மதுரை 18 : இயக்குநர் சீமானின் நாம் தமிழர் கட்சித் துவக்கவிழா செவ்வாய்க்கிழமை மாலை மதுரையில் நடந்தது. பல ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டில், நாம் தமிழர் இயக்கம் அரசியல் கட்சியாக உதயமானது.
செவ்வாய்க்கிழமை மாலை, மதுரை ரிங் ரோடு அருகே உள்ள மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரமாண்ட மேடையில் நாம் தமிழர் கட்சி, பாயும் புலி கொடியோடு உதயமானது.
மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் ராமசாமி மற்றும் காந்திய அரசியல் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் ஆகியோர் குத்துவிளக்கேற்றித் துவக்கி வைத்தனர்.
பின்னர், ஈழப் போர்க்களத்தில் விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை நீத்த மக்களுக்கும் போராளிகளுக்கும் நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. அடுத்து, சீமான் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. உறுதி மொழியை சீமான் படிக்க, தொடர்ந்து கூடியிருந்த பல்லாயிரக்கணக்கானோர் அதைத் திருப்பிச் சொன்னார்கள்.
7 மணிக்கு துவங்கிய மாநாடு 11 மணிக்கு முடிந்தது.
என்னை தலைவராக பார்க்காதீர்கள் : சீமான் பேச்சு
இம்மாநாட்டில் சீமான் எழுச்சி முழக்கமிட்டார்.
அவர், ‘’கட்சிக்கு நிதிக்கு என்ன செய்யப்போகிறீர்கள் எனு கேட்கிறார்கள். பணத்தை நம்பி நான் இந்த கட்சி ஆரம்பிக்கவில்லை.
இனத்தை நம்பி ஆரம்பித்திருக்கிறேன்.இனம் சேர்ந்தா பணம் தானா வரும்.
திரைப்படங்கள் இயக்கி என்னால் சம்பாதிக்க முடியும். வருமானம் எனக்கு தேவையில்லை; இனமானம்தான் முக்கியம்.
என்னை தலைவராக பார்க்காதீர்கள். அண்ணன் பிரபாகரனுக்கு நான் தம்பி. இங்கே கூடியிருக்கும் அன்பு தம்பிகளுக்கு நான் அண்ணன்.
அரசியல் ஒரு சாக்கடை என்று எல்லோரும் மூக்கை பிடித்துக்கொண்டு போனால் யார்தான் உள்ளே இறங்கி சுத்தம் செய்வது. ஒரு விசயத்தை செயல்படுத்த அரசியல் தேவைப்படுகிறது. அப்போதுதான் புரட்சி செய்ய முடிகிறது. இந்த அரசியல்தானே என் இன மக்களை கொன்று குவித்தது. அதே அரசியலால் தமிழீழம் அமைக்கனும். அதற்காக போராடுவோம்.
இது ஆரம்பம்;இனி நிறைய பேசுவோம்’’என்று முழக்கமிட்டார்.
நாம் தமிழர் அரசியல் மாநாடு : முக்கியத்தீர்மானம் மற்றும் 27 கொள்கைகள்
இயக்குநர் சீமானின் நாம் தமிழர் கட்சித் துவக்கவிழா இன்று இரவு மதுரையில் நடந்தது. இந்த மாநாட்டுக்கு தமிழகம் முழுவதிலுமிருந்து பெரும் அளவில் ஆண்களும் பெண்களும் இளைஞர்களும் குவிந்துவிட்டனர். ஏறத்தாழ ஒரு லட்சம் பேர் வந்திருந்ததாக மாநாட்டு அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
மாநாடு ஆரம்பிக்கும் முன் விரகனூர் சுற்றுவட்ட சாலை அருகே, தியாகி முத்துக்குமார் நினைவு நுழைவாயிலிலிருந்து பேரணி துவங்கப்பட்டது. மாலை 5 மணிக்குத் துவங்கிய இப்பேரணி, 7.30 மணிக்குப் பிறகும் தொடர்ந்தது. ஈழத் தமிழர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு தமிழீழத் தனியரசு அமைப்பதே என்று இந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்த மாநாடு துவங்கும் போது, போர்க் குற்றம் புரிந்த இலங்கை அரசு மற்றும் ராஜபக்சேக்கு சர்வதேச நெருக்கடி ஆய்வுக் குழு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி எடுக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, போர்க்குற்றவாளி ராஜபக்சே, அவருக்கு துணை நின்ற சர்வதேச சக்திகளுக்கு தண்டனை நிறைவேற்றுவதைச் சித்தரிக்கும் வகையில் நாம் தமிழர் அமைப்பினர் நாடகம் நடத்தினர்.
கடந்த மே 17 மற்றும் 18-ம் தேதிகளில் வன்னியில் நடந்த இறுதிப் போரில் பல்லாயிரம் தமிழர்களும் தமிழீழ விடுதலைப் புலிகளும் தங்கள் இன்னுயிரை ஈந்தனர். அந்த நேரத்தில் இயக்குநர் சீமானால் துவக்கப்பட்டதுதான் நாம் தமிழர் இயக்கம்.
முள்ளிவாய்க்கால் படுகொலைகள் முடிந்து ஒரு ஆண்டு நிறைவுறும் இந்த தருணத்தில் நாம் தமிழர் இயக்கத்தை முழுமையான அரசியல் கட்சியாக மாற்றுவதாக அறிவித்தார் சீமான்.
உலகெங்கும் உள்ள தமிழர்கள் மே 18-ம் தேதியை தமிழரின் துக்க நாளாகக் கொண்டாடும் நிலையில், சீமான் இந்த நாளை தமிழரின் எழுச்சி நாளாகக் கொண்டாடுமாறு கோரிக்கை விடுத்தார். இந்த நாளிலேயே நாம் தமிழர் இயக்கத்தையும் முழுமையான அரசியல் கட்சியாக அறிவித்தார். நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள் மற்றும் துணைக் கொள்கைகளை நிர்வாகிகள் படித்தனர்.
தமிழர் இறையாண்மை மீட்பே நமது வாழ்வின் லட்சியம், ஈழப்பிரச்சினைக்கு ஒரே தீர்வு தனி தமிழீழம்தான், தமிழை எங்கும் வாழ வைப்போம், உலகத் தமிழர்களை ஒன்றிணைத்து தமிழர் உரிமை வென்றிடப் பாடுபடுவோம், மகளிருக்கு சம உரிமை, ஊடகம் மூலம் பரவும் பண்பாட்டுச் சீரழிவுகளைத் தடுப்போம், காவிரியில் தமிழகத்துக்கு உரிய பங்கைப் பெற்றுத் தருவது உள்ளிட்ட 26 முதன்மைக் கொள்கைகள் மற்றும் துணைக் கொள்கைகளை அறிவித்தனர்.
தமிழீழம் கிடைக்கும் வரை இலங்கை மண்ணில் கால்வைக்க மாட்டேன்: மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி.
இன்று ஈழத்தமிழனம் படும்பாடு பெரும் வேதனை அளிக்கிறது. என்றைக்கு தமிழீழ மக்கள் விடுதலை பெறுகிறார்களோ அன்றுதான் அந்த மண்ணில் கால் வைப்பேன் என்றும் இலங்கையின் தொடர் அழைப்பை மறுத்து வருகிறேன்’’என்றும் மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி கூறியுள்ளார்.
நாம் தமிழர் அரசியல் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றுவதற்காக மதுரை வந்திருக்கும், மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறியிருப்பதாவது:-
என்னை பலமுறை இலங்கைக்கு அழைத்தார்கள். என் இனம் அடிபட்டு, உதைபட்டு கிடப்பதை பார்த்து எப்படி என்னால் பொறுத்துக்கொள்ள முடியும். அதனால்தான் இலங்கையை சுற்றிப்பார்க்க செல்ல மறுத்துவிட்டேன்.
என்றைக்கு தமிழீழ மக்கள் விடுதலை பெறுகிறார்களோ அன்றுதான் அந்த மண்ணில் கால் வைப்பேன் என்று இலங்கையின் தொடர் அழைப்பை மறுத்து வருகிறேன்’’என்று கூறினார்.
ஈழத்தமிழர்களுக்கு குரல் கொடுக்கவே இந்தியா வந்தேன்
இன்று ஈழத்தமிழனம் படும்பாடு பெரும் வேதனை அளிக்கிறது. உலகில் பல்வேறு நாடுகளுக்கு தமிழர்கள் அகதிகளாகப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
பல தேசங்களை கட்டி ஆண்ட தமிழினம் இன்று இப்படி பல தேசங்களுக்கு அகதிகளாக போவது வருத்தத்தை அளிக்கிறது. இவை அனைத்துக்குமாகத்தான் தாய்மண்ணில் பேசவேண்டுமென்று தமிழகம் வந்திருக்கிறேன். ஒட்டுமொத்த தமிழினமும் ஒன்றுபட்டு குரல் கொடுத்தால், இந்த தேசத்தை மீண்டும் தமிழகம் கட்டி ஆளும்’’என்று கூறினார்.