கானல் நீராகும் 13 ஆவது திருத்தம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இலங்கை அரசுவெற்றியீட்டியதான அறிவிப்பு வெளி யான கையோடே தென்னிலங்கையில் பேரினவாத சக்தி கள் கிளர்ந்தெழுந்து ஆடும் என்பது எதிர்பார்க்கப்பட்டது ஒன்றே.
அதை இப்போது நடைமுறையில் காணும் சூழல் ஏற்பட்டிருக்கின்றது.
இதுவரை, அரசுடன் இணைந்து நின்ற இந்தச் சக்தி கள், இப்போது அரசுக்கு எசச்ரிக்கை விடுத்து, சவால் உரைக்கும் அளவுக்கு எகிறுகின்ற கள நிலைமை ஏற் பட்டிருக்கின்றது.
தமிழர் பிரதேசங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்த ளிக்கும் எத்தனத்தில் அரசுஇறங்குமானால் அரசிலிருந்து வெளியேறி, அதற்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடுவோம் என அரசுப் பங்காளிக்கட்சியான ஹெல உறுமய அரசுக்குப் பகிரங்க எச்சரிக்கை விடுக்கும் சாயலில் அறிவிப்புச் செய்துள்ளது.
அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதைக் கடுமையாக எதிர்ப்பதாகக் குறிப்பிட்டுள்ள அக்கட்சி, தமிழருக்கு இருப்பிடம், உணவு, உடை, சுய கௌரவம் தவிர வேறு எதுவும் தேவையில்லை என்றும் தானே வரையறை செய்து அறிவித்திருக்கின்றமை வேடிக்கையானது.
நலன்புரி மையங்கள் அல்லது அகதி முகாம்கள் என்ற பெயரில் குறித்தொதுக்கப்படும் இடங்களில் வாழ்ந்து கொண்டு, அங்கு அரசும், ஏனைய உதவி நிறுவனங்க ளும் போடும் உணவு மற்றும் உடை போன்ற உதவிப் பொருள்களைப் பெற்றுக்கொண்டு வாழ்வதுதான் தமிழ் மக்களின் கௌரவமான வாழ்வு என இத்தரப்பினர் எண் ணிக்கொண்டார்களோ என்னவோ தெரியவில்லை.
தமிழர்களைப் பொறுத்தவரை தமது தாயக மண்ணில், தமது நலன்களைத் தாமே பேணும் வகையில், தங்களைத் தாங்களே நிர்வகித்துக்கொண்டு, இந்தத் தேசத்தில் மற்றெல்லாப் பிரஜைகளுக்கும் உரிய உரிமைகளையும் வசதிகளையும் தாமும் சமமாகப் பகிர்ந்து அனுபவித் துக்கொண்டு, எந்தவித இன ஒதுக்கல் மற்றும் அடக்குமுறை, ஒடுக்குமுறை ஆகியவற்றுக்கு உட்படாமல் சுய திருப்தியுடன் வாழ்வதையே தமது கௌரவமான வாழ்க்கை முறையாகக் கருதுகின்றார்கள்.
அத்தகைய கௌரவ வாழ்க்கை முறையை சிறு பான்மையினரான தமிழர்களுக்குப் பெற்றுக் கொடுப் பதற்கான முதல் அடியே அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் என்று பல தரப்பினராலும் கூறப்பட்டு வந்தது.
இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வான இடைக்கால ஏற்பாடாக அரசமைப்பின் 13 ஆவது திருத் தத்தை நடைமுறைப்படுத்துங்கள் என்ற யோசனையை அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு ஜனாதிபதியிடம் கையளித்தபோது, "இனப்பிரச்சினைத் தீர்வுக்கான முதல் அடி" என்று குறிப்பிட்டே அதனை வரவேற்றது இந்தியா. இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பரவலாக்கல் மூலம் தீர்வு ஒன்றைக் காண்பதற்கான நீண்ட தூர பயணத்தில் இது ஒரு முதல் காலடி என்றுதான் இந்தியா அச்சமயம் இதனை விமர்சித்தது.
அது மாத்திரமல்ல, அரசமைப்பின் பதின்மூன்றாவது திருத்தத்துக்கும் அப்பால் சென்று தீர்வு காணப்படும் என்ற நிலைப்பாட்டையே அரசுத் தரப்பு உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் அவ்வப்போது பரப்புரைகள் மூலம் வெளிப்படுத்தி வந்தது.
ஆனால் இப்போது முதலுக்கே மோசம் வந்துவிடும் என்ற நிலைமை. பதின்மூன்றாவது திருத்தத்தையே நிராகரித்து போர்க்கொடி தூக்கியிருக்கின்றது அரசுக்குள் வலுவான சக்தியாகச் செயற்பட்டு வரும் ஜாதிக ஹெல உறுமய.
அதிகாரப் பரவலாக்கல் விடயத்தில் அரசமைப்புக்குச் செய்யப்பட்ட பதின்மூன்றாவது திருத்தமே போதுமான தல்ல தமக்குத் திருப்தி தரக்கூடியதல்ல தமது நீதி, நியாயமான அபிலாஷைகளை நிறைவு செய்யக்கூடிய தல்ல என்று தெரிவித்து நிற்கின்றார்கள் தமிழர்கள். தற்போதைய ஒற்றையாட்சிக் கட்டமைப்பு அரசுக்குள் பதின்மூன்றாவது திருத்தம் மூலம் வழங்கப்படும் அதி காரப் பரவலாக்கல் தங்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத் தக்கதல்ல என்பதைத் தமிழர்கள் தரப்பு தொடர்ந்து பிரதிபலித்தே வந்துள்ளது.
எனினும் நம்பகத்தன்மையையும், நல்லெண்ண சுமுக நிலையையும் கட்டி வளர்ப்பதற்கான முதல் முயற் சியாக ஆரம்பக்கட்ட எத்தனமாக அதனை ஏற்றுச் செயற்படுங்கள் என்பதே தென்னிலங்கையுடன் சமர சத்தை ஏற்படுத்தி அதன் மூலம் நிரந்தர அமைதியை எட்டவைக்கச் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் தலைவர்கள் மற்றும் தரப்புகளின் வாதமாக இருந்து வருகின்றது.
ஆனால் அந்த முயற்சிகளுக்கும் அடியோடு ஆப்பு வைக்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்கின்றது போலும் ஹெல உறுமய.
நாட்டுக்குள் பிரிவினை கோருவது அரசமைப்புக்கு முரணானது என்று தெரிவித்து, அதற்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்றால்
அரசமைப்பில் தெளிவாக உள்ள 13 ஆவது திருத் தத்தை நடைமுறைப்படுத்த விடமாட்டோம் என்று தடுப் பதும் கூட அரசமைப்பு விரோதச் செயற்பாடாகவே அர்த் தப்படுத்தத் தக்கது என்பதும் கவனிக்கப்பட வேண்டிய தாகும்.
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் விவகாரத்தில் தமிழர் தரப்பின் பேரம் பேசும் வலு நொறுக்கப்பட்டு விட்டது என்ற சூழலில் இப்போது பதின்மூன்றாவது திருத்தம் கூட கானல் நீராகி வரும் சூழ்நிலை. சுருங்கச் சொல்வதானால் அதிக உரிமைகள் கேட்ட தமிழர்கள் இன்று "பிச்சை வேண்டாம்; நாயைப்பிடி!" என்ற திரிசங்கு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.
தலைப்புகள்
பத்திரிக்கை செய்திகள்
0 comments:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.