நிலவில் மனிதன் காலடி வைத்து நிறைவு பெற்ற 40 வருடங்கள்

அமெரிக்க விண்வெளி வீரர்களான நீல்ஆம்ஸ்ரோங்கும் எட்வின் ஆல்ட்ரினும் சந்திரனில் காலடிவைத்த முதல் மனிதர்கள் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்து நேற்றுடன் சரியாக 40 வருடங்கள் பூர்த்தியாகியிருக்கின்றன. 1961 மே 25 இல் அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எஃப் கென்னடி அந்தத் தசாப்தத்தின் இறுதிக்குள் தனது நாடு சந்திரனில் மனிதனை இறக்கி பாதுகாப்பாக மீண்டும் பூமியில் தரையிறக்கும் என்று அறிவித்தபோது உலகம் அதை நம்பமறுத்தது. வானத்திலேறி சந்திரமண்டல வாசலைத் தொடலாமா என்று கவிஞர்கள் ஏக்கத்துடன் பாடியகாலம் அது. நிலவைப் பார்த்து கதை பேசிக் கொண்டிருந்த உலக மக்கள் வியக்கும் வண்ணம் 1969 ஜூலை 20 இல் அமெரிக்க விண்கலம் அப்பலோ 11 சந்திரனில் இறங்கியது.



ஆம்ஸ்ரோங், ஆல்ட்ரின் மற்றும் அவர்களுடன் கூடச் சென்ற இன்னொரு விண்வெளி வீரரான மைக்கேல் கொவின்ஸை முழு உலகமுமே பெருமையுடன் பாராட்டியது, சந்திரனில் தன்னால் பதிக்கப்பட்டது தனிமனிதனுக்கு ஒரு காலடியாக இருக்கலாம். ஆனால் மனித குலத்துக்கு அதுஒரு மகத்தான பாய்ச்சல் என்று நிலவில் இறங்கிய முதல் மனிதன் ஆம்ஸ்ரோங் வர்ணித்திருந்தார்.

அப்பலோ 11 க்குப் பிறகு 1972 ஆம் ஆண்டுவரை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான "நாசா' மேலும் 12 விண்வெளி வீரர்களை சந்திரமண்டலத்தில் உலவிடச் செய்தது. 1959 க்கு பின்னரான அரை நூற்றாண்டு காலத்தில் அமெரிக்கா, சோவியத்யூனியன் (ரஷ்யா), ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் சந்திரனை நோக்கி 17 பயணங்களை மேற்கொண்டிருந்தன. ஆனால், சந்திரனில் இதுவரை தங்கள் தடங்களைப் பதித்த விண்வெளி வீரர்கள் சகலருமே அமெரிக்கர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அன்றைய சோவியத்யூனியன் ஆளில்லாத விண்கலங்களையே சந்திரனில் இறக்கிச் சாதனை படைத்தது. கென்னடி நிருவாகத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட சந்திரனை நோக்கிய பயணம் அமெரிக்கர்களை விண்வெளித்துறையில் அமரவைத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், விஞ்ஞானத்துறையின் வளர்ச்சியில் சாதனைக்குரிய மைல்கல் என்று வர்ணிக்கப்படும் சந்திரமண்டலத்தில் பதிந்திருக்கும் மனிதக்காலடி கெடுபிடியுத்த காலகட்டத்தில் சோவியத்யூனியனுடனான அமெரிக்காவின் போட்டாபோட்டியின் விளைவானதே என்பதை நாம் மறந்துவிடலாகாது.

ஆரம்பத்தில் அப்பலோ 11 திட்டத்தில் சில சறுக்கல்கள் ஏற்பட்டன. மூன்று அமெரிக்க விண்வெளி வீரர்கள் உயிரிழந்தனர். அதனால் நாசா இத்திட்டம் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. ஆனால், அப்பலோ 11 விண்கலம் 1969 ஜூலை 16 ஆம் திகதி மூன்று விண்வெளி வீரர்களுடன் சந்திரனுக்கான பயணத்தைத் தொடங்கியது. சந்திரனை அடைந்த அப்பலோவின் கொமாண்ட் மொடியூல் எனப்படும் விண்கலத்தின் ஒருபகுதியில் கொலின்ஸ் தங்கியிருந்து சந்திரனைச் சுற்றிக் கொண்டிருக்க, ஆம்ஸ்ரோங் முதலில் காலடி வைத்தார். அவரைத் தொடர்ந்து 19 நிமிடங்கள் கழித்து ஆல்ட்ரின் சந்திரனில் இறங்கினார். சந்திரனுக்கான நான்கு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு பூமி திரும்பிய அப்பலோ11 மனித குலத்தை வியப்பில் ஆழ்த்தியது. இரு விண்வெளி வீரர்களும் இரண்டரை மணிநேரம் சந்திரமண்டலத்தில் தங்கியிருந்து மாதிரி மண்ணை எடுத்தனர். புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிகளை "நாசா' நேரடியாக ஒளிபரப்புச் செய்த போதிலும் அதிகப்பெரும்பான்மையான உலகமக்கள் வானொலி வர்ணனைகள் மூலமே அவற்றைக் கேட்கக் கூடியதாக இருந்தது. 40 வருடங்களுக்கு முன்னர் வானொலிகளின் மூலமாக கேட்ட வர்ணனைகள் இன்றும் காதுகளில் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன.

சுமார் 240,000 மைல் தொலைவில் பூமிக்கு அருகில் சுற்றிக் கொண்டிருக்கும் இயற்கைத் துணைக்கோள் சந்திரன் ஒன்றுதான். 20 ஆம் நூற்றாண்டில் பல தடவைகள் சந்திரனை வெற்றிகரமாகச் சுற்றிய நாசா புதிய நூற்றாண்டில் சந்திரனுக்கான பயணத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளில் இறங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு சந்திரனுக்குப் போவதற்கு நாசா திட்டமிடுவதன் நோக்கம் 2020ஆம் ஆண்டில் செவ்வாய்க் கிரகத்தில் காலடி பதிப்பதற்கு மேற்கொள்ள வேண்டியிருக்கும் பயணத்தின் போது ஓய்வெடுப்பதற்கு தங்கு நிலையம் ஒன்றை சந்திரனில் அமைப்பதேயாகும் என்றும் கூறப்படுகிறது. அத்துடன், பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே விண்வெளி வீரர்கள் ஓய்வெடுக்க தற்போது பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையமும் (INTERNATIONAL SPACE CENTRE) தயாராகப் போகிறது.

ஆல்ட்ரினும் கொலின்ஸும் சந்திரனில் மனிதன் காலடி பதித்த 40 ஆவது வருடாந்த நிறைவைக் கொண்டாடுவதற்கு வாஷிங்டனில் நேற்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசிய போது விண்வெளி ஆராய்ச்சி இனிமேல் சந்திரனை குறிவைப்பதற்குப் பதிலாக செவ்வாயை நோக்கியதாக இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். அங்கு உரையாற்றிய ஆம்ஸ்ரோங், சந்திரனை நோக்கிய பயணமே அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையேயான கடைசி முடிவான சமாதானப் போட்டி என்று வர்ணித்திருக்கிறார். வரலாற்றுச் சாதனை படைத்த விண்வெளி வீரர்கள் சிலர் பிற்காலத்தில் இயல்பு திரிந்த விசித்திரமான குணாதிசயங்களைக் கொண்டவர்களாகவும் மாறியிருக்கிறார்கள். நீல்ஆம்ஸ்ரோங் கூட இதற்கு விதிவிலக்காக இல்லை.

சில வருடங்களுக்கு முன்னர் ஆம்ஸ்ரோங் முஸ்லிமாக மாறினார். அதற்கான காரணத்தை அவரிடம் கேட்ட போது, எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது நள்ளிரவில் ஒரு வித்தியாசமான ஓசையைக் கேட்டதாகவும் அது சந்திரனில் தான் இறங்கிய போது கேட்கக் கூடியதாக இருந்த ஓசையை ஒத்ததாக இருந்ததாகவும் பதிலளித்திருந்தார். மனித குலம் பெருமைப்படும் வகையில் நிலாக்கதைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்த இந்த விண்வெளி வீரர் இவ்வாறாகவும் ஒரு கதையைச் சொன்னார் என்பதை இன்றைய சந்ததியினர் நிச்சயம் அறிந்திருக்க வேண்டும்.

நன்றி : தினக்குரல் நாளேடு

0 comments:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.