மேற்குலகை எதிர்க்கும் போக்கு விபரீத விளைவுகளை ஏற்படுத்தும்
தென்னிலங்கையில் குறிப்பிடத்தக்க அரசியல் விமர்சக ராகவும், அரசியல் செயற்பாட்டாளராகவும், பத்திரிகை யாளராகவும் கருதப்படுபவர்களுள் ஒருவர் விக்டர் ஐவன்.
1977 முதல் 17 ஆண்டுகள் நீடித்த ஐ.தே.கட்சியின் அதி கார யுகத்தை முடிவுக்குக் கொண்டுவரும் அப்போதைய எதிரணியின் போராட்டத்திலும், முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வாவின் போக்குக்கு எதிராக நீதியை நிலை நாட்டும் திடசங்கற்ப போராட்டத்திலும் சளைக்காமல் ஈடு பட்டு மதிக்கப்பட்டவர் விக்டர் ஐவன்.
ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மிகவும் வேண்டப்பட்டவராகக் கருதப் படும் அவர்,இப்போது ராஜபக்ஷ அரசின் செயற்போக்குக் குறித்து வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல சில கருத்துக்களை முன்வைத்திருக்கின்றார்.
மேற்குலகைப் பகைத்துக் கொள்ளும் இந்த அரசின் போக்கு விபரீதத்துக்கு வித்திடும் என்பதை அவர் கோடி காட்டுகின்றார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஆயுத யுத்தத்தில் அரசு வெற்றிகொண்டிருப்பது உண்மைதான். இந்த அரசு வெற்றி கொள்ள வேண்டிய சவால்களில் அது பிரதான மானதுதான். ஆனால் அதற்குப் பின்னும் பல சவால்களை இந்த ஆட்சிப்பீடம் வெற்றிகொண்டாக வேண்டும். அவற்றை வெற்றிகொள்ள முடியாமல் போகுமானால், முன்னைய யுத்த வெற்றி அர்த்தமற்றதாக அபத்தமாக போய்விடும் என்று அவர் விளக்குகின்றார்.
மேற்குலகைப் பகைத்துக்கொள்ளும் அல்லது அதனை வெட்டி ஓடும் கொழும்பின் போக்கு நாட்டுக்கு நன்மை தராது. மேற்குலகைச் சார்ந்து நிற்காது விடினும் கூட, குறைந்தபட்சம் மேற்குலகுக்கு விரோதம் என்ற இறுக்கமான போக்கை அரசு கடைப்பிடிக்காமல் இருப்பதே உசிதமானது என்று சுட்டிக்காட்டுகின்றார் அவர்.
நாட்டின் பொருளாதாரம், சர்வதேச வர்த்தகம் என்ற கருத்துடன் தீர்க்கமாகப் பிணைக்கப்பட்டிருக்கின்றது. மேற்குலகின் உதவியின்றி இலங்கையால் செம்மையாக இயங்கமுடியும் என்று பேச்சுக்குக் கூறப்பட்டாலும் கூட அது சாத்தியமற்றது என்பதே உண்மையாகும்.
சர்வதேச நாடுகளுடன் முரண்பாட்டை ஏற்படுத்தும் போக்கில் அசிரத்தையுடன் நடந்துகொண்டால் விளைவு மோசமாக அமையும் என்ற நல்ல முன்னுதாரணம் இலங் கைக்கு உண்டு என்பதையும் விக்டர் ஐவன் நினைவூட்டு கின்றார்.
"1977 ஆம் ஆண்டின் தேர்தல் மேடையில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா வீற்றிருந்த வேளையில், இந்திரா காந் தியை விமர்சித்து அவரைப் பசுமாட்டுக்கு உதாரணப் படுத்தி உரையாற்றினார். அதன் காரணமாகப் பின்னாளில் இலங்கை பெரும் விலை செலுத்தவேண்டி நேர்ந்தமை மறக்கக் கூடியதல்ல.
"பிரதமர் இந்திரா காந்தியின் நிர்வாக காலத்தில் இந்தியாவுடன் இலங்கை கசப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டிருந்த வேளையில், கடும் அமெரிக்க சார்பு மற்றும் மேற்குலகைச் சார்ந்து நின்ற தனது கொள்கைப் போக்கின் மூலம் இலங்கையின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என்றே இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா நம்பிக்கை கொண்டிருந்தார். அந்த நம்பிக்கையின் காரணமாகவே நிவாரணப் பொருள் களுடன் இலங்கை நோக்கி வந்த இந்தியப் படகுகளைத் திருப்பி அனுப்பும் பணிப்புரையை ஜே.ஆர்.விடுத்தார். அவரின் அந்த முடிவை நாட்டின் பொதுமக்களும் திருப்தியுடன் வரவேற்றனர். எனினும், இந்தியா, இலங்கையின் வான்பரப்பை ஆக்கிரமித்துக்கொண்டு விமானங்கள் மூலம் யாழ். குடாநாட்டுக்குள் நிவாரணப் பொருள்களை வீசியபோது, ஜனாதிபதி ஜெயவர்த்தானாவின் இந்திய எதிர்ப்புக் கொள்கைக்கு ஒத்தூதிய எந்த மேற்கு நாடும் இந்தியாவின் அச் செய்கைக்குக் கண்டனம் கூடத் தெரி விக்க முன்வரவில்லை. அந்த நாடுகளின் அப்போக்கு ஜெயவர்த்தனாவுக்கு ஆச்சரியத்தையும், ஆதங்கத்தையும், கவலையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இறுதி யில் இலங்கை தனது பாதுகாப்புத் தொடர்பாக இந்திய அர சின் முன் மண்டியிட வேண்டிய நிலைக்குக் கொண்டுவந்து நிறுத்தியது அது.'' என்பதைச் சுட்டிக்காட்டுகின் றார் ஐவன்.
அதுமட்டுமல்ல வியட்நாமையும் அவர் உதாரணம் காட்டுகின்றார். சோவியத் ரஷ்யாவின் ஒத்துழைப்புடன் அமெரிக்காவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியது வியட்நாம். போர் ரீதியில் அமெரிக்காவைப் பின்னடைவுக் குத் தள்ளவும் அதனால் முடிந்தது. ஆனாலும் அந்த வெற்றி யின் பின்னால் அதனால் பலம் பொருந்திய நாடாக மாற முடியவில்லை. ஏழ்மையிலேயே அது மூழ்கியது. அந்தத் துன்பியல் நிலையிலிருந்து மீண்டெழுவதற்கு அதுவரை தான் பகைமை பாராட்டிய அமெரிக்காவின் உதவி, ஒத்தா சைகளை யாசிக்கவேண்டிய நிலை அதற்கு ஏற்பட்டது.
பலம்மிக்க நாடுகள் தமக்கு எதிர்ப்புக் காட்டி நிற்கும் நாடொன்றை உடனடியாகப் பாதிப்புக்கு உள்ளாக்கி விடு வதில்லை. படிப்படியாகவே கொஞ்சம் கொஞ்சமாகவே தமது அக்கருமத்தை அவை நிறைவேற்றி முடிக்கின்றன.
இவ்விதமாகப் பெரும் பலவான்களால் ஏறி மிதித்துக் குட்டிச்சுவராக்கப்பட்ட நாடுகளை நாம் சிந்தையில் நிறுத் திக் கற்றுத் தேறவேண்டியுள்ளது என்கிறார் விக்டர் ஐவன்.
அனைத்து மேற்குலக நாடுகளும் ஓரணியில் நிற்கும் போது அந்த ஒருங்கிணைந்த பலம் இலங்கைத் தேசத் தைப் பெரும் பாதிப்புக்குள்ளாக்கிவிடும் ஆபத்து உள்ள மையை விக்டர் ஐவன் தொட்டுக்காட்டி எச்சரிக்கின்றார்.
ஆனால், புலிகளைத் தோற்கடித்த கணிப்பில் நிற்கும் கொழும்பு அதிகார வர்க்கம், அதே பாணியில் மேற்குலக மிடுக்கையும் முறியடித்து விடலாம் என்று கருதிச் செயற்படுவதாகவே தோன்றுகின்றது.
ஆட்சியில் உள்ளவர்கள் புரியும் இந்தத் தவறு, பழி ஓரிடம் பாவம் ஓரிடம் என்ற நிலைக்கு இந்நாட்டு மக்களைத் தள்ளிவிடும் அபாயம் உண்டு.
தலைப்புகள்
ஸ்ரீலங்கா செய்திகள்
0 comments:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.