தன்னை சிறையில் அடைத்ததை கண்டித்து போராட்டங்களில் ஈடுபட வேண்டாம்: மதிமுக தொண்டர்களுக்கு வைகோ வேண்டுகோள்

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தன்னை சிறையில் அடைத்ததை கண்டிக்கும் வகையில் எந்தவிதமான போராட்டங்களிலும் கட்சியினர் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு எதிராக தூத்துக்குடியில் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்திய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, 2 எம்.எல்.ஏ.க்கள் உட்பட 195 பேரை பொலிசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரையும் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்பாக வைகோ வெளியிட்ட அறிக்கையில்,

மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டு தனது குடும்பத்தினரை கோடீஸ்வரர்கள் ஆக்கியும், ஆட்சி அதிகார சுயநலவெறிக்கு ஆளாக்கியும், தமிழக மக்களை வஞ்சித்து வருகின்ற கருணாநிதி இலங்கைத் தமிழர்களைப் படுகொலை செய்யும் சிங்கள அரசுக்கு ஆயுதம் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் வழங்கிடும் காங்கிரஸ் சதித்திட்டத்தின் பங்குதாரராக ஆகிவிட்டார்.

காங்கிரஸ் கட்சியின் ஆதரவை இழந்துவிட்டால் தமிழகத்தில் ஆட்சியை பறிகொடுக்கும் நிலை ஏற்படும் என்று பயந்து அந்த காங்கிரஸ் கட்சிக்கு பாதபூஜை செய்வதற்கும் தயாராகிவிட்டதால் காங்கிரஸ் மேலிடத்தை திருப்தி படுத்துவதற்காக என்னையும், தோழர்களையும் கைது செய்து சிறையில் அடைக்கச் செய்து விட்டார்.

நாடாளுமன்றத் தேர்தல் நமது கதவைத் தட்டுகிறது. ஈழத்தமிழர்களுக்கு மன்னிக்க இயலாத துரோகத்தைச் செய்த காங்கிரசையும், திமுகவையும் படுதோல்வி அடையச் செய்யவும், நாம் அங்கம் வகிக்கும் அதிமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்யவுமான கடமையும் நம் கண் முன்னால் காத்திருக்கிறது.

எனவே நானும், தோழர்களும் பிணையில் வெளிவர முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மதிமுகவினர் என்னைச் சிறையில் அடைத்ததை கண்டிக்கும் வகையில் எவ்வித போராட்டத்தில் ஈடுபட்டாலும் கருணாநிதி அடக்குமுறைகளை ஏவுவார். அதற்கு இடம் கொடுக்காத வகையில், எவ்விதமான போராட்டங்களிலும் ஈடுபட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

0 comments:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.