இலங்கையில் வன்னிப் பகுதியில் பாதுகாப்பு வலயத்தில் விடுதலைப் புலிகளின் பிடியில் ‘சிக்கியுள்ள’ அப்பாவி மக்களை மீட்க இறுதி நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகக் கூறி, தமிழர் இனப் படுகொலையின் ‘இறுதி கட்ட’ அத்தியாயத்தை துவக்கியுள்ளது சிறிலங்க இராணுவம்.
கடந்த 3 மாதங்களாக சிறிலங்க அரசால் பொது மக்கள் பாதுகாப்பு வலயம் என்று அறிவிக்கப்பட்டப் பகுதியில் அடைக்கலம் புகுந்த அப்பாவி தமிழர்கள் மீது ஒவவொரு நாளும் எறிகணைத் தாக்குதல், விமானக் குண்டு வீச்சு என்று 4000 தமிழர்களைக் கொன்று குவித்த சிறிலங்க அரச படைகள், தற்பொழுது அப்பகுதியில் ‘பதுங்கியுள்ள விடுதலைப் புலிகளின் பிடியில் அம்மக்கள் சிக்கியுள்ளதாகக்’ கூறி, அவர்களை ‘விடுவிக்க’ தனது இறுதி கட்ட மானிட அழிப்பை துவக்கியுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான தங்களின் போர் இறுதி கட்டத்தை அடைந்துவிட்டது என்று கூறியுள்ள சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச, “உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்றால் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடையுங்கள்” என்று கூறியது மட்டுமின்றி, “அங்குள்ள (பாதுகாப்பு வலயத்திலுள்ள) மக்களைக் காக்க வேண்டுமென்றால் இதனைச் செய்யுங்கள்” என்றும் கூறியுள்ளார்.
எவ்வளவு தெளிவான அறிவிப்பு! ஒன்று சரணடையுங்கள், இல்லையேல் உங்கள் மக்களோடு சேர்ந்து அழியுங்கள் என்று எவ்வித தயக்கமுமின்றி ராஜபக்ச கூறியுள்ளார்.
இப்படிப்பட்ட அப்பட்டமான படுகொலை அறிவிப்பை வெளியிட்டதற்குப் பின்னரும் உலக நாடுகள் ஒன்று கூட கண்டனம் தெரிவிக்கவில்லை. அதுதான் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் அனைத்தையும் மீட்டு விட்டீர்களே, எதற்கு இனியும் போர் தொடர வேண்டும் என்று எந்த நாடும் கேட்கவில்லை.
3 மாதங்களில் மட்டும் பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் அடைக்கலமான சொந்த நாட்டு மக்கள் 4 ஆயிரம் பேரை கொன்று குவித்தபோதெல்லாம் கண்டிக்காத உலக நாடுகளும், ஐ.நா.வும், உனது நாட்டு மக்கள் மீதே எப்படி எறிகணைத் தாக்குதல் நடத்துகிறாய் என்று கேட்காத உலக நாடுகளும், ஐ.நா.வும், பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் உள்ள மக்களுக்கு உணவு, காயம்பட்ட மக்களுக்கு மருந்துகள் என்று எதையும் அனுப்பாமல் தடுக்கிறது சிறிலங்க அரசு என்று அறிக்கையில் கூறியதோடு மட்டும் நிறுத்திக்கொண்ட ஐ.நா.வும், அதனைத் தட்டிக் கேட்காத உலக நாடுகளும், இப்பொது மெளனம் காத்து சிறிலங்க அரசு மேற்கொண்டு வரும் இனப் படுகொலை முழுமையாக நடத்தி முடிக்க சம்மதம் தெரிவித்துள்ளன.
இன்றைக்கு வன்னிப் பகுதியில் உள்ள பாதுகாப்பு வலயத்திற்குள் சற்றேறக் குறைய 3 இலட்சம் தமிழர்களின் வாழ்வை ஒட்டு மொத்தமாக முடித்துவிட ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்ற ஒரே சொற்றொடரை ‘அர்த்தமுள்ளதாக்கி’ அதன் மூலம் அதிபர் ராஜபக்சவின் அரச பயங்கரவாத நடவடிக்கைக்கு ஆதரவளித்து, அதன்மூலம் ஈழத் தமிழர்களின் நியாயமான, மனிதாபிமான உரிமைப் போராட்டத்தை நசுக்குவதற்கு உலக நாடுகள் மெளனமாக தங்களின் நல்லாசிகளைத் தெரிவித்து வருகின்றன.
அரை நூற்றாண்டுக் காலமாக ஈழத் தமிழர்கள் நடத்திவரும் போராட்டத்தினை தனது இராணுவத்தைக் கொண்டு மிருக பலத்துடன் ஒடுக்க முற்பட்ட அரசை எதிர்த்து ஆயுதம் தாங்கிப் போராடி வரும் ஒரு மக்களமைப்பை, அமெரிக்காவில் நடந்த ஒரு தாக்குதலை அடிப்படையாக வைத்து மிகச் சாமர்த்தியமாக ‘பயங்கரவாத அமைப்பாக்கி’, உரிமை கோரும் மக்களை மிருக பலத்துடன் நசுக்கிவரும் ஒரு அரசிற்கு ஆயுதம், நிதி என்று வாரி வழங்கி அது நடத்திவந்த இனப் படுகொலையை தொடர உதவிய உலக நாடுகள், தங்களின் ஜனநாயக முகமூடியை புதுப்பித்துக் கொள்ள அவ்வப்போது ‘தமிழர்களின் அரசியல் ஜனநாயக உரிமைகளை சிறிலங்க அரசு உறுதி செய்ய வேண்டும்’ என்று மட்டும் கூறிவிட்டு எல்லாவிதத்திலும் அந்தத் தமிழர்களை முற்றிலுமாக ஒழிக்க ‘பாடுபட்டு’ வரும் சிறிலங்க அரசிற்கு உதவியைத் தொடர்கின்றன. இப்போது அது எடுக்கும் இறுதி நடவடிக்கைக்கு மட்டும் எதிர்ப்பா காட்ட முடியும்? அப்படிச் செய்தால் அவர்களின் முரண்பட்ட சாயம் வெளுத்துவிடாதா? அந்நாட்டில் இருந்து பெறக்கூடிய வணிக நலன்கள் பாதிக்கப்படாதா?
17 சதுர கி.மீ. பரப்பளவு மட்டுமே கொண்ட அந்த பாதுகாப்பு வலயத்திற்குள் சிக்கியிருக்கும் அப்பாவி மக்களை ‘மீட்க’ தனது ஐந்து படையணிகளை பயன்படுத்தித் தாக்கப் போகும் சிறிலங்க அரசு, அதற்கு மற்றொரு பெயரையும் சூட்டியுள்ளது: “இராணுவம் மேற்கொள்ளப்போகும் மிகப் பெரிய மனிதாபிமான தலையீடு” என்று. என்ன கரிசனம்!
விடுதலைப் புலிகளை ஒழிப்பதற்கே இந்தப் போர் என்று கூறி, அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிலப் பகுதிகளை மீட்டெடுப்போம் என்று கூறிக்கொண்டு தாக்குதலைத் துவக்கிய சிறிலங்க அரசு, புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இருக்கும் அப்பாவி மக்களை அங்கிருந்து வெளியேறி (வெளியேற்றத் தொடர்ந்து குண்டு மழை பொழிந்து) பாதுகாப்பு வலயத்திற்குள் வருமாறு சொன்னது.
அவ்வாறு வந்த மக்களுக்கு சோறு தண்ணீர் இல்லாமல் சாகடித்தது. சோதனை என்ற பெயரில் அத்துமீறியது. குடும்பங்களைப் பிரித்தது. தற்காலிக முகாம்கள் என்று கூறி, கம்பி வேலிகளுக்குள் அவர்களை அடைத்தது. பிறகு பாதுகாப்பு வலயத்தின் மீதே எறிகணைத் தாக்குதல் நடத்தியது. அங்குள்ள மருத்துவமனைகளின் மீது குண்டு மழை பொழிந்தது. ஏன் என்று கேட்டதற்கு “அந்த மருத்துவமனை கூட இராணுவ இலக்குதான்” என்று சர்வதேச ஊடகங்கங்களுக்கு பேட்டியே கொடுத்தார் சிறிலங்க அரசின் பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்ச. அதனை எப்படி என்று கேட்கவில்லை உலக நாடுகளும், ஐ.நா.வும்.
பாதுகாப்பு வலயத்தின் மீது தொடர்ந்து குண்டு மழை பொழிந்தபோது கூட அதனை இனப் படுகொலை என்று சொல்ல நா எழவில்லை உலக நாடுகளுக்கு. உலக நாடுகள் கண்டித்தால் அல்லவா ஐ.நா. பேசும்! அதற்கென்று உள்ள நெறிகள் எல்லாம் ஐ.நா.வின் பாதுகாப்புப் பேரவையின் நிரந்தர உறுப்பினர்களான அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, சீனா, பிரான்ஸ் ஆகியவற்றின் தனித்த அல்லது கூட்டு வசதிக்குக் கட்டுப்பட்டதுதானே?
அதனால்தான் 47 நாளில் 2,683 அப்பாவி மக்கள் சிறிலங்க படையினரால் கொல்லப்பட்டதை விவாதிக்க எதிர்ப்பு தெரிவித்தது சீனா. அது அந்நாட்டின் ‘உள்நாட்டுப் பிரச்சனை’ என்றது. அப்பட்டமாக நடந்த இனப் படுகொலையை விவாதிக்காமல் ஐ.நா. மனிதாபிமான ஆணையரின் விளக்கத்துடன் அமுக்கிவிட்டன வல்லரசுகள். அதுதானே இப்படிப்பட்ட படையெடுப்பை துவக்குவதற்கு சிறிலங்காவிற்கும் அதற்கு ‘எல்லாவிதத்திலும்’ உதவிக் கொண்டிருக்கின்ற இந்தியாவிற்கும் துணிவைத் தந்தது.
ஈழத் தமிழர்கள் இலங்கையில் சம உரிமை பெற்ற மக்களில்லை என்பதை உணர்ந்துள்ள இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் என்ன கூறியிருக்க வேண்டும்? முதலில் அவர்களின் பிரச்சனைக்குத் தீர்வை உருவாக்கு, அதன் பிறகு உனது ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போரை’ நடத்திக்கொள் என்றல்லவா கூறியிருக்க வேண்டும்? தமிழர்களின் பிரச்சனைக்குத் தீ்ர்வு காண சிறிலங்க அரசமைப்பைத் தாண்டி சிறிலங்க அரசு சிந்திக்க வேண்டும் என்று தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் சார்புச் செயலர் ரிச்சர்ட் பெளச்சர் கூறினாரே? அப்படி சிந்தித்தா சிறிலங்கா? ஏன் சிந்திக்கவில்லை, எங்கே தீர்வுத் திட்டம் என்று கேட்டதா அமெரிக்கா? இல்லையே. ஏனென்றால் பின்னிப் பிணைந்துள்ள பொருளாதார, இராணுவ நலன்கள்.
அதனால்தான் இந்தியா இராணுவ ரீதியாக உதவுகிறது. அதை சிறிலங்க அமைச்சர் நிமல சிறிபால டிசில்வா அந்நாட்டு நாடாளுமன்றத்திலேயே நன்றியுடன் பாராட்டினார். மற்ற உறுப்பினர்களையும் நன்றிடன் பாராட்டச் சொன்னார். உள்நாட்டுப் போர் என்று கூறி சீனா, அந்நாட்டிற்கு நிதி உதவி அளிக்கிறது. அப்பாவித் தமிழர்கள் மீது வீசப்பட்ட கொத்தணிக் குண்டுகளை சிறிலங்காவிற்கு அளித்தது ரஷ்யா, இந்தியாவின் நலனோடு தனது நலனைப் பார்த்த பிரான்ஸ், பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு சிறிலங்க அரசிற்கு உரிமை உண்டு என்று முழங்கியது. உலகம் இப்படி இருக்கையில் ஐ.நா. மட்டும் எப்படிப் பேசும் நியாயத்தை?
இப்படி ஒரு அப்பட்டமான இனப் படுகொலை நடத்த இந்த நாகரீக உலகில் ஒரு சின்ன அரசிற்கே உலக நாடுகளும் ஐ.நா.வும் நெஞ்சு கூசாமல் உதவிடும் போது தமிழினம் எங்கே போவது? யாரிடம் முறையிடுவது?
இங்கிலாந்தில் புலம் பெயர்ந்த தமிழர்கள் நேற்று மாலை கூடி இரவு முழுவதும் சாலை மறியலில் ஈடுபட்டு இனப் படுகொலையை தடுத்து நிறுத்துமாறு இங்கிலாந்து அரசை வலியுறுத்துகின்றனர். இன்று நார்வேயில் கூடி கோரிக்கை விடுத்துள்ளனர். அசையுமா ஐரோப்பிய நாடுகள்?
ஆனால் இந்தப் போராட்டங்கள் தொடர வேண்டும். உலக நாடுகளில் மட்டுமல்ல, தமிழ்நாட்டிலும். அப்பட்டமாக நடைபெற்றுவரும் தமிழனப் படுகொலையை உலக நாடுகள் வார்த்தை சாதுரியங்களால் மறைக்கப் பார்க்கலாம், திசை திருப்பலாம். ஆனால் உலக மக்கள் இதனை உணரத் துவங்கியுள்ளனர். தமிழினப் படுகொலையை அவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்வோம். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சுதந்திரம் பெற்ற நாடான இலங்கையில் உரிமை கேட்ட ஒரு இனம் அந்நாட்டு அரசால் திட்டமிட்டு அழிக்கப்படுகிறது என்பதை உணர்த்துவோம்.
தமிழின அழிப்பை தடுத்து நிறுத்த உலக நாடுகள் தவறுமெனில், அதன் எதிர்வினையையும் உலகம் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு கசப்பான கட்டாயம் அதற்கு ஏற்பட்டுவிடும் என்பதையும் புரியவைப்போம்.
முதலாவது உலகப் போரில் தோல்வியைத் தழுவிய ஜெர்மனியின் மீது மற்ற ஐரோப்பிய நாடுகள் சுமத்திய அவமானங்களும், போருக்கான செலவை ஈடுகட்ட வேண்டும் என்று கோரி எழுதி வாங்கிய பத்திரமும்தான், பின்னாளில் ஜெர்மானிய மக்களின் கெளரவத்தை தட்டி எழுப்ப ஹிட்லர் பயன்படுத்தினார், அது இரண்டாவது உலகப் போருக்கு இட்டுச் சென்றது என்கிறது வரலாறு. இன்று நடக்கும் அநியாயம் நாளை தமிழர்களை சிந்திக்க வைக்கும்.
இன்றைக்கு தமிழினத்தின் மீது அவமானமும், அநீதியும் சுமத்தப்படுகிறது. இது தடுக்கப்படாவிட்டால், இன அழிப்பிலிருந்து அதனை மீட்க உலகம் முற்படாவிட்டால், யூத இனத்தைப் போல தன்னை காப்பாற்றிக் கொள்ள தமிழினமும் தனித்த வழி முறைகளை சிந்திக்க தூண்டப்படும்.
எத்தனையோ பேரழிவுகளை தமிழினம் சந்தித்துள்ளது. வரலாற்றுக்கு முற்பட்ட காலங்களில் ஏற்பட்ட இரண்டு பெரும் கடல்கோள்களால் தென் மதுரையும், கபாடபுரமும் கடலிற்குள் மூழ்கின. ஆயினும் தமிழனம் அழியவில்லை. தமிழும் அழியவில்லை. தமிழர் பண்பாடும் அழியவில்லை. இயற்கையை மீறிய மானிட சக்தி ஏது உள்ளது?
உலகமும் ஐ.நா.வும் இதனை புரிந்துகொள்ளட்டும்.
0 comments:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.