போர் நிறுத்தத்தை சர்வதேசம் உரியமுறையில் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தவில்லை: புலிகளின் சர்வதேச பொறுப்பாளர்


தமிழர்களின் அபிலாசைகளை அடைவதற்கு போரை மாத்திரமே தமிழீழ விடுதலைப்புலிகள் நம்பியிருக்கவில்லை என தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச இராஜதந்திர உறவுகளுக்கான தலைமையாளர் செல்வராஜா பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

எனினும், அரசியல் தீர்விற்கு ஆரோக்கியமான சூழ்நிலை அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கமும், தமிழீழ விடுதலைப்புலிகளும் சம அந்தஸ்தை கொண்ட பங்காளிகள் என்ற வகையில் சர்வதேசம் கொழும்பின் மீது பேச்சுவார்த்தைக்கான அழுத்தத்தையும் போர் நிறுத்தத்திற்கான அவசியத்தையும் உணர்த்த வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

இலங்கை அரசாங்கம் தமிழர்களின் அடிப்படை உரிமைகளை மீறி வருகின்றது. ஏற்கனவே, இடம்பெயர்ந்த மக்களுக்கு அடிப்படை அம்சங்களை மறுத்து வருகின்றது.

யாழ்ப்பாணத்தில் வலிகாமத்தில் பத்தொன்பது வருடங்களாகவும் மணலாறு, திரியாய் போன்ற பிரதேசங்களில் பதின்நான்கு வருடங்களாக இடம்பெயர்ந்த மக்களுக்கு உரிய வசதிகளை அரசாங்கம் செய்து கொடுக்கவில்லை.

இந்த நிலையில் சர்வதேசம் இடம்பெயர்ந்த மக்களுக்கான அத்தியாவசிய உதவிகளை மேற்கொள்வதற்கான அழுத்தங்களை இலங்கை அரசாங்கம் மீது பிரயோகிக்க வேண்டும்.

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதனடிப்படையிலேயே வன்னியில் பொதுமக்களை பாதுகாத்து வருகின்றார்கள்.
எனினும், இதனை வைத்துக்கொண்டு பொதுமக்களை தமிழீழ விடுதலைப்புலிகள் பணயக்கைதிகளாக வைத்திருக்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டை பத்மநாதன் மறுத்துள்ளார்.

தமிழ் நாட்டு மக்கள் ஈழத்தமிழர்கள் பிரச்சினையில் இன்று பாரிய கரிசனையை கொண்டிருக்கின்றார்கள். புலம் பெயர்ந்த மக்களும் இலங்கை அரசாங்கத்திற்கு பாரிய நெருக்கடிகளை அரசாங்கத்திற்கு கொடுத்திருக்கின்றார்கள். இந்த நிலையில் அவர்கள் சர்வதேச சமூகத்திற்கு தமது அழுத்தங்களை முன்வைக்க வேண்டும் என பத்மநாதன் வலியுறுத்தியுள்ளார்.

வன்னியில் மக்கள் பாரிய அவலங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள். குண்டு வீச்சுகள், எரிகணை வீச்சுக்கள், தாக்குதல்கள் போன்றவற்றில் பொதுமக்கள் கொல்லப்படுகின்றார்கள். கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியோர்கள் என பலரும் பாதிக்கப்படும் அதேநேரம் நோயின் தாக்கமும் அதிகமாகவுள்ளது.

இந்தநிலையில் இலங்கை அரசாங்கத்தை யுத்த நிறுத்தத்திற்கு வலியுறுத்தும் அழுத்தங்கள் குறைவாகவே காணப்படுகின்றன. அத்துடன், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மருந்து மற்றும் உணவுப்பொருட்களை அனுப்பும் நடவடிக்கைகளும் உரிய முறையில் இடம்பெறவில்லை.

தமிழீழ விடுதலைப்புலிகள், தமிழர்களின் அங்கீகாரத்தை பெற்றவர்கள் எனவே, அவர்களை சர்வதேசமும் அங்கீகரிக்க வேண்டும்.

சர்வதேச ரீதியில் ஆயுதங்களை கீழே வைத்து விட்டு பேச்சுவார்த்தைக்கு வரும் நடைமுறைகள் இடம்பெற்றிருக்க வில்லை எனவே, சர்வதேசம் தமிழீழ விடுதலைப்புலிகளை அவ்வாறு கோருவதில் அர்த்தமில்லை.

தமிழீழ விடுதலைப்புலிகள் போர் நிறுத்தம் ஒன்றை கோருவது மனிதாபிமான நடவடிக்கைகளை முன்கொண்டுவதற்காகவே. இந்த காலகட்டத்தில் அவர்கள் தம்மை பலப்படுத்திக் கொள்வார்கள் என்ற கருத்து பிழையானது.

கவனமாக ஆராய்ந்தால் 2002 ம் ஆண்டு முதல் 2008 ம் ஆண்டு வரை தமிழீழ விடுதலைப்புலிகளை விட இலங்கை அரசாங்கமே இராணுவ பலத்தை அதிகரித்துள்ளதை காணமுடிகிறது என பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

வன்னியில் மாத்திரமல்ல ஏற்கனவே கொக்கட்டிச்சோலை படுகொலை, மட்டக்களப்பு ஊரணி படுகொலை, பொலன்னறுவை மயிலந்தனை படுகொலை, அல்லைப்பிட்டி படுகொலை, வங்காளை மற்றும் செம்மணி புதைகுழி போன்றவற்றை தமிழர்கள் மறக்கவில்லை. இதன் ஒரு தொடர்ச்சியாகவே வன்னியில் பொதுமக்கள் கொல்லப்படுகின்றார்கள்.

புலம் பெயர்ந்துள்ள தமிழர்கள் இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் பாரிய அழுத்தங்களை கொடுத்து வருகின்றார்கள்.

இந்தநிலையில் இலங்கையில் இடம்பெறும் படுகொலை மற்றும் யுத்தம் தொடர்பான 6 சான்றுகளை தமிழர் படுகொலைக்கெதிரான அமைப்பினர் தமது வழக்குத்தாக்கலில் குறிப்பிட்டுள்ளதாகவும் தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச இராஜதந்திர உறவுகளுக்கான தலைமையாளர் செல்வராஜா பத்மநாதன் தெரிவித்துள்ளார்

0 comments:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.