வாக்குகளுக்காக நோட்டுகள்

இந்தியாவில் பாராளுமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. உலகின் மிகப் பெரியதும் மிகச் சிக்கலானதுமான ஜனநாயகச் செயற்பாடு என்று வர்ணிக்கப்படும் இத்தேர்தலில் களமிறங்குவதற்கு இந்திய அரசியல் கட்சிகள் அந்நாட்டின் வரலாற்றில் முன்னென்றுமில்லாத அளவுக்கு கூட்டணி அமைக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வேட்பாளர் தெரிவுகளையும் தொகுதிப் பங்கீடுகளையும் செய்து கொண்டிருக்கின்றன. இந்த நடவடிக்கைகள் தொடர்பான செய்திகள் இன்று ஊடகங்களை ஆக்கிரமிப்புச் செய்து கொண்டிருக்கின்றன. சாத்தியமான சகல தில்லுமுல்லுகளையும் செய்து தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அரசியல் கட்சிகள் சிந்தித்துக் கொண்டிருக்கின்ற அதேவேளை, இந்தியத் தேர்தல் ஆணைக்குழு அதனாலியன்றவரை தேர்தலை நீதியானதாகவும் சுதந்திரமானதாகவும் நடத்தி முடிப்பதில் அக்கறை காட்டுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.
எமது பிராந்திய நாடுகளிலே தேர்தல்கள் பணபலமும் குண்டர் வன்முறைப் பலமும் அவற்றின் கைவரிசையைக் காண்பிக்கும் ஒரு களமாகவே விளங்கி வருகின்றன. இந்தியாவில் இத்தடவை தேர்தலில் பணபலத்தின் ஆதிக்கம் குறித்து முன்னென்றுமில்லாத அளவுக்கு கூடுதலாகப் பேசப்படுவதைக் காண முடிகிறது. சென்னையில் இருந்து வெளியாகும் தமிழ்த் தினசரியொன்றில் அரசியல் அவதானியொருவர் எழுதிய கட்டுரையில் வேட்பாளர்களை நியமிக்கும் விடயத்தில் கட்சிகளின் தலைமைத்துவம் பணபலத்துக்கு கொடுக்கும் அதிமுக்கியத்துவத்தை நோக்கும் போது இன்று மகாத்மா காந்தி உயிருடன் இருந்திருப்பாரேயானால் தேர்தலில் போட்டியிடுவதற்கு அவருக்குக் கூட எந்தக் கட்சியிலும் இடம் கிடைக்காது போலிருக்கிறதே என்று வேதனையுடன் குறிப்பிட்டிருக்கிறார். தேர்தல் சூடுபிடித்துவிட்ட நிலையில் கறுப்புப் பணத்துக்கு கால் முளைத்து ஓடத்தொடங்கி விட்டது என்றும் அவர் எழுதியிருக்கிறார். பணபலம் எந்தளவு தூரம் தேர்தல் களத்தில் புகுந்து விளையாடுகிறது என்பதை இவரின் கருத்துக்கள் தெளிவாக உணர்த்துகின்றன.

ஊடக கற்கைகளுக்கான மத்திய நிலையம் (The centre for media studies ) என்ற இந்திய அமைப்பொன்று "வாக்குகளுக்காக நோட்டுகள்' (Notes for votes) என்ற தலைப்பில் வெளியிட்டிருக்கும் ஆய்வு அறிக்கையொன்று எமது கவனத்தை பெரிதும் ஈர்த்திருக்கிறது. வாக்குகளைப் பெறுவதற்காக பணம் வழங்குவதென்பது இப்போது ஒரு தேர்தல் நடைமுறையாகி விட்டதோ என்ற கேள்வியுடனேயே அந்த அறிக்கை ஆரம்பமாகிறது. கடந்த வருட நடுப்பகுதியில் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களிப்பதற்காக தங்களுக்கு கோடிக்கணக்கில் இலஞ்சம் தரப்பட்டதாகக் கூறி பைகளில் இருந்து கட்டுக்கட்டுகளாக பண நோட்டுக்களை எதிரணி எம்.பி.க்கள் சபைக்குள் காண்பித்ததை வாசகர்கள் மறந்திருக்கமாட்டார்கள் என்று நம்புகின்றோம். வசதியான வாழ்க்கை வாழும் எம்.பி.க்களுக்கே சபைக்குள் வாக்களிப்பதற்கு கோடிக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டதென்றால் பஞ்சப் பராரிகளான சாதாரண இந்திய வாக்காளர்கள் எந்தளவுக்கு தேர்தல்களின் போது பணத்தினால் தூண்டப்படக்கூடியவர்களாக இருப்பர் என்பதைப் புரிந்து கொள்வதில் எவருக்கும் சிரமம் இருக்க முடியாது.

தேர்தல் நோக்கங்களுக்காக அரசியல் வாதிகளினால் எடுத்துச் செல்லப்பட்டு பெருந்தொகைப் பணம் விநியோகிக்கப்பட்ட பல சந்தர்ப்பங்களை கடந்த சில நாட்களாக இந்திய தொலைக்காட்சி சேவைகள் ஒளிபரப்பிக் கொண்டிருந்தன. முன்னரெல்லாம் தேர்தல் பிரசாரங்கள் உத்தியோகபூர்வமாக முடிவடைந்த பின்னர்தான் வாக்குகளுக்காக நோட்டுகள் விநியோகிக்கப்படுவது வழமையாம். இப்போது தேர்தலுக்கு சில வாரங்கள் இருக்கும் நிலையிலேயே அரசியல்வாதிகளும் அவர்களது அடியாட்களும் தவறான முறையில் சேர்த்த பணத்துக்கு கால் முளைத்துவிட்டது. ஊடக கற்கைகளுக்கான மத்திய நிலையத்தின் அறிக்கையின் படி தேர்தல் நோக்கங்களுக்காக மூன்று கட்டங்களில் பணம் வழங்கப்படுகிறது. முதலாவதாக வேட்பாளர் நியமனத்தைப் பெறுவதற்காக அரசியல்வாதிகள் கட்சிகளின் தலைவர்களுக்கு பணத்தைக் கொடுக்கிறார்கள். இரண்டாவதாக எதிர்த்துப் போட்டியிடாமல் இருப்பதற்காக மாற்று அணி அரசியல் வாதிகளுக்கும் ஆதரவாளர்களுக்கும் பணம் கொடுக்கப்படுகிறது. மூன்றாவதாக தேர்தல் தினத்துக்கு முன்னதாக வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுகிறது.

வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழுகின்ற குடும்பங்கள் மத்தியில் தேர்தல் நோக்கங்களுக்காக ஊழல் பணம் பயன்படுத்தப்படுகின்ற விதம் குறித்து மேற்படி நிலையம் 2007 ஆம் ஆண்டில் இருந்து ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறது. வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற குடும்பங்களில் எத்தனை சதவீதமானவர்கள் வாங்குகளுக்காக பணத்தை வாக்குகிறார்கள் என்பதைக் கண்டறிவதே அடிப்படை நோக்கமாகும். இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் இறுதியிலே வறிய குடும்பங்கள் மாத்திரமல்ல, வயது வித்தியாசம், வருமான மட்டம், கல்வியறிவுமட்டம் என்ற எந்த விதமான வேறுபாடுமில்லாமல் கிராமப் புறங்களிலும் சரி, நகரப்புறங்களிலும் சரி சமுதாயத்தின் சகல பிரிவினரும் வாக்குகளுக்காக நோட்டுகளை வாங்குவதாக கண்டறியப்பட்டிருக்கிறது. உறுப்பினர் தொகையின் அடிப்படையில் வலுவான கட்சிக் கட்டமைப்பைக் கொண்ட இடதுசாரிகள் ஆட்சியமைத்திருக்கும் மாநிலங்களில் ஒப்பீட்டளவில் வாக்காளர்களுக்கு இலஞ்சம் கொடுக்கும் மோசடி குறைந்தளவில் காணப்படுகிறது. மற்றும்படி ஏனைய மாநிலங்களில் இது பரவலானதாக இருக்கிறது. வட இந்திய மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தென்மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாடு,கர்நாடகா, ஆந்திரப்பிரதேசத்தில் வாக்குகளுக்காக நோட்டுகள் கொடுக்கும் மோசடி அதிகரித்தவகையில் காணப்படுகிறது என்று ஊடக கற்கைகளுக்கான மத்திய நிலையம் கண்டறிந்திருக்கிறது.

உண்மையிலேயே வாக்குகளுக்காக நோட்டுகள் வழங்கும் நடவடிக்கை "சகல ஊழல்களினதும் தாய்' என்று அறிக்கையில் வர்ணிக்கப்பட்டிருக்கிறது. ஒரு விசித்திரமான அம்சம் என்னவென்றால், வாக்குகளுக்காக வழங்கப்படும் நோட்டுகள் வாக்களிக்கச் செல்லும் மக்கள் தொகையில் எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பதற்கான சான்று எதையும் காணக்கூடியதாக இருக்கவில்லை என்று மேற்படி நிறுவனம் அறிக்கையில் கூறியிருக்கின்றமைதான். தேர்தல் கால ஊழல் மோசடிகள், பணபலம், வன்முறைப்பலம் சகலதிலுமே இலங்கையும் தாராளமான "முன்னேற்றத்தைக்' கண்டிருக்கிறது என்பதால் அந்த ஊழல்தனத்தின் வியாபகத்தை மேலும் விளங்கிக் கொள்ள இந்த அறிக்கையின் தகவல்கள் எமது வாசகர்களுக்குப் பிரயோசனமாக இருக்கும்.

0 comments:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.