காலம் கடந்த ஞானமா, தேர்தல் நாடகமா?


தமிழகத்தில் இப்போது உருண்டு திரண்டிருக்கும் ஈழத்தமிழர் ஆதரவு அலையை முதலாக்கிக் கொண்டு, அங்குள்ள அரசியல் தலைவர்கள் பல அரசியல் அசிங்கங்களைக் கட்டவிழ்த்து விடும் சாத்தியம் குறித்து இரண்டு நாள்களுக்கு முன்னர் இப்பத்தியில் எழுதியிருந்தோம். இப்போது என்னவென்றால், தமிழகத்து மக்களிடம் எழுந்துள்ள ஈழத்தமிழர் ஆதரவு அலையை, மத்தியில் புதுடில்லியில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு கையில் வெண்ணெய்யாக எடுத்து உண்டு களிக்க காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி திட்டம் போடுவது வெளிப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் அவருக்கு ஆதரவாகவுள்ள திராவிட முன்னேற்றக் கழகமும் தமது காங்கிரஸ் கட்சியும் சேர்ந்த கூட்டணி மொத்தம் உள்ள 39 ஆசனங்களையும் கைப்பற்றினால், வேறு மாநிலங்களில் தொய்வு ஏற்பட்டாலும், மத்தியில் அரசை அமைப்பதற்கு பேருதவியாக இருக்கும் என்ற கணக்கை அவர் போட்டிருக்க வேண்டும்.
ஆதலால், தமிழகத்தில் கருணாநிதியின் தரப்பு தடக்கியேனும் விழுந்துவிடக்கூடாது என்று சோனியா எண்ணுகிறார். முதலமைச்சர் கருணாநிதிக்கு அவர் இம் மாதம் முதலாம் திகதி எழுதிய கடிதத்தின் உள்நோக்கம் அதுவே என்பதை எந்தச் சாமானியனும் ஊகித்துக் கொள்வான்; புரிந்து கொள்வான்!

இலங்கையில் முல்லைத்தீவில் தமிழர்கள் அனுபவிக்கும் மனிதப்பேரவலத்தைத் தடுக்க உதவு மாறு திராவிட முன்னேற்றக் கழகம் கேட்டதும், நாடாளுமன்ற எம்.பி. பதவிகளை இராஜினாமாச் செய்யப் போவதாக கடிதம் எழுதிக் கருணாநிதியிடம் கையளித்ததும் ஆறு மாதங்களுக்கு முந்தி அரங்கேறிய காட்சிகள்.
அதோ பார், இதோ பார், புதுடில்லியில் உள்ள காங்கிரஸ் அரசு இலங்கை அரசு மீது அழுத்தம் போட்டு போர் நிறுத்தத்தை கனவாக அன்றி நனவாக்கிவிடும் என்ற கலைஞரின் பம்மாத்துத் தொடங்கியது கடந்த வருடம் ஒக்ரோபர் மாதம் பதின்நான்காம் ஆம் திகதி என்பது இப்போது ஆவணப்பதிவாகிவிட்டது. அவ்வளவுதான்!

புதுடில்லி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிகளை தமிழக எம்.பிக்கள் 39 பேரும் பூண்டோடு இராஜினாமாச் செய்வர். அவ்வாறு செய்வது தெரிந்தால் காங்கிரஸ் அரசு விழுந்தடித்துக் கொண்டு இலங்கை அரசை போர் நிறுத்தம் செய்ய அழுத்தம் கொடுக்கும் என்று கதைகள் அளக்கப்பட்டன.
ஆறு மாதங்கள் கடந்து விட்டன. போர்நிறுத்தம் செய்யுமாறு இலங்கை அரசிடம் நேரடியாகச் சொல்லாமல், எழுத்தில் உத்தியோகபூர்வமாக இடித்துக்கூறாமல், உள்நோக்கம் கருதிய இலக்கு ஒன்றை வைத்துச் செயற்பட்டு ஈழத்தமிழினம் அழிந்து கொண்டிருப்பதற்கு மனிதப்பேரவலத்தை அனுபவிப்பதற்கு பின்னணியில் உதவிக்கொண்டு காலத்தைப் போக்கிய பின்னர் போர் நிறுத்தம் செய்யுமாறு இந்தியா தம்மிடம் கேட்கவில்லை என்றும் போரில் வெற்றியீட்டுவதற்கு இந்தியா பல உதவிகளைச் செய்தது என்றும் கொழும்பில் அரசாங்க அமைச்சர்கள் பலரும் பகிரங்கமாகக் கூறிய பின்னர்
இப்போது புதிதாகக் கதை அவிழ்க்கிறார் இப்போதைய காங்கிரஸ் அரசின் இயக்குநர், காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி.இலங்கையில் அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்ற உடனடிப் போர் நிறுத்தம் அவசியம். அங்கு போர் நிறுத்தத்தை ஏற்படுத்த இந்திய அரசு இலங்கையை வலியுறுத்தும்
அங்கு நடைபெற்று வரும் போரின் காரணமாக அங்குள்ள தாய்மார்கள், குழந்தைகள் உள்ளிட்ட அப்பாவித் தமிழர்கள் அனுபவித்து வரும் துயரங்கள் நம்மை மிகுந்த கவலை அடையச் செய்திருக்கின்றன
அவர்களைப் பாதுகாக்கவும் அவர்களைப் பேணவும் தேவையான முயற்சிகள் அனைத்தையும் இலங்கையின் அதிகார வர்க்கம் மேற்கொள்ள வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்
இந்திய அரசு பல்வேறு வகையான கருத்துகளுடன் தொடர்பு கொண்டு வருகின்றது. குறிப்பாகப் போர் நிறுத்தத்தைப் பற்றியும் தொடர்பு கொண்டு வருகிறது. போர் நிறுத்தம் ஏற்பட்டால் தான் அப்பாவி மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயரமுடியும் என்றவாறு சோனியா காந்தி அம்மையார் தமிழக முதல் வருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
கடிதத்தை வாசிக்கும் எவருக்கும் சோனியா தாய் அன்பும் இரக்க உணர்வும் பொங்க இந்தக் கடிதத்தை எழுதியிருப்பதாகவே எழுந்தமானத்தில் தோன்றும்.
எனினும் இது காலம் பிந்திய ஞானம் என்ற வாசகத்துக்கே மிகப் பொருந்துகிறது. காங்கிரஸ் ஆட்சி பீடத்தில் இருந்தபோது (இப்போது இருப்பது காபந்து அரசாங்கமே) உறுதியாகவும், நல்விளைவை நோக்கிய தாகவும் இந்தக் கருத்தை வெளியிட்டு, எழுத்தில் உள்ளது போலவே செயற்படுத்தி இருந்தால் அவர் இப்போது "கழிவிரக்கக் கற்பனை" செய்வதுபோன்று நல்லது நடந்தேறி இருக்கலாம்.
குதிரை லாயத்தை விட்டு ஓடியபின்னர் அதனைப் பூட்டியதுபோன்ற இப்போதைய விருப்பமும் முயற்சியும் தமிழகத்தில் தமது கட்சிக்கும் கருணாநிதி கட்சிக்கும் வாக்கு வங்கிகளைப் பலமாக்குவதற்கான துரும்புச் சீட்டு என்றே கொள்ளமுடியும்.அவ்வாறில்லை எனினுங்கூட காலம் பிந்திய ஞானம் செயலுருப்பெறும் சாத்தியம் உண்டா என்றால், அப்போதும்கூட பாதகமான பங்கே தராசில் கீழே தாழ்ந்து நிற்கும்!.

0 comments:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.