பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் 'ஆழ்ந்த கவலை': உடனடி போர் நிறுத்தத்துக்கும் வலியுறுத்தல்

வடபகுதியில் தொடரும் போரின் பிடிக்குள் பொதுமக்கள் அகப்பட்டுள்ளமை தொடர்பாக தன்னுடைய ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ள பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்பான்ட், உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்ற தன்னுடைய கோரிக்கையை மீள வலியுறுத்தியுள்ளார்.
சிறிலங்கா படையினர் இறுதிக்கட்டத் தாக்குதலுக்குத் தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலைமையிலேயே இந்த அவசரக் கோரிக்கையை விடுத்துள்ள பிரித்தானிய அமைச்சர், அரசாங்கப் படைகளும் விடுதலைப் புலிகளும் கட்டுப்பாட்டுடன் செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருக்கின்றார்.

'பாதுகாப்பு வலயம்' எனக் குறிப்பிடப்படும் பகுதியைத் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பகுதிகளையும் சிறிலங்கா படையினர் தம்முடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன எனத் தெரிவித்துள்ள அவர், போர் இப்போது பெருமளவு பொதுமக்கள் தங்கியுள்ள பாதுகாப்பு வலயத்தை நோக்கித் திரும்பியிருப்பது ஆழ்ந்த கவலையளிப்பதாகவுள்ளது எனவும் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தத்தை மேற்கொள்வது இப்போது அவசரமானதாகவுள்ளது என வலியுறுத்தும் அவர், பொதுமக்கள் ஆபத்தான இடத்தில் இருந்து பாதுகாப்பான பகுதிகளை நோக்கி நகர்வது அவசியமானதாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 comments:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.