்டு விடாது; மாறாக, அடக்குமுறையின் மீது கட்டப் படும் போலி அமைதி மட்டுமே அதன்மூலம் எட்டப்படக் கூடும்.

ஈழத் தமிழர்களின் ஏக அதிகாரபூர்வ பிரதிநிதிகள் தாமே என்பதைப் பிரகடனப்படுத்தி, முன்னிறுத்திச் செயற் பட்ட புலிகள் இயக்கத்தை, இராணுவ நடவடிக்கைகள் மூலம் அழித்தொழிப்பதில் வெற்றி கண்டுள்ளதாகக் கரு தும் கொழும்பு, அதனால் ஏற்பட்டிருக்கும் பிரதிநிதித்துவ வெற்றிடத்துக்குத் தான் விரும்பும் தனக்குப் பிடித்தமான தரப்புக்களைக் கொண்டுவந்து நிறுத்தும் தந்திரோபாய எத்தனத்தில் இப்போது ஈடுபட முயல்கிறது. அதன் முதல் கட்டமாகவே தனக்குப் பிடித்தமில்லாத தரப்புக்களை ஓரம்கட்டி, ஒதுக்கி, இல்லாமல் செய்யும் தந்திரத்தை அது இப்படி ஆரம்பித்திருக்கின்றதோ என்ற சந்தேகம் எழு கின்றது.
புலிகளுக்கு எதிரான படை நடவடிக்கைகளுக்கும் ,அந்த இறுதிக் கட்டப் போரில் பல்லாயிரம் பொதுமக்கள் கொன்றொழிக்கப்பட்டமை தொடர்பாக சர்வதேசம் நடத்த எத்தனித்த விசாரணைகளை முட்டுக்கட்டை போட்டுத் தடுப்பதற்கும்
இலங்கைக்கு நேரடியாக ஒத்துழைத்து, உதவி, பங் களித்த பாரதம் இப்போது தமிழர்கள் தரப்பின் சுயாதீனப் பிரதிநிதிகளைக் கொழும்பு தன் விருப்புக்கேற்ப களை யெடுத்து நீக்கி, இசைவானவர்களை மட்டும் தேர்ந் தெடுத்து முன்நிறுத்தும் எத்தனத்துக்கு உடந்தையாகிப் போகும் வாய்ப்புகளும் உள்ளன.

அதற்காகத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முந்திக்கொண்டு போய்சென்னையினதும் புதுடில்லியினதும் காலில் விழுந்து இறைஞ்ச முயல்கின்றதோ என்று அரசியல் அவதானிகள் சந்தேகம் எழுப்புகின்றனர்.

உத்தேச தீர்வுத் திட்டம் 13 ஆவது திருத்தம்


இந்தியன் எக்ஸ்பிரஸ் பிரதம ஆசிரியருக்கு அளித்த பேட்டியில் - ராஜபக்ஷ

உத்தேச அரசியல் தீர்வானது அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்திலும் பார்க்க கூடுதலானதாக அமையும் என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, சகலருமே அதனை அமுல்படுத்துவதற்கு அவசியம் இணங்குவதாக இந்த 13 ஆவது திருத்தத்திலும் கூடுதலான தீர்வு விளங்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

இந்த உத்தேச யோசனைகள் தொடர்பாக தமிழ்க் கட்சிகளுடன் ஒன்றுசேர்ந்து தீர்மானிக்க வேண்டியது அவசியமென்றும் தான் இந்த விடயத்தில் அவர்களை நிர்ப்பந்திக்கப் போவதில்லை என்றும் தீர்வுத் திட்டமானது ஒவ்வொரு மக்கள் மத்தியில் இருந்தும், தலைவர்களிடமிருந்தும் வெளிவர வேண்டியது அவசியம் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

"இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆசிரியர் சேகர் குப்தாவிற்கு என்.டி.ரி.வி.யின், "வோக் த ரோக்' நிகழ்ச்சியில் பேட்டியளித்திருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பயங்கரவாதத்திலிருந்து, விடுதலைபெற்ற நிலையில் சேகர் குப்தாவுடன் தற்போது தான் உரையாடுவதாக குறிப்பிட்டிருக்கிறார்.

பேட்டியில் ஜனாதிபதி மேலும் தெரிவித்திருப்பதாவது;

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இழைத்த பாரிய தவறு ராஜீவ் காந்தியை கொன்றதாகும். ஏனெனில், இந்தியாவின் முழு அனுதாபத்தையும் அவர்கள் பகைத்துக்கொண்டனர். அந்த நேரத்தில் அவர் செய்த பாரிய தவறு இதுவென நான் நினைக்கிறேன். இரண்டாவதாக அவர் தெற்கின் சக்தியைப் பற்றி அளவிட்டிருக்கவில்லை. அவர் இழைத்த மற்றொரு தவறாகும் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் அவர் விரும்பியிருக்கவில்லை. முழு நாட்டையுமே அவர் கைப்பற்ற விரும்பியிருந்தார். அவருடைய திட்டம் முழு நாட்டையும் கைப்பற்றுவதாகும். பயங்கரவாதத்தினாலும், துப்பாக்கியினாலும் சகலரையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்று அவர் நினைத்திருந்தார். 30 வருடங்களில் அவருடைய பாரிய தவறு ராஜீவ் காந்தியின் படுகொலையாகும். அதுவே அவரது வீழ்ச்சிக்கு இட்டுச் சென்றது என்பது உண்மையாகும்.

இந்தப் பிரச்சினையை யார் உருவாக்கியது என்பது உங்களுக்கு தெரியும். இந்த மனிதர் எப்பொழுது இதனை ஆரம்பித்தார் மற்றும் இந்தியாவில் அவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது என்பது யாவருக்கும் தெரியும். இறுதியாக அவர்கள் இந்திய மக்களால் அன்பு செலுத்தப்பட்ட தலைவரை கொன்றனர். தமிழ் மக்களால் மட்டுமன்றி முழு இந்தியாவுமே அன்பு செலுத்தியவரை அவர்கள் கொன்றனர். தமிழ்நாட்டில் அவரைக் கொன்றனர். தமது ஜாக்கெட்டை அவர் (ராஜீவ்) கொடுத்தார் என்று நான் கேள்விப்பட்டேன். இது சரியானதா என்பது எனக்கு தெரியாது. அவர் இந்த மனிதருக்கு தமது சொந்த குண்டு துளைக்காத ஜாக்கெட்டை கொடுத்தார். எமது அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் தீர்வொன்றை ஏற்படுத்த அவர் (ராஜீவ் காந்தி) முயற்சித்தார். அதனை நாம் இப்போது வைத்திருக்கின்றோம். இந்திய சமாதானப்படை இலங்கைக்கு வந்தபோது நாம் மகிழ்ச்சியடையவில்லை. நானும் கூட சந்தோஷப்படவில்லை. நான் எதிர்த்தரப்பில் இருந்தேன். அந்த நேரத்தில் நாம் எதிர்த்தோம். ஆனால், இப்போது அவர்கள், அல்லது நாம் இந்திய அமைதி காக்கும் படையை மேலும் ஓரிரு மாதங்களுக்கு தங்கியிருக்க அனுமதித்திருந்தால் இதனை அவர்கள் முடித்து வைத்திருப்பார்கள்.

இந்திய அமைதி காக்கும் படையுடன், போரிட பிரேமதாஸா புலிகளுக்கு ஆயுதங்களை கொடுத்ததாக லலித் அத்துலத் முதலி தமக்கு கூறியதாக சேகர் குப்தா கேள்வியெழுப்பியபோது, சரி என்று ஜனாதிபதி பதிலளித்துள்ளார். 5 ஆயிரம் ரி56 ரக துப்பாக்கிகளை புலிகளுக்கு அவர் கொடுத்ததாக கேள்வியெழுப்பப்பட்டபோது, ஆம் என்று ஜனாதிபதி பதிலளித்துள்ளார்.

விடுதலைப்புலிகள் எப்போதுமே யுத்த நிறுத்தத்தை பயன்படுத்தியோ அல்லது இந்தியாவையோ அல்லது மேற்கு சக்திகளையோ பயன்படுத்த முயன்றதாகவும், ஜனாதிபதி கூறியுள்ளார்.

புலிகள் பிரேமதாஸாவை கொன்றனர், அவர்களுக்கு உதவியவர்களை கொன்றனர், ராஜீவ் காந்தியை கொன்றனர், காமினி திசாநாயக்காவை கொன்றனர், அமிர்தலிங்கம், லக்ஷ்மன் கதிர்காமர், நீலன் திருச்செல்வன் போன்ற அவர்களின் சொந்த தலைவர்களையே கொன்றனர். சமாதானத்தை விரும்பியவர்களை கொன்றனர்.

ராஜீவ் காந்தியை கொன்றதன் மூலம் அவர் ஏன் இந்த மாதிரியான பாரிய தவறினை செய்தார். அதுபற்றி நீங்கள் ஆராய்ந்துள்ளீர்களா? ஏதாவது தகவல்களை பெற்றுள்ளீர்களா? என்று ஜனாதிபதியிடம் கேட்கப்பட்டபோது, ராஜீவ் காந்தி அரசியல் தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க முயன்றார் என்றும், அதனை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்ததால் ராஜீவ் காந்தியை அவர் வெறுத்தார் என்றும், தான் கருதுவதாக ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார். அவர் (பிரபாகரன்) எந்த தீர்வையும் விரும்பவில்லை. தான் மன்னனென கருதினார். இந்தியா தமிழ்நாட்டின் மனநிலை குறித்து அவர் கவலைப்படவில்லை. அவருடன் அனுதாபம் கொண்ட சில தலைவர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். அவர்களைப் பற்றி குறிப்பிட நான் விரும்பவில்லை. அவர்களின் பெயரை நீங்கள் அறிவீர்கள். அவர்கள் யாவரும் மக்களால் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். தென்னிந்திய வாக்காளர்கள் புத்திசாலிகள் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

இறுதி நாட்களைப் பற்றி கூறுமாறும் இறுதியாக எவ்வாறு அவரையும் ஏனைய முக்கியமான தலைவர்களையும் கண்டுபிடித்ததாகவும் சேகர் குப்தா கேள்வியெழுப்பியபோது பதிலளித்த ஜனாதிபதி, அவர்கள் தப்பிச்செல்ல முயற்சித்ததாகவும், சிறிய நிலப்பகுதியில் ஓரங்கட்டப்பட்டிருந்த அவர்கள் 3 குழுக்களாக இருந்ததாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். அந்த 3 குழுக்களில் ஒரு சாரார் வடக்கு பக்கமாகவும், மற்றவர்கள் தெற்கு பக்கமாகவும் இடையில் ஏரிப் பக்கமாகவும் சென்றதாகவும், பிரபாகரனும் ஏனையவர்களும் முன்னோக்கி நகர்ந்ததாகவும், அச்சமயம் இராணுவத்துடன் மோதல் ஏற்பட்டதாகவும், ஜனாதிபதி கூறியுள்ளார். அப்போது அவர்கள் சுற்றிவளைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கட்டாரில் ஜனாதிபதி இருந்தபோது பிரபாகரனின் மரணம் குறித்து அவருக்கு தெரிவிக்கப்பட்டதாக தாங்கள் கேள்விப்பட்டதாக சேகர் குப்தா குறிப்பிட்டபோது, இல்லை எனவும் 19 ஆம் திகதியே தாம் செய்தியை பெற்றுக்கொண்டதாகவும், ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.

இதேவேளை, இந்தியாவிடமிருந்து அதிகளவிலான பிரதிபலிப்புகள் வெளிப்படுத்தப்பட்டதா, உதாரணமாக ஆஸ்பத்திரி மீது குண்டுவீச்சு இடம்பெற்ற போது, என்று சேகர் குப்தா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, அவ்வாறான ஒன்றுமே நடைபெறவில்லை என்றும் அது ஒரு பிரசாரம் என்றும் மருத்துவர்கள் தங்களுடன் இருப்பதாகவும் இந்த மாதிரியாக அறிவிக்குமாறும், தங்களுக்கு கூறப்பட்டதென அவர்கள் தெரிவித்ததாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். ஆஸ்பத்திரி மீது குண்டுவீச்சு இடம்பெறவில்லை எனவும், இது முற்றுமுழுதான பிரசாரம் எனவும் அவர் தெரிவித்தார்.

பொதுமக்களின் இழப்புகள் குறித்து கேட்கப்பட்டபோது 100 இலும் குறைவானவர்களே இறந்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். எந்தவொரு பொதுமக்களுக்கு எந்தவொரு இழப்புகளும் ஏற்படக்கூடாது என தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியிருந்ததாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் அவர்கள் செய்தது போன்று நாம் ஒருபோதும் அவ்வாறு செய்யவில்லை எனவும் ஜனாதிபதி கூறியிருக்கிறார்.

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது செய்மதி மூலமான பிரதிமைகளைப் பெற உதவியை பெற்றுக்கொண்டீர்களா என்று கேட்கப்பட்டபோது, எங்கிருந்தும் நாங்கள் செய்மதி புகைப்படங்கள் தொடர்பாக உதவியைப் பெற்றிருக்கவில்லை என்று தெரிவித்தார்.

இந்தியாவின் தேர்தல் வேளையில் அதாவது ஆறு கிழமைகள் தொடக்கம் பிரபாகரனின் மரணம் வரை இந்தியாவுடனான தொடர்பாடல் எவ்விதம் அமைந்திருந்தது என்று கேட்கப்பட்டபோது, நாம் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தோம். ஆரம்பத்தில் அவர்கள் பொதுமக்கள் இழப்புகள் தொடர்பாக கவலையடைந்திருந்தனர் என்று ஜனாதிபதி தெரிவித்தார். அவர்கள் ஏதாவது அழுத்தத்தைக் கொடுத்தார்களா எனக் கேட்டபோது, அவ்வாறான அழுத்தம் எதுவும் இல்லை என்று குறிப்பிட்ட அவர், நண்பர்கள் மத்தியில் அழுத்தங்கள் இருக்க முடியாது என்று கூறினார்.

நீங்கள் யுத்தத்தில் வெற்றி பெற்றுள்ளீர்கள். சமாதானத்தை எவ்வாறு இப்போது தோற்றுவிக்கப் போகிறீர்கள் என்று கேட்கப்பட்டபோது, முதலாவதாக நாங்கள் அவர்களை மீளக்குடியமர்த்த வேண்டும். முகாம்களுக்குள் இருந்தவாறு மக்களால் அரசியலைப் பற்றி சிந்திக்க முடியாது உடனடியாக நாம் மேற்கொள்ளப்படவேண்டியது அந்தப் பகுதிகளை மீளக்கட்டியெழுப்ப வேண்டும். அப்பகுதிகளில் உள்சார் கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். அதன் பின்னர் அவர்களை மீளக்குடியமர்த்த வேண்டும். இதற்கு 180 நாட்கள் திட்டத்தை வைத்திருக்கின்றோம். அந்த நடவடிக்கைகளில் நாம் ஈடுபட்டுள்ளோம். அதற்கான பணத்தை கண்டுபிடிக்கவேண்டும். ஒன்றிரண்டு பில்லியன் தேவைப்படுகிறது. இந்தியா எமக்கு உதவவேண்டும். அவர்கள் அதனைச் செய்வார்கள் என நினைக்கிறேன். மீளக் கட்டியெழுப்ப அவர்கள் உதவவேண்டும்.

தமிழ் மக்களை சமனான பிரஜைகளாக நீங்கள் நடத்துவீர்களா என்றும் உங்களது முறைமையில் சமத்துவம் உள்ளதா எனவும் இப்போது தாங்கள் தோற்கடிக்கப்பட்டதாக அவர்கள் உணர்வதாகத் தென்படுகிறதெனவும் கேட்கப்பட்டபோது எனது பாராளுமன்ற உரையை நீங்கள் பார்த்தால் இனிமேல் இங்கு சிறுபான்மையினர் இல்லையென்று நான் கூறியுள்ளேன். இங்கு இரண்டு வகையான மக்களே இருப்பார்கள். ஒன்று இலங்கையை நேசிப்பவர்கள் மற்றவர்கள் இலங்கையை நேசிக்காதோர். இதுவே மக்கள் மத்தியில் உள்ள வேறுபாடாக அமையும். சகல மக்களும் எனது மக்கள். அவர்கள் தமிழரோ, சிங்களவரோ, முஸ்லிம்களோ மலாயர்களோ, யாராகவிருந்தாலும் அவர்கள் எமது மக்கள் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

யாவரையும் தான் சமமாகவே நடத்துவதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

1983 இல் இது தொடர்பாக வரலாறு உள்ளது என்று கேட்கப்பட்டபோது, வரலாற்றை நாம் மறந்துவிட வேண்டும். நாம் புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார். தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்குமிடையில் நீங்கள் வேறுபாட்டைக் காண்பிப்பதில்லையா என்று கேட்டபோது, இல்லை, நான் அவ்வாறு செய்யமுடியாது. ஏனெனில், எனது உறவினர்களில் சிலர் தமிழர்கள். எனது பெறாமகள் ஒரு தமிழரைத் திருமணம் செய்துள்ளார். அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறார் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

உங்களது விருப்பத்துக்குரிய கிரிக்கெட் கதாநாயகன் தமிழரான முத்தையா முரளிதரனா என்று கேட்கப்பட்டபோது, எவ்வாறு அதை நான் கூறமுடியும். எனது சொந்த வீட்டிற்குள் அதனை அவ்வாறு கூறமுடியாது என்று ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.

சிங்கள மேலாதிக்கவாதம் என்பது யதார்த்தமானதாக இருந்தது பற்றி கேள்வி எழுப்பப்பட்டபோது, நான் அதனைக் கூறமாட்டேன். ஏனென்றால், சகல அரசியல்வாதிகளுமே அதனைத் தொடக்கியிருந்தனர் என்று தெரிவித்தார். நீங்கள் கிராமத்துக்குச் சென்றால் தமிழர்களுடன் பேசினால் அவர்களுக்கு இந்தப் பிரச்சினை இல்லை. ஆனால் அரசியல்வாதிகள் அதிகாரத்திற்காக இதனைச் செய்கிறார்கள் என்றும் அதிகாரத்திற்கு வருவதற்கான ஒரே வழியாக அது இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமக்கு அந்தமாதிரியாக செயற்படும் நோக்கமில்லை என்று தெரிவித்திருந்த ஜனாதிபதி, முழு நாடுமே தமக்கு வாக்களிக்க விரும்புவதாக அவர் கூறியுள்ளார். துரிதமாக தேர்தல் இடம்பெறும் சாத்தியம் பற்றி குறிப்பிட்டிருக்கும் ஜனாதிபதி, நவம்பர் மாதத்தில் அது தொடர்பாக தம்மால் தீர்மானம் எடுக்க முடியுமென்று கூறியுள்ளார்.

நிரந்தரமான சமாதானத்தை ஏற்படுத்த முடியுமென்று குறிப்பிட்ட அவர், தேர்தலில் தமிழ் மக்களையும் உள்ளீர்த்துக் கொள்வதை ஏற்கனவே செய்திருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.