இதன்போது கவலைக்கிடமாக இருந்த 2 பேர் பலியாகியதாகவும் 5 விமானப்படையினர் உட்பட 47 காயமடைந்ததாகவும் அதில் மேலும் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளர் ஹெக்டர் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மற்றும் கட்டுநாயக்கா அனைத்துலக வானூர்தி நிலையத்திற்கு அருகில் உள்ள சிறிலங்கா வான் படைத்தளத்தின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் படைத்தரப்பு தகவல் தெரிவிக்கின்றது.
புத்தளம் கற்பிட்டி பக்கமாக கொழும்பு நோக்கி தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டு வானூர்திகள் வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
விடுதலைப் புலிகளின் வானூர்திகள் கொழும்பு நோக்கி வருவது கதுவீயில் (ராடார்) அவதானிக்கப்பட்டதனையடுத்து சிறிலங்கா படையினரின் வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கிகள் தன்னியக்கமாக இயங்கத் தொடங்கின.
அதனையடுத்து கொழும்பு நகரம் முற்றாக மின்சாரம் தடைப்பட்டும் தொலைபேசி துண்டிக்கப்பட்டும் இருந்தது. இதனால் இரண்டு மணித்தியாலம் மின் வெளிச்சம் எதுவும் இன்றி கொழும்பு நகரம் இருளில் மூழ்கியிருந்தது. கொழும்புக்குள் இரவு 9.30 மணியளவில் உள்நுழைந்ததாக தெரிவிக்கப்படும் விடுதலைப் புலிகளின் இரண்டு வானூர்திகள் குண்டுத் தாக்குதல்களை நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் மீதும் விடுதலைப் புலிகளின் வானூர்திகள் குண்டுகளை வீசியுள்ளன என்றும் இதனால் "இறைவரி திணைக்கள கட்டிடம் சேதமடைந்ததாகவும் அங்கிருந்த பலர் காயமடைந்ததாகவும்" இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார கூறினார்.
பாரிய சத்தத்துடன் இந்தக் குண்டு வெடித்த போது 13 மாடிகளைக் கொண்ட இந்த பாரிய கட்டிடம் பலத்த சேதத்துக்குள்ளாகியுள்ளதுடன் கட்டிடத்தின் சிதைவுகள் வீதியில் சிதறிக் கிடக்கின்றன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உடனடியாகவே தீயணைப்புப் படையினரும், மீட்புப் பிரிவினரும் அப்பகுதிக்கு விரைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். சுமார் ஒரு மணி நேரத்தில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகத் தெரிகின்றது.
இத்தாக்குதலில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் இரவு 11:30 நிமிடமளவில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் சம்பவத்தில் காயமடைந்த 47 பேர் இதுவரையில் மீட்கப்பட்டு கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இருவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
காயமடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் சிறிலங்கா வான் படையைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
வான் படை தலைமை அலுவலகத்தை இலக்கு வைத்தே விடுதலைப் புலிகளின் வானூர்தி தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனவும் இலக்குத் தவறி அதற்கு முன்பாகவுள்ள உள்நாட்டு இறைவித் திணைக்கள கட்டடத்தின் மீது குண்டு விழுந்திருக்கலாம் எனவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்துள்ள இலங்கை வங்கிக் கட்டடம் உட்பட பல கட்டடங்களும் சேதமடைந்திருக்கின்றன.
சம்பவத்தையடுத்து பாதையை மூடித் தடை விதித்துள்ள படையினர் இடிபாடுகளுக்குள் யாராவது சிக்கியிருக்கலாம் என்பதால் தேடுதலை தொடர்ந்து மேற்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை அடுத்து கட்டுநாயக்க பகுதியில் வைத்து தமிழீழ விடுதலைப்புலிகளின் ஒரு விமானம் விமானப்படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாதுகாப்பு பேச்சாளர் கேஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் உடைவுகளையும் விமானியின் சடலத்தையும் படையினர் மீட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, விடுதலைப் புலிகளின் இரண்டாவது வானூர்தி புத்தளம் ஆராச்சிகட்டுவ பகுதியில் வைத்து சுட்டு வீழ்த்தப்பட்டதாக புத்தளம் காவல்துறையினர் உறுதிப்படுத்தினர் என்று அமைச்சர் கேகலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
புலிகளின் இந்த வானூர்தி தாக்குதலில் ஏற்பட்ட உண்மையான சேத விபரங்கள் அல்லது எவ்வாறான தாக்குதல் இடம்பெற்றது என்பது பற்றிய சுயாதீனமான தகவல் எதனையும் பெற முடியாத வகையில் சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் ஊடகங்களுக்கு மறைமுகமான தடை உத்தரவினை இன்றிரவு பிறப்பித்திருக்கின்றது.
இதனையடுத்து யாழ்ப்பாணத்திலும் முழுமையான மின்சாரம் துண்டிக்கபட்டுள்ளதாக தகவல்கள் தெரியப்படுகிறது.
எவ்வாறாயினும் இந்த தாக்குதல் குறித்து சுயாதீனமான தகவல்கள் எதனையும் பெறமுடியவில்லை.







0 comments:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.