தீர்வு என்று பேசிப் பேசியே தேர்தலில் வென்றுவிடும் சாணக்கியம்
"கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுந்தம் போனானாம்!" என்பார்கள். அந்த மாதிரி இருக்கின்றது அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் அமைச்சர் திஸ்ஸ விதாரண இனப்பிரச்சினைக் கான தீர்வு குறித்து வெட்டிப் பிரபலாகிப்பது. அதைப் பற்றிச் சிந்திக்கும்போது இந்தப் பழமொழிதான் நினை வுக்கு வருகின்றது.
இனப்பிரச்சினைக்கு அமைதித் தீர்வு காண்பதற்கு ஆயுதம் தாங்கிய புலிகள் அமைப்பே முட்டுக்கட்டை என்று கூறிவந்தது தென்னிலங்கை. அதாவது, பாதிக்கப்பட்ட சிறுபான்மையினரான தமிழர்களுக்கு நியாயத் தீர்வு வழங்கும் தாராளம் பெரும்பான்மையினருக்கு இருப் பது போலவும், விடுதலைப் புலிகள்தான் தீர்வு காண இடமளிக்காது இடைஞ்சலாக இருந்து வருகின்றார்கள் என்ற மாதிரியும் தென்னிலங்கை கூறி வந்தது.
ஆனால் இப்போது புலிகளைக் கூண்டோடு அழித்து நிர்மூலமாக்கிவிட்டோம் என்று தெற்கு மார்தட்டி ஐந்து மாதங்களாகின்றன. ஆனால் தீர்வுக்கான முன்முயற்சி சற்றுக்கூட முன்நகரவில்லை.
இனி, ஜனவரியில் நடத்த உத்தேசிக்கப் பட்டிருக் கும் ஜனாதிபதித் தேர்தலுக்கும், மார்ச்சில் நடை பெற விருக்கும் என எதிர்பார்க்கப்படும் பொதுத்தேர் தலுக் கும் பின்னர்தான் எல்லாம் என்று அரசுத் தரப்பே உறுதி செய்துவிட்டது.
"மலையைக் கெல்லி எலியைப் பிடித்த மாதிரி" சுமார் நீண்ட மூன்று ஆண்டு காலம், ஏறத்தாழ இருநூறு அமர் வுகள் வரை மாநாடுகள், கூட்டங்கள் கூட்டி, அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு தயாரித்த யோசனைத் திட் டத்துடனும், அந்தத் திட்டத்தின் சுருக்கக் குறிப்பு அடங் கிய அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதோடும் தீர்வுக்கான முயற்சி கிணற்றில் போட்ட கல்லாகிவிட்டது.
இனி, ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றியீட்டி, அதன் பின்னர் மார்ச்சில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நாடாளு மன்றத் தேர்தலில் ஜனாதிபதியின் தற்போதைய ஆளும் கூட்டமைப்பு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான் மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர்தான் தீர்வுக்கான நகர்வுகள் என்று கூறியிருக்கின்றார் அனைத் துக் கட்சிக் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் அமைச்சர் விதாரண.
இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அதிகாரப் பரவலாக்கல் திட்டத்தை டைமுறைப்படுத்துவதாயின் அரசமைப்பை மாற்றியமைக்க வேண்டும். அப்படி மாற்றியமைக்கும் திட்டத்தையே அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு அரசுக்கு சிபாரிசு செய்திருக்கின்றது. அப்படி அரசமைப்பை மாற்றுவதாயின் அதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை. எனவே, அடுத்த பொதுத் தேர்தலில் ஆளும் தரப்பு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெறும் வரை அனைவரும் பொறுத்திருக்க வேண்டியதுதான். வேறு வழியில்லை. இப்படி விளக்கம் கூறுகின்றார் அமைச்சர் விதாரண.
இலங்கையின் தற்போதைய விகிதாசாரத் தேர்தல் பிரதிநிதித்துவ முறைமையின் கீழ், ஆளும் தரப்புக்கு அல்லது ஒரு கூட்டமைப்புக்கு நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைப்பது என்பது கனவிலும் நடக்க முடியாத விடயம் என்பது நோக்கர்களுக்கு நன்கு தெரியும்.
எனவே, நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற்று, அதன் பின்னரே இனப்பிரச் சினைக்குத் தீர்வு என்று கூறுவதும், காத்திருப்பதும், "அலை ஓய்ந்தபின் கடலில் குளிக்கலாம் என்று காத் திருப்பதற்கு" ஒத்தது என்பது தெளிவு.
அது மட்டுமல்ல, கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரும் இதே மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் பதவியில் இருந்துகொண்டு இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது குறித்துத் தமது தேர்தல் விஞ்ஞாபனம் மூலம் நாட்டு மக்களுக்கு வாக்குறுதியளித்திருந்தார். தாம் அதிகாரத்துக்கு வந்ததும் தென்னிலங்கை அரசியல் தரப்புகளை ஒன்று கூட்டி மூன்று மாத காலத்துக்குள் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான தென்னிலங்கையின் இணக்க யோசனையைத் தாம் பெற்று வெளியிடுவார் என அவர் உறுதியளித்திருந்தார். அதன்படி ஆட்சிக்கு வந்த அவர், தமிழர் தரப்பு மீது பெரும் போரைத் தொடுத்தாரே தவிர, தென்னிலங்கையின் இணக்கமான தீர்வு யோசனையை முன்வைக்கவில்லை.
மூன்று மாதகாலம், மூன்று வருடங்களாகியும் பலனில்லை. இப்போது அவர் பதவிக்கு வந்து நான்கு வருடங்களாகின்றன.இப்போதும் கூட அவரது அரசுக் கூட்டமைப்பில் உள்ள பதினொரு கட்சிகளும் மற்றும் இரு கட்சிகளும் (ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி ஆகியனவும்) சேர்ந்து அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு என்ற பெயரில் தயாரித்த தீர்வு யோசனையையும் கூட முடக்கி வைத்துவிட்டு, அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றியீட்டுவதற்கு இனப்பிரச்சினைத் தீர்வு விவ காரத்தை துரும்பாகப் பயன்படுத்த எத்தனிக்கின்றார் ஜனாதிபதி!
தீர்வு என்று பேசிப் பேசியே தேர்தலை வென்று விடும் எத்தனத்தில்தான் ஆளும் தரப்பு மும்முரமாக இருக்கின்றது என்பது வெளிப்படையாகத் தெரியும் விடயம்.
எத்தனை காலம்தான் இப்படி ஏமாற்றுவார்களோ.......கடவுளுக்குத்தான் வெளிச்சம்......!
தலைப்புகள்
ஆய்வு கட்டுரைகள்,
ஸ்ரீலங்கா செய்திகள்
1 comments:
தமிழக அரசியலைக் கலக்காமல் இலங்கை அரசியலை மட்டும் அலசும் எழுத்துக்கள் வலையுலகில் குறைவு. தொடர்ந்து எழுதுங்கள்.
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.