விடுதலைப் புலிகளின் ஒழுங்கும் கட்டுப்பாடும் சிறப்பாக செயற்படுவதை விமானத் தாக்குதல்கள் காட்டுகின்றன
விடுதலைப் புலிகளின் ஒழுங்கும் கட்டுப்பாடும் சிறப்பாக செயற்படுவதை விமானத் தாக்குதல்கள் காட்டுகின்றன என்று இந்திய முன்னாள் புலனாய்வுத்துறை அதிகாரி பி.ராமன் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் கடந்தவார வான் தாக்குதல் தொடர்பாக அவர் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளதாவது...
கடந்த 28ம் திகதி இரவு விடுதலைப் புலிகளின் வான்படைப் பிரிவு, வடக்கில் இராணுவ இலக்கு ஒன்றின் மீதும் தெற்கில் கொழும்பில் பொருளாதார இலக்கு ஒன்றின் மீதும் 90 நிமிட இடைவெளியில் தாக்குதல் நடத்தியுள்ளது. விடுதலைப் புலிகளின் வான்படைப் பி?வு 2007 மார்ச்சில் தாக்குதலை ஆரம்பித்தது முதல் கடந்த 28ம் திகதி வரை ஏழு வான்படைத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. போர்க்களச் செய்திகளைத் தரும் புலிகளுக்காதரவான ஆங்கில மொழி இணையத்தளமான தமிழ்நெற், கடந்த சில நாட்களாக அமைதியாக இருந்தது. இச்சம்பவத்திற்குப் பிறகு மீண்டும் போர்முனைச் செய்திகளை வழங்க ஆரம்பித்திருக்கிறது.
கடந்த 28ம் திகதி விடுதலைப் புலிகளின் வான்படை தாக்குதல் நடத்திய பிறகு அது இவ்வாறு குறிப்பிட்டிருந்தது: மன்னாரிலுள்ள சிறீலங்கா இராணுவத்தின் பிரதான ஆட்டிலறி மற்றும் பல்குழல் பீரங்கித் தளமான தள்ளாடி இராணுவத் தளத்தின் மீது இரவு 10.30 மணியளவில் புலிகளின் விமானப்படை மூன்று குண்டுகளை வீசியுள்ளது. பின்னர சிறீலங்காவின் விமானப்படை விமானங்கள் இரவு 11.00 மணி முதல் 1.30 வரை கிளிநொச்சியின் மேலாகப் பறந்து புலிகளின் விமானத்தைத் தேடிக் கொண்டிருந்தபோது புலிகளின் விமானம் கொழும்பை நோக்கிச் சென்று களனி திஸ்ஸ மின்நிலையத்தின் மீது இரண்டு குண்டுகளை வீசியுள்ளது. தள்ளாடியில் புலிகளின் விமானம் குண்டு வீசியதைத் தொடர்ந்து இரவு 11.00 மணி முதல் சிறீலங்கா விமானப்படையினரின் விமானங்கள் வன்னியின் மேலாகப் பறந்து தொடர்ச்சியாகப் புலிகளின் விமானங்களைத் தேடிக்கொண்டிருந்தன.
குறிப்பாக கிளிநொச்சி, இரணைமடு, விஸ்வமடு, முரசுமோட்டை பிரதேசங்களில் பரா வெளிச்சத்தைப் பாய்ச்சி அது தனது தேடுதலை மேற்கொண்டது. ஆனால் பொதுமக்கள் தரப்பிலிருந்து கிடைத்த தகவலின்படி புலிகளின் விமானங்கள் மன்னாரூடாக வன்னியை நோக்கிச் சென்றுவிட்டன என்று தெரியவந்தது. எவ்வாறோ புலிகள் ஆதரவு தமிழ் இணையத்தளமான புதினம்.கொம் புலிகளின் உத்தியோகபூர்வ செய்தியைப் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தது: மன்னார் பிராந்தியத்திலுள்ள தள்ளாடி இராணுவத்தளம் மீது செவ்வாய் இரவு 10.20 மணியளவில் புலிகளின் விமானப்படை குண்டுகளை வீசியுள்ளது. இராணுவத்தளம் பாரியளவில் சேதத்திற்குள்ளானது. இராணுவத்தினர் பலர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர்.
செவ்வாய் இரவு 11.45 மணியளவில் கொழும்பிலுள்ள களனிதிஸ்ஸ மின்நிலையத்தின் மீது வெற்றிகரமாகத் தாக்குதலை நடத்தியுள்ளது. இவ்விரு தாக்குதல்களையும் நடத்திவிட்டு புலிகளின் விமானங்கள் பாதுகாப்பாகத் தமது தளம் திரும்பியுள்ளன. ஒன்றிற்கு மேற்பட்ட புலிகளின் விமானங்கள் இத்தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டதான எண்ணத்தை ஏற்படுத்துவதற்கு புலிகளின் ஆதரவுத் தளங்கள் முயற்சி செய்தன. இத்தாக்குதலில் புலிகளின் ஒரு விமானமே பயன்படுத்தப்பட்டதாக ரொய்ட்டர் செய்தியாளர் அறிக்கையிட்டுள்ளார்.
இராணுவ வட்டாரங்களும் கொழும்பு மின்நிலையத்தின் மீதான தாக்குதலில் ஒரு விமானமே பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளன. புலிகளின் ஆதரவுத் தளங்கள் மன்னார் இராணுவத் தளத்தின் மீது குண்டு வீசிய விமானமோ விமானங்களோ கொழும்பை நோக்கிப் பறந்து வந்து மின்நிலையத்தின் மீது குண்டு வீசியதாகத் தெரிவித்தன. கொழும்பிலிருந்து வடக்கே 250 கி.மீற்றர் தொலைவில் தள்ளாடி இராணுவத்தளம் உள்ளது. குறைந்தது இரு குண்டுகளைக் காவிச் செல்லும் விமானம் அல்லது விமானங்கள் வன்னியிலிருந்து புறப்பட்டு இராணுவத் தளம் மீது குண்டுகளை வீசிவிட்டு பின்னர் கொழும்புக்கு வந்து தாக்குதல் நடத்திவிட்டு அதன் பின்னர் பாதுகாப்பாகத் தமது தளத்திற்குத் திரும்பிச் செல்வதற்குப் போதுமான எரிபொருளை வைத்திருந்தனவா?
இராணுவத்திற்குக் கடுமையான இழப்புக்களும் சேதங்களும் ஏற்பட்டிருப்பதாகப் புலிகள் சார்பு வட்டாரங்கள் உரிமை கோருகின்றன. ஆனால், இராணுவ வட்டாரங்களின் தகவலின்படி உயிரிழப்புக்கள் எதுவுமில்லையென்றும் தளபாடங்களுக்குச் சிறிதளவு சேதமே ஏற்பட்டிருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஒரேயொரு பாதுகாப்பு அதிகாரியே காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. குண்டுகள் வீழ்ந்த போது அதிர்ச்சியால் ஊழியர் ஒருவர் மரணமானதாக மின்நிலையம் தெரிவித்துள்ளது. நிர்வாகப் பகுதிக் கட்டிடங்கள் மற்றும் குளிரூட்டிகள் தீப்பற்றியதால் சிறிதளவு சேதம் ஏற்பட்டதாகவும் தீயணைக்கும் படையினர் அதனைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மின்பிறப்பாக்கி (ஜெனரேட்டர்) இயந்திரங்களுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதாகப் புலிகள் சார்பு வட்டாரங்கள் கூறியுள்ள போதும் இதுவரை கொழும்பில் மின்சாரத் துண்டிப்பு அதிகளவில் இடம்பெற்றதாகச் செய்திகள் வரவில்லை. தந்திரோபாயமாக வெற்றிகரமான முறையில் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. சிறீலங்கா விமானப்படையின் விமானங்களின் இடைமறிப்புகள் இல்லாமல் இலக்குகள் மீது குண்டுகளை வீசிவிட்டு தளத்திற்கு விமானங்கள் திரும்பிப் போயுள்ளன. அத்துடன், விமான எதிர்ப்பு பாதுகாப்பு முறைமைத் தாக்குதல்களால் வீழ்த்தப்படாமல் தளத்திற்குத் திரும்பிச் சென்றுள்ளன.
ஆயினும் பாரதூரமான சேதத்தை ஏற்படுத்தியதாகத் தென்படாததால் அவர்களின் தந்திரோபாய முக்கியத்துவம் மட்டுப்படுத்தப்பட்டதாகக் காணப்படுகிறது. எவ்வாறாயினும், வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் வெளிநாடுகளிலுள்ள ஆதரவாளர்கள் மற்றும் புலிகளின் உறுப்பினர்கள் மத்தியில் இந்தத் தாக்குதல்கள் உளவியல் ரீதியான உணர்வுகளைத் தக்க வைப்பது தொடர்பாக முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்க முடியும். இந்தத் தாக்குதல்களும் ஒரு பெண்புலி உறுப்பினர் உட்பட இரு கடற்புலிகளால் காங்கேசன்துறை துறைகத்தில் இரு வர்த்தகக் கப்பல்கள் மீது ஒக். 22இல் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களும் புலிகளின் ஒழுங்கு கட்டுப்பாடு என்பன சிறப்பாகச் செயற்படுவதைக் காட்டுகின்றன.
இலங்கை இராணுவத்தால் வன்னிப்பகுதியில் தற்போது மேற்கொள்ளப்படும் தாக்குதல் நடவடிக்கைகளால் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களின் மத்தியிலும் அவர்களின் ஒழுங்கும் கட்டுப்பாடும் சிறப்பாகச் செயற்படுவதை இது காட்டுகின்றது. 1950களில் கொரிய யுத்தத்தின் போது வடகொரியா பயன்படுத்திய யுத்த உபாயங்களை விடுதலைப் புலிகள் பயன்படுத்துவதாக கடந்த மார்ச்சில் விடுதலைப் புலிகள் வான்படையைப் பயன்படுத்த ஆரம்பித்த தருணத்திலிருந்து ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்து வந்தனர். எந்தவொரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நோக்கத்தையும் வென்றெடுக்காமல் தென்கொரிய, அமெரிக்க விமானப்படை விமானங்களுக்கு ஆச்சரியத்தையும் சங்கடத்தையும் கொடுக்கும் நோக்கில் வட கொரியா சிறிய ரக விமானங்களைப் பயன்படுத்தி அச்சமயம் தாக்குதல்களை மேற்கொண்டது.
விடுதலைப்புலிகள் விமானங்களைப் பயன்படுத்தியது முதல் இரண்டு சந்தர்ப்பங்களிலேயே கணிசமான உயி?ழப்புக்களும் தளபாட சேதாரங்களும் ஏற்பட்டன. கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் அநுராதபுர விமானப்படைப் பயிற்சித் தளத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலிலும், இவ்வருடம் செப்டம்பர் 9இல் வவுனியா இராணுவத்தளம் மீதான தாக்குதலின் போதும் கணிசமான உயி?ழப்புக்கள் உடைமையிழப்புக்கள் என்பன ஏற்பட்டன. இவ்விரு தாக்குதல்களும் ஆகாயமார்க்கமாக புலிகளின் விமானப்படையினரும் தரைமார்க்கமாக தற்கொலைப் போராளிகளும் இணைந்து மேற்கொண்ட தாக்குதல்களாகும். தரை மார்க்கமாக மோதலில் ஈடுபட்ட தற்கொலைப்படை உறுப்பினர்களே பெருமளவு உயிர், உடைமை அழிவுகளை ஏற்படுத்தினர்.
விமானத்தின் பங்களிப்பு இங்கு உளவியல் ரீதியாக அத்தியாவசியமானதாக இருந்தது. தரையிலுள்ள சிறீலங்கா பாதுகாப்புப் படையினரின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக இது அத்தியாவசியமானதாகக் கருதப்பட்டது. ஆனால், வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கைகள் வான்மார்க்க, தரைமார்க்க உறுப்பினர்களிடையே சிறப்பான ஒத்துழைப்பின் தரத்தைக் காட்டுவனவாக உள்ளன. புலிகளின் விமானங்கள் தனியாகச் செயற்படும் போதெல்லாம் அதாவது தரைமார்க்கமாக உறுப்பினர்களுடன் கூட்டுச் சேர்ந்து செயற்படாத வேளைகளில் வென்றெடுக்கப்பட்ட பெறுபேறுகள் குறிப்பிடத்தக்கனவாக இல்லை. தரைமார்க்க சக்திகளின் ஆதரவு இல்லாமல் பொருளாதார இலக்குகள் மீது தனியாக விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டால் கணிசமான சேதத்தை ஏற்படுத்த முடியும்.
ஆனால், குண்டுகள் போதியளவு சக்தி வாய்ந்தவையாக இருத்தல் வேண்டும். இதுவரை பொருளாதார நிலைகள் மீது விடுதலைப்புலிகள் இரு தாக்குதல்களை நடத்தியுள்ளனர். கடந்த வருடம் கொழும்பில் பெற்றோல் குதங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அதிலொன்றாகும். மற்றையது ஒக்.28இல் மேற்கொள்ளப்பட்ட அனல் மின் நிலையம் மீதானதாகும். இரு சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்தப்பட்ட குண்டுகள் போதியளவு சக்தி வாய்ந்தவையல்ல. அத்துடன், உபகரணங்களுக்குப் பாரதூரமான சேதத்தை ஏற்படுத்தக் கூடியவையுமல்ல. அத்தோடு சரியான இலக்கைக் கொண்டதாகவும் அது இல்லை. இதன் விளைவாக பொருளாதார ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்திலிருந்து இவ்விரு தாக்குதல்களும் தோல்வியடைந்துள்ளன.
இதேவேளை, அண்மைய தாக்குதல் முன்னைய தாக்குதல்களைப் போலவே சிறீலங்கா விமானப் படையினதும் விமான எதிர்ப்புப் பாதுகாப்பு நடவடிக்கையினதும் உரிய தருணப் பாதுகாப்பு நடவடிக்கையின் பலவீனத்தை மீண்டுமொரு முறை வெளிப்படுத்தியுள்ளன. விமான எதிர்ப்புச் சுடுகலன்களால் விமானத்தைச் சுட்டுவீழ்த்தக் கூடியதாகவும் இருக்கவில்லை. தாக்குதல் நடத்திய விமானங்களைத் துரத்திச் சென்று கீழே இறங்குவதை தடுக்கவும் முடியவில்லை. விடுதலைப் புலிகளின் விமானங்கள் கீழே இறங்கிய இடத்தைக் கண்டுபிடிக்கவும் முடியவில்லை. ஆனால் விடுதலைப் புலிகளின் விமானங்கள் திரும்பிச் சென்ற வேளை சிறீலங்கா விமானப்படை விமானங்கள் வானில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், புலிகளின் விமானங்கள் தரையிறங்கும் போது அவை தரையிறங்கும் இடத்தை அடையாளம் கண்டு தாக்குதல் நடத்துவதில் அவை தோல்வி கண்டுள்ளன. புலிகளின் விமானம் பாதுகாப்பாகத் தரையறங்கியதுடன் அவர்களின் வான்படையைச் சேர்ந்த தொழில்நுட்பவியலாளர்கள் துரிதமாக அவற்றின் பாகங்களைக் கழற்றிக் கொண்டு அதனை அவர்கள் இரகசியமாக வைக்கும் இடத்திற்குக் கொண்டு சென்று விட்டனர்.
தலைப்புகள்
ஆய்வு கட்டுரைகள்
0 comments:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.