நாட்டையும் மக்களையும் சீரழிக்கும் மஹிந்த அரசைத் தோற்கடிப்போம்! அனைத்து மக்களையும் அணிதிரள ரணில் பகிரங்க அழைப்பு.
ஜனநாயக விரோதச் செயல்களில் ஈடுபட்டு நாட்டையும், நாட்டு மக்களையும் சீரழித்துக்கொண்டிருக்கும் மஹிந்த அரசின் ஆட்சியைத் தோற்கடிப்பதற்கு அனைத்து மக்களும் அணிதிரளவேண்டிய தருணம் வந்துவிட்டது என்று எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
63 வருடங்களுக்கு முன்னர் இந்த நாட்டின் அனைத்து இன மக்களின் ஒத்துழைப்போடு ஐக்கிய தேசியக் கட்சியால் ஈட்டிக்கொடுக்கப்பட்ட சுதந்திரத்தை ஜனாதிபதியும் அவரது அரச தரப்பினரும் தவிடுபொடியாக்கி வருகின்றனர் என்றும் ரணில் குற்றஞ்சாட்டினார்.
கண்டி ஈ.எல்.சேனாநாயக்க சிறுவர் நூலக மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற கட்சியின் 63 ஆவது வருடாந்த மாநாட்டிற்கு தலைமை வகித்துப் பேசும்பொழுதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மண்டபம் நிறையக் கட்சியின் ஆதரவாளர்கள் அங்கு கூடியிருந்தனர். இதற்கு முன்பதாக அவர் கட்சியின் ஸ்தாபகரான டி.எஸ்.சேனாநாயக்காவின் உருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்துக் கட்சியின் மறைந்த தலைவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தினார்.
ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் பேசுகையில் கூறியதாவது நாம் அருமைபெருமையாகப் பெற்ற சுதந்திரத்தின் மகிமையால் சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர், மலாயர் ஆகிய அனைத்து மக்களும் அமைதியாகவும் இலங்கையர் என்ற அடிப்படையிலும் வாழ்வதற்கான சூழ்நிலையை எமது மூத்தத் தலைவர்கள் உருவாக்கினார்கள். இதே கொள்கைகளையே நானும் இங்கு உறுதிப்படுத்துகின்றேன். அரசியல் முன்னெடுப்புகளையும் இதே நோக்கத்தில் எமது கட்சி பின்பற்றி வந்தது. இதன்பொருட்டு அனைத்து இன மக்களின் அமைப்புகளும் எமக்கு உதவினர். இதனை நம்பியே மக்கள் எமது கட்சியோடு இணைந்துகொண்டனர்.
நாம் இலங்கையர் என்ற கண்ணோட்டத்திலேயே எமது கட்சியின் கொள்கை அமைந்துள்ளது. இதன் அடிப்படையில் இங்கு வாழும் பல்லின மக்களின் மொழி, கலாசாரம், பண்பாடுகள் ஆகிய விழுமியங்கள் பேணப்படவேண்டிய கட்டாயம் உள்ளது. இதன் அடிப்படையிலே நாட்டின் அபிவிருத்திகள் அனைத்தையும் படிப்படியாகக் கட்டி எழுப்பினோம். மிகப் பெரிய நீர்ப்பாசனத் திட்டங்கள் தொடக்கம் எல்லோராலும் கையாளப்படும் கையடக்கத் தொலைபேசி வரை அனைத்துத் தேவைகளையும் எமது கட்சி அரசே பெற்றுக்கொடுத்தது.
இவற்றை எல்லாம் சீரழித்துவிட்ட இன்றைய அரசு ஜனநாயக மரபுகளை மதியாமல் தாம் விரும்பியபடி குடும்ப ஆட்சியையும் தமக்குத் தேவைப்பட்டவர்களையும் காப்பாற்றிக்கொள்ளும் வகையில் கருமங்களை முன்னகர்த்தி வருகின்றது.
இந்த நாட்டில் மகா மன்னர் என்ற ஒருவர் இல்லை. நாம் எல்லோருமே மன்னர்கள்தான். எமது நோக்கம் நாட்டில் இறைமை பாதுகாக்கப்படவேண்டுமென்பதாகும். பல சமூக மக்கள் வாழும் இந்த நாட்டில் அரசும் பல சமூக அமைப்பாக இடம்பெறவேண்டும். இந்த நல்லெண்ணத்தை தவிடுபொடியாக்க இடமளியோம். புலிகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் மூலமாகவே ஜனாதிபதி மஹிந்தரும் இன்று தொடர்ந்து பதவியில் இருக்கிறார்.
இன்று நாட்டைத் தவறான முறையில் இட்டுச்செல்லும் மஹிந்தரின் ஆட்சியைத் தோற்கடித்து ஐ.தே.கட்சியைப் பதவியில் அமர்த்த நீங்கள் எல்லோரும் முன்வரவேண்டும். இந்த அரசின் அடக்குமுறைக்கு எதிராக மக்கள் முன்வரவேண்டும். 13 ஆவது அரசியல் சாசன திருத்தத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட மாகாண சபைத் தேர்தல்களை இன்றைய அரசு களியாட்ட விழா போன்று நடத்தி வருகின்றது.நாட்டு மக்கள் இந்த அசாதாரணங்களை பொறுமையுடன் அவதானித்தவண்ணம் இருந்து வருகின்றனர்.
எமது கட்சி விரைவில் எடுக்கப்போகும் தீர்மானங்களுக்கு ஏற்ப கட்சியைச் சீர்குலைக்க உள்ளும் புறமும் எதிராகச் செயற்படும் சக்திகளுக்கு ஒருபோதும் இடம்கொடுக்கமாட்டோம். மக்களின் அபிமானத்தைப் பெற்ற டி.எஸ்., டட்லி, சேர். ஜோன், ஜே.ஆர்., பிரேமா, டி.பி. ஆகிய தலைவர்களின் ஆதர்ஷ நடைமுறைகளை ஒதுக்கிவிட இயலாது. இவ்வடிப்படையில் கட்சியின் முன்னேற் றத்துக்கு பாதகமான செயல்படுபவர்கள் மீது நாம் மிகுந்த அவதானத்துடன் ஒழுக்க நடவடிக்கைகளை எடுக்கத் தயங்கமாட்டோம். எம்மை நம்பி வாழ்கின்ற மக்களின் நம்பிக்கைக்குத் துரோகம் இழைக்கவும் இயலாது எனவும் ரணில் மேலும் தெரிவித்தார்.
தலைப்புகள்
ஸ்ரீலங்கா செய்திகள்
0 comments:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.