சிக்கல் நிறைந்த போர்களத்தில் அடுத்து நடக்க போவது என்ன ?
வன்னிச் சமர் இப்போது புதுக்குடியிருப்பின் எல்லைகளைக் கடக்கின்ற நிலையை அடைந்திருக்கிறது. புதுக்குடியிருப்புச் சந்தியை இந்த மாதத் தொடக்கத்தில் கைப்பற்றிய படையினர், புதுக்குடியிருப்புப் பிரதேசம் முழுவதையும் கைப்பற்ற இன்னும் சண்டையிட வேண்டிய நிலையில் உள்ளனர்.
கிளிநொச்சியைக் கைப்பற்றவோ, பூநகரியைக் கைப்பற்றவோ, மாங்குளம் அல்லது மல்லாவி, துணுக்காய், முல்லைத்தீவு நகரங்களைக் ஆய்வு:அங்கதன்
கைப்பற்றவோ, படையினர் இதுபோன்று அங்குலம் அங்குலமாகச் சண்டையிட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கவில்லை. மேற்படி நகரங்களின் சில பகுதிகள் கைப்பற்றப்பட்டதும், அவற்றை முழுமையாகக் கைப்பற்றும் வாய்ப்பு படையினருக்குக் கிடைத்து வந்தது.ஆனால், புதுக்குடியிருப்பு நகரின் ஒவ்வொரு வளவிலும், ஒவ்வொரு வீட்டு முற்றத்திலிலும், குச்சொழுங்கைகளிலும் சண்டைகள் நடக்கின்றன.
புதுக்குடியிருப்பு புலிகளின் பலமான கோட்டையாக இருந்த பகுதி. அதை இழப்பதற்குப் புலிகள் தயாராக இருக்கவில்லை.இதனால் அவர்கள் தொடர்ந்து கடுமையான எதிர்த்தாக்குதல் நடத்தி படையினரின் முன்னகர்வைத் தடுத்து வருகின்றனர்.
இது முதற் காரணம்.புலிகளின் கட்டுப்பாட்டில் இப்போது சுமார் 26 சதுர கிலோ மீற்றர் பரப்பளவான பகுதி மட்டுமே இருக்கிறது.இந்தப் பகுதியையும் இழந்து விடாமல் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் புலிகளுக்கு இருக்கிறது. இதனால் அவர்கள் கடுமையாகச் சண்டையிட்டு படைநகர்வைத் தடுக்க முனைகின்றனர்.
"பரந்த பிரதேசத்துக்குள் புலிகளைச் சண்டைக்கு இழுத்து, சாதகமான இடத்தில் ஊடறுத்து நுழையும் படைத்தரப்பின் வழக்கமானதந்திரோபாயத்தை இந்தக் களமுனையில் கையாள்வது கடினமானது.அதைவிடப் புலிகள் இந்தப் பகுதியில் கனரக இயந்திரத் துப்பாக்கிகளை பயன்படுத்தித் தாக்குதல் நடத்தி வருகின்றனர்"
இது இரண்டாவது காரணம்.புதுக்குடியிருப்புச் சண்டை குறுகிய பிரதேசத்துக்குள் தான் நடக்கிறது. ஆனால் படைத்தரப்பு மிகப் பெரியளவிலான படைபலத்தை இங்கு குவித்து வைத்திருக்கிறது.இலங்கை இராணுவம் மட்டுமன்றி உலகின் எந்தவொரு இராணுவமுமே இத்தகையதொரு சிறிய பிரதேசத்துக்குள், குறைந்த எண்ணிக்கையான ஆட்பலத்தைக் கொண்ட ஒரு படையணியை அழிப்பதற்கு, இந்தளவு பிரமாண்டமான படையணிகளையோ, சுடுபல சக்தியையோ வளங்களையோ பயன்படுத்தியதாக வரலாறு இல்லை.
கரையோரப் பாதுகாப்பு வலயத்தின் வடக்கே சுமார் 2 கி.மீ தொலைவில் பிரிகேடியர் பிரசன்ன சில்வாவின் 55 ஆவது டிவிசன்.கரையோரப் பாதுகாப்பு வலயத்தின் மேற்குப் பகுதியில் பிரிகேடியர் சவீந்திர சில்வாவின் 58 ஆவது டிவிசன்.இந்தப் பாதுகாப்பு வயலத்தின் தெற்மேற்குமற்றும் மேற்குப் பகுதிகளில் 53 ஆவது மற்றும் 68 ஆவது டிவிசன்.தெற்குப் புறத்தில 59 ஆவது டிவிசன்.இவ்வாறு புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள குறுகிய நிலப்பரப்பைச் சுற்றியதாக 5 டிவிசன் படையினர் முன்னரங்குகளை அமைத்திருக்கின்றனர்.இவற்றில் 59 ஆவது டிவிசன் இதுவரையில் முன்னகர்வுகளை மேற்கொள்ளாமல் வட்டுவாகல் பாலத்தோடு தற்காப்பு நிலைகளை அமைத்து நிற்கிறது.
ஆனாலும் வரும் நாட்களில் இந்த டிவிசன் மற்றொரு களமுனையைத் திறக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.காரணம், இது வரையில் 59 ஆவது டிவிசன் 3 பிரிகேட்களைக் கொண்டிருந்தது. இப்போது இந்த டிவிசனில் மேலதிகமாக இரண்டு புதிய பிரிகேட்கள் சேர்க்கப் பட்டிருக்கின்றன.அவற்றில் 59-4 பிரிகேட்டுக்கு தளபதியாக நியமிக்கப்பட்டிருப்பவர் விசேட படைப்பிரிவைச் சேர்ந்த அதிகாரியான லெப். கேணல் தம்மிக ஜெயசுந்தர.இவர் முகமாலைக் களமுனையில் இயந்திர காலாற்படைப் பிரிவின் பதில் தளபதியாக இருந்தவர்.பின்னர் கிளிநொச்சிக் களமுனையில் இருந்த 57-2 பிரிகேட் தளபதி லெப். கேணல் சேனாரத் பண்டார வெளிநாடு சென்றிருந்தபோது, அந்த பிரகேட்டை வழிநடத்தியவர்.மீண்டும் இயந்திர காலாற்படைப் பிரிவுக்கு அனுப்பப்பட்ட அவர், இப்போது முல்லைத்தீவுக் களமுனைக்கு மாற்றப் பட்டிருக்கிறார்.
இதனால் படைத்தரப்பு கரையோரப் பாதுகாப்பு வலயத்தின் தென்முனையில் புதிய களமுனை ஒன்றைத் திறக்கும் சாத்தியங்கள் உள்ளன.
புதுடிக்குடியிருப்பு நகருக்கு தெற்கேயிருக்கின்ற மந்துவில் சந்தியையும், அதனைச் சார்ந்த நந்திக்கடல் நீரேரியின் மேற்கு, வடக்குப் பகுதிகளையும் கைப்பற்ற படைத்தரப்பு இப்போது பெரும் முயற்சிகளைச் செய்து வருகிறது.68 ஆவது டிவிசன் இந்தப் பகுதியில் கடந்த சில வாரங்களாகக் கடுமையாகச் சண்டையிட்ட போதும் இந்தப் பகுதியில் புலிகள் பலமாக இருந்து வருகின்றனர்.
கேணல் ரவிப்பிரியவின் தலைமையிலான 68 ஆவது டிவிசனின் இரண்டு பிரிகேட் படையினர் இந்தப் பகுதியில் முன்னேறி வருகின்ற நிலையில், புலிகளின் கடும் எதிர்த் தாக்குதல்களால் அவர்களுக்குப் பாரிய இழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.இந்தப் பத்தியை எழுதிக் கொண்டிருந்த போது கூட (24 ஆம் திகதி இரவு) மந்துவில் பகுதியில் கடுமையான சண்டைகள் நடந்து கொண்டிருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.இந்தச் சண்டைகளில் படுகாயமுற்ற பெருந்தொகைப் படையினர் கள வைத்தியசாலைகளுக்கு எடுத்து வரப்படுவதாகவும், பெருமளவு படையினர் கொல்லப் பட்டிருப்பதாகவும் களமுனைத் தகவல் ஒன்று தெரிவிக்கிறது. எனினும், இதுபற்றிய உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் இப்பத்தி எழுதப்படும் வரையில் இருதரப்பில் இருந்தும் வெளியாகவில்லை.
புதுக்குடியிருப்புக்கு கிழக்கே முல்லைத்தீவு வீதியையும், அதன் இரு புறங்களையும் மையமாகக் கொண்டு முன்னேறும் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ணவின் 53 ஆவது டிவிசனும் புலிகளின் கடும் எதிர்ப்புகளைச் சந்தித்து வருகிறது.புதுக்குடியிருப்புச் சந்தி, அதன் பின்னர் வைத்தியசாலைப் பகுதி, குழந்தை இயேசு கோவிலடி, சிவன் கோவிலடிப் பகுதிகளைக் கடக்க பல வாரங்கள் சென்றுள்ள இந்தப் படைப்பிரிவு, ஒவ்வொரு அங்குல நிலத்துக்காகவும் கடுமையாகப் போரிட வேண்டியிருக்கிறது.இலங்கை இராணுவத்தின் முதலாவது றிசேவ் தாக்குதல் படைப்பிரிவான 53 ஆவது டிவிசன் எதிர்பார்க்கப் பட்டது போன்று வேகமாக முன்னேற முடியாதளவுக்குப் புலிகளின் எதிர்த் தாக்குதல்கள் வீரியம் மிக்கதாகவுள்ளது.
இந்தச் சண்டைகளில் படைத்தரப்புக்கு பெருமளவில் இழப்புகள் ஏற்பட்டிருப்பதாகத் தெரிய வருகிறது.அதேவேளை புதுக்குடியிருப்புக்கு வடகிழக்கே, இரணைப்பாலைப் பகுதியில் 58 ஆவது டிவிசன் இப்போது புதுமாத்தளனுக்கான வீதியைத் துண்டித்து விட்டு, அடுத்த கட்டமாக கரையோரப் பாதுகாப்பு வலயத்தைக் கைப்பற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறது.புதுக்குடியிருப்பின் எஞ்சிய பகுதிகளைக் கைப்பற்றிய பின்னரே பாதுகாப்பு வலயத்துக்குள் காலடி எடுத்து வைப்பதே படைத்தரப்பின் திட்டமாகத் தெரிகிறது.இப்போதைய நிலையில் கடலேரியைக் கடந்து பாதுகாப்பு வலயத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்துவது ஆபத்தாக முடியலாம் என்று படைத்தலைமை கருதுகிறது.காரணம், புதுக்குடியிருப்பின் கிழக்குப் பகுதியில் சில பிரதேசங்கள் புலிகளிடம் எஞ்சியிருக்கின்ற நிலையில் பாதுகாப்பு வலயத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தும் போது பொதுமக்கள் பரவலாகச் சிதறி ஓடுவார்கள்.அவர்களோடு புலிகளும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் ஊடுருவி விடுவார்கள் என்ற பயம் படைத்தரப்புக்கு இருக்கிறது.எனவே புதுக்குடியிருப்பின் எஞ்சிய பகுதிகளைக் கைப்பற்றி விட்டு, அடுக்கடுக்கான பாதுகாப்பு வளையங்களை உருவாக்கி, பெருமளவு படையினரை முன்னிறுத்திக் கொண்டு தான், பொதுமக்களை உள்வாங்க திட்டமிடப் பட்டிருக்கிறது.
"புலிகளின் இராணுவப் புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் இரத்தினம் மாஸ்ரரின் வழிகாட்டலில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் ஊடுருவியுள்ள புலிகளின் அணிகளுக்கு தளபதி தோமஸ் பொறுப்பாக இருப்பதாக இராணுவத் தரப்புத் தகவல் வெளியிட்டிருக்கிறது."
அடுத்த கட்டமாகக் கரையோரப் பாதுகாப்பு வலயத்துக்குள் பிரவேசிக்கும் போது, நிலைமையைச் சமாளிப்பது சுலபம் என்று கருதுகிறது படைத்தரப்பு.அதேவேளை போர் இறுதிக் கட்டத்தை நெருங்கியிருப்பதாகப் படைத்தரப்பு கூறும் நிலையில், புலிகள் இந்தத் தாக்குதல்களை எவ்வாறு எதிர்கொண்டு சமாளிக்கப் போகிறார்கள் என்பது முக்கியமான கேள்வியாக உள்ளது.கரையோரப் பாதுகாப்பு வலயத்தின் வடக்குப் பகுதியில் 55 ஆவது டிவிசன் மெதுவான முனனகர்வில் ஈடுபட்டு வருகிறது.பெருமெடுப்பில் தாக்குதல் நடத்துவதற்கும் முன்னேறுவதற்கும் இந்த டிவிசனுக்கு இயற்கை ஒரு பெரும் சவாலாக இருக்கிறது.புதைமணல் ஊடாக வாகனங்களை முன்னகர்த்துவது மிகச் சிரமம். கடலேரித் தொடுவாய்கள் அடுத்தடுத்து இருப்பதால் அவற்றைக் கடந்து சென்று தாக்குதல் நடத்துவது, மீட்பு நடவடிக்கைளை மேற்கொள்வது என்பன சிக்கலாக உள்ளன.அதைவிட ஒடுங்கலான இந்தக் களமுனையில் படை முன்னகர்வை குறிப்பிட்ட பிரதேசத்தின் ஊடாகவே மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.
பரந்த பிரதேசத்துக்குள் புலிகளைச் சண்டைக்கு இழுத்து, சாதகமான இடத்தில் ஊடறுத்து நுழையும் படைத்தரப்பின் வழக்கமானதந்திரோபாயத்தை இந்தக் களமுனையில் கையாள்வது கடினமானது.அதைவிடப் புலிகள் இந்தப் பகுதியில் கனரக இயந்திரத் துப்பாக்கிகளை பயன்படுத்தித் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இங்கு ‘கனொன்’ எனப்படும் 30 மி.மீ. பீரங்கிகள் மற்றும் 23 மி.மீ. பீரங்கிகளைப் புலிகள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.இவற்றின் சுடுதிறன் 5 முதல் 7 கி.மீ. வரை இருப்பதாலும், இது பரந்த வெளியான களமுனையாக இருப்பதாலும், கனரக இந்திரத் துப்பாக்கிகளின் தாக்குதல்களைச் சமாளிப்பது படையினருக்கு சிக்கலாக உள்ளது.
இதனால் மெதுமெதுவாகவே இந்த டிவிசன் முன்னகர்ந்து வருகிறது.மேலும் கரையோரப் பாதுகாப்பு வலயத்துக்குள் 55 ஆவது டிவிசன் உடனடியாகப் பிரவேசிக்கும் போது அங்குள்ள மக்களை வெளியே அனுப்புவதிலும் சிக்கல்கள் உள்ளன.55 ஆவது டிவிசன் யாழ் படைத் தலைமையகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. முல்லைத்தீவுக் களமுனையில் உள்ள ஏனைய படைப்பிரிவுகள் அனைத்தும் வன்னிப்படைத் தலைமையகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
ஆயிரக் கணக்கான மக்கள் 55 ஆவது டிவிசன் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பிரவேசித்தால் அவர்களைச் சமாளிக்கின்ற திறன் அந்தப் படைப்பிரிவுக்கு இல்லை.புவியியல் அமைப்பு ஒரு புறம் சிக்கலானது.இந்த டிவிசனிடம் பெருந்தொகையான மக்கள் வந்தால் அவர்களை யாழ்ப்பாணத்துக்கே கொண்டு செல்ல வேண்டும்.பெருந்தொகையான மக்களை யாழ்ப்பாணத்தில் பராமரிப்பதற்கான எந்த ஏற்பாடுகளும் செய்யப்படாத நிலையில் அவர்களை வவுனியாவுக்கு கொண்டு செல்லவே படைத்தரப்பு விரும்புகிறது.
எனவே, கரையோரப் பாதுகாப்பு வலயத்தின் வடக்குப் பகுதியில் நிற்கும் 55 ஆவது டிவிசன் அவ்வப் போது நெருங்கி வந்தாலும் அது இறுதித் தாக்குதலில் பங்கேற்பதற்கு சாத்தியங்கள் குறைவே.
புலிகளின் குறுகிய கட்டுப்பாட்டுப் பிரதேசத்தைச் சுற்றித் தளமிட்டு நிற்கும் இந்தப் படைப்பிரிவுகள் அடுத்த கட்டமாக முன்னேறும் போது இப்போது நடக்கின்ற சண்டைகளை விட மோசமானதும் மூர்க்கமானதுமான நிலையை சண்டை அடையும்.அதேவேளை, படைதரப்புக்கு இப்போது பின்தளப் பகுதிகளின் பாதுகாப்பு பெரும் கவலைக்குரியதாக மாறியிருக்கிறது.இந்த மாதத் தொடக்கத்தில் புலிகள் நடத்திய மிகப் பெரிய ஊடறுப்புத் தாக்குதல்களும், இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியினுள் அடிக்கடி நடந்து வருகின்;ற சண்டைகளும் படைத்தரப்புக்கு பின்தளப் பாதுகாப்புப் பற்றிய நெருக்கடிகளைத் தோற்றுவித்திருக்கின்றன.இதன் காரணமாகப் படைத்தரப்பு தனது 57 ஆவது டிவிசனின் 5 பிரிகேட்கள், 58 ஆவது டிவிசனின் ஒரு பிரிகேட், 59 ஆவது டிவிசன், 62 ஆவது டிவிசன், 63 ஆவது டிவிசன், 64 ஆவது டிவிசன் ஆகியவற்றை கிழக்கு வன்னியின் பின்தளப் பாதுகாப்புக்காகக் குவித்து வைத்திருக்கிறது.
இராணுவத்தினர் இப்போது புலிகளைக் குறுகிய நிலப்பரப்புக்குள் முடக்கியிருக்கின்ற போதும் படைத்தரப்புக்கு ஆளணிப் பிரச்சினை வெளித் தெரியத்தக்க அளவுக்கு மோசமாகியிருக்கிறது.இதனால் தான் இராணுவத்தின் றிசேவ் நிலைப் படைப்பிரிவான 57 ஆவது டிவிசனில் கூட துணைச் சேவைப் படைப்பிரிவுகளை இணைக்கின்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன.குறிப்பாக 57-1 பிரிகேட்டில் 7 ஆவது மற்றும் 10 ஆவது சிக்னல் படைப்பிரிவுகள் சேர்க்கப் பட்டிருக்கின்றன. இவை துணைச் சேவைப் படைப்பிரிவுகள்.
57 ஆவது டிவிசனில் 4 ஆவது பற்றாலியன் உள்ளிட்ட தேசிய காவற்படையின் பல பற்றாலியன்கள் சேர்க்கப் பட்டிருக்கின்றன.
இவை தொண்டர் படைப்பிரிவுகளைச் சேர்ந்தவை.தொண்டர் படைப்பிரிவுகள், துணைச் சேவைப் படைப்பிரிவுகளின் அதிகாரிகளால் இராணுவத் தளபதி பதவியையோ அதற்கடுத்த பதவி நிலைகளையோ கூட அடைய முடியாது.இரண்டாந்தர படைப்பிரிவுகளே இவை.
இராணுவத்தின் சிறப்புப் படைப்பிரிவாக கருதப்படும் 57 ஆவது டிவிசனில் இத்தகைய தொண்டர் படைகளையும், துணைச் சேவைப் படைகளையும் சேர்த்துக் கொள்ளும் அளவுக்குப் படைத்தரப்பில் ஆளணிச் சிக்கல் வலுவடைந்திருக்கிறது.முன்னரங்க நிலைகளுக்கு அனுபவம் மிக்க பற்றாலியன்களை அனுப்பியுள்ள படைத்தலைமை பின்தளப் பகுதியில் ஏற்பட்டிருக்கின்ற, புலிகளின் ஊடுருவல்களைத் தடுப்பதற்குப் பெரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறது.புலிகள் தொடர்ந்தும் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் ஊடுருவி வருகின்றனர்.இந்தப் பத்தியை எழுதிக் கொண்டிருந்தபோது கூட, செம்பியன்பற்றுப் பகுதியில் சண்டை ஒன்று நடந்ததாகத் தகவல் கிடைத்திருக்கிறது.ஊடுருவியிருந்த புலிகள், படையினரை எதிர்கொண்டபோது தாக்குதல் நடத்தி விட்டுத் தப்பியிருக்கிறார்கள். இதில் படையினர் சிலர் காயமுற்றதாகத் தகவல்.இதுபோன்ற மோதல்கள் பெருமளவில் நடக்கின்ற போதும் சிலவற்றைப் பற்றிய தகவல்கள் தான் வெளியே வருகின்றன.
புலிகளின் இராணுவப் புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் இரத்தினம் மாஸ்ரரின் வழிகாட்டலில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் ஊடுருவியுள்ள புலிகளின் அணிகளுக்கு தளபதி தோமஸ் பொறுப்பாக இருப்பதாக இராணுவத் தரப்புத் தகவல் வெளியிட்டிருக்கிறது.அதேவேளை பின்தளப் பகுதிகளில் தேடுதல்களை நடத்தி படையினர் பெரிதும் களைப்படைந்து போயிருக்கின்றனர்.
இந்தநிலையில புலிகள் முன்னரங்கப் பகுதிகளில் பெரும் ஊடறுப்புத் தாக்குதல் ஒன்றை மேற்கொள்ளலாம் என்றும் அவர்கள் இந்த பாரிய ஊடறுப்பின் மூலம் இழந்த பகுதிகள் சிலவற்றைக் கைப்பற்ற முனையலாம் என்றும் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா எச்சரித்திருக்கிறார்.
ஆக மொத்தத்தில் புலிகள் மட்டுமே நெருக்கடிகளைச் சந்திக்கவில்லை. படைத்தரப்பும் முன்னெப்போதும் இல்லாத நெருக்கடிகளுக்கு மத்தியில் தான் வன்னிப் படைநகர்வை மேற்கொண்டிருக்கிறது.இரண்டு தரப்புமே கடுமையான, சிக்கல் நிறைந்த பாதையொன்றில் கால்வைத்துள்ள நிலையில், அடுத்த கட்டம் என்பது எவராலும் இலகுவில் அனுமானிக்க முடியாத விடயமாகவே மாறியிருக்கிறது.
நன்றி: நிலவரம்
தலைப்புகள்
ஆய்வு கட்டுரைகள்
0 comments:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.