பேச்சுவார்த்தைகளும் அரசின் நிலைப்பாடும்
நன்றி : வி.திருநாவுக்கரசு
எந்த மட்டத்திலிருந்து எந்த விதமான அழுத்தங்கள்தான் வந்தாலும் யுத்தம் நிறுத்தப்படமாட்டாது, இன்னும் ஒரு சில நாட்களில் விடுதலைப்புலிகள் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டு விடுவார்களென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளதாக இன்று நேற்று செய்தி வெளியாகியுள்ளது. இது ஒன்றும் புதிய விடயமல்ல. புதுக்குடியிருப்பில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதி சுருங்கிச் சுருங்கி, பாதுகாப்பு வலயமான 20 சதுர கிலோ மீற்றர் பிரதேசம் போக 1 சதுர கிலோ மீற்றர் பகுதியே அவர்கள் வசமுள்ளதென அரச தரப்பினர் கூறிவருகின்றனர். அதேநேரத்தில் நீண்ட நேர உக்கிர சமர்களும், முல்லைத்தீவு கடலில் கடும் மோதல்களும் சென்ற வார இறுதியில் இடம் பெற்றுள்ளதாகவும் அறியக்கிடக்கிறது.
இதனிடையில் பிரசாரப்போரும் அரச தரப்பினரால் தொடர்ந்து மும்முரமாக நடத்தப்பட்டு வருவதையும் அவதானிக்க முடிகிறது குறிப்பாகச் சொன்னால் பிரபாகரன் இருதய நோய், இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் இன்னோரன்ன நோய்களால் பீடிக்கப்பட்டிருப்பதோடு, பாரிய மன உழைச்சலாலும் அவதிப்படுகின்றார் என்று செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. புலிகளின் சில முன்னணித் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் அல்லது போடப்பட்டு விட்டனர். என்ற செய்திகளும் காணப்படுகின்றன. முன்பு, ஏறத்தாழ 17 வருடங்களுக்கு முன்னதாக அதாவது ஐக்கிய தேசியக்கட்சி (ஐ.தே.க.)ஆட்சிக்காலத்தில் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார். அவரைப்போன்ற ஒருவரே உலாவித்திரிகிறாரென. அன்றைய பிரதிப்பாதுகாப்பு அமைச்சர் மறைந்த ரஞ்சன் வியேரத்ன கூறிவந்தவர். எனவே, நாம் மிகப் பொறுப்புணர்ச்சியுடன் கூறிக்கொள்ள விரும்புவது என்னவென்றால், புதுக்குடியிருப்பில் விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டிலுள்ள எஞ்சியுள்ள பகுதியையும் அரசாங்கம் கைப்பற்றிய பின்னர் கூட மோதல்கள் ஓயப்போவதில்லை. என்பதாகும், அதற்குரிய சமிக்ஞைகள் தான் தென்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆக, நாடு மேலும் மோசமான பொருளாதார வீழ்ச்சிக்கு உள்ளாகிக் கொண்டிருப்பதோடு நாட்டின் மீது சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி போன்ற நிதி நிறுவனங்களின் பிடி இறுக்கப்போகும் துர்ப்பாக்கிய நிலை ஏற்கனவே ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது. ச.நா.நி.யிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படவுள்ள 1.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் மற்றும் அது தொடர்பாக விதிக்கப்படவுள்ள கடுமையான நிபந்தனைகள் பற்றி சென்ற வாரக் கட்டுரையில் ஓரளவு குறிப்பிட்டிருந்தேன். ஆனால் நாடு எதிர் நோக்கும் பாரிய பொருளாதார நெருக்கடி நிலைமையினை தென்னிலங்கை மக்களிடமிருந்து மறைப்பதற்கு யுத்தமே கேடயமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வீரவன்சவின் புகழாரம்
விடுதலைப்புலிகள் ஒரு சதுர கிலோமீற்றர் பகுதிக்குள் முடக்கப்பட்டுள்ள நிலை வெற்றிவாகை சூடி, படையினரின் உற்சாகத்தையும் பலப்படுத்தும் வகையில் ஜனாதிபதி ராஜபக்ஷ தகுந்த சூழலை உருவாக்கியுள்ளதாக தேசிய விடுதலை முன்னணி தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மேல் மாகாணசபைத் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் உரையாற்றும் போது கூறியுள்ளார். விடுதலைப்புலிகள் ஆயுதங்களைக் கீழேவைத்து சரணடைந்து விட்டால் நாளையே யுத்தம் முடிவடைந்து விடும் என்றும் வீரவன்ச சிலநாட்களுக்கு முன்னர், கூறியிருந்தார். என்ன அற்புதமான கண்டுபிடிப்பு? வீரவன்ச போன்றோர் 1950 கள் முதல் தீவிரமாகக் கடைப்பிடித்து வந்த பேரினவாத கைங்கரியங்கள் விடுதலைப்புலிகள் தோற்றம் பெற்றதற்கு வழிசமைத்தன என்பதை வாய்ச்சவடாலடிக்கும் வீரவன்ச போன்ற பிரகிருதிகளுக்கு ஏன் புரியப்போகிறது? நாட்டுப்பற்றுக்கான தேசிய இயக்கமொன்றின் செயலாளராகவும் வீரவன்ச விளங்கியவர்.
இத்தகைய அறிவிலிகளின் நாட்டுப்பற்று நாட்டை நட்டாற்றில் விட்டுள்ளதை இவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள் தமிழ்தேசிய இனப்பிரச்சினைக்கு ஏற்புடைய அரசியல் காணத்தவறியது மட்டுமல்லாமல் தமிழரின் சாத்வீகமான விடுதலைப் போராட்டங்களை படைபலம் கொண்டு அடக்கியொடுக்கியது மட்டுமல்லாமல் படையினர் வடக்கு கிழக்கை ஆக்கிரமித்து நிற்பதற்கும் அரசாங்கங்களின் செயற்பாடுகள் தான் காரணமாக அமைந்துள்ளன. இத்தகைய ஆக்கிரமிப்பானது சிங்கள பேரினவாதத்தின் வெளிப்பாடு என்பதை நாம் சொல்லத் தேவையில்லை. எனவே, வடக்கு கிழக்கிலிருந்து அரசபடையினரை விலக்கிவிட்டாலும் யுத்தம் முடிவடைந்து விடுமென வீரவன்ச போன்றோர் சிந்திக்க முடியாத அளவுக்கு அரசியல் குருட்டுத்தனம் அவர்களை ஆட்கொண்டுள்ளது எனலாம்.
சம்பிக்க ரணவக்கவின் கண்டு பிடிப்பு
அடுத்து, வீரவன்சவின் மறுபக்கமாகிய அமைச்சர் சம்பிக்கரணவக்க என்ன கூறுகின்றார். எப்பதைச் சற்று பார்த்து விடுவோம். அதாவது, சர்வதேச சதிகாரணமாகவே யுத்தம் நீண்டு செல்கிறது. கொழும்பிலுள்ள இராஜதந்திரிகளும் கோழைகளும். யுத்தம் நீடித்துச் செல்லப்போகிறதெனக்கனவு காண்கின்றனர். கடந்த கால தலைவர்கள் சமஷ்டித் தீர்வில் நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆனால் அது தோற்கடிக்கப்பட்டு விட்டதென ரணவக்க கூறியுள்ளார். 1950 களில் சமஷ்டித்தீர்வு ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால், தமிழர் தரப்பில் ஆயுதப் போராட்டமோ, பாரிய இரத்தக்களரியோ நாட்டில் ஏற்பட்டிருக்காது.
கொடிய யுத்தமும் பொருளாதார வீழ்ச்சியும்
இன்றைய நிலையில் வன்னி மக்கள் வரலாறு காணாத அவலங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கையில், பொதுவாக தமிழ் மக்கள் பொலிஸ் பதிவுகள் போன்ற அவமரியாதைகளுக்கும் அசௌகரியங்களுக்கும் ஆளாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டியது போல நாட்டின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சி கண்டுள்ளது. இதற்கு பிரதானமான காரணம் இந்த கொடிய யுத்தம் என்பதை இனிமேலாவது பேரினவாதிகள் புரிந்து கொள்வார்களா?
"இங்கே இருக்க வேண்டாம் திரும்பிப்போ' என நேற்று சர்வதேச நாணய நிதியத்தை (ச.நா.நி) வெளியேற்றியவர்கள் தான் இன்று முளந்தாளிட்டு 1.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் எடுக்கின்றனர். இது தொடர்பாக அண்மையில் ஆங்கில நாளிதழ் ஒன்றில் ஒரு சுவாரஸ்யமான கேலிச் சித்திரம் வெளியிடப்பட்டிருந்தது. ச.நா.நி.யின் அடைப்புத் துவாரம் அடைக்கப்பட்டேயிருக்க வேண்டுமென குறிப்பாக தேசிய விடுதலை முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச இன்று நேற்றல்ல ஜே.வி.பி.யில் அங்கத்தவராயிருந்த காலம் முதல் வாய் கிழியச்சீண்டி வந்தவர். ஜனாதிபதி அந்த அடைப்புக்கருவியை (கடூக்எ) கழற்றி வீரவன்சவின் வாய்க்குள் செலுத்தி விடுவதாக அக்கேலிச்சித்திரத்தில் பிரதிபலிக்கப்பட்டிருந்தது.
நிற்க, விடுதலைப்புலிகள் சரணடைய வேண்டுமே ஒழிய அவர்களுடன் பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை என அரசதரப்பினரால் வற்புறுத்தப்பட்டு வந்தது. மறுபுறத்தில், பேச்சுவார்த்தைகள் நடத்த வேண்டுமென்று புலிகள் விரும்பினால் அவர்கள் ஆயுதங்களைக் கைவிடவேண்டுமென நாம் இப்போது கூறவில்லையென தனது முன்னைய நிலைப்பாட்டினை அரசாங்கம் சற்று தளர்த்தியுள்ளதென்ற அர்த்தப்பட தேசிய பாதுகாப்புக்கான ஊடக நிலையப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல கூறியதாகச் செய்திகள் வெளியாகியிருந்தன. எவ்வாறாயினும் புதுக்குடியிருப்பில் தங்கியிருக்கும் மக்கள் வெளியேறுவதற்கு விடுதலைப்புலிகள் அனுமதித்தால் மட்டுமே அவர்களின் மேற்படி வேண்டுகோள் பரிசீலிக்கப்படுமெனவும் கூறப்பட்டுள்ளது. இலங்கை நிலைமை தொடர்பாக ஆங்கில இதழொன்றுக்கு சென்னையிலிருந்து வாராந்தக்கட்டுரை எழுதிவரும் என்.சந்தியமூர்த்தி போன்ற இந்திய ஆய்வாளர்கள் இதனை வரவேற்றுள்ளனர். தூரத்திலிருந்து தமக்குச் சரியெனப்பட்டதை அவர்கள் எழுதிவருகின்றனர். அவர்கள் கள நிலைமைகளையும், உள்நாட்டு தந்திரோபாயங்களையும் முற்றுமுழுதாகத் தெரிந்து வைத்திருப்பவர்கள் அல்ல என்பதே தெளிவாகிறது. எதுவாயினும் அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் பாரிய வெறுப்புணர்வும் பரஸ்பர அவ நம்பிக்கையும் காணப்படும் நிலையில், பேச்சுவார்த்தைகள் சாத்தியமான காரியம் என்று சொல்வதற்கில்லை.
புதுக்குடியிருப்பு சனத்தொகை மீதான சர்ச்சை
அடுத்து, புதுக்குடியிருப்பில் தங்கியிருக்கும் மக்களின் எண்ணிக்கை மீதான சர்ச்சை தொடர்கிறது. அரசாங்கம் 70 ஆயிரம் பேர் வரை எனவும் , முல்லைத்தீவு அரச அதிகாரிகள் 3 இலட்சம் பேர் வரை எனவும் கூறிவருகின்றனர். முல்லைத்தீவு , கிளிநொச்சி மாவட்டங்களின் சனத்தொகை 4 இலட்சத்துக்கும் அதிகமாய் இருந்ததாக முன்னைய புள்ளிவிபர அறிக்கைகளில் கூறப்பட்டிருந்தன. ஒரு குறிப்பிட்ட தொகையினர் பல்வேறு காரணங்களின் நிமித்தம் வேளையோடு வெளியேறி இருக்கக்கூடும். இருந்தும், அங்கே தற்போதுள்ள சனத்தொகை 3 இலட்சம் எனப்படும் போது அரசாங்கம் அதனை நம்பவில்லை. ஏறத்தாழ 60 ஆயிரம் மக்கள் அரசாங்கக் கட்டுப்பாட்டுப்பகுதிக்கு வந்து சேர்ந்துள்ளபடியால் இன்னும் 2 இலட்சத்து 40 ஆயிரம் வரையான மக்கள் அங்கே உள்ளனர் எனலாம். எனவே, அரசாங்கத்தின் புள்ளிவிபரங்களின்படி 70 ஆயிரம் சனத்தொகைக்கான உணவு, மருந்துகள் அனுப்பப்பட்டுவந்துள்ளதென்றால் அங்கே பசி பட்டினி தாண்டவமாடுவதுடன், ஆயிரக்கணக்கில் காயப்பட்டவர்களும் பல்வேறு நோய்களுக்கு ஆளாகியுள்ளவர்களும் என்ன பாடுபடுவார்கள் என்பதை யாரும் மனச்சாட்சியுடன் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.
மேல்மாகாணசபைத் தேர்தல் பற்றி
நிற்க, எதிர்வரும் மேல் மாகாணசபைத் தேர்தல் பற்றி ஒரு வாரத்தை தேர்தலில் போட்டியிடும் இரு பெரிய கட்சிகளின் குணாம்சங்கள் மற்றும் நிலைப்பாடுகள் தொடர்பாக ஏற்கனவே முந்திய கட்டுரைகளிலும் எடுத்துக்கூறியுள்ளேன். இவ்விரு கட்சிகளினதும் கையாலாகாதத்தனங்களையும், கண்கட்டி வித்தைகளையும் மக்கள் மென்மேலும் புரிந்துகொண்டு வருகின்றனர். குறிப்பாக தமிழ் பேசும் மக்கள் மத்தியில் கூடுதலான விழிப்புணர்வு ஏற்படவேண்டும். இரு பெரிய கட்சிகளை விட மேலும் பல சிறிய கட்சிகளும் சுயாதீனக் குழுக்களும் களத்தில் இறங்கியுள்ளன. சில தமிழ்க் கட்சிகள் தமிழர், தமிழ் அபேட்சகர்களை மட்டுமே ஆதரிக்க வேண்டுமென அறைகூவல் விடுத்து வருகின்றன. இது தெரிந்தோ தெரியாமலோ படு பொல்லாத்தனமான சிங்களப் பேரினவாதத்திற்குத் தீனிபோடும் அணுகுமுறையாகும் என்பதை நாம் மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் அழுத்தம் திருத்தமாகக் கூறிவைக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
உண்மையில் மக்கள் இத்தேர்தலை ஏனோ தானோ என்று எண்ணி வாழாதிருந்துவிடாமல் பேரினவாதத்துக்கெதிராக அயராது போராடிவரும் மேன்மையான இடதுசாரிகளை ஆதரித்து வாக்களிக்கவேண்டும். அலட்சியம், மனோபாவம் ஆபத்தானது என்பதை எவ்வாறு கூறிவைத்தார் என்பதைப்பார்ப்போம்;
மக்கள் தமது சுதந்திரத்தினைப் பயன்படுத்தாமல் இருப்பினராயின் அட்டூழியம் புரிபவர்கள் தொடர்ந்தும் தம் கைவரிசைகளில் ஈடுபட்டுக்கொண்டேயிருப்பர். ஏனென்றால், கொடுங்கோலோச்சுவோர் தம் மதம் மற்றும் இந்த வழியிலான எத்தனையோ கடவுள்களின் பேரில் ஆர்வமும் துடிப்பும் கொண்டு தூங்கிக் கிடப்பவர்கள் மீது விலங்கிடுவர்.
இவ்வாறு 18 ஆம் நூற்றாண்டில் வொல்ற்றெயர் கூறி வைத்தது இன்றும் மை காயாத மாதிரியானது போல் உள்ளது எனலாம். எனவே, மக்கள் பாராதீனப்படுத்த முடியாத தமது வாக்களிக்கும் சுதந்திரத்தை நல்லது நடப்பதற்காகப் பயன்படுத்துவது மிகமிக அவசியமாகும்.
தலைப்புகள்
ஆய்வு கட்டுரைகள்
0 comments:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.