ஈழத்தமிழர்களை காக்க கள்ளத்தோணியில் செல்வோம்: கலைஞருக்கு வைகோ பதில்


முதல்வர் கருணாநிதி நேற்று முன் தினம் இலஙகை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் பற்றி விமர்சனம் செய்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இதற்கு மதிமுக பொதுச்செயலாளரும், இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் முக்கியஸ்தருமான வைகோ பதில் அளித்து பேசியுள்ளார்.

அவர், ‘’வீரமானவர்கள் என்றால் கள்ளதோணியில் செல்லுங்கள் என்று முதலமைச்சர் சொல்லியிருக்கிறார். அவசியம் இருந்தால் ஈழத்தமிழர்களை காக்க செல்வோம்.

முதலமைச்சர் பொறுப்பில் இருப்பவர் இப்படி பேசலாமா? வரும் தேர்தலில் இலங்கை தமிழர் பிரச்சினையை முன்வைத்து நாங்கள் பிரசாரம் செய்வோம்’’ என்று தெரிவித்துள்ளார்.


பிரதமர் பொய் சொல்வது அவமானமாக இருக்கிறது:வைகோ
டெல்லியில் உள்ள ஜெர்மனி தூதரகத்தின் அரசியல் பிரிவு கவுன்சிலர் எரிக்கோசைல், டெல்லியில் உள்ள சுவீடன் நாட்டு தூதரகத்தின் அரசியல் பிரிவை கவனிக்கும் 2-வது நிலை செயலாளர் ஆஸ்கார் ஸ்கைட்டர் ஆகியோர் இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை நேற்று சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்புக்கு பின் மதிமுக பொதுச்செயலாளர் செய்தியாளர்களை சந்தித்தார்.\


அப்போது, ‘’இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் ராஜபக்சே எடுத்து வருகிறார். இதை கண்டித்து ஹிலாரி கிளிண்டன் கண்டனம் தெரிவித்தார். ஆனால் இலங்கை அரசு அவரின் கண்டனத்தை மறைத்து விட்டது.

வாஜ்பாய் அரசு இருந்தபோது இலங்கைக்கு ஆயுதங்களையோ, ராணுவத்தையோ அனுப்பவில்லை. தொடர்ந்து 5 ஆண்டுகாலம் இந்த நிலை நீடித்தது.

ஆனால் காங்கிரஸ் தலைமையிலான அரசு வந்த போது தான் இலங்கைக்கு ராணுவ உதவிகள் வழங்கப்பட்டன. காங்கிரஸ் அரசு தமிழ் மக்களுக்கு கெடுதல் விளைவித்துள்ளது.அவர்களின் இந்த துரோகம் தேர்தலில் முக்கிய பிரச்சனையாக இருக்கும்.

போரை நிறுத்துங்கள் என்று இதுவரை இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம், பிரதமர் மன்மோகன்சிங் வலியுறுத்தியது இல்லை. ஆனால் இதுகுறித்து பிரதமர் பொய் சொல்வது அவமானமாக இருக்கிறது.

இலங்கையில் செத்து விழும் ஒவ்வொரு தமிழனின் சாவுக்கும் இந்திய அரசு தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.

போர் நிறுத்தம் செய்யுங்கள் என்று இந்திய அரசு எங்களை வற்புறுத்தவில்லை என்று இலங்கை மந்திரி கூறியிருக்கிறார்.

ஆனால் போரை நிறுத்த இலங்கை அரசுடன் பேசி வருவதாக பிரதமர் கூறியிருக்கிறார். ஆனால் இந்த நிமிடம் வரை இலங்கையில் போர் நிறுத்தப்படவில்லை’’ என்று தெரிவித்தார்.

0 comments:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.