
இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம் இருந்தார்.
தமிழகம், புதுச்சேரி மாநிலம் முழுவதிலும் அதிமுகவினர் உண்ணாவிரதம் இருந்தனர். ஈழத்தமிழர்களுக்கு நிவாரணம் செலுத்த உண்டியலில் நிதி செலுத்தினர்.
சென்னையில் ஜெயலலிதா உண்ணாவிரத மேடைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வந்து அங்கே வைக்கப்பட்டிருந்த உண்டியலில் 5லட்சம் நிதி செலுத்தினார்.
பின்னர் அவர் பேசியபோது,’’அலைபாயும் கடலுக்கு அப்பால் கண்ணீர் சிந்தும் ஈழமக்களுக்கு ஆதரவு அளிக்காத மத்திய,மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் உண்ணாவிரதம் இருந்து வரும் என் அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஒவ்வொரு நிமிடமும் கொத்துயிரும் குலையுயிருமாக ஆகிக்கொண்டிருக்கும் நம் தமிழர்களுக்கு ஆதரவாக அதிமுகவினர் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
ஈழத்தமிழரின் இருட்டிலே ஒரு வெளிச்சம் வருகிறது. எங்களுக்கு நம்பிக்கை வருகிறது’’ என்று தெரிவித்தார்.
‘’ இந்தியா போர் நிறுத்தத்தை வலியுறுத்தினால் உலகில் 100நாடுகள் போர் நிறுத்தத்தை வலியுறுத்தும்.
ஆனால் இந்தியாவே போர் நிறுத்தத்தை வலியுறுத்தாத போது மற்ற நாடுகள் எப்படி போர் நிறுத்தத்தை வலியுறுத்தும்” என்று தெரிவித்தார்.
‘’வாஜ்பாய் இந்திய பிரதமராக இருந்த போது அவரிடம் இலங்கை அரசு பணம் கொடுத்தால் ஆயுத உதவி அளிப்பீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, பணம் கொடுத்தாலும் ஆயுதம் கொடுக்க மாட்டேன் என்றார். அதன்படியே நடந்து கொண்டார்.
ஆனால் இந்த காங்கிரஸ் அரசு ஆயுத உதவி அளிக்கிறது. 5 ரடார்கள் கொடுத்திருக்கிறது.
போரை நிறுத்துங்கள் என்று உலக நாடுகள் எல்லாம் சொல்கிறது.
இந்திய அரசு ஏன் சொல்லவில்லை. இந்திய அரசுதானே ஈழத்தமிழர்கள் மீது போரை நடத்துகிறது. பின்பு எப்படி போரை நிறுத்தச்சொல்ல முடியும்’’ என்று தெரிவித்தார்.
’’ஈழத்தமிழர் பிரச்சனைக்கு யார் காரணம்? இந்திய அரசுதான் காரணம். இந்தியாவில் ஆட்சி நடத்தும் கட்சி காரணம். அக்கட்சியிலே கூட்டணி வைத்திருப்போர் காரணம்.
ஈழத்தமிழர் படுக்கொலைக்கான கூட்டுச்சதியில் கருணாநிதிக்குதான் முதலிடம்’’ என்று தெரிவித்தார்.
0 comments:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.