ஐநா முன்றலில் முருகதாசன் தீக்குளித்த இடத்தில் மேடை அமைத்து அவரது திருவுருவப்படம் வைத்து சிறப்பான முறையில் மலர் வணக்கத்துக்கான ஏற்பாடு செய்யப்பட்டது.
திரண்டு வந்த மக்கள் தாயகத்தில் நிலவும் அவலத்தை உலக சமூகத்தின் பார்வைக்குக் கொண்டு வரும் நோக்கோடு 12.02.2009 அன்று சுவிஸ் ஜெனீவா ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் தீக்குளித்து உயிர்த்தியாகம் புரிந்த முருகதாசனின் திருவுருவப் படத்துக்கு தமது மலர் வணக்கத்தைத் செலுத்தினர்.
அகவணக்கத்தினைத் தொடர்ந்து, ஐரோப்பா நாடுகளில் இருந்தும் சுவிசில் இருந்தும் திரண்ட மக்கள் தமது உள்ளக் கிடக்கைகளை ஆர்ப்பரித்து ஐநா சமூகத்துக்கு எடுத்துக் கூறினர்.
சிங்கள சிறீலங்கா அரசின் சிங்கக்கொடியைத் தமது கால்களால் மிதித்தும், எரித்தும், சிறீலங்கா சனாதிபதி மகிந்த ராஜபக்சேயின் உருவப்பொம்மையை ஐநா முன்றலை ஊடறுத்துச் செல்லும் வீதிகளால் இழுத்துச் சென்றபோது கூடிநின்ற மக்கள் தமது காலணிகளால் அடித்து தமது வெறுப்பை வெளிக்காட்டினர்.
ஐரோப்பிய நாடுகளில் பேசப்படும் பல மொழிகளில் தமிழ் இளையோர் உரைகளை ஆற்றியதோடு, தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளைப் பேச்சாளர் அல்பேட் அவர்களின் சிறப்புரை இடம்பெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி அவர்களின் சிறப்புரை இடம்பெற்றது.
ஐநாவின் அமைதியைக் கலைக்க ஐநா மன்ற வேலியில் அமர்ந்து தமது போராட்டத்தைத் தொடர்ந்தனர். ஐக்கிய நாடுகள் சபை முன்றலை ஊடறுத்துச் செல்லும் வீதிகள் தடை செய்யப்பட்டு இருந்தன. ஜெனீவா நகரமே தனது செயற்பாடுகளை இழக்கக்கூடியவாறு தமிழ் மக்கள் தமது உணர்வுகளை வெளிக்காட்டி இருந்தனர்.
இளையோர் அமைப்புப் பிரதிநிதிகள் ஐநா மன்றத்திடம் மனுவைக் கையளித்தனர். மனுவைப் பெற்றுக்கொண்ட ஐநா சமூகம் நீதியான போராட்டத்தை நடத்திய தமிழ் மக்களுக்கு உரிய பதில் அளிப்பதாகத் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து போராட்டம் நிறைவு பெற்றது.










0 comments:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.