வன்னியிலிருந்து வெளியேறும் மக்கள் உறவுகளுடன் தொடர்புகொள்ள முடியாத அவலம்
மோதல் நடைபெறுகின்ற வன்னிப்பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறி வேறு இடங்களுக்கு செல்வதன் காரணமாக அவர்கள் தமது உறவினர்கள் மற்றும் குடும்பங்களைப் பிரிந்து வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாட் பதியுதீனுடனான சந்திப்பு வெள்ளிக்கிழமை இடம் பெற்ற போது இதனை சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் அவரிடம் சுட்டிக்காட்டியுள்ளது. தமது குடும்பங்களை விட்டு பிரிய வேண்டிய இந்த நிலைமையின் போது நாட்டின் வேறுபகுதிகளில் வாழும் தமது உறவுகளுடனோ அல்லது வெளிநாட்டில் வாழும் உறவினர்களுடனோ எவ்வித தொடர்பையும் அம்மக்கள் மேற்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தனர்.
இம்மக்கள் தமது உறவுகளுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதற்கும் அவர்களுடன் திரும்பவும் இணைந்து வாழ்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட வேண்டுமெனவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இம்மக்களுக்கான அடிப்படை சுகாதார வசதிகளை மேம்படுத்தவென முதலுதவி சிகிச்சை, நடமாடும் அம்புலன்ஸ் சேவை, உடல் உள விருத்திக்கான சமூக புனர்வாழ்வுத்திட்டங்கள் மற்றும் நடமாடும் சிகிச்சை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
அதிகாரிகள் தெரிவித்துள்ள தகவலின் படி, கடந்த டிசம்பரில் இருந்து 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் மோதல் நடைபெறும் பகுதிகளிலிருந்து வெளியேறியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.
பாதுகாப்பான சூழலில் இம்மக்கள் வாழ்வதற்கான உரிய ஏற்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்படுவதுடன், போதிய தங்குமிட வசதிகள், சத்துணவு மற்றும் சுகாதார அடிப்படைவசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமெனவும் அத்துடன், அந்த மக்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கான அனுமதியும் வழங்கப்படவேண்டுமெனவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கேட்டுள்ளது.
தலைப்புகள்
மனித உரிமைகள்
0 comments:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.